Home » மாணவர் வெகுஜனப் போராட்டங்களால் அமெரிக்காவில் உருவாகியுள்ள நெருக்கடி!
காஸா மீதான யுத்தத்தின் எதிரொலி:

மாணவர் வெகுஜனப் போராட்டங்களால் அமெரிக்காவில் உருவாகியுள்ள நெருக்கடி!

by Damith Pushpika
May 5, 2024 6:16 am 0 comment

காஸா மீதான யுத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் ஆரம்பித்துள்ள வெகுஜனப் போராட்டம் அமெரிக்காவில் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள கொலம்பிய பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இப்போராட்டம் இரண்டு வாரங்களுக்கும் மேலாக நீடிக்கிறது. அத்தோடு அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் உள்ள நாற்பதுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களுக்கும் இப்போராட்டம் பரவியுள்ளது. அதேநேரம் அமெரிக்காவுக்கு வெளியே பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளது பல்கலைக்கழங்களிலும் இப்போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருக்கின்றனர்.

மாணவர்களின் இவ்வெகுஜன போராட்டங்களைக் கட்டுப்படுத்தவென பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வகுப்பு தடை, ஒழுக்காற்று நடவடிக்கை போன்றன பல்கலைக்கழக நிர்வாகங்களால் முன்னெடுக்கப்படுகின்ற அதேநேரம், பொலிஸாரும் சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினரும் மாணவர்களைக் கைது செய்வதையும் தடுத்து வைப்பதையும் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த 13 நாட்களில் 2300 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இப்போராட்டம் காரணமாக பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சில பல்கலைக்கழகங்கள் நிகழ்நிலை கற்கை நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளன. மாணவர்களின் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்து இயல்புநிலையை ஏற்படுத்தவென பல்கலைக்கழக நிர்வாகங்களும், சட்டம் ஒழுங்கை அமுல்படுத்தும் தரப்பினரும் கடும் முயற்சிகளை முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.

காஸா மீது ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் முன்னெடுத்துவரும் யுத்தம் உலகின் பல நாடுகளைப் போன்று அமெரிக்காவிலும் ஆரம்பம் முதல் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்த யுத்தத்தில் அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவளிப்பது அதற்கான பிரதான காரணமாகும்.அதனால் காஸா மீதான யுத்தத்திற்கு எதிராக உலகின் ஏனைய நாடுகளைப் போன்று அமெரிக்காவிலும் சிவில் அமைப்புகளும் சமூகநல ஆர்வலர்களும் தொடராக பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அமெரிக்காவில் உயர்பதவிகள் வகித்த சிலர் பதவி விலகல்களை மேற்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். காஸா மீதான யுத்தத்திற்கு எதிராக அமெரிக்க விமானப்படை வீரரொருவரே அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாகத் தனக்குத்தானே தீமூட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இவை எதனையும் கருத்தில் கொள்ளாத அமெரிக்க நிர்வாகம் இஸ்ரேலுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்கிறது. குறிப்பாக இஸ்ரேலுக்கு வருடா வருடம் 3.8 பில்லியன் டொலர்கள் நிதியுதவி வழங்கும் அமெரிக்கா, காஸா யுத்தத்திற்கு பின்னர் மேலதிகமாக ஆயுத மற்றும் நிதியுதவிகளை வழங்கியும் வருகிறது.

யுத்தம் ஆரம்பமானதும் யுத்தக்கப்பல்களையும் இராணுவ விமானங்களையும் மத்திய தரைக்கடலுக்கு அனுப்பியது. அத்தோடு 2023 நவம்பரில் 14.5 பில்லியன் டொலர்கள் பெறுமதியான இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்க அமெரிக்க பிரதிநிதிகள் சபை அங்கீகாரம் அளித்தது. அதேநேரம் டிசம்பர் 09 இல் ஜனாதிபதி ஜோ பைடன் தமக்குள்ள அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி 106.5 மில்லியன் டொல்கள் பெறுமதியான 14,000 தாங்கிகளுக்கான குண்டுகளை இஸ்ரேலுக்கு உடனடியாக விற்பனை செய்ய அனுமதி அளித்தார். அதேபோன்று டிசம்பர் 29 ஆம் திகதியும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர அதிகாரத்தைப் பயன்படுத்தி 147.5 மில்லியன் டொலர்கள் பெறுமதியான பீரங்கி குண்டுகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கியுது.

2024 பெப்ரவரியில் 14 பில்லியன் டொலர்களுக்கான உதவிப் பொதியை இஸ்ரேலுக்கு வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிறைவேற்றியது. மேலும் 2024 மார்ச்சில் மேலதிகமாக 1800 எம்.கே 84 2000 இறாத்தல் நிறைகொண்ட குண்டுகளையும் 500 எம்.கே 82 500 இறாத்தல் நிறைகொண்ட குண்டுகளையும் இஸ்ரேலுக்கு வழங்கவும் அமெரிக்கா கையெழுத்திட்டது. காஸா மீதான யுத்தம் ஆரம்பமானது முதல் நூற்றுக்கும் மேற்பட்ட தடவைகள் அமெரிக்கா ஆயுத தளபாடங்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது.

