Home » நெஞ்சிலாடும் நினைவலைகள்

நெஞ்சிலாடும் நினைவலைகள்

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

சுகைரா சிறு வயதிலிருந்து பத்திரிகை, வானொலிக்குப் பல ஆக்கங்களை எழுதிவருபவள். அவற்றோடு மட்டும் நின்று விடாமல், சில நூல் வெளியீடுகளையும் அவ்வப்போது செய்து வருவாள். புத்தகங்களை நூலுருவாக்கம் செய்து விடலாம். இலக்கியவாதிகளையும், கலைஞர்களையும், ஆர்வலர்களையும், அன்பர்களையும், சொந்தங்களையும் தேடிப் பிடித்து அழைப்பிதழ்களைக் கொடுப்பதில் போதும் போதுமென்றாகிவிடும். எவ்வாறாயினும், அவளது நூல் வெளியீட்டு விழா கலகலப்பாக நடந்து முடிந்து விடும். இவ்வாறிருக்கையில், அவளது நூல்களில் ஒன்றான “மிதுஹாவின் நந்தவனம்” பற்றிய இரசனைக் குறிப்புகளை ரிம்சா பத்திரிகையில் எழுதியிருந்தாள். அதனை வாசித்து விட்டு

பலரும் நூலினை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதன்படி சுகைராவும் அனுப்பி வைத்தாள். அன்று சனிக் கிழமைக் காலை தொலைபேசி பல முறை அடித்துக் கொண்டேயிருந்தது. சுகைரா அவசர அவசரமாக வந்து தொலைபேசியை எடுத்துக் காதில் வைத்தாள். மறுமுனையிலிருந்து “ குட் மோனிங் மெடம்” உங்களது மிதுஹாவின் நந்தவனம் நூலின் இரசனைக் குறிப்பினை வாசித்தேன். அதிலிரு நூல்களை எனக்கு அனுப்பி வையுங்கள் என்றார். அவரது விலாசத்தையும் கூறினார். அவ்வாறே சுகைராவும் அனுப்பி வைத்தாள். நூலின் அன்றைய விலை150 ரூபாய். அவரோ 5000 ரூபாய் அனுப்பி வைத்திருந்தார். புத்தகத்தை விட, தொகை அதிகமாக உள்ளதே என்றாள்.

மெடம்..! நான் உங்க எழுத்துக்குச் செய்யும் சிறு அன்பளிப்பு. நீங்க தொடர்ந்து எழுத வேண்டும். பல நூல்கள் வெளியிட வேண்டும். பெண் ஆளுமையாக இவ்வுலகில் பிரகாசிக்க வேண்டும். எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மெடம். அத்துடன் ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரு புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தார். இது என்னிடம் இருப்பதை விட, உங்களுக்கு மிகவும் பிரயோசனமாகவிருக்கும் என்றார். உங்க புத்தகத்தை வாசித்தேன். நீங்க நந்தவனத்தைத் தேடி எங்கையும் போக வேண்டாம். எமது வீட்டுக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்க. நீங்க எதிர்பார்க்கும் அத்தனை பூ மரங்களும் நமது வீட்டிலுள்ளது என்றார்.

அவர் கதையைக் கேட்டதும், எப்படியும் அவரில்லம் சென்று வர வேண்டுமென சுகைராவின் உள்ளம் துடியாய்த் துடித்தது. இதுபற்றி அவளது கணவரிடம் கூறினாள். அவரில்லம் எவ்வாறு வர வேண்டுமெனக் கேள். எப்போதும் வருமாறு அழைக்கிறார், ஒரு முறை போய் வருவோமே என்றார்.

சுகைரா அவரது அழைப்புக்காகக் காத்திருந்தாள். அவரும் அழைப்பை ஏற்படுத்தினார். உங்களில்லம் வருவதாயின், எவ்வாறு வரலாம்..? நீங்க ஓட்டமாவடியில் வந்து Dr.பாலகிருக்ஷ்ணனின் வீடு எங்கே எனக் கேட்டால். யாரும் சொல்லித் தருவாங்க. நான் முஸ்லிம்களோடு நெருக்கமாகப் பழகுபவன். எனக்குச் சாதி, மதம் வேறுபாடில்லை.

