Home » பொம்மைக் ‘கார்’

பொம்மைக் ‘கார்’

by Damith Pushpika
March 17, 2024 6:00 am 0 comment

யிறு விடுமுறை நாள். அதனால் எமது வீட்டுக்கு மகனின் குடும்பமும், மூத்த மகள் ரூசானாவின் குடும்பமும் காலை எட்டு மணிக்கெல்லாம் வந்து விட்டன.

எங்கள் வீட்டில் நானும், என் மனைவியும், கடைசி மகள் பர்வீனும், அவரின் கணவரும், இரு குழந்தைகளும் அவர்களின் வரவால் மிகவும் மகிழ்ந்தே போனோம்.

பாடசாலை விடுமுறை தினங்களில் இவ்வாறு அவர்கள் இங்கு வந்து, ஒன்று சேர்ந்து, எல்லோரும் சேர்ந்து விதவிதமாகச் சமையல் செய்து உண்டு மகிழ்ந்து, குதூகலிப்பதும் சந்தோசமாகப் பொழுதைக் கழிப்பதும் வழமையாகவே தொடரும் கதைதான்.

எமது பிள்ளைகளும் பேரன்மார்களும், பேத்திமார்களும் வீட்டுக்கு வரும் வேளைகளிலெல்லாம், பெற்றோராகிய எம் இதயங்கள் ஆனந்தத்தில் காற்றாடிகள் போல உச்சத்திற்கே எழுந்து பறக்கும். உண்மைதானே, உறவுகள், குடும்பங்கள், நட்புகளென்று மாந்தர்கள் ஒன்று கூடும் இடங்களில் கரைபுரண்டோடும் மகிழ்ச்சிக்கும், மன நிறைவுக்கும் பஞ்சமே இருக்காதே!

அதிலும் சின்னஞ் சிறுசுகளான பேரன், பேத்திமார்களுடன் நாமும் சேர்ந்து பேசிச் சிரித்து மகிழும் ஆனந்தம் இருக்கிறதே, அதை வார்த்தைகள் கொண்டு வடிக்கவோ, கூறவோ முடியாது. அத்தனை பெரும் பேரானந்தம் அது.

பெரியவர்கள் வழமைபோல தமது சமையல் வேலைகளில் ஈடுபட, சிறுவர் சிறுமியரோ தங்களது விளையாட்டுகளில் ஈடுபட ஆரம்பித்து விட்டார்கள்.

எல்லாவற்றையுமே பார்த்து, பிள்ளைகள் கூடி மகிழ்ந்து விளையாடுவதை ரசித்தவனாக, வீட்டு முன் வராந்தாவில் கதிரையொன்றில் அமர்ந்து, மனதால் மகிழ்ந்த வண்ணம் இருந்த போதுதான் “அப்பா, இங்க பாருங்க. சஆத், என்ர காரப் பறிக்கிறான். பாருங்க அப்பா” எனது கடைசி மகளின், கடைசிப் பையன் ஆதில், என்னிடம் அழுதுகொண்டே ஓடிவருகின்றான்.

ஆதில் எமது பேரன். இப்போதுதான் அவனுக்கு மூன்று வயதாகியிருக்கிறது. உடனே ஓடிவந்த பேரனை அப்படியே தூக்கி மடியில் வைத்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட அந்த அடுத்த பேரனும், என்னருகே ஓடி வருகிறான். “அப்பா, ஆதில் பொய் சொல்றான். நான் கார அவன்கிட்டயிருந்து பறிக்கல்ல. விளையாடுறதுக்குத்தான் கேட்ட, சும்மா அழுதுகொண்டு வந்திருக்கான்” சஆத் என்ற அந்தப் பேரன் கூறி முடிக்கிறான்.

அவன் கூறியதை உண்மைப்படுத்தும் வகையில் “உண்மதான் அப்பா, கார யாருமே பறிக்கல்ல அவன் கிட்ட கொஞ்சம் விளையாடிப் பாத்துட்டுத் தாரண்டுதான் கேட்டம்” சக்கீல் என்ற பேரனும் அவனுடன் நிஸ்மா மற்றும் இக்ரா என்ற பேத்திமாரும் சேர்ந்துவந்து கூற, தங்கள் பக்கமே நியாயம் இருப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

எல்லோரதும் நியாயங்களையும் கேட்டுவிட்டு அவர்களை அன்பாக, ஆதரவாக ஒருவாறு சமாதானப்படுத்தி முடித்து, அழுது கொண்டு என்னிடம் மடியில் வந்தமர்ந்த பேரனையும், ஒருவாறு தேற்றி முடிக்கிறேன்.

