Home » ரோஹித்தும் பாண்டியாவும்

ரோஹித்தும் பாண்டியாவும்

by Damith Pushpika
April 7, 2024 6:00 am 0 comment

சொந்த நாட்டில் இப்படி அவமானப்படுவோம் என்று ஹார்திக் பாண்டியா ஒருபோதும் நினைத்திருக்கமாட்டார். இந்திய பிரீமியர் லீக் தொடர் ஆரம்பித்து மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்திக்கும்போது பாண்டியாவுக்கு அரங்கில் இருக்கும் ரசிகர்களின் கேலிகளும், கூச்சல்களும் அதிகரித்திருக்கின்றன.

மும்பாய் இந்தியன்ஸின் ஆஸ்தான தலைவராக இருந்த ரோஹித் ஷர்மாவிடம் இருந்து தலைமை பொறுப்பை ஏற்றது தொடக்கம் பண்டியா மீதே எல்லோரது கண்களும் திரும்பியிருக்கிறது. ரோஹித்துக்கு என்றே மும்பையில் ரசிகர் பட்டாளம் ஒன்றே இருக்கும்போது அரங்கில் அவர்களுக்கு தொந்தரவு பொறுக்க முடியவில்லை.

மும்பை இந்தியன்ஸுக்கு ரோஹித் ஐந்து முறை சம்பியன் கிண்ணத்தை வென்று கொடுத்திருக்கிறார். கடந்த மாதம் ஐ.பி.எல் பருவம் ஆரம்பிக்கும் முன்னர் வரை இந்திய அணியில் அனைத்து வகை கிரிக்கெட்டுக்கும் ரோஹித்தான் தலைவராக இருந்தார்.

ஆனால் குஜாரத் அணியில் இருந்து வந்த சகலதுறை வீரர் பாண்டியாவிடம் தலைமைப் பொறுப்பை தூக்கிக் கொடுத்தது ரோஹித் வாதிகளுக்கு சகிக்க முடியவில்லை.

இத்தனைக்கும் பாண்டியா மும்பை அணிக்கு புதியவரல்ல. 2015 தொடக்கம் 2021 வரை அந்த அணி ரோஹித் தலைமையில் நான்கு சம்பியன் கிண்ணங்களை வென்றபோது அணியில் இருந்தவர்தான். பின்னர் 2022 இல் அவரை மும்பை விடுவித்தபோது புதிதாக வந்த குஜராத் டைட்டன்ஸ் அள்ளிக்கொண்டது. அவரின் தலைமையில் அந்த ஆண்டு கிண்ணத்தை வென்ற குஜராத் கடந்த ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறி சென்னையிடம் தோற்றது.

இப்பேர்ப்பட்ட பெருமையுடன் மீண்டும் மும்பைக்கு திரும்பி தலைமை ஏற்ற முதல் மூன்று போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது நிலைமையை மேலும் மோசமாக்கி இருக்கிறது. அரங்கில் இருக்கும் மும்பை ரசிகர்களே பாண்டியாவை நோக்கி கூச்சலிடுவது இம்முறை ஐ.பி.எல். இல் விசித்திரமான காட்சி. ஒரு சந்தர்ப்பத்தில் மைதானத்திற்கு நாய் ஒன்று புகுந்தபோதும் அதற்கு ரசிகர்கள் பாண்டியா… பாண்டியா… என்று கூச்சலிட்டது இதன் உச்சம்.

அதிலும் கடந்த திங்கட்கிழமை (01) மும்பை தனது சொந்த மைதானமான வான்கடேவில் களமிறங்கியபோது நிலைமை மேலும் மோசமாக இருந்தது.

ஆனால் சென்னை அணியின் நிலைமை இதற்கு முழுவதும் முரணாக இருந்தது. சென்னை சுப்பர் கிங்ஸ் அணியினால் அதன் தலைவர் மஹேந்திர சிங் தோனியை கொண்டாடுவது போல் வேறு எவரும் கொண்டாடுப்படுவதில்லை என்பது தான் உண்மை. ‘தல’ தோனி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுவதும் அணித் தலைவர் என்பதற்கு அப்பால் அவர் தலைக்கு மேல் வைத்து கொண்டாடப்படுவதும் ஐ.பி.எல். தொடங்கிய காலத்தில் இருந்து நடக்கும் ஒன்று.