எல்லோரும் சமமானவர்கள். எல்லோரோடும் அன்பாகவே பழகுவேன். குட்டிப் பிரசங்கமே நடத்திமுடித்தார். சுகைராவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. ஒரு நாள் கூட, தான் ஒரு வைத்தியர் எனக் கூறவில்லை. அவரது பேச்சில் பண்பும், பணிவுமே குடி கொண்டிருந்தன.”நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த படித்தவர்களும், பணக்காரர்களும் அவளின் உள்ளத்தைச் சுற்றிச் சுற்றி வலம் கொண்டிருந்தார்கள்.

சுகைரா தனது குடும்பத்துடன் வாழைச்சேனை நோக்கிப் பயணமானாள். கல்குடா அவரது வசிப்பிடமாகும். அன்போடு வரவேற்றார். மதிய நேரச் சாப்பாட்டைச் சாப்பிட்டுச் செல்லுமாறு கெஞ்சினார். அவரது விருப்பத்துக்கு அவர்கள் சம்மதித்தனர். விருந்துபசாரம் பிரமாதம். அவரது மகன் ‘கொட்டல் மனேஜ்மன்ட்,

சிங்கப்பூரில் முடித்தவர். இக் கொட்டலுக்கு வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளே அதிகமாக வருகை தருகின்றனர். எமது தோட்டத்திலிருந்து தேங்காய்கள், காய்கறிகள், மரக்கறிகள், கீரைகள், பழங்கள் என்பன பெறப்படுகின்றன. உடனடி யாகவும், புதியதாகவுமுள்ளன. சுவாரஸ்யமான உரையாடல்களுடன் மதியச் சாப்பாடு முடிவடைந்தது. தனது தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். வளவைச் சுற்றி மதில்கள் அமைக்கப்பட்டிருந்தன. மதிலோரங்களில் மஞ்சள், பச்சை, சிவப்பு, கபிலம் எனக் குரோட்டன்கள் கண்களைக் கவர்ந்தன.

அதன் மத்தியில் ரோசாச் செடிகள் வெவ்வேறு நிறங்களில் பூத்துக் குழுங்கின. அந்தூரியம், ஓர்கிட், நித்திய கல்யாணி, மல்லிகை,மொசண்டாஸ், பாபட்டேஸ், டெகிலியா, போகன்விலா என அடுக்கிக் கொண்டே போகலாம். அத்துடன் மூலிகைத் தோட்டங்களும், காய்கறித் தோட்டங்களும் மனதைக் கொள்ளை கொண்டன.

பச்சைப் பசேலெனக் காட்சி தரும் புல் வெளிகள். அதில் வாத்துக்கள் உலா வருவது போல ஒரு காட்சி, ஆங்காங்கே கொக்குகள், கிளிகள், யானையும் அதன் இரு குட்டிகளும் உண்மையில் இவை அசலா..? நகலா..? என சுகைராவின் உள்ளத்தில் தோன்றியது. இவற்றையெல்லாம் கண்டு களிப்பதற்காக சொகுசு ஆசனங்கள் அமைக்கப்பட்டிருந்தன. வேப்ப மரங்களிலிருந்து குளுகுளுவென காற்றுவீசிக்கொண்டிருந்தது. அவற்றில் ஊஞ்சல் கட்டப்பட்டிருந்தது. வெளி நாட்டவர் தங்குவதற்கான விடுதி வசதிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

அதில் சுவரோவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஒவ்வொரு தூண்களும் மரத்தினால் செதுக்கப்பட்டவை போன்று காட்சியளித்தன. எல்லாவற்றையும் பார்த்து விட்டு மா மர நிழலில் அமர்ந்து கொண்டார்கள். தொமிதேசி மாங்காய்கள் காய்த்துத் தொங்கின. அவை கடதாசி பேக்கினால் கட்டப்பட்டிருந்தன. எல்லாமே காய்கள். இல்லையேல் உங்களுக்கு உண்ணத் தருவேன் என்றார். மாஷா அல்லாஹ். எமது கண்களே பட்டுவிடும் போலிருந்தது. இதமான காற்றின் வருடல்கள் மேனியைத் தாலாட்ட, கண்கள் தூக்கத்தை வரவழைத்தது. தூக்கத்தைக் கலைப்பது போல் ஒவ்வொருவரிடமும் பெரிய.. பெரிய புகைப்பட அல்பம் தந்தார். அவர் குடும்பத்தாரோடு இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கொங்கொங், பங்காளதேஷ் டென்மார்க், பாகிஸ்தான் எனப் பல நாடுகளுக்குச் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள். இதேபோல இலங்கையில் பிரசித்தி பெற்ற இடங்கள் பற்றி விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இதேபோல சுகைராவையும் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்று இயற்கையை இரசிக்க வைத்து நிறைய எழுத வையுங்கள்.’வைத்தியத் தொழில்’ என்பது மற்றவர்களின் நோயைக் கேட்டு மனசு வேதனைப்பட்டுக் கொண்டே

