Home » வாத்தியார்

வாத்தியார்

by Damith Pushpika
April 21, 2024 6:00 am 0 comment

ந்த பெரிய கிராமத்திலுள்ள மகா வித்தியாலயம் அது. அண்மையில் தேசிய பாடசாலையாகவும் உயர்ந்து நிற்கிறது. அந்த பாடசாலையின் ஐந்தாம் வகுப்பு வகுப்பாசியர் உமா ரீச்சர், வகுப்புக்கு அன்று வர சற்றுத் தாமதமாகி இருந்தது. அதனால் அன்று முதல் பாட வேளை அந்த வகுப்பு அல்லோலப்பட்டது. பிள்ளைகளின் இயல்பான குணம் அங்கு அரங்கேறியது. வகுப்பு தலைவனால் கூட கட்டுப்படுத்த முடியவில்லை. இதுதான் அங்கு நடந்தது. எப்போதும் கடைசி வரிசையில் இருக்கும் ரவீந்திரன் மேசைக்கு கீழே கிடந்த ‘சோக்’ துண்டை குனிந்து எடுத்து எவருக்கும் தெரியாமல் முன் வரிசையில் இருந்த குமரன் தலைக்கு எறிந்தான். அவன் வைத்த குறி தப்பாமல் ‘சோக்’ குமரனை தாக்கியது.

“ஆருடா.. எனக்கு சோக்கால் அடிச்சவன்”. கோபத்தில் கொதித்த குமரன்.. அந்த துண்டு சோக்கை தேடி எடுத்து பின் வரிசையில் இருந்த சிலரை இலக்கு வைத்து பலமாக வீசினான். அது அந்த அப்பாவியான சுரேஷ் நெற்றியை பதம் பார்த்தது. அவன் அழத்தொடங்கிவிட்டான். வகுப்பு அமைதி இழந்து போனது. குழப்ப நிலையை நன்கு பயன்படுத்திய குகன் தன் காற்சட்டை பொக்கற்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த புளியங் கொட்டையால் தன்னை அடிக்கடி வம்புக்கிழுக்கும் குமரனை நோக்கி சுழற்றினான். அது குறி தப்பிப்போய் ரேவதியின் கன்னத்தை தாக்கியது. ஓ.. என்று ஒப்பாரி வைத்து அவளும் அழத் தொடங்கினாள். இப்போது அந்த வகுப்பறையில் எங்கோ கிடந்த ‘டஸ்ரர்’ தாக்குதல் கருவியாகியது. அந்த ‘டஸ்ரர்’ எல்லா திக்கும் பறந்தது.

அன்று பாடசாலைக்கு தாமதமாக வந்து சிகப்பு கோட்டுக்கு கீழ் ஒப்பம் வைத்து.. அதிபரின் கண்டிப்புக்கு ஆளாகிய உமா ரீச்சர் பதற்றத்துடன் வகுப்பறைக்குள் நுழைந்த மறுகணம்.. வகுப்பறையின் வலது பக்க மூலையில் இருந்து வீசப்பட்ட ‘டஸ்ரர்’ குறியில் இருந்து விலகி ரீச்சரின் நெற்றியை தாக்கியது. எதிர்பாராத இரு தாக்குதல்களை உமா ரீச்சர் அன்று எதிர் கொண்டாள். கோபத்தின் உச்சத்துக்கு போன ரீச்சர் ஒரு கணத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டாள். “இனி அடிதான் விழும்”. பயத்தில் மாணவர்கள் கலங்கினர். வகுப்பில் இப்போது பூரண அமைதி நிலவியது. “குட் மோர்னிங் ரீச்சர்”. கோரஸாக ஒலித்தது. மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றனர். “குட் மோர்னிங் “. உமா ரீச்சர் மாணவர்களை அமரும் படி ‘சைகை’ காட்டினாள். கதிரையில் ரீச்சரும் அமைதியாக அமர்ந்தாள். மாணவர்கள் ஆளையாள் பார்த்து முழித்தனர். தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்ற பயம்தான். அன்பானவர்தான்.. உமா ரீச்சர். ஆனாலும் வீசிய ‘டஸ்ரர்’ உமா ரீச்சர் நெற்றியை பதம் பாத்து விட்டதே.

