Home » தனியொருவரை நம்பி வந்த மக்கள் ​வெள்ளம்

தனியொருவரை நம்பி வந்த மக்கள் ​வெள்ளம்

by Damith Pushpika
May 5, 2024 6:44 am 0 comment

இலங்கையில் அதிக மக்கள் கலந்து கொண்ட மே தின பேரணி என்பதை நிரூபிக்க ஒவ்வொரு கட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதி ரணில் மட்டும் நாட்டுக்காக வேலை செய்தார். வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக பாடுபட்ட தனி மனிதனின் அர்ப்பணிப்பிற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் திரண்டிருந்தனர். ஜனாதிபதி ரணில் மே தினத்தன்று கொட்டகலைக்குச் சென்று தோட்டத் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பொன்றை வழங்கினார். அது அவர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாயாக மாற்றப்பட்டதன் மூலம் வழங்கப்பட்ட அன்பளிப்பாகும். கொட்டகலையில் நடைபெற்ற தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில், கூடியிருந்த மக்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் இந்த செய்தியை வெளியிட்டார். மேலதிக விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் சந்தர்ப்பத்தை அமைச்சர் மனுஷவிடம் ஜனாதிபதி ரணில் ஒப்படைத்துவிட்டு மாலையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கொழும்பு திரும்பினார். ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, மூன்று ரயில்களை முன்பதிவு செய்து கட்சி உறுப்பினர்களுக்கு மே தினப் பேரணியில் பங்கேற்பதற்கான வசதிகளை செய்து கொடுத்தமைக்காக ஜனாதிபதி ரணில் அவரைப் பாராட்டினார். பேரணியில் பல பேச்சாளர்கள் பங்கேற்பதில் தாமதம் ஏற்பட்டதால், பொதுச் செயலாளர் ரங்கே பண்டாரவின் பேரணியின் நிகழ்ச்சி நிரலை மாற்ற வேண்டியதாயிற்று. இதன்படி, ரவி கருணாநாயக்கவிற்கு பதிலாக பொதுச் செயலாளர். ரங்கே பண்டாரவே வரவேற்புரையை ஆற்ற நேரிட்டது. பேரணியின் நிகழ்ச்சி நிரலை கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்தினம் இரவு பொதுச் செயலாளர் ரங்கே முன்வைத்து ஒப்புதல் பெற்றுள்ளார். எவ்வாறாயினும், நிகழ்ச்சி நிரலின்படி, ஜனாதிபதி ரணிலின் உரைக்கு இறுதியாகவே நேரம் ஒதுக்கப்பட்டிருந்து. பேரணி ஆரம்பித்து சுமார் அரை மணித்தியாலத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரத்னவிடமிருந்து தொலைபேசி அழைப்பு ஒன்றைப் பெற்றார். “முக்கிய பேரணிகளின் பேச்சாளர்கள் முன்னதாகவே பேச முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதியும் முன்னதாகவே பேசினால், மாலை நேர சேனல்களில் செய்திகளில் உரையை வெளியிடலாம்.” என இந்த விடயத்தை தினித் சிந்தக கூறியதையடுத்து, ஜனாதிபதி ரணில் கட்சியின் பொதுச் செயலாளர், பிரதித் தலைவர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.“சார், மக்கள் மாலையிலேயே கிளம்பலாம் என்பது என் கருத்து. ஏனென்றால் நாங்கள் பேரணியை அரை மணி நேரம் தாமதமாகத் தொடங்கினோம். வானிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. அதனால் மாலை 4.20 அளவில் உரையாற்றுங்கள்” என பொதுச்செயலாளர் ரங்கேயும் கூறினார். அதன்படி ஜனாதிபதி ரணில் கடைசியாக உரையாற்றுவதற்குப் பதிலாக மனுஷ நாணயக்காரவுக்குப் பின்னர் பேச ஆரம்பித்தார். முன்னதாக பேசினாலும், பேரணி முடியும் வரை அங்கேயே இருந்தார். கூட்ட அரங்கில் இருந்து வெளியேறும் முன், மேடையின் அருகில் இருந்த கட்சி ஆதரவாளர்கள் மற்றும் உறுப்பினர்களிடம் சென்று உரையாடலில் ஈடுபட ஜனாதிபதி ரணில் மறக்கவில்லை. கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறிய ஜனாதிபதி ரணில், செய்திப் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக்கவிடம் மீண்டும் ஒருமுறை தொலைபேசியில் உரையாடி கொழும்பில் நடைபெற்ற ஏனைய மே தினக் கூட்டங்கள் தொடர்பிலான விபரங்களைக் கோரினார். அவரும் ஒரு மணித்தியாலத்திற்குள் அறிக்கையை வழங்கினார். எனவே மே தினக் கூட்டங்கள் தொடர்பில் தெளிவான புரிதலுக்கு வர ஜனாதிபதி ரணிலால் முடிந்தது.

தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கித்சிறி ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுடன் சுதுவெல்லவில் இருந்து கூட்ட அரங்கிற்கு மக்களுடன் பேரணியாகச் சென்றார். இவ்வாறு பிரதித் தலைவர் ருவன் வி​ேஜவர்தன, அகில உள்ளிட்டோரும் பல்வேறு வீதிகளில் மக்களுடன் நடைபவனியாக வந்தனர். பேரணியின் முடிவில், அவர்களுடன் வந்திருந்த ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை சாகல அறிந்தார். அந்த கட்சிக்காரரின் உடல்நிலை குறித்து விசாரிக்க மாலையில் அவர் மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். பேரணியின் முடிவில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பாடகர்கள் பங்கேற்ற இசைக் கச்சேரியும் நடைபெற்றது. அதில் பெருந்திரளான இளைஞர்களும் யுவதிகளும் கலந்து கொண்டார்கள். இரவு 12.00 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில் இளைஞர்களின் வேண்டுகோளின் பேரில் நள்ளிரவு 1.00 மணி வரை இந்நிகழ்ச்சி நீண்டது. அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவும் இசை நிகழ்ச்சியில் பாடல்களைப் பாடினார். இளைஞரணி அமைச்சர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பலர் இசை நிகழ்ச்சியைக் காண வந்திருந்தனர்.

