Home » பாரம்பரிய எதிர்க்கட்சி அரசியலை பற்றிப் பிடித்திருக்கும் எதிரணிகள்!

பாரம்பரிய எதிர்க்கட்சி அரசியலை பற்றிப் பிடித்திருக்கும் எதிரணிகள்!

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடன் சந்திப்பு

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment

எதிரணிகள் பாரம்பரியமான எதிர்க்கட்சி அரசியலையே பற்றிப்பிடித்துக் கொண்டிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாடு படிப்படியாக சீரான நிலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அவர் எம்முடன் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

கே: எமது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக வலுவடைகிறது என்று நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில்: கடந்த வாரம் வெளியான மத்திய வங்கியின் அறிக்கைகளுக்கு அமைய, ஜனவரி 2023 மற்றும் ஜனவரி 2024 இற்கு இடையில் ரூபாவின் பெறுமதி 363 இல் இருந்து 307 ஆகக் குறைந்துள்ளது. கையிருப்பின் பெறுமதி 2.2 பில்லியன் அமெரிக்க டொலரிலிருந்து 4.5 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. வரிகள் 5.9 வீதமாக அதிகரித்துள்ள போதிலும் 70 வீதம் பணவீக்க வீதத்தைப் பராமரிக்க முடிந்துள்ளது. தற்பொழுது நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடு இல்லை. புள்ளிவிபரங்கள் ஒருபுறம் இருக்க, இன்று நாட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் வாங்க முடியும். இதனால் நாடு சகஜநிலைக்கு திரும்பியிருப்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பொருளாதாரச் சிக்கல் பெருமளவில் குறைந்திருப்பதை உணர முடிகிறது. இவை அனைத்தும் பொருளாதாரம் மீண்டு வருவதற்கான தெளிவான அறிகுறிகள் ஆகும்.

கே: பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும் அதனை மக்கள் கண்டுகொள்வதில்லை எனவும், சிலர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார். இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நமது நாட்டில் பாரம்பரிய எதிர்க்கட்சி உள்ளது. எதிர்க்கட்சிகள் இன்னும் நெகிழ்வாக இருக்க வேண்டும். அன்றைய நெருக்கடி சூழ்நிலைக்குப் பயந்து நாட்டின் தலைமைப் பொறுப்பை எதிர்க்கட்சியினர் ஏற்கவில்லை. ஆனால் சவால்களை எதிர்கொண்டு நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டார். தயக்கத்தினாலோ அல்லது பயத்தினாலோ அவர் அதனை ஏற்காமல் விடவில்லை. ஜனாதிபதி சவால்களை முறியடித்து திட்டங்களை நிறைவேற்றும் போது அதனை விமர்சன சிந்தனையுடன் நோக்குகின்றனர். நாடு பாரிய பிரச்சினைகளிலிருந்து விடுபட்டிருப்பதை விமர்சனங்களை முன்வைப்பவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதிருப்பது துரதிர்ஷ்டமானது. ஏதிர்க்கட்சிகள் பாரம்பரிய அரசியல்வாதிகள் என்பதால் அவர்கள் பாரம்பரிய அரசியலில் இருந்து விடுபடவில்லை.

கே: பொருளாதாரத்தை மேம்படுத்த வேறு வழியில்லை என்று அரச தரப்பினர் கூறினாலும், எதிர்க்கட்சிகள் பல்வேறு மாற்று வழிகளை முன்வைக்க முயல்கின்றனவே?

பதில்: இப்போது ஒரு மாற்றம் தெளிவாக தெரிகின்றது. எனவே இந்த வழி சரியானது என்று சொல்லலாம். இதனை யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ‘சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மாறும், நாம் ஆட்சிக்கு வந்தால் வரி விதிக்க மாட்டோம்’ என்று கூறுவது எல்லாம் மாயை. இவற்றை மக்கள் புரிந்து கொள்கின்றனர். அனைத்து நேர்மறைகள் இருந்தபோதிலும், நாங்கள் இன்னும் கடினமான இடத்தில் இருக்கிறோம். எதிர்க்கட்சியினர் பல்வேறு விடயங்களைச் சொன்னாலும், செய்தாலும் தனியொருவர் இந்த நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்ட போது, சுமார் ஐம்பது வயதைக் கடந்த எதிர்க்கட்சித் தலைவரால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியவில்லை.

கே: பெறுமதி சேர் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் மக்களுக்கு வேறு எவ்வாறான நன்மைகளை எதிர்பார்க்க முடியும்?