“ஐந்து நிமிடம் பாடசாலைக்கு தாமதமாக வந்ததுதான் இவை எல்லாவற்றுக்கும் காரணம்”. அதிபர் ‘அற்றண்டன் ரெசிஸ்ற்றரில்’ போட்ட சிகப்புக் கோட்டின் கீழ் ஒப்பமிட வேண்டிய நிலை.அதிபரது கண்டிப்பு கூடவே அமைதி குலைந்து போன வகுப்பு. எல்லாமே ரீச்சருக்கு மனதில் வேதனையை உண்டு பண்ணியது. “மாணவர்களை குற்றம் சொல்ல முடியாது. குழப்படி பண்ணுவதுதான் பிள்ளைகளின் இயல்பான குணம் நான் சரியான நேரத்துக்கு ஸ்கூல் வந்திருந்தால் இவை எதுவும் நடந்திருக்காது. எனக்கு இந்தத் தண்டனை தேவைதான்”. மனதில் ஓடிய எண்ணத்தில் இருந்து மீண்ட ரீச்சர் பாடத்தை தொடங்கினாள். மாணவர்களுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். நடந்ததை பற்றி எதுவும் ரீச்சர் விசாரிக்கவில்லையே அதுதான். “உமா ரீச்சர் நல்லவர்”. மாணவர்கள் மனதுக்குள் ரீச்சருக்கு நற்சான்றிதழ் வழங்கினர்.

சாந்தமான முகம் உமா ரீச்சருக்கு. பரிவு, பாசம், கூடவே தாய்மை குணம். அவர் கற்பிக்கும் போது கண்டிப்புக் காட்டுவார். இடையிடை அடியும் விழும். ஆனாலும் காருண்யம் மிக்கவர். அதனால் பிள்ளைகளுக்கு எப்பவும் கொள்ளை பிரியம் ரீச்சரிடம். ரீச்சர் வகுப்பறைக்கு வரும் போது தோளில் அவரது தோல் பை தொங்கும். அதனுள் இருந்து ரீச்சரின் சிவப்புக் குடையின் கைப்பிடி எட்டிப்பாக்கும்.. சின்ன சில்வர் தண்ணிப் போத்தல் மறைந்தே இருக்கும். இப்போதும் அது நல்ல ஞாபகம். புலமைப் பரிசில் பரீட்சைக்கு எல்லா வகையிலும் தயார் படுத்தல் செய்திருந்தார் உமா ரீச்சர். “நீங்கள் எல்லோரும் நல்ல முறையில் பரீட்சை எழுதி சித்தி பெற எனது வாழ்த்துக்கள். இப்ப சொல்லுங்க ஒவ்வொருவரும் படித்து எதிர்காலத்தில் என்னவாக வர விரும்புகிறீர்கள் “ரீச்சர் நான் எஞ்சினியராக வருவன்” கடைசி வரிசையில் அமர்ந்திருந்த குமரன் முந்திக் கொண்டு முதலாவதாக பதில் சொன்னான். முன் வரிசையில் அமர்ந்திருந்த அகிலாவும், அனிதாவும் துள்ளி எழுந்த வேகத்தில் ஒருமித்து “டொக்டராக வர விருப்பம் ரீச்சர் ” சொல்லிய வேகத்தில் இருந்தனர். “நம் வகுப்பில் இரண்டு டொக்டர், ஒரு எஞ்சினியர் இவர்கள் மட்டுந்தானா”. “நான் படிப்பு முடிய, அப்பா கடைய பொறுப்பெடுத்து பாக்க போறன் ரீச்சர்”. ரவீந்திரன் எழுந்து நின்று முணு முணுத்தான்.” ஓ.. ரவீந்திரன் உனக்கு அப்பாவின் கடையில் வேல இப்பவே சரியாச்சு போல “. வகுப்பில் சிரிப்பொலி எழுந்து அடங்கியது. “நான் ஒரு ஆசிரியராக வந்து உங்களப் போல படிப்பிக்க எனக்கும் விருப்பம் ரீச்சர்”. “குகன் உன் விருப்பம் நிறை வேற எனது வாழ்த்துக்கள்”. ஏனோ தெரியாது குகனை உமா ரீச்சர் பாராட்டினார். வகுப்பில் முதல் மாணவனாக வரும் சுரேஷ் எழுந்தான். “ரீச்சர் நான் விஞ்ஞானி ஆக வருவதுதான் எனது விருப்பம்”. வகுப்பில் ஒவ்வொருவரும் தங்கள் விருப்பத்தை சொல்லி ரீச்சரை ஆச்சரியப்படுத்தினர். உமா ரீச்சரும் எல்லோரையும் பொதுவாக பாராட்டினார். காலம் எவ்வளவு வேகமாக, அழகாக, அதன் கைங்கரியத்தை செய்து விடுகிறது.

