Home » கோடிக்கணக்கில் பணம் புரளும் பந்தய விளையாட்டு!

கோடிக்கணக்கில் பணம் புரளும் பந்தய விளையாட்டு!

சிவப்பு பிடியாணை மூலம் கைது செய்யப்பட்ட இருவரையும் நாட்டுக்கு அழைத்து வர இந்தியா முயற்சி

by Damith Pushpika
May 5, 2024 6:50 am 0 comment

இந்திய மக்கள் இரு பிரிவாகப் பிரிந்துள்ளனர். ஒரு பிரிவினர் பாலிவுட் சினிமாவிலும், மற்றைய பிரிவினர் கிரிக்கெட்டிலுமாகப் பிரிந்துள்ளனர். இரு பிரிவுகளுக்கும் பாதாள உலக அழுத்தங்கள் இருப்பது இரகசியமானதல்ல. உலகின் மிக ஆபத்தான மற்றும் அத்தியாவசியமான பத்து குற்றவாளிகளில் ஒருவராக இருக்கும் பாதாள உலக தலைவன் தாவூத் இப்ராஹிம் ஒரு காலத்தில் பாலிவுட் சினிமாவிலும் இந்திய கிரிக்கெட்டிலும் செல்வாக்குச் செலுத்தியவர் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும். அவனின் அடிச்சுவட்டினைப் பின்பற்றிச் செல்லும் இன்னும் பல குற்றவாளிகளும் பிந்திய காலத்தில் இந்தியாவில் உருவாகினர்.

இணையத்தின் ஊடாக பந்தயம் கட்டும் சர்ச்சைக்குரிய பல சம்பவங்கள் மீண்டும் பொலிவூட் சினிமாவிலும், கிரிக்கெட் துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. அண்மையில் பொலிவூட் நடிகர், நடிகைகள் சிலர் இந்திய நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

சில காலங்களாக துபாய் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரியளவிலான பந்தய மோசடி தொடர்பான தகவல்கள் இவ்வாறுதான வெளிவந்தன. மகாதேவ் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இணைய செயலி ஊடாக துபாயில் இருக்கும் இந்திய நாட்டவர்கள் இருவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாவில் 15,000 கோடிகள் என அந்நாட்டு நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிப் பிரிவினரால் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த பந்தய செயலி ஊடாக தினமும் 200 கோடி இந்திய ரூபாய் வருமானம் ஈட்டப்படுவதாக மேலும் தெரிய வந்துள்ளது. அது மாத்திரமின்றி, கடந்த வருடம் ஐ.பி.எல் போட்டியின் நேரடி ஒளிபரப்பினைத் திருடி அதனை மகாதேவ் செயலியுடன் தொடர்புடைய பெயார்பிளே அப்ளிகேசன் ஊடாக ஒளிபரப்புச் செய்தும், அந்நேரத்தில் உடனடியாகப் பந்தயம் பிடித்தும் இன்னும் பல கோடிகள் வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த செயலியை விளம்பரப்படுத்துவதற்காக அதிக பணத்துக்கு பொலிவூட் நடிகைகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஐ.பி.எல் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான “வியகொம் 18” நிறுவனத்திற்கு அதன் மூலம் 100 கோடிக்கும் அதிக தொகை இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மகாதேவ் செயலியை உருவாக்கி இந்தியாவை பரபரப்புக்குள்ளாக்கிய மோசடிக்காரர்களின் தலைவர் சவுராப் சந்திரகராகும். 28 வயதையுடைய இந்த பிரபலமான நபரின் பல நிதி மோசடிகளை தற்போது இந்திய நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிப் பிரிவு கண்டுபிடித்துள்ளது. இதனுடன் தொடர்புடைய ஏராளமானோர் கைது செய்யப்பட்டுமுள்ளனர். சவுராபின் மோசடிகளுடன் தொடர்புடையதாகத் தகவல் கிடைத்துள்ள பாலிவுட் நடிகர் நடிகைகள் பலரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மகாதேவ் என்ற பெயரிலான இணையச் செயலியை உருவாக்கி கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் இந்த மோசடியில் ஐ. பி. எல் போட்டிகளும் உள்ளடங்கியதன் பின்னர் சவுராப் சந்திரகர் எனும் நபர் அண்மைய காலத்தில் இந்தியாவின் சட்டவிரோத நிதி மோசடிகாரர்களுள் பிரதானமானவராக அந்நாட்டின் நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல் மோசடிப் பிரிவினரால் இனங்காணப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சவுரப் சந்திரகர், தற்போது தனது தொழில் பங்காளியான 43 வயதுடைய ரவி உப்பால் என்பவருடன் ஐக்கிய அரபு ராச்சியத்தில் பதுங்கி இருப்பதோடு, அவர்கள் இருவரும் இணைந்து தங்களது இந்த பாரியளவிலான மோசடியை பல நாடுகளில் விரிவுபடுத்தி வருகின்றனர்.