அப்பேர்ப்பட்ட தோனியை தலைமைப் பதவியில் இருந்து நீக்கிய சென்னை அணி ருதுராஜ் காய்க்வார்டை புதிய தலைவராக திடீரென்று அறிவித்தது. ஆனால் ரசிகர்களிடம் எந்த சலசலப்பும் இருக்கவில்லை. அவர்கள் தோனியை கொண்டாடுவதை நிறுத்தவும் இல்லை.

ஆனால் பாண்டியாவுக்கு கிடைத்த வரவேற்பு என்பது முற்றிலும் முரணானது.

குஜராத் டைடன்ஸ் அணியில் இருந்து 1.8 மில்லியன் டொலருக்கு மும்பை அணியால் வாங்கப்பட்ட பாண்டியா, வந்த விரைவிலேயே தலைவராக உயர்த்தப்பட்டார். அதனை ரோஹித் ரசிகர்கள் ஏற்பதாக இல்லை.

ரோஹித் என்பவர் மும்பை அணியை பொறுத்தவரை இன்றியமையாதவர். 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கிடம் இருந்து தலைமை பதவியை ஏற்ற அவரின் கீழ் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் பாண்டியா தலைமை பொறுப்பை ஏற்றது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியதோடு அந்த அணி முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது அந்த கோபத்தை மேலும் அதிகரித்தது.

குஜராத் டைட்டன்ஸ் உடனான தோல்வியுடன் இம்முறை ஐ.பி.எல். இனை ஆரம்பித்த மும்பை, பின்னர் சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிலும் ராஜஸ்தான் றோயல் அணியுடன் சொந்த மைதானத்தில் நடந்த போட்டியின்போது ரசிகர்கள் பாண்டியாவை பார்த்து கூச்சிலிட, அறிவிப்பாளராக செயற்படும் முன்னாள் வீரர் சஞ்சே மஞ்ரேகர் ‘ஒழுக்கமாக நடக்கும்படி’ கூற வேண்டியதாயிற்று.

ஆனால் ரசிகர்களின் கூச்சல் நிட்கவில்லை. ஒரு கட்டத்தில் நிறுத்தும்படி ரோஹித் செய்கை செய்ய வேண்டியதாயிற்று.

இந்திய டி20 அணியின் அடுத்த தலைவராக வருவார் என்று எதிர்பார்க்கப்படும் இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் 30 வயதான பாண்டியா கூட, ‘அன்று இரவு கடினமாகத்தான் இருந்தது’ என்கிறார்.

எப்போதும் எதிரணிக்கு சவாலான வீரராக இருக்கும் பாண்டியா மும்பை அணியில் தனது முதல் வெற்றியை எதிர்பார்த்திருக்கிறார். மும்பை அணி இப்போது ஐ.பி.எல். புள்ளிப் பட்டியலில் பத்து அணிகளில் பத்தாவது இடத்தில் இருக்கிறது.

முந்தைய போட்டியில் ரசிகர்கள், ரோஹித் கோசம் எழுப்ப மும்பை பந்துவீச்சாளர்கள் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு 277 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தது. இது ஐ.பி.எல். வராலற்றில் அதிகூடிய ஓட்டங்களாகவும் இருந்தது.

ஐ.பி.எல். வர வர குறுகிய குலமரபை பெற்று வருவதாக மூத்த கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே, ‘கிரிக்கின்போ’ இணையதளத்திற்கு குறிப்பிட்டிருக்கிறார். ‘அதிக போட்டித் தன்மை ஏற்பட்டு வருவதோடு அதில் மேலும் பலர் உள்வாங்கப்படுகிறார்கள்’ என்கிறார்.

ராஜஸ்தான் அணிக்கு ஆடும் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்தர் அஷ்வின், ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என்கிறார்.

‘இந்த வீரர் எந்த நாட்டை பிரதிநிதித்துவம் செய்கிறார் என்பதை மக்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். இது எமது நாடு’ என்று அஷ்வின் தனது யூடியுப் பக்கத்தில் குறிப்பிடுகிறார். ‘ரசிகர்களின் மோதல் என்பது இத்தனை அசிங்கமான வகையில் இருக்கக் கூடாது’ என்கிறார்.

இந்திய அணி கடந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர், சவ்ரவ் கங்குலி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் தலைமையில் அந்த ஒவ்வொரு வீரர்கள் ஆடிய கடந்த காலத்தை பற்றியும் அஷ்வின் ஞாபகமூட்டுகிறார்.