“அகிலா என்னை நீ மறந்து போனாய் போல, கண்டும் காணாமல் போறாய்”. கையில் ஒன்றும் தோளில் ஒன்றுமாய் இரண்டு குழந்தைகள்.. பஸ்சில் வந்து இறங்கி தன் வீட்டுக்கு போய்க் கொண்டு இருந்தவள் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பினாள். “ஓ.. சுரேஷ் எப்படி இருக்காடா நான் உன்னை இந்தப் பக்கம் ஒரு போதும் காணல்ல.. எவ்வளவோ காலமாச்சு.. என்னடா செய்யிறா.. நீ எங்கடா இருக்கா”.

“நான் சொல்வது இருக்கட்டும். ஐந்தாம் வகுப்பில் நீ உமா ரீச்சரிடம் சொன்ன உன் டொக்டர் படிப்பு என்னாச்சு”. “அதை ஏண்டா கேட்கிறா.. நான் ஏ.எல் படிக்கும் போதே லவ் பண்ணினது தப்பாப் போச்சு.. அவசரக் கல்யாணம்.. இப்ப பாரன் எனக்கு இரண்டு குழந்தைகள்.. அது சரிடா நீதான் விஞ்ஞானியாக வருவன் என்றுதான் நீயும் அப்ப சொன்னவன்தானே எனக்கு இப்பவும் நல்ல ஞாபகம்.. நீ எங்கடா காணாமல் போனாய் உன்னப் பத்தி எவருமே சொல்லல்ல”.

“எல்லாமே நம்ம விதிப்படிதான் நடக்கும்.. அகிலா நான் ஏ.எல் படிக்க போனதோட என் தலையெழுத்தே மாறிப்போனது. அப்பா இறந்து போக குடும்பச் சுமை என் தோளில் ஏற்றப்பட்டது.. உனக்கு தெரியாதா மூணு தங்கைகள கரை ஏத்த வேணுமே, அதுதான் படிப்ப விட்டு, கட்டாருக்கு போய்.. மாடு மாதிரி உழைச்சன் .. இப்ப தங்கைகள் நல்லா இருக்குதுகள் கையிலும் நாலு காசிமிருக்கு “.

“சரி அத விடு.. அனிதா எங்க இருக்காள்”. “என்னடா இன்னும் அவள் நினைப்பு உனக்கு இருக்கா.. அவள எப்பவும் சீண்டுவதுதானே உன் வேல”.”அதவிடு.. அவளாவது சொன்ன மாதிரி டொக்டர் ஆனாளா”.”நீதான் வருசக் கணக்கா காணம போனதால.. உனக்கு எங்கடா தெரியப் போகுது. அவள் ஊரில் இல்லடா. புறோக்கர் கொண்டு வந்த வரன் பிடித்து போக அவள் கல்யாணம் முடித்த கையோடு லண்டன் போய் விட்டாள்”.

“ஓ.. அப்ப நீங்க இருவரும் வாய்ச் சவாடல்தானோ.. நான் புறகு உன் வீட்டுக்கு வாறன் அகிலா”. “சரிடா கட்டாயம் ஒருக்கா வீட்டுக்கு வந்து போடா “. சுரேஷ் மோட்டர் பைக்கில் வேகமாக சென்று மறைந்தான்.

“டேய் நீ சுரேஷ் தானே என்னடா ஆளே மாறிப் போனா.. உனக்குள் இருந்த விஞ்ஞானி எங்கடா போனார்”. ‘நியூ சுப்பர் மார்க்கட்’க்கு சுவீட்ஸ் வாங்கப் போன சுரேஷுக்கு ஆச்சரியத்தை கொடுத்தான் குமரன். “அத நான் பிறகு சொல்றன். இந்த ‘சுப்பர் மார்க்கட்’ உன்னோடதா “. வாயப் பிளந்தான் சுரேஷ். “என்னடா அப்பிடிப் பாக்கிறா என்னோடது தான். இப்பவும் கடையில பதினாலு பேர் வேல பாக்கிறாங்க சுரேஷ் “.