சவுராப் 2017ஆம் ஆண்டளவில் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் நகரில் தனது சகோதரருடன் இணைந்து நடைபாதையில் பழச்சாறு குடிபானக் கடை ஒன்றினை நடத்திச் சென்ற ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனாகும். அவன் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், சத்தீஸ்கரில் உள்ள சூதாட்ட கும்பல்களிடத்தில் சென்று கிரிக்கெட் போட்டிகளில் பந்தயம் கட்டுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். இதனால் சட்டவிரோத பந்தய மோசடிக்காரர்ளுடன் நெருங்கிய தொடர்பு அவனுக்கு இருந்தது. அவனது சகபாடியான ரவி உப்பால் ஒரு பிரபலமிக்க குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவனாகும். அவன் குழாய்க் கிணறு நிர்மாணிக்கும் ஒப்பந்ததாரராக பணிபுரிகின்றான். எனினும் அவனும் இந்தச் சூதாட்டத்திற்கு அடிமையாகி இருந்தான். மேலதிகப் பணத்தைச் சம்பாதிப்பதற்காக கிரிக்கெட் பந்தய மேசாடிக்காரராக இரகசியமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த உப்பாலுக்கு சவ்ராபின் அறிமுகம் கிடைத்தது. அதிகளவு பணம் சம்பாதிக்க வேண்டுமாயின் இணையத்தின் ஊடாக பந்தயம் பிடிக்கும் முறையினை ஆரம்பிக்க வேண்டும் என அவன் எற்கனவே சிந்தித்துக் கொண்டிருந்தான்.

உப்பாலை சவ்ராப் எதேச்சையாகவே சந்தித்தான். ஒருநாள் நகரில் பாபுல் கடைக்கருகில் தனது நண்பருடன் கதைத்துக் கொண்டிருந்த போது அவனுக்கு சவ்ராபை அறிமுகம் செய்து வைத்தது வேறொரு நபராகும். பின்னர் இருவருக்குமிடையில் உரையாடல் இடம்பெற்றதோடு, பந்தயம் பிடிப்பதற்கான இணையத்தளச் செயலியை உருவாக்குவதற்கு அடித்தாளமிடப்பட்டது அந்த சந்திப்பின் போதாகும். பின்னர் இருவரும் இணைய செயலி அதிகளவில் பிரபலமாகியிருந்த ஹைதராபாத் சென்று செயலி தொடர்பில் மேலதிகத் தகவல்களைத் தேடிப் பெற்றுக் கொண்டனர்.

இன்று இந்திய நிதிக் குற்ற மோசடிப் பிரிவுக்கு தலைவலியாக மாறியிருக்கும் ‘மகாதேவ்’ இணையத்தள பந்தய செயலி இவ்வாறுதான் உருவானது. மகாதேவ் என்பது சவுராப்பின் குடும்பப்பெயர். சில நாட்களிலேயே சத்தீஸ்கார் பிராந்தியத்தில் பந்தயக்காரர்களிடையே அதிகமாகப் பிரபலமடைந்த மகாதேவ் செயலியின் ஊடாக எப்பொதுமில்லாதவாறு அதிக வருமானத்தை இருவரும் ஈட்டினர். போகர் சீட்டு, கிரிக்கெட், பேட்மிண்டன், டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் பந்தயம் கட்டக்கூடிய வகையில் செயற்படும் மகாதேவ் செயலி மோசடி பொலிஸாரின் கழுகுக் கண்ணில் சிக்க வாய்ப்புகள் அதிகம் என்பதை இருவரும் அறிந்திருந்தனர்.