ஜனாதிபதி ரணில் அடுத்த நாள் காலை ஆளுநர்களின் பதவிப்பிரமாணம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளுக்கு கௌரவப் பட்டங்களை வழங்குவதற்காக அலுவலகத்திற்கு வந்தார். அதற்கு முன்னதாக ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு, மே தின பேரணிகள் குறித்து பேச ஆரம்பித்தது. “ஐ.ம.ச மேடைக்கு முன்னால் முக்கிய தலைவர்கள் யாரும் தென்படவில்லை. தலதா, ராஜித, பதியுதீன், ஹக்கீம் போன்றவர்கள் வராததையும் அவதானிக்க முடிந்தது. ஐ.ம.ச தலைவர் வருவதற்கு முன்னரே தலைவர் பொன்சேகாவும் சென்றுவிட்டார். என பேராசிரியர் ஆசு மாரசிங்க உரையை ஆரம்பித்தார். “ஜே.வி.பி யும் தமது உச்ச அளவிலான ஆதரவாளர்களை கொழும்புக்கு கொண்டு வந்திருந்தனர். மாத்தறையிலும், அனுராதபுரத்திலும், யாழ்ப்பாணத்திலும் கூட இதே நிலைதான். எனினும், மாத்தறை பேரணியில் பண்டாரவளையைச் சேர்ந்த 75 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிலிருந்து பண்டாரவளையில் உள்ளவர்களும் கூட்டத்தில் இருந்ததையே இது காட்டுகிறது” இவ்வாறு எம்.பி வஜிர தெரிவித்தார். “ஆனால் ஒட்டுமொத்தமாக ஐக்கியதேசியக் கட்சியின் பேரணியில் ஜனாதிபதி என்ற தனி நபரை நம்பி பேரணிக்கு வந்தவர்களே அதிகம். இந்த மக்கள் அனைவரும் ஜனாதிபதி என்ன செய்துள்ளார், என்ன செய்வார் என எதிர்பார்ப்புடன் நம்பி வந்தவர்கள். ஏனென்றால் பலரும் கட்சியை உடைத்து வௌியே சென்று, கட்சி பலம் குன்றியிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த மக்கள் வெள்ளம் வந்தது. என்று அமைச்சர் மனுஷ கூறினார். “பொதுவாக நான் கவனித்த ஒரு விஷயம் இருக்கிறது. இந்த மே தின பேரணிகளில் பெண்களின் பங்கேற்பு குறைந்துள்ளது. மறுபுறம், மே தின பேரணிகள் எதிலும் இளைஞர் பிரதிநிதித்துவம் முக்கியத்துவம் பெறவில்லை என்று ஜனாதிபதி ரணில் முகத்தை சுருக்கியவாறு கூறினார். ஜனாதிபதி கூறியதை ஆமோதித்து அமைச்சர் பிரசன்னவும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார். “இளைஞர்கள் மே தின பேரணிகளுக்கு வரவில்லை, ஆனால் மாலையில் இசைக் கச்சேரியைப் பார்க்க பல இளைஞர்கள் திரண்டிருந்தார்கள். அப்படிப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியில்தான் இளைஞர்கள் இருந்தனர். அமைச்சர் மனுஷ சிரித்துக் கொண்டே கூறினார். “ஐ.ம.ச தமது உயர்ந்த பட்ச ஆதரவாளர்களை வெளிப்படுத்தியுள்ளார்கள், ஜே.வி.பி. யும் அவ்வாறே ஆனால் மொட்டுக்கட்சியும் ஐ.தே.கவும் இங்கு தமது உயர்ந்த பட்சத்தை வெளிப்படுத்தவில்லை. நம்மவர்கள் இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கிறார்கள். மறுபுறம், மொட்டுக்கட்சி, ஐ.தே.க, தொண்டமானின் தொழிலாளர் காங்கிரஸின் மே தின பேரணிகளுக்கு வந்த அனைத்து மக்களையும் ஒன்று சேர்த்தால், அது கொழும்பில் உள்ள மற்ற இரண்டு கட்சிகளுக்கும் வந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானது.” என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர சொன்னார். இந்த உரையாடலின் போது வடமேற்கு ஆளுநரின் பதவிப் பிரமாணம் குறித்த பேச்சும் எழுந்தது. இதேவேளை, வடமேல் மாகாணத்தில் முஸ்லிம் ஆளுநரை நியமிப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் அதிகமாக இருப்பதால் இந்த நியமனத்தில் தவறில்லை என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். அத்துடன், பௌத்தர்களாகவோ, கத்தோலிக்களாகவோ, முஸ்லிம்களாகவோ சிந்திக்காமல் இலங்கையர்களாக சிந்தித்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என ஜனாதிபதி முன்னிலையில் கூற ஆரம்பித்தனர்.” முன்பு, ஒரு சிங்களவர் வடக்கிற்கு அனுப்பப்பட்டார், அதே சமயம் ஒரு தமிழ் அல்லது முஸ்லிம் மேல் மாகாணத்துக்கு அனுப்பப்பட்டார். ஆனால் நாங்கள் அதைச் செய்யவில்லை. வடக்கின் ஆளுனர் பதவியையும், மாவட்ட செயலாளர் பதவியையும் தமிழர் ஒருவருக்கு வழங்கியுள்ளோம். மேல் மாகாணம் சிங்களவருக்கு வழங்கப்பட்டது. மேலும், இந்த நியமனம் ஜனாதிபதியின் தனித்த முடிவல்ல. அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் செய்த காரியம்.” பாராளுமன்ற உறுப்பினர் வஜிர நீண்ட விளக்கமளித்தார். இதேவேளை, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்புக்கு எதிராக தோட்ட முதலாளிகள் வழக்குத் தொடர்ந்துள்ளதாக ஊடகங்களில் வெளியான பல செய்திகள் குறித்து அமைச்சர் மனுஷ ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.” அவர்கள் வழக்குத் தொடுக்கட்டும். நாங்கள் தொழிலாளர்களின் பக்கம் நின்று வழக்கை ஆதரிப்போம். அதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுங்கள்” இவ்வாறு ஜனாதிபதி மனுஷவுக்கு அறிவுரை வழங்கினார்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division