“நீ பெரிய ஆளாப் போனாடா.. ஏன்டா நீதான் எஞ்சினியராக வருவன் என்று சொன்னவன்தானே.. உன் கனவு லட்சியம் என்னாச்சுடா”. “அது அப்ப ஐந்தாம் வகுப்பில உமா ரீச்சரிடம் சொன்னது. அந்த நினைப்பு ஏ.எல் முடிய காணாமல் போச்சுடா நான் லவ் பண்ணி கல்யாணம் செய்த இடம் நல்ல வசதியானது. நிறைய சொத்து.. தேவையான பணம்.. ஒரே மகள் அவர்களுக்கு. அதனால நான் இப்ப நல்லா இருக்கன் இன்னும் இரண்டு கடைகள் எனக்கு வேற இடங்களில் இருக்கு.. காரும் இருக்கு”.”அப்ப உனக்கு சுக்கிர திசை என்று சொல்லு. அது தான் வந்து வாச்சிருக்கு குமரா. மாமன் சொத்த நீ அனுபவிக்க பிறந்தவன்.. அதுசரிடா நீ ரவிந்திரனை கண்டாயா.. அவன் எங்கடா போனான். படிச்சு முடிய அவனது அப்பாவின் கடையை பாக்கப் போறன்.. என்று சொன்னவன் நாமல்லாம் சிரிச்சமே ஞாபகம் இருக்காடா”. “அது ஞாபகம் இல்லாமல் போகுமாடா.. டேய் சுரேஷ் உனக்கு எதுவுமே தெரியாதா”. “தெரிஞ்சா நான் ஏண்டா கேக்கிறன். நானே இப்பதான் நாட்டுக்கு வந்திருக்கன்”.

“ரவீந்திரன் இப்ப அமெரிக்காவில் நாஸா விண்வெளி நிலையத்தில் விஞ்ஞானியாக இருக்கான்”. சுரேஷுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம் ஆடிப்போனான் அவன். “ரவீந்திரனா.. நீ சொல்றது நிஜமா என்னால் நம்ப முடியாமல் இருக்குடா எப்படி இதுவெல்லாம் சாத்தியமானது எனக்கு எதுவும் புரியல்ல குமரா”.

“ரவீந்திரனிடம் உள்ள திறமைதான் அவனை உச்ச நிலைக்கு உயர்த்தி விட்டிருக்கு..”. “அப்பா கடையை எடுத்து நடத்தப் போறன் எண்டு சொன்னவனாடா அமெரிக்காவில இருக்கான்”. “உனக்கு இன்னும் நம்பிக்கை வரல்லையாடா.. ஏ.எல்க்கு பிறகு ‘பிஸிக்கல் சயன்ஸ்’ கிடைச்சு பேராதனை பல்கலைக்கழகம் போனான். ‘பிஸிக்ஸ் ஸ்பெசல்’ செய்தான் ‘பெஸ்ட் கிளாஸ்’ அடிச்சு அமெரிக்காவுக்கு ‘ஸ்கொல்’ கிடைச்சு போனவன் ரவீந்திரன்”. ‘பேய் அடிச்சவன் போல’ நின்றான் சுரேஷ். “என்னடா சுரேஷ் மலைச்சு போய் நிக்கிறா ஏன்டா”. “என் எண்ணம் மண்ணாப் போக.. என் வாழ்க்கை கட்டாரில் கழிஞ்சு போச்சு.. என் சூழ்நிலை அதுவாகி விட்டது. அத பத்தி இனி கதைக்க வேணாம்.. எனக்கு இப்ப கொஞ்சம் சுவீட்ஸ் வேணும்”. வாங்கியவன் குமரனிடம் விடை பெற்றான். அகிலாவின் பிள்ளைகளுக்கு அந்த ‘சுவீட்ஸ்’ பார்சலை கொடுக்க புறப்பட்டான் .

நீண்ட காலத்துக்கு பின் தன் ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழர்களை கண்டு தெரிந்து கொண்ட செய்திகள் சுரேஷை ஆச்சரியத்தில் தள்ளியது என்னவோ உண்மைதான். “ஐஞ்சாம் வகுப்பு உமா ரீச்சரிடம் எப்படி எல்லாம் எதிர்கால கனவுகளைச் சொன்னார்கள். ஏன்.. நானும்தான் சொன்னன். ஆனால் காலம் எப்படி எல்லாத்தையும் புரட்டிப் போட்டிருக்கு”.

தனக்கு அறிவையும் ஆற்றலையும் தந்த பாடசாலை பற்றிய எண்ணம் அவன் மனதில் உந்தியது. “சரிதான் இனி என்ன.. ஸ்கூல போய்த்தான் பாப்போம்”. தன் உந்துருளியை முறுக்கினான். அப்போதுதான் தன்னுடன் ஐந்தாம் வகுப்பில் படித்த.. பாடசாலைக்கு முன் வீட்டில் இருக்கும் ரேவதியின் ஞாபகம் வந்தது. அன்று ஐந்தாம் வகுப்பில் நடந்த குழப்பத்தில் புளியங்கொட்டை எறி வாங்கி தேம்பித் தேம்பி அழுதது இன்னும் அவனுக்கு ஞாபகம் இருந்தது.

