Home » ஈரான் – இஸ்ரேலியப் போரும் அமெரிக்காவின் திட்டமிடலும்?

ஈரான் – இஸ்ரேலியப் போரும் அமெரிக்காவின் திட்டமிடலும்?

by Damith Pushpika
April 21, 2024 6:00 am 0 comment

உலக அரசியலில் மீண்டும் ஒரு போரை ஏற்படுத்தும் எத்தனங்கள் மேற்காசியாவில் உருவாகி வருவதாக ஆய்வுகள் தெரியப்படுத்துகின்றன. அதற்கு அமைவாகவே நாடுகளது நடைமுறை நகர்வுகள் காணப்படுகின்றன. மறுபக்கத்தில் அத்தகைய போரைத் தவிர்க்கும் முயற்சிகளும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஈரான்- இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளுமே போரில் ஈடுபட்டுவிடக் கூடாது என்பதில் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கு நாடுகளும் அதிக முனைப்புக் காட்டுவதாகவே தெரிகிறது. அதே நேரம் இரு நாடுகளுக்குமான போரை அமெரிக்கா கையாளத்திட்டமிடுவதாகவே விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. அதாவது இஸ்ரேல்-, ஈரான் போரை அமெரிக்கா திட்டமிடுகிறது, என்பதைக் கண்டு கொள்ளக்கூடியதாக உள்ளது. அத்தகைய நகர்வை ஏன் அமெரிக்கா முதன்மைப்படுத்தி செயல்படுத்துகின்றது என்ற கேள்வி முக்கியமானது. வெளிப்படையாகப் பார்த்தால் அமெரிக்கா போரை தவிர்க்க முனைவது போல் உள்ளது. ஆனால் அது உண்மையானதல்ல. மாறாக இஸ்ரேல் சரியாகவும் திட்டமிட்டும் போரை நகர்த்த வேண்டும் என்பதில் அக்கறையுடன் அமெரிக்கா செயல்படுவதாகவே தெரிகிறது. இஸ்ரேல் மேற்கொள்ளும் போரில் ஈரான் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா கவனமாக உள்ளது. அதனை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

முதலாவது,19.04.2024 இஸ்ரேல், ஈரான் மீது நிகழ்த்திய தாக்குதலை முதலில் உலகத்திற்கு அம்பலப்படுத்திய நாடு அமெரிக்காவே. அவ்வாறே இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை 24 மணித்தியாலத்திற்குள் நிகழ்த்தும் என்ற புலனாய்வுச் செய்தியை இஸ்ரேலுக்கும் உலகத்துக்கும் வெளிப்படுத்திய நாடு அமெரிக்கா என்பது தெரிந்தவிடயம். அமெரிக்கா போரைத் தடுப்பது போல் காட்டிக் கொண்டாலும் மறைமுகமாக போரை ஊக்குவிக்கின்றது. ஈரானையும் இஸ்ரேலையும் மோதலுக்கு தயாராக்குகின்றது. அவ்வப்போது ஈரானுக்கு எச்சரிக்கைகளையும் விடுப்பதில் அமெரிக்கா பின்னிற்பதாகத் தெரியவில்லை.

இரண்டாவது, கடந்த காலங்களில் ஈரான் மீதான தாக்குதலை நிகழ்த்திய நாடுகள் என்ற வகைக்குள் அமெரிக்காவும்- இஸ்ரேலும் கூட்டாக தொழில்படுகின்றன. ஈரானின் இராணுவத் தளபதி அணுவிஞ்ஞானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுதான் காரணம் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியை அடுத்து அமெரிக்காவால் ஈரான் மீது செல்வாக்கை செலுத்த முடியாதுள்ளதுடன் மேற்காசியப் பிராந்தியம் மீதான அமெரிக்கவின் ஆதிக்கத்தை முழுமைப்படுத்தவும் முடியாதுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் மேலாதிக்கத்தை ஏற்படுத்த விடாது தடுத்து வருகின்ற அரசாக ஈரான் காணப்படுகிறது. ஈரானுடன் செய்த அணுவாயுதப் பரவல் உடன்பாட்டில் தான் தோற்றுள்ளதாகவே அமெரிக்கா கருதுகிறது. அத்தகைய நெருக்கடியை கொடுக்கும் அளவுக்கு மேற்காசியாவில் ஈரான் பலமான சக்தியாக வளர்ச்சியடைந்துள்ளது. அதனை வளரவிடுவதன் மூலம் அமெரிக்காவினது ஆதிக்கம் மட்டுமல்ல இஸ்ரேலின் இருப்பும் காணாமல் போக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. அதனால் ஒரு திட்டமிட்ட போரை நிகழ்த்தி ஈரானை முழுமையாக அழித்தல் என்பதே தற்போது அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது.

