Home » இந்திய தேர்தலில் துரும்பாக மாறிய கச்சதீவு விவகாரம்!

இந்திய தேர்தலில் துரும்பாக மாறிய கச்சதீவு விவகாரம்!

by Damith Pushpika
April 7, 2024 6:00 am 0 comment

இந்தியாவில் விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கச்சதீவு விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் இலங்கைக்கு கச்சதீவு தாரைவார்க்கப்பட்ட சம்பவம் மற்றும் அதன் தொடர்ச்சியான நிகழ்வுகளை தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற்று வெளியிட்டிருக்கிறார் பா.ஜ.க. தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாக்குநீரிணை பகுதியில் உள்ள கச்சதீவு இந்திய அரசியலின் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுவில் இருக்கும் தகவல்களை பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதன்படி, 1974 ஆம் ஆண்டு கச்சதீவை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக முடிவெடுத்த போதே இத்தகவல், வெளியுறவுத்துறை செயலாளர் கேவல் சிங் அவர்களால் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியிடம் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

எனவே கச்சதீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டதில், தி.மு.கவின் பங்களிப்பும் முழுமையாக உள்ளதென்பதே பா.ஜ.கவின் நிலைப்பாடாக உள்ளது. இதனையே தமது ட்விட்டர் பதிவில் பிரதமர் நரேந்திர மோடியும் குறிப்பிட்டுள்ளார்.

‘நம்ப முடியாத கட்சி காங்கிரஸ்’ என நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தியா – இலங்கைக்கு இடையே பாக்குநீரிணை பகுதியில் 285 ஏக்கர் பரப்பளவில் (1.15 சதுர கிலோ மீட்டர்) அமைந்துள்ளது கச்சதீவு. மக்கள் எவருமே வசிக்காத இடமாகும் இந்த சிறிய தீவு. எரிமலை வெடிப்பு காரணமாக இத்தீவு உருவாகி இருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்ைகயாகும்.

தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் இருந்து 33 கிலோ மீட்டர் வடகிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியிலும், இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இருந்து 62 கிலோ மீட்டர் தென்மேற்கு பகுதியிலும் கச்சதீவு அமைந்துள்ளது.

கச்சதீவில் மக்கள் எவரும் வசிப்பதில்லை. அங்கு ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மட்டும் உள்ளது. ஆண்டுதோறும் பெப்ரவரி அல்லது மார்ச் மாதம் அங்குள்ள அந்தோனியார் திருத்தலத்திற்கு இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் சென்று திருவிழா கொண்டாடுவது வழக்கம். கடந்த 2023 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் இருந்து ஏறத்தாழ 2,500 பக்தர்கள் கச்சதீவு அந்தோனியார் ஆலய திருவிழாவுக்குச் சென்றனர். இவ்வருடம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற திருவிழாவை தமிழ்நாடு மீனவர்கள் புறக்கணித்தனர்.

1975 ஆம் ஆண்டுக்கு முன்புவரை அங்கு தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். அத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட பின்னர் நிலைமை மாற்றமடைந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் குறித்த சில தகவல்கள் தற்போதைய தகவல் அறியும் உரிமைச் சட்ட மனு (RTI) மூலம் தெரியவந்துள்ளது. இதன் மூலம், அப்போது இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு வழிகளை இந்தியா ஆலோசித்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக 1961 ஆம் ஆண்டில் பேசிய பிரதமர் ஜவஹர்லால் நேரு, கச்சதீவை இலங்கைக்கு கொடுப்பதற்கு நான் தயங்க மாட்டேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 1974 ஆம் ஆண்டு கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. ஆனாலும் தீவில் மீன்பிடிக்கவும், வலைகளை காயவைக்கவும் இந்திய மீனவர்களுக்கு இருந்த உரிமை 1976 ஆம் ஆண்டு ‘எமர்ஜன்சி’ காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தின் மூலம் மறுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கச்சதீவு அருகே பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் அங்கிருந்து துரத்தப்பட்டனர். அதேவேளை இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டு மீனவர்கள் சூட்டுக்கு இலக்கான சம்பவங்களும் இடம்பெற்றன. இதுவரையான காலப்பகுதியில் 700 இற்கும் மேற்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டதாக தமிழகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியா- – இலங்கை இடையிலான பாக்குநீரிணையில் இருக்கும் கச்சதீவு பாதுகாப்பு ரீதியாக முக்கியத்துவம் பெறுவதைப் போன்று மீனவர்களின் வாழ்வாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பவளப்பாறைகள் நிறைந்த இப்பகுதியில் இயல்பாகவே மீன்வளம் அதிகமாக காணப்படுகிறது.