“ஓ.. அங்கு நிற்பவள் ரேவதிதான்”. அவள் தன் வீட்டு கேற்றடியில் மீன் வியாபாரியிடம் பேரம் பேசி சூடை மீன் வாங்கிக் கொண்டு நின்றாள். சிக்கெடுத்த சீப்பு இன்னும் அவள் சடையில் மாட்டிய படி.. சிக்கியிருந்தது. “தலை வாரி முடிக்க முன் மீன் வாங்க வந்து இருக்க வேணும் அவள்”. அவனது ஊகம் சரியாகத்தான் இருந்தது. பின்னால் அவனது கணவன்.. அழும் தங்கள் குழந்தையை தூக்கி தோளில் போட்டவாறு அழுகையை நிறுத்த முடியாமல் அவனும் வந்து வந்து நின்றான்.

“ரேவதி.. என்னைத் தெரியுதா “. “ஆ.. நீ.. நீடா.. சுரேஷ்தானே ஆளையே அடையாளம் தெரியல்ல தொப்ப வேற போட்டிருக்கு”.ஐந்தாம் வகுப்பு ஞாபகங்கள் இன்னும் அவளிடம். “சுரேஷ் நீ விஞ்ஞானியாக எந்த நாட்டிலாவது இருப்பா என எதிர்பாத்தேன்.. ஆனா அப்படி தெரியல்லையே”. “என்ன ரேவதி நக்கலா.. நீ எப்படி இருக்கா அத சொல்லு”.”நல்லா இருக்கன் இவர்தான் என் வீட்டுக்காரர். நாம ஐந்தாம் வகுப்பில் இருக்குபோது இவர் ஏழாம் வகுப்பில் படித்தவர். நீதான் ஐஞ்சாம் வகுப்போட காணமல் போய் விட்டாயே”.

“அப்ப நீங்க லவ்வர் தான் போல”. “அப்படித்தான் வைச்சுக்கோவன்..”. “ஓ அப்படியா”. ” நான் ஓ.எல் முடிய படிப்ப விட்டுப் போட்டன்.. இவரும் கட்டார் போய் வந்தவுடன் கட்டிக் குடுத்தாங்க.. மூணு பெண் குழந்தைகள் எங்களுக்கு. சுரேஷ் நீதான் சொல்லன்”. “எதைச் சொல்ல.. ரேவதி.. கனவுகளோடு ஐந்தாம் வகுப்பு ‘கொலசிப்’ சித்தியுடன் ரவுண் ஸ்கூலுக்கு போன பின்னர் என் கனவுகள் காணமல் போய்விட்டது”.

“என்ன.. நடந்திச்சு சுரேஷ்”. “ஏ.ஏல் முடிவு ஏற்றதாக இருக்கல்ல பாரிய பொறுப்புக்கள் என் தலையில் வந்து விழுந்தது. கட்டாரில் என் காலம் கழிந்து போய் விட்டது என் கதைய விடு. இந்தா இதை நீ பிள்ளைகளுக்கு கொடு.. நான் பிறகு வாறன்”. கையில் இருந்த பார்சலை அவளிடம் நீட்டினான்.

பாடசாலையை நிமிர்ந்து பார்த்தான். “அப்பாடா எவ்வளவு மாற்றங்கள்.. மனதார வணங்கினான். அது இடைவேளை நேரமாக இருக்க வேண்டும் மணி ஒலிக்கும் சத்தம் அவன் காதிலும் வந்து விழுந்தது. ஒரு சில ஆசிரியர்கள் பக்கத்தில் இருந்த குணத்தின் தேநீர்க் கடையை நோக்கி போய்க் கொண்டிருந்தனர். ஐந்தாம் வகுப்பில் ஆசிரியர்களுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு கம்பி வேலிக்கு கீழ் நுழைந்து குணத்தின் கடையில் வடை வாங்கி வந்ததும் அதிபரிடம் பிடிபட்டு அடிவாங்கியதும் இன்னும் அவனுக்கு மறக்க வில்லை. அந்த அடியின் வலியால் வேலிக்கு கீழ் நுழைவதையும் குணத்தின் கடை வடையையும் அன்றுடன் மறந்து போனவன்தான்.

