Home » இன்னும் மூன்று வருடங்களில் முழுமையான ஸ்திர நிலையில்

இன்னும் மூன்று வருடங்களில் முழுமையான ஸ்திர நிலையில்

ஜனாதிபதி பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க

by Damith Pushpika
April 21, 2024 6:22 am 0 comment

இறையாண்மை பிணைப் பத்திர கடன் வழங்குவோருடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள பேச்சுவார்த்தைகள், அதற்கான இணக்கப்பாடுகள் அடுத்த IMF கடன் தவணையில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

இறையாண்மை பிணைப் பத்திரதாரர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் முறைகள், இந்நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பலப்படுத்துவதற்கான முறைகள் என்ன என்பது தொடர்பில் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் பணிக்குழுவின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்கவுடன் நடத்திய நேர்காணல்.

நாட்டின் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைத்தல் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கடன் தவணை வழங்கல், அடுத்த மூன்று மாதங்களுக்குள் வழங்கப்படவுள்ளது. எனினும் இந்த நிலையில், இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தை இன்னும் நிறைவடையவில்லை. இந்த நிலையானது எமக்கு கிடைக்கவுள்ள மூன்றாவது கடன் தவணைக்கு பிரச்சினையாக அமையுமா?

அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் இடம்பெற்ற உலக வங்கியின் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் நாடு திரும்பியதன் பின்னர் அரசாங்கப் பிரதிநிதிகள் குழுவொன்று லண்டன் செல்லவுள்ளது. நாட்டுக்கு கடன் வழங்கிய இறையாண்மை பத்திரக் கடன் வழங்குநர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி தேவையான இறுதி இணக்கப்பாடுகளை எட்டுவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். கடந்த மார்ச் மாதம் இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நாம் பேச்சுவார்த்தை நடாத்தினோம். இதன் போது நான்கு விடயங்களுள் இரண்டிற்கு உடன்பாட்டை எட்ட முடிந்தது. எனினும் இன்னும் இரண்டு விடயங்களில் அவர்களுடன் இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.

இந்த பேச்சுவார்த்தைகளுக்கான சட்ட ஆலோசனை, உதவி மற்றும் நிதி ஆலோசனை உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த சில மாதங்களில் தேவையான இணக்கப்பாடுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக நாம் Lazard Institute of France மற்றும் Clifford Chance Institute எனும் ஆலோசனை நிறுவனங்களின் உதவியைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். எமது நோக்கம் இந்தப் பேச்சுவார்த்தையை துரிதமாகவும், சாதகமானதாகவும் முடித்து அடுத்த கடன் தவணையினைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாகும்.

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக ஐ.எம்.எப்பிடம் செல்வதைத் தவிர வேறு மாற்று வழிகள் இல்லையா?

நிச்சயமாக IMF வழங்கும் கடனால் மாத்திரம் பொருளாதார ரீதியில் மீண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை. அதற்காக நாம் இப்போது வருமானத்தின் அளவை அதிகரிக்கும் திட்டத்திற்குள் செல்ல வேண்டும். அவ்வாறு செய்தால் எம்மால் நாடு என்ற வகையில் மகிழ்ச்சியடைய முடியும். அரசு ஊழியர்களின் சம்பளம் கடந்த நாட்களில் அதிகரிக்கப்பட்டது. எனினும் அதற்கு ஈடாக செலவுகளும் அதிகரித்தன. எனவே, வருமானத்தின் அளவை அதிகரிப்பதற்கான திட்டத்தை நாம் ஆரம்பிக்க வேண்டும். நான் அடிக்கடி கூறும் விடயம் பொருளாதாரம் வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

இதற்கான மாற்று வழிகள் என்ன, அது தொடர்பில் தெளிவு படுத்த முடியுமா?

மாற்று வழி என்பது வீழ்ச்சியடைந்த எமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதேயாகும். அதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவற்றுள், சுற்றுலாத்துறையை வலுவான முறையில் மீளக் கட்டியெழுப்புதல் போன்ற விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேபோன்று புதுப்பிக்கத்தக்க மின்சக்தியுடன் அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நான் குறிப்பிடுவது குறுகிய கால திட்டங்களாகும். அத்துடன் எமது நாட்டை ஒரு பிராந்திய பொருளாதார மையமாக கட்டியெழுப்ப வேண்டும். அந்த நிலையை கட்டியெழுப்புவதற்கு விசேட வேலைத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். குறுகிய காலத்தில் துறைமுக கட்டமைப்பின் அபிவிருத்தியை மேற்கொண்டால், ஏனைய பிராந்திய துறைமுகங்களுடன் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறான நிலையினுள் நாம் நாடு என்ற வகையில் என்ன வேலைத்திட்டத்தை முன்னெடுக்க முடியும் என்பதை சிந்தித்து திட்டங்களை வகுக்க வேண்டும்.

இருதரப்பு மற்றும் பலதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் நமக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

இன்னும் கனிமங்களை ஏற்றுமதி செய்வது போன்ற முறைகளின் மூலம் எமக்கு புதிய வருமான வழிகளைப் போன்று, தற்போதுள்ள வருமான வழிகளை தொடர்ந்தும் பலப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். அதேபோன்று, வருமானத்தைப் பெறுவதற்கான மற்றொரு வழி முதலீடுகளை இலங்கைக்குக் கொண்டுவருவதாகும். அதன் மூலம் இந்த நாட்டில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் முடியும். அத்தகைய முறைகள் மூலம், எம்மால் எமது பொருளாதாரம் மற்றும் வருமான வழிகளையும் உருவாக்கிக் கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைப் பணம் எதற்குப் பயன்படுத்தப்பட உள்ளது?

பொதுவாக இவ்வாறான கடன் தவணைகளை வழங்கும் போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் வழிகாட்டல்கள் வழங்கப்படும். எனினும் இந்த கடன் தவணைகளில் அவ்வாறாக எதுவுமில்லை. கடன்களை எதற்குப் பயன்படுத்தப் போகிறீர்கள் என ஐ.எம்.எப் எம்மிடம் கேட்பதில்லை. எனினும் நாம் கடுமையான சட்டதிட்டங்களுடன்தான் செயற்படுகின்றோம். அரச செலவினங்களைக் குறைப்பது உள்ளிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றோம்.

உதித குணவர்தன தமிழில்: - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division