இருக்கும். நோயாளிகளுடனே எமது வாழ்வு கழியும். சிலவேளைகளில் தூக்கம் வராது. அதுபற்றியே யோசிக்கவேண்டும்.

இலக்கியம் என்பது அவ்வாறில்லை. இயற்கையை இரசித்துச் சுதந்திரமாகக் கற்பனை உலகில் சஞ்சரிக்கும் அழகான கலை. அதனால் இலக்கியத் துறையை ரொம்ப.. ரொம்பப் பிடிக்கும். அவவைத் தொடர்ந்து எழுத உற்சாகம் கொடுங்கள். சுகைராவின் கணவரைக் கேட்டுக் கொண்டார். மாலை நேரத் தேநீர் விருந்துபசாரம் நடந்தது. அவற்றை அருந்தி விட்டு எழுந்த போது நாய் குரைக்கும் சத்தம் காதைச் செவிடுபடுத்தியது.

ஆண் பிள்ளைகளைக் கேட்கவும் வேண்டுமா..? போவதும் வருவதுமாக நாயை எட்டிப் பார்த்த வண்ணமிருந்தனர். இது நாயா..?

ஆடா..? இவ்வளவு பெரிதாகவுள்ளது..! ஆச்சரியமாக றுஸ்னி கேட்டான். Dr சிரித்து விட்டுக் கூறினார், இது நாய் தான். அல்ஷேஷியன் (ஜேர்மன் ஷெப்பர்ட்) என்றழைப்பார்கள். இதற்குரிய வீடு தான் இது. கதவுகளைத் திறந்தவாறே எங்கும் போய் வருவோம். வீட்டைப் பாதுகாக்கும். அதன் குரைக்கும் சத்தத்தினால் யாரும் உள்ளே வர மாட்டார்கள். நாய் தூங்குவதற்கே கட்டில் போட்டுள்ளோம். அப்ப, உங்க நாய் புத்தகமும் படிக்குமா..? அஸ்லின் கேட்டான். Dr க்குச் சிரிப்பை அடக்க முடியல்ல. சிரித்துக் கொண்டே பழைய புத்தகங்கள் தூக்கி வீச விருப்பமில்ல. அதுதான் உயரமான இடத்தில் அடுக்கியுள்ளேன் என்றார்.

இந்த நாய்க்கு என்ன சாப்பாடு கொடுப்பீங்க..? முப்லிகா கேட்டாள். ஒரு மாதம் பத்தாயிரம் ரூபாய் செலவாகும். கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. நீங்க வந்த வாகனத்தை வைத்து விட்டு, எனது காரில் பாசிக்குடா கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறேன் என்றார். காரில் பாடல் ஒலிபரப்பாகவில்லை.

‘மியூசிக்’ மட்டுமே ஒலிபரப்பானது. எங்கே பாடலைக் காணோம்..?அஸ்லின் கேட்டான். நான் வைத்திய சாலைக்கு செல்லும் போது மியூசிக்குடன் சேர்ந்து பாடுவேன். அதனால் பாடல் கேட்பதில்லை என்றார். Dr எங்களுக்கும் பாடிக் காட்டுங்களேன் என்றான். இப்போது பாட முடியல. இன்னும் ஒரு நாளைக்குப் பாடுகிறேன் என்றார். Dr க்கு அஸ்லினை மிகவும் பிடித்து விட்டது. அன்றைய பொழுதை பாலகிருஷ்ணன் Dr இன் குடும்பத்தாருடன் கழித்து விட்டு வீடு திரும்பினர். முப்லிகாவுக்குப் படம் வரைவதற்கான புத்தகம், வரைதற் கொப்பி, கலர், பேக் எனப் பலவற்றை வழங்கினார். அவரது ஊக்குவிப்பினாலேயே முப்லிகா இன்று வரை வரைந்து கொண்டிருக்கிறாள்.