2018ஆம் ஆண்டில், சவுராப் மற்றும் உப்பால் ஆகிய இருவரும் பொலிஸாரிம் சிக்கிக் கொள்வதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், அதிகளவு வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்காகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குப் புறப்பட்டனர். துபாயில் தங்களுடைய பந்தய மோசடியைச் சுதந்திரமாக நடத்த ஒரு அரேபியரின் உதவியுடன் அலுவலகம் ஒன்றை அமைத்தனர். பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் அவர்களோடு இணைந்து கொண்டார். எமிரேட்ஸின் சட்டத்தின்பிரகாரம் வெளிநாட்டவர்கள் அங்கு ஏதேனும் தொழிலை ஆரம்பிக்கும் போது அந்நாட்டுப் பிரஜை ஒருவர் அனுசரணையாளராக பெயர் குறிப்பிடப்பட வேண்டும் என்பதோடு, அதற்காக முன்வரும் அரேபியர் எமிரேட்ஸைச் சேர்ந்தவராக இருக்கவும் வேண்டும். பின்னைய காலங்களில் அந்த வணிகங்களின் இலாபத்தில் ஒரு பகுதியை விரும்பியவாறு அனுபவிக்கும் அந்த அனுசரணையாளர் ‘ஸ்லீப்பிங் பார்ட்னர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள்.

பெயார்பிளே செயலியின் ஊடாக ஐ.பி.எல் போட்டி ஒளிபரப்பினைத் திருடி தனது இணையத்தளத்தில் ஒளிபரப்புச் செய்தது தெரிய வந்ததன் பின்னர் அதனைப் பிரபலப்படுத்துவதற்காக இணைந்து கொண்ட பிரபல பொலிவூட் நடிகர் நடிகைகளான ரன்பீர் கபூர், ஷ்ரத்தா கபூர், தமன்னா, ஹுமா குரேஷி, கபில் ஷர்மா, போமன் இரானி, ஹினா கான் ஆகியோருடன், சஞ்ஜய் தத் மற்றும் ஜாக்குலினின் முகாமையாளர்களுடனும் இந்திய நிதி மோசடி ஊழல் பிரிவினரால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைகளுக்கு ஒத்துழைக்காத பொலிவூட் நடிகர் சாஹுல்கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதுமாத்திரமின்றி, தற்போது பாகிஸ்தானில் மறைந்திருப்பதாக இந்திய அரசாங்கத்தினால் சந்தேகிக்கப்படும் பாதாள உலக தலைவன் தாவூத் இப்ராஹிமின் சகோதரரான முஷ்தகீம் இப்ராஹிமுடன் சவுராப் மற்றும் உப்பலுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. முஷ்தகீமினால் மகாதேவ் செயலிக்காக பாகிஸ்தானிலும் ‘கெலோயார்’ என்ற பந்தய செயலியை உருவாக்கி, அதனை உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் நடக்கும் 20க்கு 20 பிரீமியர் லீக் போட்டி அனுசரணையாளராக முன்னிறுத்தி அணி உரிமையாளர்களாக செயற்பட்டதும் தெரியவந்துள்ளது. சவுராபின் பாதுகாப்பிற்காக தனது நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர்கள் 20 —– 30 பேரை ஈடுபடுத்துவதற்கும் முஷ்தகிம் இப்ராஹிம் ஏற்பாடு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

குண்டு துழைக்காத ரோல்ஸ் ரொய்ஸ் உள்ளிட்ட உலகின் அதிக விலை மதிக்கத்தக்க ஐந்து சொகுசுக் கார்களை வைத்திருந்த டுபாயில் மிகச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த சவுராப் சந்திரகர் மற்றும் ரவி உப்பல் ஆகியோருக்கு எதிராக இந்திய நிதிக் குற்ற மோசடி ஊழல் பிரிவு அறிக்கைக்கு அமைய கடந்த வருட இறுதியில் இண்டர்போல் பொலிஸாரால் சிகப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கமைய துபாய் பொலிஸாரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது இருவரும் பொலிஸ் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வர தற்போது இந்திய நிதிக் குற்ற ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்

டிசம்பரில், துபாய் பொலிஸாரால் சிவப்பு பிடியாணை மூலம் இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டுக்கு அழைத்து வர இந்தியா முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.

பௌஸ் முஹம்மட் தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division