நிலைமை இவ்வாறிருக்ைகயில், சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கச்சதீவை மீட்பதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

கச்சதீவு மீட்பு என்பது தமிழக அரசியல் களத்தில் புதிய முழக்கம் அல்ல. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.கவும் அ.தி.மு.கவும் கச்சதீவை மீட்போம் என பல தேர்தல்களில் வாக்குறுதி வழங்கியுள்ளன.

நாடாளுமன்றத்திலும் 1960களிலும் சரி, தற்போதும் சரி இந்த விவகாரம் பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நேரத்தில் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க என கட்சிகள் ஒன்றின்மீது ஒன்று மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 74 மீனவர்களை இலங்கை கைது செய்துள்ளது. தமிழக மீனவர்களின் 67 மீன்பிடிப் படகுகள் இலங்கையிடம் உள்ளன. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்தியாவினால் கச்சதீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்தப் பகுதிகளின் மீது இலங்கையின் கவனம் குறைவாகவே இருந்தது. இதனால் தமிழ்நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது பெரிய பிரச்சினையாக இருந்ததில்லை.

ஆனால் 2009- இல் போர் முடிந்த பிறகு, இலங்கை தனது கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தியது. அதன் பிறகு தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும்,படகுகள் கைப்பற்றப்படுவதும் அதிகமாகியுள்ளன.

1974 ஆம் ஆண்டு இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவு இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்போது இந்தியப் பிரதமராக இந்திரா காந்தியும் இலங்கையின் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கவும் இருந்தனர்.

அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான எல்லை வரையறுக்கப்பட்டு கச்சதீவு இலங்கைக்குச் சொந்தம் என முடிவானது. எனினும், மீன்பிடி உரிமையும், பயணிகள் விசா இன்றி கச்சதீவு சென்று வரும் உரிமையும் இந்திய மீனவர்களுக்கு பாதுகாக்கப்பட்டு, மீன்வலைகளை உலர்த்தவும் அனுமதி இருந்தது.

ஆனால், அதன் பின்னர் 1976 ஆம் ஆண்டு, இரு நாடுகளுக்கு இடையே மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, “இந்திய மீனவர்களும் அவர்களது மீன் பிடிப் படகுகளும் இலங்கைக் கடல் பகுதியிலும் இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலப் பகுதியிலும் இலங்கையின் அனுமதியில்லாமல் மீன்பிடிக்க அனுமதி இல்லை” என்று கூறியது இந்த ஒப்பந்தத்தின் ஷரத்து.

இரண்டொரு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் கச்சதீவு விவகாரத்தை எழுப்பினார். காங்கிரஸ் எப்படி நாட்டை பிளவுபடுத்தியது என்பதற்கு உதாரணமாக இந்திரா காந்தி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை குறிப்பிட்டு அவர் பேசினார்.

அதற்குப் பதிலளித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகே தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இதன் பின்னர், மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க மாநாட்டில் பேசிய எடப்பாடி பழனிசாமி கச்சதீவை மீட்போம் என தி.மு.க கூறுவது பச்சைப் பொய் என்றும், அதை தாரைவார்த்துக் கொடுத்ததே தி.மு.கதான் எனவும் சாடினார்.

அப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்த தி.மு.க, கச்சதீவை தாரைவார்த்துக் கொடுப்பதற்கு எதிராக கேள்வி எழுப்பவில்லை என்றார்.

அ.தி.மு.க உருவாகி இரண்டு ஆண்டுகளில் 1974- ஆம் ஆண்டு கச்சதீவு ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது கட்சியின் தலைவராகவிருந்த எம். ஜி. இராமச்சந்திரன், “தி.மு.க மத்திய அரசுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கவில்லை” எனக் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கச்சதீவு விவகாரம் தமிழக அரசியலில் மாத்திரமன்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலிலும் விவாதப்பொருளாகியுள்ளது. தி.மு.கவையும், காங்கிரஸ் கட்சியையும் கச்சதீவு விவகாரத்தில் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க தலைவர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

“ஒருமைப்பாட்டை பலவீனமாக்குவதுதான் 75 ஆண்டுகளாக காங்கிரஸ் செய்த செயல். காங்கிரஸ் கட்சியை எப்போதுமே நம்பவே கூடாது என்பதைத்தான் கச்சதீவு விவகாரம் வெளிப்படுத்துகிறது. கச்சதீவு விவகாரத்தில் காங்கிரஸின் நடவடிக்கை ஒவ்வொரு இந்தியரையும் கோபமடையச் செய்கிறது” எனக் கொந்தளித்துள்ளார் அண்ணாமலை.

எஸ்.சாரங்கன்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division