‘சவ்ரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் தலைமையில் ஆடியதோடு அதற்கு நேர் மறையாகவும் நடந்தது. இந்த இருவரும் ராகுல் டிராவிட்டின் கீழ் ஆடினார்கள். இந்த மூவரும் அனில் கும்ப்ளேவின் கீழ் ஆடியதோடு இவர்கள் அனைவரும் எம்.எஸ். தோனியின் கீழ் விளையாடினார்கள். இவர்கள் தோனியின் கீழ் ஆடியபோது அனைவரும் கிரிக்கெட் ஜாம்பவான்களாக இருந்தார்கள். தோனி கூட விராட் கொஹ்லியின் தலைமையில் ஆடினார்.’

இது போக ஆடுகளத்தில் பாண்டியாவின் நடத்தை, குறிப்பாக ஸ்லிப் திசையில் இருந்த ரோஹித்தை பௌண்டரி எல்லைக்கு களத்தடுப்புச் செய்ய அனுப்பியது, போட்டி முடிவில் பந்துவீச்சு பயிற்சியாளர் லசித் மாலிங்கவுக்கு கைகொடுக்காமல் விலகிச் சென்றது, மைதானத்திற்கு வெளியில் பாண்டியாவுக்கு மாலிங்க இருக்கையை கொடுத்தது போன்ற அணி ஒன்றில் வழக்கமாக நடக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகளைக் கூட ஊடகங்கள் குறிப்பாக சமூக ஊடகங்கள் பெரிதுபடுத்தி காட்டியது அவர் மீதான கோபத்தை பெரிதுபடுத்த நன்றாக உதவி இருக்கிறது.

ஐ.பி.எல். போன்ற பணம் கொட்டும், விளம்பரங்களில் அதிகம் தங்கியிருக்கும் லீக் கிரிக்கெட்டுகளில் இவ்வாறான பிரச்சினைகள் சகஜம் என்பதை கிரிக்கெட் உலகம் இப்போதுதான் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறது. ஆனால் கால்பந்து போன்ற விளையாட்டுகளில் இது காலம் காலமாக நடக்கிறது. இங்கிலாந்து பிரீமியர் லீக், ஸ்பெயினின் லாலிகா என்று கழக மட்டத்திலான கால்பந்து போட்டிகளில் ரசிகர்களின் மோதல்கள் ஒரு ‘மினி போர்’ போல இருக்கும்.

பாண்டியாவுக்கு தலைமை வழங்கப்பட்டது தொடர்பில் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் ஒரு விளக்கத்தை கொடுக்கத் தவறியது கூட நிலைமையை மேலும் மோசமாக்கியது.

இம்முறை ஐ.பி.எல். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த மும்பை இந்தியன்ஸின் செய்தியாளர் சந்திப்பு யூடியுபில் கூட நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. பாண்டியா குஜாராத்தில் இருந்து வந்ததை அடுத்து தலைமை பொறுப்பு வழங்கப்படும் சாத்தியம் பற்றியும் அப்போது கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதில் அளிப்பதில் இருந்து அவர் அமைதி காத்தார், கடைசியில் மற்றொரு கேள்விக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது.

மும்பை பயிற்சியாளர் மார்க் பௌச்சரை செய்தியாளர்கள் சந்தித்தபோதும் இதே நிலைமை தான் ஏற்பட்டது. இந்த பருவத்தில் ரோஹித்திடம் இருந்து பாண்டியாவுக்கு தலைமைப் பொறுப்பை வழங்கியதற்கான காரணம் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோதும் மயான அமைதியே நிலவியது. பௌச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை.

மைதானத்தில் பண்டியா பௌண்டரிகள் அடிக்கும்போதும் பிடியெடுப்புகளைச் செய்யும்போதும் தனது சொந்த ரசிகர்களின் கைதட்டல்களையும் அவ்வப்போது பெறுகிறார். மும்பையில் தன் மீதான அங்கீகாரத்திற்கு பாண்டியா செய்ய வேண்டியது இதுதான். தனது திறமையை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி அணியையும் வெற்றியை நோக்கி வழிநடத்தினால் ரசிகர்களின் கூச்சல், கேலிகள் குறைந்து அதுவே ஆதரவாக மாறிவிடும். கடைசியில் பாண்டியாவும் தலைக்கு மேல் வைத்து கொண்டாடப்படுவார். இதுதான் ஐ.பி.எல். போன்ற கிரிக்கெட்டின் மரபு.

எஸ்.பிர்தெளஸ்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division