ஒவ்வொரு வருடமும் நோன்பு, ஹஜ் பெரு நாள்களில், பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் முன் நிற்பார். இவர்களது நட்புத் தொடர்ந்தது.

சுகைராவுக்கு மீண்டுமொருமுறை வாழைச்சேனை செல்வதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. Dr.பாலக்கிருஷ்ணனையும் சந்தித்து விட்டுச் செல்வதாகத் தீர்மானித்தனர். அவரைச் சந்திப்பதற்காகச் சென்றபோது சனக் கூட்டம் நிறைந்திருந்தது.நேர்ஸ் வந்து விசாரித்தாள். அவள் சென்று Dr ரிடம் கூறியதும்,உடனே உள்ளே வரச் சொன்னார். சுகைராவின் கணவர் யோசித்தார்.

எம்மோடு கதைத்துக் கொண்டிருந்தால்..அவருடைய நேரம் வீணாகிடும். நீண்டதொரு வரிசை காத்திருக்கிறது. அதையும் மீறி, Dr உங்களைக் கட்டாயம் உள்ளே வரட்டுமாம். இதற்கு மேலும் மறுக்க முடியாது. உள்ளே சென்றார்கள்.

உங்களைத் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். நீங்களே வந்திட்டீங்க. அவர் முகத்தில் ஆனந்தம் ஊற்றெடுத்து ஓடியது. உங்க புத்தகங்களை வாசித்தேன். எழுந்து சென்று அலுமாரியைத் திறந்து எடுத்து வந்து காட்டினார்.

இல்லையேல், நான் பொய் சொல்வதாக நினைப்பீர்களல்லவா..? இவர் எனது இவ்வளவு பெரிய அபிமானியா..? சுகைரா மனசுக்குள் நினைத்துக் கொண்டாள். வந்த நீங்கள், எங்க வீட்டுக்கு வந்திட்டுப் போங்கள்.கெஞ்சினர். இல்லை Dr. இன்னுமொரு நாளைக்குப் பார்ப்போம். உங்களை நம்பி மக்கள் கூட்டம் காத்திருக்கிறாங்க. அவங்களைக் கவனியுங்க, Dr. விடை பெற்றார்கள்.

ஆனாலும்…நேர்ஸை பக்கத்திலுள்ள கடைக்கு அனுப்பி, மில்க் பக்கட், கேக், பிஸ்கட், சொக்லேட் எனப் பலவற்றை வாங்கி, பேக் நிறையக்கொடுத்தார். Dr ரின் அன்பையும்,ஆதரவையும் பேசிப் பேசிச் சென்றனர்.

அன்று மைனா ரீச்சரின் மகள் Dr சப்ராவின் ‘வலிமா’ வுக்கு வாழைச் சேனைக்குச் சென்ற போது சுகைராவின் குடும்பத்தினரை, மஸாகிர் சேர் அவரில்லம் அழைத்துச் சென்றார். அவர் மனைவி றிஸானா ரீச்சரிடம் பாலகிருஷ்ணன் Drஐத் தெரியுமா..? என விசாரித்தாள்.

அவர் போன வாரம் இறந்து விட்டாராம். சுகைராவின் தலையில் வானமே இடிந்து விழுந்தாற் போலிருந்தது.வாய் விட்டே கத்த வேண்டும் போலிருந்தது. அவளால் இருப்புக் கொள்ள முடியல. மரணம் யாரையும் விட்டு வைக்காது. உலகமே போலியானது. சுகைரா வீடு வந்து சேர்ந்ததும் Dr ரின் தொலை பேசி இலக்கத்தைச் சுழற்றினாள்.

நேர்ஸ் தூக்கினாள். பாலக்கிருஷ்ணன் Dr ருடன் பேசலமா..? அவர் மறைந்து ஒரு வாரமாச்சு. அவரது மறைவு பேரிழப்பாகும். மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டாள். அன்னாரின் குடும்பத் தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்டாள் சுகைரா.

பண்பான மனிதர்.சுகைராவின் உள்ளத்தில் பாலகிருஷ்ணன் Dr ரின் நினைவலைகள் தொடர்நது கொண்டே இருக்கும்.

ஜெனீரா தௌபீக் ஹைருல் அமான் கிண்ணியா

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division