அந்த நினைவுகளில் இருந்து மீண்ட வேளையில் அவன் எதிரில் குகன்.. தனது ஐந்தாம் வகுப்பு பள்ளித் தோழன் அவனது கையில் இன்னும் சோக்கு தூள் ஒட்டிக் கொண்டிருந்தது. “குகன் நீயாடா நான் உன்ன எதிர்பாக்கல்ல..”. “சுரேஸ் எப்படிடா இருக்கா”. “நான் இப்ப.. நாம படிச்ச இந்தப் பள்ளியில் வாத்தியாராக இருக்கன்டா”. “டேய் உன்னப் பாக்க எனக்கு பெருமையாகவும் இருக்கு பொறாமையாகவும் இருக்கு குகன்”. “ஏன்டா அப்படி சொல்றா..”. “பின்ன என்னடா.. நீ சொன்னபடி வாத்தியாராக வந்திருக்கா அதுதான் சொன்னன்”.

“வாடா சுரேஷ்.. குணம் அண்ணன் கடையில் இப்ப சுடச் சுட வடை இருக்கும்.. டீ யும் குடிக்கலாம்”. “அதுவும் நல்லதுதான் வா.. நாம் டீ குடிச்சுக் கொண்டே கதைக்கலாம்”. “சுரே‌ஷ் நீ கட்டாரில் வேல செய்வதாக கேள்விப்பட்டன்.. கல்யாணம் காட்சி எல்லாம் நடந்தாச்சா”. “அப்படி எந்த காட்சியும் இன்னும் இல்ல பாப்பம் விடுடா..”. “ஏன்டா இப்ப நாற்பது வயசுதானே ஆகுது உனக்கு “.

“என்னடா செய்ய சொல்றா.. நான் என் தங்கைகளை கரை சேர்த்து விட்டு நான் என் வாழ்க்கைய தொலைத்து போட்டு நிக்கன். காலம் அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கு.. பாப்பம் விடு”. “இஞ்ச பார்டா நாற்பது பெரிய வயசே இல்ல.. நீ எதுவும் யோசிக்காத ஓம் என்று ஒரு வார்த்தை சொல்லு கலியாணத்த ஒழுங்கு பண்ணிறன். எனக்கு தெரிந்த நல்ல குணமான ரீச்சர் இருக்கிறா.. நீ ஒருக்கா அவள பாருடா.. நாம்தான் நம் பாதையை செப்பனிட வேணும் மற்றவர்கள் செய்வார்கள் என நம்புவது மடத்தனம் புரிஞ்சுக்கோ. கட்டாருக்கு திரும்பவும் போக முன்னர் நீ கல்யாணத்தை முடிச்சிடு. இனி நீ உனக்காக வாழ வேணும்”.

“ஓ.கே குகன் நல்ல நட்புக்கு அடையாளம் நீதான்டா.. உனது வாத்தியார் போதனையை என்னிலும் பிரயோகித்த விட்டாய். ஐஞ்சாம் வகுப்பு உமா ரீச்சரும் இப்படித்தான் புத்திமதி சொல்வா அதை இப்ப நினைச்சுப் பாக்கிறன் குகன்”. “எனக்கும் உமா ரீச்சர மறக்க முடியல்ல.. நானும் பல வருடமாக ஐஞ்சாம் வகுப்புத்தான் படிப்பித்து வாறன்டா. மாணவர்கள் எல்லாருக்கும் கனவுகளும் இலட்சியங்களும் இருக்கு சுரேஷ் அது அவர்களது உணர்வு.. அவர்களது கனவுகள் தடம் புரண்டு போவதை தடுக்க நம் கல்வித் திட்டத்தில் என்னதான் வழியிருக்கு.. அதுதான் மச்சான்.. நான் இதுவரையும் உமா ரீச்சர் கேட்டது போல எந்த ஒரு மாணவனையும் நீ என்னவாகப் போகிறாய் என்று கேட்பதே இல்லை”

ஆச்சரியத்துடன் குகன் வாத்தியாரை பிரமிப்புடன் நிமர்ந்து பாத்தான் சுரேஷ். “சுரேஷ் என்னடா பலமான யோசனை”. “ஒண்ணுமில்லடா..” என்றவனின் மனதில் நண்பன் குகன் வாத்தியார் இமயமாய் உயர்ந்து நின்றான்.

விவேகானந்தம் வெல்லாவெளி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division