“அதில் பாவம்தானே, ஒங்க எல்லாருக்கும் நான்தானே, இந்தக் கார் மாதிரி கார்கள் வாங்கித் தந்தேன், ஒங்கட கார்கள, நீங்க ஒங்க வீட்டுல, விட்டுட்டு வந்து, இப்ப தம்பிட காரக் கேக்கிறீங்களே. சரி, சரி, தம்பியோட சேந்து எல்லாரும் கார் விளையாடுங்க. தம்பிக்கிட்டயிருந்து காரப் பறிக்காதீங்க” சமாதானப்படுத்தி, அவர்களை விளையாட அனுப்புகிறேன். எனது அன்பான வார்த்தைகளுக்குக் கட்டுண்டவர்களாக, அவர்களும் ஒற்றுமையாகச் சென்று தங்கள் விளையாட்டைத் தொடங்குகிறார்கள்.

அவர்கள் விளையாடுவதைச் சற்று நேரம் சந்தோசமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தபோது, அவர்களின் கரங்களிலுள்ள அந்த விளையாட்டு பொம்மைக்கார் என் மனதினுள் சென்று, மனத்திரையில் பழைய (சில நாட்களுக்கு முன்பு நடந்த) நினைவொன்றை படமாகக் காட்டத் தொடங்குகிறது.

ஒரு வாரத்துக்கு முன்பு நானும் என் மனைவியும் கடைத் தெருவரை சென்று, வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு ஆயத்தமாகின்றோம். நாங்கள் புறப்படுவதை அவதானித்த எங்கள் பேரன் ஆதில், தானும் எங்களுடன் வரவேண்டுமென அடம்பிடிக்க ஆரம்பிக்கிறான். நாங்கள் எவ்வளவோ சமாதானங்களை அவனிடம் கூறி, எதையெதையெல்லாமோ அவனின் கைகளில் கொடுத்து, அவனின் கவனத்தைத் திசைமாற்றிவிட்டு ஒருவாறாக வெளியே செல்கிறோம். “அப்பா, நீங்க வரக்குள்ள எனக்குக் காரொண்டு வாங்கிட்டு வாங்க” மழலைக் குரலில் பேரன் சொன்ன வார்த்தைகளுக்கு ஆமாம் சொல்லிவிட்டு இருவரும் வீட்டை விட்டுக் கிளம்புகிறோம்.

கடை பஸாருக்குச் சென்று சில மணிநேரங்கள் பொருட்களைக் கொள்வனவு செய்து கொண்டு, முச்சக்கர வண்டியை நோக்கிச் சென்ற வழியில், விளையாட்டுச் சாமான்கள் சிலவற்றைத் தனது கரங்களில் ஏந்தியபடி, கூவி விற்றுக் கொண்டுவந்த ஒரு நடைபாதை வியாபாரியைக் கண்டபோதுதான் பேரன் ஆதில் எங்கள் நினைவுக்கு வந்தான். கார் வாங்கிவரச் சொன்னதும் நினைவுக்கு வந்தது.

உடனே வியாபாரியிடம் ஒரு சிறிய பொம்மைக் காரைக் காட்டி விலை கேட்டேன். நானூறு ரூபாய் என்றார். “விலையைக் கொஞ்சம் குறைக்க முடியாதா?” என்றேன். “ஒரு சின்ன லாபம் வச்சித்தான் தொரே சொல்றன், நான்தான் இந்த வெலக்கி விக்கிறன். அந்தா அங்க இருக்கிறவரு இதே கார, ஐநூறு ரூபாய்க்கு விக்கிறாரு, நான் நியாயமாத்தான் விக்கிறன் தொர” சற்று தூரத்தில் இருந்த ஒரு நடைபாதை வியாபாரியைச் சுட்டிக்காட்டிப் பணிவாகச் சொன்னார்.

உண்மையை அறிய, அந்த பொம்மை வியாபாரியிடம் சென்றேன். அதே காருக்கு விலை கேட்டேன். அவர் ஐநூறு ரூபாய் என்றார். உண்மை புரிந்தது. மீண்டும் முதல் வியாபாரியிடம் வந்தேன். ஆனால் அவரோ அந்த இடத்தில் நிற்கவில்லை. எதிரே பாரியதோர் பொம்மைக்கடை தெரிந்தது. மனைவியை முச்சக்கர வண்டியுள் இருக்கச் செய்துவிட்டு, பொம்மைக் கடைக்குள் சென்று, வியாபாரிகள் விலை சொன்ன காரினைக் கண்டு பிடித்து, விலையை விசாரித்தேன் முன்னூற்று ஐம்பது ரூபாவுக்குத் தருவதாகச் சொன்னார்கள்.