அதேநேரம், காஸா மீது உடனடி மனிதாபிமான யுத்தநிறுத்தத்தை வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட போதிலும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட இரு தீர்மானங்களை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா இரத்து செய்தது.

காஸா மீதான யுத்தம் காரணமாக பாரிய மனித அவலங்களும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த ஆறு மாத காலப்பகுதியில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காஸாவில் கொல்லப்பட்டுள்ளதோடு, 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். 85 வீதமான மக்கள் இருப்பிடங்களை இழந்து முகாம்களிலும் கூடாரங்களிலும் தங்கியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் தான் கொலம்பிய பல்கலைக்கழக மாணவர்கள் 70 பேர் கடந்த ஏப்ரல் 17 ஆம் திகதி, காஸாவில் உடனடி யுத்தநிறுத்தம், இஸ்ரேலிய இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் பல்கலைக்கழக சொத்துக்களை விலக்கிக் கொள்ளுதல், அமெரிக்கா இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்திக் கொள்ளுதல், இஸ்ரேலுடனும் அதன் காஸா யுத்தத்துடனும் சம்பந்தப்பட்டுள்ள நிறுவனங்களதும் அமைப்புகளதும் முதலீடுகளை பல்கலைக்கழகங்கள் வெளிப்படுத்தி விலக்கி கொள்ளுதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இப்போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்நிலையில் கொலம்பிய பல்கலைக்கழகத் தலைவர் மினௌசே சபிக், மாணவர் போராட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவர் மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்காத சூழலில் வளாகத்திற்குள் பிரவேசித்து கூடாரங்களை அகற்றவும் மாணவர்களை கைது செய்யவும் நியூயோர்க் நகர பொலிஸ் திணைக்களத்திற்கு அவர் அனுமதி வழங்கினார். அதற்கேற்ப கூடாரங்கள் அகற்றப்பட்டு முன்னணி மாணவர்களும் கைது செய்யப்பட்டனர். சில மாணவர்களுக்கு வகுப்பு தடை, ஒழுக்காற்று விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டன.

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் வளாகக் கட்டடமொன்றுக்கு இஸ்ரேல் தாக்குதலில் கடந்த ஜனவரி 29 இல் பலஸ்தீனில் கொல்லப்பட்ட ஆறு வயது சிறுமி ஹிந்து ரஜப் என்பவரின் பெயரையும் சூட்டியுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்த பல்கலைக்கழக நிர்வாகமும் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளின் விளைவாக அமெரிக்காவின் பல மாநிலங்களுக்கும் இந்த மாணவர் வெகுஜனப் போராட்டம் பரவியுள்ளது.

பலஸ்தீன நீதிக்கான மாணவர்கள் (SJP) மற்றும் அமைதிக்கான யூத குரல் (JVP) உள்ளிட்ட 120 இற்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்போராட்டம் வடக்கு கரோலினா, பொஸ்டன், ஒகியோ, ஹவார்ட், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உட்பட 20 இற்கும் மேற்பட்ட பல்லைகலைக்கழகங்களிலும் இடம்பெற்றுவருகிறது. இப்போராட்டம் இடம்பெற்றுவரும் சூழலில் உக்ரைன், இஸ்ரேல், தாய்வான் ஆகிய நாடுகளுக்கு 95 பில்லியன் டொலர்கள் பாதுகாப்பு உதவி வழங்கும் தீர்மானத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நிறைவேற்றியது. அதில் 26 பில்லியன் டொலர்கள் இஸ்ரேலுக்கான உதவியாகும். அவற்றில் தொகை நிதி இராணுவ தளபாடங்களை கொள்வனவு செய்யவும் பலப்படுத்தவும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்க ஜனாதிபதியும் அங்கீகாரம் அளித்துள்ளார்.

இருப்பினும் தற்போது அமெரிக்க பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக பிரான்ஸ் நாட்டின் சோர்போன், இத்தாலி நாட்டின் சபின்ஸா, பிரித்தானியாவின் லீட்ஸ், வேர்விக், லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, அவுஸ்திரேலியாவின் மெல்போன், சிட்னி, கனடாவின் மெக்கில், கொங்கோர்டியா பல்கலைக்கழகங்களிலும் மாணவர் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன.

மாணவர்களின் வெகுஜனப் போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரையும் அதிகாரத்தையும் அமெரிக்க ஆட்சியாளர்கள் பயன்படுத்தியமைக்கு அமெரிக்காவில் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அத்தோடு உலகின் பல நாடுகளும் இதனைக் கண்டித்து இருக்கின்றன. இதேவேளை சில பல்கலைக்கழகங்களில் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் ஆதரவு மாணவர்கள் குழுக்களுக்கு இடையில் கடும் வாய்த்தர்க்கங்களும் கூட ஏற்பட்டுள்ளன.

இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் பிர்அவ்ன் பல்கலைக்கழக நிர்வாகம், காஸா போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கும் மாணவர்களின் கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேலுடனான தொடர்புகளை விலக்கிக் கொள்ளவும் முன்வந்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் ஏப்ரல் 30 முதல் போராட்டத்தை நிறுத்தி கூடாரங்களை அகற்றவும் முன்வந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் ஏனைய பல்கலைக்கழகங்களில் மாணவர் வெகுஜனப் போராட்டம் தொடர்வதை சர்வதேச ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

மர்லின் மரிக்கார்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division