Home » IPL: பந்துவீச்சாளர்களும் வீரர்களே…

IPL: பந்துவீச்சாளர்களும் வீரர்களே…

by Damith Pushpika
May 5, 2024 6:44 am 0 comment

உலகின் செல்வந்த கிரிக்கெட் தொடரான இந்திய பீரிமியர் லீக்கில் (ஐ.பி.எல்.) வாணவேடிக்கைக்கு பஞ்சமில்லை. அரங்கில் இருப்பவர்களுக்கு மேலே பறக்கும் பந்தைப் பார்த்துப் பார்த்து கழுத்து சுளுக்கிக் கொள்ளும். போட்டி நடைபெறும் மைதானங்கள் அனைத்திலும் துடுப்பாட்ட வீரர்கள் பாவம் பார்ப்பதே இல்லை. அது ஒரு சிக்ஸர் திருவிழாவாகவே நடக்கிறது. மறுபக்கம் பந்துவீச்சாளர்கள் நாதியற்றுப் போய்விட்டார்கள். கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களுக்கோ டி20 விளையாட்டு எங்கே போகிறது என்ற குழப்பம்.

இந்த ஐ.பி.எல். பருவத்தில் முதல் 39 போட்டிகள் முடிவில் பெறப்பட்ட மொத்த பௌண்டரிகள் 1,191 மற்றும் சிக்ஸர்கள் 686. 2023 பருவத்துடன் ஒப்பிடும்போது அந்தப் பருவத்தில் மொத்தமாக 2,174 பௌண்டரிகள் மற்றும் 1,124 சிக்ஸர்கள் பெறப்பட்டன. ஆனால் இந்தப் பருவத்தின் பாதித் தூரத்திலேயே அந்த சாதனை முறியடிக்கப்படும் சமிக்ஞை பெரிதாகத் தெரிகிறது. அதாவது பௌண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் செல்லும் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் அணிகளின் மொத்த ஓட்டங்களும் அதிகரித்திருக்கின்றன. ஆரம்ப கால ஐ.பி.எல். போட்டிகளைப் பார்த்தால் 150–160 ஓட்டங்கள் சவாலான இலக்காக இருந்தது. ஆனால் இன்று அந்த இலக்கும் பத்துப் போட்டிகளில் எட்டில் இலகுவாக துரத்தப்பட்டு விடுகிறது.

இது ஓட்டம் குவிக்கும் போக்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. 2007 இல் முதலாவது டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஸ்டுவட் பிரோட்டின் பந்துக்கு யுவராஜ் சிங் ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்களை விளாசினார். அப்போது இந்தியாவின் மொத்த ஓட்டங்கள் 218 ஐ எட்டியது. அது அப்போது இமாலய இலக்கு. என்றாலும் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் 200 ஓட்டங்கள் என்பது வழக்கமாகி விட்டது. இந்தப் பருவத்தில் முதல் 39 ஐ.பி.எல். போட்டிகள் முடிவில் 200 ஓட்டங்கள் 19 தடவை தாண்டப்பட்டது. போட்டி ஒன்றின் ஒட்டுமொத்த ஓட்டங்கள் 400ஐ தாண்டிய சந்தர்ப்பங்கள் ஒன்பது முறை பதிவாயின. இரு போட்டிகளில் அபரிமிதமாக 500க்கும் மேல் மொத்த ஓட்டங்கள் பெறப்பட்டன. இன்னும் இருக்கிறது. இந்தப் பருவத்தில் சராசரி ஓட்ட வேகம் ஓவருக்கு 10. இந்தப் பருவம் ஆரம்பித்தது தொடக்கம் சன்ரைசஸ் ஹைதராபாத் அணி என்பது ஓட்ட இயந்திரமாகவே இயங்கி வருகிறது. ஓட்டங்கள் குவிப்பதில் சாதனைக்கு மேல் சாதனை படைக்கிறது. வரலாற்றில் முன்னெப்போதும் நிகழாத வகையில் முதல் பவர் பிளேயில் (ஆறு ஓவர்கள்) 125 ஓட்டங்களை அது குவித்தது. டெல்லிக்கு எதிரான அந்தப் போட்டியின் முதல் ஆறு ஓவர்களில் ஹைதராபாத் ஓவர் ஒன்றுக்கு 20.83 ஓட்டங்கள் வீதம் சேர்த்தது. இந்தப் பருவத்தின் முதல் பாதி முடிவின்போது சன்ரைசஸ் அணி மூன்று தடவைகள் இன்னிங்ஸ் ஒன்றில் 250க்கு மேல் ஓட்டங்களை பெற்றது. றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அது 287 ஓட்டங்களை விளாசியது. அதாவது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்னிங்ஸ் ஒன்றில் சாத்தியம் குறைவு என்று பார்க்கப்பட்ட 300 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்டுவது நெருங்கி விட்டது என்று பார்க்கலாம். ஐ.பி.எல். கிரிக்கெட் என்பது அதிரடிக்கு பஞ்சமில்லாதது. அது தான் அந்த கிரிக்கெட்டின் பாணி. துடுப்பாட்ட வீரர்கள் ஒரு பந்தை வீணடித்தாலும் பெரும் குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பந்திலும் உச்சபட்ச ஓட்டங்களை பெறவே அவர்கள் முயல்வார்கள். அதன் விளைவுதான் சிக்ஸர்கள், பௌண்டரிகள் பறக்க இந்தப் பருவத்தில் அனாயாசமாக ஓட்டங்கள் சேர்கின்றன. என்றாலும் இப்படி கணக்கு வழக்கில்லாமல் ஓட்டம் சேர்க்கப்படுவதற்கு என்ன காரணமாக இருக்கும்? மந்தமான ஆடுகளங்கள் இதற்கு ஒரு காரணம். ஒருநாள் மற்றும் டி20 அகிய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் இப்படி இருக்க வேண்டும் என்று அதனை தயார் செய்பவர்கள் எழுதப்படாத சட்டம் ஒன்றை வைத்திருக்கிறார்கள். ஏனென்றால் ஓட்டங்கள் விளாசப்பட்டாலேயே விறுவிறுப்பு இருக்கும் என்பது நம்பிக்கை. அதுவும் டி20 கிரிக்கெட்டில் அது ஒரு குருட்டு நம்பிக்கையாகவே மாறிவிட்டது. ரசிகர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் இதனையே எதிர்பார்க்கிறார்கள்.

