Home » ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் நேரடி சாட்சியங்கள்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் நேரடி சாட்சியங்கள்

by Damith Pushpika
April 21, 2024 6:24 am 0 comment

தொச்சிக்கடை தேவாலயத்தில் பல சடலங்கள் மற்றும் உடற் பாகங்கள் இருந்த போதிலும் அவற்றை உள்ளடக்குவதற்கு 33 உறைகள் மாத்திரமே இருந்தன. மீதமுள்ள உடல் உறுப்புகள் 13 குப்பை பைகளில் அடக்கப்பட்டன. முதல் நாள் அதிகாலையில் ஆரம்பமான பணிகள் மூன்றாம்நாள் காலை முடிந்தன. மறுநாளும் அதிகாலையே வேலைகள் ஆரம்பமாகின. முதல் மூன்று நாட்களின் வேலைகளும் இவ்வாறே நடந்தன. சிலர் இறந்த தமது உறவினரின் உடல் உறுப்புகளை இரண்டு மூன்று பொலித்தீன் உறைகளில் போட்டு மலர்ச்சாலைகளுக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சந்தர்ப்பங்களும் இருந்தன. சடலங்களை வைப்பதற்கு கூல்றூம் வசதியுடனான கொள்கலன் ஒன்று கொண்டு வரப்பட்டதோடு, அலுவலகத்தின் நெரிசலைக் குறைப்பதற்காக வெளியில் தகவல் அறை ஒன்றும் அமைக்கப்பட்டது.

நாட்டையே வேதனை மற்றும் அச்சத்துக்குள் உள்ளாகிய ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஐந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளன. பல வருடங்களாக குண்டுகள் வெடிக்காத நாட்டில் பல இடங்களில் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறிய பல குண்டுகளால் நாடே மரண வீடாக ஆவதற்கு ஒரு சில நிமிடங்களே தேவைப்பட்டது. சுமார் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகிய அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நாட்டு மக்களின் இதயங்களை காயப்படுத்தியது. அப்படி இருந்தும், நல்லதையும் கெட்டதையும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போல இணைத்த அந்த எதிர்பாராத பேரழிவு, நாட்டை ஒன்றிணைத்து, ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்தை அதிகரிக்கும் நிகழ்வாக மாறியது. தாக்குதலுக்குப் பிறகு முதல் சில நாட்கள் முக்கியமானதாக மாறியதால், ஏராளமான மக்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்க முன் வந்தனர். அவர்களில் அரசு அதிகாரிகள், பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்கள், மதத் தலைவர்கள் மற்றும் பல அரசு மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து நடத்திய மனிதாபிமான நடவடிக்கையில் இதுவரை வெளிவராத சில சம்பவங்களின் பிரதிபலிப்பு இதுவாகும்.கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றுக் கொண்டிருந்த போது முதலாவது குண்டு வெடித்தது. அந்நேரம் வழிபாடுகள் நடைபெற்றன. தேவாலயத்தின் நிர்வாகியான ஜூட் ராஜ், கீழ் தளத்தில் உள்ள தனது அலுவலக அறையில் இருந்த போது குண்டு வெடித்தது, ​​மேல் தளத்தில் இருந்த அருட்தந்தை தினுஷ சாமரவுக்கு அந்த வெடிப்புச் சத்தம் கேட்டது. அவர் உடனே ஏதோ மின் கசிவு ஏற்பட்டு விட்டதாக எண்ணி கீழே விரைந்தார்.

“நான் தேவாலயத்திற்குள் நுழைந்தவுடன், ஏதோ பயங்கரமான சம்பவம் நடந்திருப்பதை உணர்ந்தேன். இரத்தக் காயங்களுடன் மக்கள் எங்கும் வீழ்ந்து கிடந்தனர். சிலரது உடல்கள் சிதறிக் கிடந்தன. மக்கள் கதறி அழுகிறார்கள், கூக்குரலிடுகின்றார்கள். அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று திடீரென்று ஞாபகம் வந்தது. பிரதான வாயிலின் ஊடாக நான் வெளியே வந்து சாலையில் வரும் வாகனங்களை நிறுத்தி காயப்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தேன். அந்நேரம் பலர் தேவாலயத்திற்கு விரைந்து வந்து உதவி செய்தனர்”

கடலோர பொலிஸாரும் இந்த வெடிச்சத்தத்தைக் கேட்டனர், அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த நுவன் தண்டநாராயண, பல அதிகாரிகளுடன் உடனடியாக தேவாலயத்திற்கு வந்தார்.

“நான் தேவாலயத்திற்கு வந்தவுடன், குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை உணர்ந்தேன். இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு, தேவாலயத்திற்குள் உள்ள சூழ்நிலையை முகாமைத்துவம் செய்வதற்காக இன்னும் சில அதிகாரிகளை அந்த இடத்திற்கு வரவழைத்தேன். உயிருடன் இருக்கும் அனைவரையும் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அனைத்து விடயங்களும் இன்று இவ்வாறு கூறுவதைப் போன்று அன்று எளிதாக இருக்கவில்லை. உயிரிழந்த தமது உறவினர்களின் சடலங்களைத் தேடுவதற்காக சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தின் முன்னால் கூடிய மக்கள் எண்ணிக்கை நேரம் செல்லச் செல்ல அதிகரித்ததால், மக்களின் துயரமும் வேதனையும் உணர்ச்சிகளும் அதிகரித்தன. அதன்போது கண்களால் கண்ட, காதுகளால் கேட்ட நிகழ்வுகளை கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தின் நலன்புரி நிலையமான செத்சரண நிறுவகத்தின் இணைப்பாளராக பல நாட்கள் அந்த இடத்தில் தங்கியிருந்த நிரன் பெர்னாண்டோ, நினைவு கூர்ந்தார்.

“அடையாளம் காண முடியாத சடலங்களை நீதிவானின் உத்தரவின் பிரகாரம் அரசு இரசாயனப் பகுப்பாய்வாளர் அலுவலகத்துக்குக் கொண்டு சென்று டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் எவராலும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது போன சடலங்கள் மற்றும் உடல் உறுப்புகளில் இருந்து டி.என். ஏ பெறப்பட்டு அவற்றுடன் ஒத்துப்போகும் உறவினர்களின் டி. என். ஏ. அறிக்கைகளுக்கு அமைய அந்த சடலங்களும், உடல் உறுப்புக்களும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறே சுமார் 10-15 சடலங்கள் மற்றும் உடல் பாகங்கள் விடுவிக்கப்பட்டன. அதற்கு சில நாட்கள் ஆகின” இந்நாட்டு ஹோட்டல்களில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் சடலங்களை அடையாளம் கண்டு அவற்றை விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதில் பிரதம நீதவானின் விசேட உத்தரவின் பிரகாரம் செயற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் அனைத்தும் உத்தியோகபூர்வமாகவும் சட்ட ரீதியாகவும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

சுரேகா நில்மினி இலங்கோன் தமிழில்: - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division