பதில்: நாங்கள் தானாக முன்வந்து புதிய வரிகளை அறிமுகப்படுத்தவில்லை. பெரும்பாலும் ஒரு கிராமத்தில் வசிப்பவன் என்ற முறையில், மக்களின் அழுத்தத்தை நான் நன்கு அறிவேன். ஜனாதிபதிக்கும் இது நன்றாகவே தெரியும். அரசாங்கத்தின் வருமானம் ஸ்திரமான நிலைமையை அடையும்போது முதல்முறையாக நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. அதனால்தான் பாடசாலை உபகரணங்களுக்கான வரிகள் கூட நீக்கப்படுகின்றன. ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் அபிவிருத்தி பற்றிப் பேசவில்லை. சிறிய அபிவிருத்திப் பணிகளைச் செய்தவர்களுக்கு 60 ஆயிரம் கோடி கடன்பட்டுள்ளோம். ஆனால் அதையெல்லாம் செலுத்தி புதிய பணிகளை ஆரம்பிக்க ஒவ்வொரு பிரதேச செயலகத்திற்கும் 25 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இவற்றை முறையாகப் பின்பற்றினால் குறுகிய காலத்தில் சிறந்த நிலைக்குச் சென்றுவிட முடியும்.

கே: கடனை மீளச்செலுத்த ஆரம்பித்தால், மக்கள் மேலும் அவதிப்பட வேண்டியிருக்கும் என்றும், இந்த முறை நரகத்தில் இடைவெளி என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனவே?

பதில்: இதற்கு ஜனாதிபதி தெளிவான பதிலை வழங்கினார். தற்போது உள்நாட்டுக் கடனை செலுத்தி வருகிறோம். பலதரப்புக் கடன்கள் வெளிநாட்டுக் கடன்களிலிருந்து செலுத்தப்படுகின்றன. எஞ்சியிருப்பது இருதரப்புக் கடன்கள். இவை மறுசீரமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. இந்த கடன்களை நாங்கள் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று மோசமான நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை. நாங்கள் இன்னும் திட்டமிட்டு செல்கிறோம். கடன் தவணைகளை நாம் செலுத்தும் வகையில் சரிசெய்ய மறுசீரமைப்பு விவாதிக்கப்படுகிறது.

கே: 2023 ஆம் ஆண்டு முதல் 2027 ஆம் ஆண்டு வரையான கடனைச் செலுத்துவதில் தற்காலிக நிவாரணத்திற்காக காத்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2027 ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் கடனை செலுத்தத் தயாரா?

பதில்: புதிதாக பணம் செலுத்துபவர்களுக்கு இந்த இடைவெளியைக் கோரியுள்ளோம். மறுசீரமைப்பின் போது சலுகைக் காலம் பெறுவது, வட்டியைக் குறைப்பது, கடனைக் குறைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தினால் இதற்கான திட்டம் வகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

கே: பணவீக்கம் குறைவாக இருந்தாலும், மக்கள் இன்னும் வாழ்க்கைச் செலவை உணர்கின்றார்களே?

பதில்: பணவீக்கம் என்பது பொருட்களின் விலைக் குறைவல்ல. அப்படியானால் பணவாட்டம் ஏற்பட வேண்டும். பொருட்களின் விலை அதிகரிப்பு வீதத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். ஆனால் நிலைமை சரியாகிவிட்டது என அர்த்தப்படாது. சீரான நிலைக்கு வருவதற்கு உரிய காலம் எடுக்கும். இந்தத் திட்டங்கள் அனைத்தும் நாட்டை இருந்த இடத்தில் இருந்து மேலே கொண்டு செல்லும் வகையில் தயாராகி வருகின்றன. ஜனாதிபதியின் கூற்றுப்படி, வருட இறுதியில் ஒரு புதிய மாற்றத்தை நாம் எவ்வாறு பார்க்க முடியும்?

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அப்போது இந்த நாட்டைப் பற்றித் தெளிவாகச் சிந்திப்பவர்கள் ஒன்று கூடும் மேடை அமைக்கப்படும். ஜனாதிபதித் தேர்தலுக்கு பல்வேறு நபர்கள் கோரிக்கை விடுத்தாலும் இவர்களுக்கு இருக்க வேண்டிய குணாதிசயங்கள் தொடர்பில் மக்களிடம் ஒரு உணர்வு உள்ளது. அனுபவம், கல்வி, சர்வதேச பிரச்சினைகளை சமாளிக்கும் திறன், முடிவெடுக்கும் திறன், நாடு சிக்கலில் சிக்கியபோது கையாண்ட விதம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை தேர்ந்தெடுப்பது முக்கியம். தற்போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நல்லதொரு தீர்மானத்தை எடுக்கும் திறன் மக்களுக்கு உள்ளது. மக்கள் சிறந்த நபரை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division