உலகெங்கும் நடக்கும் மற்ற டி20 கிரிக்கெட் லீக்கிகளை விடவும் ஐ.பி.எல். இதனை தீவிரமாகவே பின்பற்றுகிறது. இதனால் ஆடுகளங்கள் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் ஐதீகம். மந்தமான ஆடுகளங்கள் மாத்திரமல்ல பந்து வீச்சாளர்கள் எதிர்கொள்ளும் சவால்!முன்னரை விடவும் துடுப்பாட்ட வீரர்கள் வலுப்பெற்றவர்களாகவும், நிலைமைக்கு பொருந்துபவர்களாகவும் மிக முக்கியமானவர்களாகவும், வீராதி வீரர்களாகவும், குறிப்பாக இளம் வீரர்கள் டி20 கிரிக்கெட்டுக்காகவே வளர்க்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் போட்டிகளை வெல்வதற்கும், அங்கீகாரத்திற்காகவும், வெகுமதிகளை பெறுவதற்கும் சவால்களை தாண்டி இன்னும் கடுமையான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். சில விதி மாற்றங்களும் பந்துவீச்சாளர்களை பலவீனப்படுத்துவதாகவே இருக்கின்றன. குறிப்பாக இந்த ஐ.பி.எல். பருவத்தில் வந்திருக்கும் இம்பாக்ட் மாற்று வீரர் முறை முக்கியமான நேரத்தில் மாற்று வீரர் ஒருவரை களமிறக்குவதற்கான சந்தர்ப்பத்தை பயிற்சியாளர்கள் மற்றும் அணித் தலைவர்களுக்கு வழங்கி இருக்கிறது. இந்த உத்தி பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருப்பதாகத் தெரியவில்லை. இந்த இம்பாக்ட் மாற்று வீரர் முறையில் பந்துவீச்சாளர்கள் பதில் வீரராக அழைக்கப்படுவதில்லை. மாறாக துடுப்பாட்ட வரிசையை மேலும் பலப்படுத்துவதற்கே பயன்படுத்தப்படுகிறது. கிரிக்கெட் என்பது துடுப்பாட்ட வீரர்களின் விளையாட்டு என்பது தொன்று தொட்டு வரும் கூற்றாக இருந்தாலும், துடுப்பாட்டத்திற்கு மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் அதிகரித்து வரும் சமநிலையற்ற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது ஆரோக்கியமானதாகத் தெரியவில்லை. அது டி20 கிரிக்கெட்டிலும் பெரிதாக விவாதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. இந்தியாவின் முன்னாள் அணித் தலைவரும் துடுப்பாட்ட ஜாம்பவானுமான சுனில் கவாஸ்கர் கூட பந்துவீச்சாளர்கள் பக்கம் இருக்கிறார். ‘போட்டிகள் ஒரு பக்கச் சார்பானதாக மாறினால் போட்டித் தன்மையும், சுவாரஸ்யமும் கெட்டுவிடும்’ என்கிறார். வழக்கமாக பௌண்டரி தூரம் 75 யார்ட்களாக இருந்த நிலையில் அது 65 அல்லது அதனை விடவும் குறைவான தூரத்துக்கு குறைக்கப்பட்டது பற்றி கவாஸ்கர் கடுமையாகக் கோபப்படுகிறார். ‘பந்துவீச்சாளர் துடுப்பாட்ட வீரருக்கு தவறைச் செய்ய வைத்தாலும் பௌண்டரி அருகில் கொண்டுவரப்பட்டதால் தண்டனையை அனுபவிக்கிறார்கள். பிடியெடுக்கும் இடத்தில் சிக்ஸர் போனால் என்ன செய்ய!’ என்று கவலைப்படுகிறார் கவாஸ்கர்.நவீன துடுப்புகளின் தயாரிப்பும், அவைகளின் செயல்திறனும் அதிகரித்திருக்கிறது. தவறாக அடிக்கும் பந்து கூட தூரத்துக்குச் சென்றுவிடுகிறது. ஆனால் அதற்கு நிகராக பந்துவீச்சாளர்கள் தமது திறமை மற்றும் உத்வேகத்தை அகதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பது தென்னாபிரிக்க முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டைனின் கூற்று. ‘நான்கு ஓவர்களுக்குள் பந்துவீச்சாளர்கள் ஹீரோ ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது’ என்கிறார். சம்பிரதாய கிரிக்கெட்டில் இருந்து டி20 கிரிக்கெட் புதிய போக்கிற்கு மாறி வருகிறது. அது வீரர்கள் அனைத்துத் துறைகளிலும் திறமை, புதுப் போக்கு, உத்வேகத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி இருக்கிறது. எப்படி இருந்தபோதும் மைதானத்திலும், அதற்கு வெளியிலும் பந்துவீச்சுக்கும், துடுப்பாட்டத்திற்கும் இடையே சமநிலையை பேணுவது முக்கியமானது. அப்படி இல்லை என்றால் கிரிக்கெட், கிரிக்கெட்டாக இருக்காது.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division