பேரன்மார் மூவருக்கும் ஆளுக்கொரு காரும், பேத்திமார் இருவருக்கும் பெண் குழந்தைகளுக்கான இரு விளையாட்டுப் பொருட்களும் வாங்கிக் கொண்டு, முச்சக்கர வண்டியை நோக்கி வருகிறேன். முதலில் சந்தித்த அதே வியாபாரி எதிரிலே வருகிறார்.

“ஏப்பா, ஒங்ககிட்டத்தான் நான் வாங்க வந்தன், நீ எங்கப்பா போனே?” கேட்கிறேன் “நீங்க திரும்பவும் என்கிட்ட வரமாட்டீங்கண்ணு நெனச்சி, நடந்து போயிட்டேங்க” அவர் சோகத்தோடு சொல்கிறார்.

“நான் கடையில போயி வாங்கிட்டேன்பா, ஐம்பது ரூபாய்தான் குறைச்சாங்க” வேதனையோடு சொன்னபோது, “பரவாயில்லீங்க, ஒங்களுக்கு லாபமாத்தானே கெடைச்சிருக்கு” அந்த வார்த்தைகள் என் இதயத்தை என்னவோ செய்தது. அவரைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருந்தது. அவரது கரங்களில் அதே பொம்மைகள் அப்படியே இருந்தன. “வாரேம்பா” என்று கூறிவிட்டு மெதுவாக நடக்கிறேன். மனதுல் ஒருவித இனம்புரியாத பாரம்.

முச்சக்கர வண்டிக்குள் வந்து ஏறி அமர்ந்த பின்பு அந்த வியாபாரியைப் பார்த்தேன். அதே இடத்திலேயே நின்று கொண்டிருந்தார். எனக்கென்றால் அங்கிருந்து செல்லவே மனம் வரவில்லை. மனைவியோ “என்ன யோசிக்கிறீங்க, போவேமே” என்றார். எனக்கோ முச்சக்கர வண்டியை “ஸ்டார்ட்” செய்யக்கூட மனம் இடம் தரவில்லை.

மறுகணமே, இதயம் ஒரு சிறந்த முடிவைத் தந்தது. முச்சக்கர வண்டியிலிருந்து இறங்கிச் சென்று, பொம்மை வியாபாரியிடமிருந்த, ஓர் சிறிய விளையாட்டுப் பொருளுக்கு விலை கேட்டேன். நூறு ரூபா என்றார். சந்தோசமாக அதை எடுத்துக் கொண்டு ஒரு ஆயிரம் ரூபா நோட்டை அவரது கையில் கொடுத்தேன்.

“ஆயிரம் ரூபாய்க்கு என்கிட்ட சில்லற இல்லதொர, கொஞ்சம் இருங்க, பக்கத்து கடைல மாத்திக் கொண்டுவாரன்” அவர் கூறிக்கொண்டு, நகர முனைந்தபோது “அது தேவல்ல, நீங்களே இந்தக் காச வச்சுக்கோங்க, என்னோட அன்பளிப்பு” எனது இவ்வார்த்தைகள் அவரின் காதுகளில் விழுந்தபோது “தொரே” என்ற தழுதழுத்த குரலில், என் கரங்களை, அவர் கரங்களால் இறுகப் பற்றினார்.

மறுகணமே அவரின் இருவிழிகளிலிருந்தும் பொலபொலவெனக் கண்ணீர்த் துளிகள் பல பொத்துக் கொண்டு கீழே விழுந்தன. “நீங்க நல்லா இருப்பீங்க தொர, நல்லா இருப்பீங்க” அவர் நாத் தழுதழுக்க என்னை வாழ்த்தினார். நானோ மனம் நிறைந்தவனாக வந்து, முச்சக்கர வண்டியில் அமர்கிறேன். என் விழிகளிலும் கண்ணீர். ஒரு ஏழைக்குச் சிறிதேனும், உதவியதை எண்ணி, மனமோ தென்றலாகிக் குளிர்கிறது.

“அப்பா!, அப்பா, ஏன் அழுறீங்க?” பேரன்மார், பேத்திமார் குரல்களால் சுய நினைவுக்கு வருகிறேன். குழந்தைகள் என்னைக் கேள்விக் குறியோடு பார்க்க “அப்பாட கண்களில தூசு விழுந்துடுச்சி” பேசிச் சமாளிக்கிறேன். “அப்படியா?” என்று சந்தோசமாகக் கூறியபடியே மீண்டும், விளையாடுகிறார்கள்!

(யாவும் கற்பனையே)

****

குறிப்பு: உங்கள் சிறுகதைகள் 1300 சொற்களுக்கு மேற்படா வண்ணம் எழுதுங்கள். கணனியில் தட்டச் செய்து [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும். தரமான சிறுகதைகள் பிரசுரம் பெறும்.

ஆர்

-எம்.ஐ.உஸனார் ஸலீம்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division