மூன்றாவது, ஈரான் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் கொண்டுள்ள அரசியல், பொருளாதார, இராணுவ உறவு அமெரிக்காவுக்கும் மேற்குலகத்துக்கும் ஆபத்தானதாக உள்ளது. மேற்காசியாவில் சீனாவின், ரஷ்யாவின் பிரசன்னத்தை அதீதமாக ஆதரிக்கும் நாடுகளின் வரிசையில் ஈரான் முதன்மையானது. ஈரானின் இராணுவ உதவியைக் கொண்டு ரஷ்யா உக்ரைன் போரை எதிர்கொண்டுள்ளது. இராணுவ ரீதியாக இரு நாட்டுக்கும் இடையில் நெருக்கம் பிராந்திய அரசியலைக் கடந்து உலகளாவிய அரசியல்- இராணுவ பரிமாணத்தை பெற்றுள்ளது.

சீனாவின் பொருளாதார உறவும் பிராந்திய அடிப்படையிலான நெருக்கமும் அமெரிக்காவை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. ஈரானின் இராணுவ பலத்திற்கு பின்னால் ரஷ்யா உள்ளமையும் ரஷ்யாவை உக்ரைனை வைத்து தகர்க்க முடியவில்லை என்பதும் மேற்குலகத்தின் அதிருப்தியாகும். அதனால் ரஷ்ய- ஈரானிய உறவை தகர்ப்பதற்கும் ரஷ்யாவை இருமுனையில் போரை எதிர்கொள்ள வைப்பதற்கும் அமெரிக்கா, ஈரான் மீதான இஸ்ரேலியப் போரை திட்டமிடுகிறது. அதன் மூலம் இருமுனைப் போரையும் மேற்குலகம் வெற்றி கொள்ள முடியுமெனக் கணிக்கின்றது. அதாவது உக்ரைனில் ரஷ்யாவை தோற்கடிப்பதன் மூலம் நேட்டோவும் மேற்குலகமும் ஐரோப்பாவை முழுமையாக கைப்பற்றும் எனவும் மறுபக்கத்தில் ஈரானைத் தோற்கடிப்பதன் வாயிலாக ஒருபக்கம் ரஷ்யாவையும் ஈரானையும் தோற்கடிப்பதன் மூலம் மேற்காசியாவை கைப்பற்றலாம் என்பதே அத்தகைய கணக்காகவுள்ளது.

நான்காவது, ஈரானுக்கும் வடகொரியாவுக்குமான உறவு பெரும் ஆபத்தானதாக அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கருதுகின்றன. பல சந்தர்ப்பங்களில் ஈரான் வடகொரியாவிடமிருந்து அணுவாயுதங்களை தருவிக்க கூடியதாக உள்ளதென மேற்கு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்தகைய சூழல் சாத்தியப்படுமாயின் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்காவே நெருக்கடிக்குள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாக அமையும் என்ற கருத்து மேற்கு ஊடகங்களிடமும் உள்ளது. அதனால் ஈரான் திட்டமிட்டு எல்லைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதை அமெரிக்கா அதிகம் விரும்புகிறது. இஸ்ரேல் ஈரானை வேகப்படுத்துமாயின் ஈரான் வடகொரியா மூலம் அணுவாயுதங்களை தருவித்துவிடும் என்ற நிலைப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கருதுகிறது. இதனால் இஸ்ரேல்-, ஈரான் போர் நிதானிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு கவனம் உள்ளது. அதற்காகவே அதிகம் சமாதான தூதுவராகவும் போரைத் தடுக்கும் அரசாகவும் அமெரிக்கா செயற்பட முனைகிறது. அது எதுவும் உண்மையானது அல்ல. போரை சரிவர கையாளுவதும் நீடிப்பதன் மூலமும் ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் தோற்கடிக்க முடியுமென அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கருதுகின்றன.

ஐந்தாவது, எது எவ்வாறு அமைந்தாலும் ஈரான் இஸ்ரேலைத் தாக்கும் போது காட்டும் அதிதீவிரம் அதன் பலத்தைக் காட்டுகிறது. ரஷ்யா, சீனா என்பன நேரடி ஆதரவை ஈரானுக்கு வழங்காத போதும் மறைமுகமாக தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவே உள்ளன. அதனடிப்படையிலேயே ஈரானின் பலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் இராணுவ பலத்தை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் மேற்காசிய நாடுகள் பல இணைந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது. அப்படியாயின் ஈரானின் இராணுவ பலம் பெரியதாகவே உள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது. 300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 100க்கும் மேற்பட்ட ரோன்களும் மட்டும் பயன்படுத்தப்பட்டதல்ல. மாறாக ஈரானின் பலமும் அராபிய தேசங்களின் எண்ணமும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே இஸ்ரேலை அசைக்க முடியாது என்ற நிலையை மாற்றி இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை நிகழ்தும் திறனை ஈரான் வெளிப்படுத்தியிருப்பதென்பது ஈரான் வெற்றிகரமாக தாக்குதலை நிகழ்த்திய நாடு என்றே கருத இடமுண்டு. அது மட்டுமல்ல ரஷ்யா, சீனா, வடகொரியா ஆதரவு மட்டுமல்ல ஈரானிடம் அணுவாயுத பலம் உடையதாகவே கருதப்படுகிறது. அதற்கான வாய்ப்பு அதிகமானதாகவே தெரிகிறது.

ஆறாவது, ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலும் தனது அணுவாயுதங்களை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவே போரியல் நிபுணர்கள் கருதுகின்றனர். காரணம் இஸ்ரேலிடம் அணுவாயுதம் உண்டு என்பது மட்டுமல்ல இஸ்ரேல் தனது தனித்துவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் ஒரு நாடு என்பதை பலசந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் ஒரு தாக்குதலை மேற்கொள்வது அதற்கு ஆபத்தானது என்பதைக் கருதும் போது அடிப்படையில் இஸ்ரேலின் அணுவாயுதபலமே அடிப்படையானதாக அமைந்திருந்தது.

தற்போது அத்தகைய தாக்குதலை ஈரான் மேற்கொண்ட போதும் இஸ்ரேல் பதிலடி கொடுத்த போதும் அதன் விளைவுகளிலிருந்து ஈரான் தன்னை தற்காக்க தயாராகிவிட்டது என்ற வகையில் ஈரான் வலுவான சக்தியாகவே தென்படுகிறது. ஆனாலும் இஸ்ரேல் இலகுவில் தனது வெற்றியை இழந்துவிடாது. அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு பாரிய அழிவை ஈரானுக்கு கொடுக்கத் தயாராகின்றது. அதேநேரம் ஈரானின் பலம் அணுவாயுதத்தில் என்பது முக்கியமானது. அதனை ஈரான் கொண்டுள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.

அது இஸ்ரேலை மட்டுமல்ல மேற்குலகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆனால் தற்போதுவரை ஈரான் தன்னிடம் அணுவாயுதம் இருப்பதாக வெளிப்படையாக தெரியப்படுத்தவில்லை. எப்படி இஸ்ரேல் அணுவாயுதத்தை வைத்துக் கொண்டு வெளிப்படையாக அறிவிக்காதுள்ளதோ அவ்வாறே ஈரானும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் போரியல் ஆய்வாளர்களிடம் நிலவுகிறது.

எனவே தற்போது ஏற்பட்டுள்ள ஈரானிய- இஸ்ரேல் போர் என்பது அமெரிக்காவினது திட்டமிடலுக்குள் நகர்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும் சில நாடுகளும் போரைத் தவிர்க்க முயன்றாலும் அதனை அமெரிக்காவே நிர்ணயிக்கு சக்தியாக மாறியுள்ளது. ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டின் திட்டமிடலாக உள்ளது. தற்போது ஈரானின் அணுத்திறனில் அதிக சந்தேகம் எல்லாத் தரப்பிடமும் ஏற்பட்டுள்ளது. இது போரின் புதிய திருப்பமாக அமைய வாய்ப்புள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division