Home » மேதின பேரணிகளின் வெற்றியாளன் யார்?
வார இறுதிக் ேகள்வி

மேதின பேரணிகளின் வெற்றியாளன் யார்?

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

ஒரு காலத்தில், மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களில் வெளிப்படுத்தப்பட்ட கோஷங்கள் மற்றும் கோபத்தின் வெளிபாடுகள் காரணமாக பொதுமக்களுக்கு உத்வேகமடைந்திருக்கிறார்கள். இந்த மே தினத்தில் இரண்டு தெளிவான பிரிவுகள் இருந்தன. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தான் அவை. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என எதிர்க்கட்சியினர் அரசை விமர்சித்து கருத்து தெரிவித்த நிலையில் ஆளுங்கட்சியினர் தாங்கள் செய்த, செய்யப்போகும் பணிகள் குறித்து கருத்து தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டங்களில் கூறப்பட்ட சுலோகங்கள், பங்குபற்றும் குழுக்களின் பல்வேறு செயற்பாடுகள் மற்றும் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை என்பனவற்றின் ஊடாக பொதுமக்களுக்கு உத்வேகம் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த நேரத்திலும், இடதுசாரி முகாமில் இருந்து மிகவும் கவர்ச்சிகரமான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. ஆனால் கொவிட் தொற்று, பொருளாதார நெருக்கடி, மற்றும் அதைத் தொடர்ந்து வந்த போராட்டம் நாட்டின் செழுமை அனைத்தையும் விழுங்கியது. புத்தாண்டு, கிறிஸ்மஸ், ரமழான், தீபாவளி, வெசாக், பொசன் போன்று நாட்காட்டிகளில் மே தினம் என்பது மற்றொரு நாளாக மாறியது.

ஆனால் சமீபகாலமாக மேற்குறிப்பிட்ட அனைத்து தேசிய கொண்டாட்டங்கள் மற்றும் தேசிய விழாக்களை மக்கள் கொண்டாடுவதைப் போன்று இந்த ஆண்டும் மே தினத்தையும் வெகு சிறப்பாக கொண்டாடுகின்றனர். எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்கு முன்னர் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை நோக்கமாகக் கொண்டிருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூடுமானவரை மே தினத்தை கொண்டாட முன்வந்துள்ளதாக தெரிகிறது.

எனவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு மே தினத்தை மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டிருந்தன, மே தினம் நாட்டின் அரசியலை மிகவும் சூடாக உணர வைத்ததாகத் தெரிகிறது.

முன்பு போலவே ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாங்கள் நடத்திய பேரணிகளில் தங்களது மே தின பேரணிதான் மிகச் சிறந்தது என்று அறிவித்தன. இருப்பினும், எல்லாக் காலத்தையும் போலவே சிறந்த மே தினப் பேரணி எது என்பதை தீர்மானிப்பது கடினமானதாகவே உள்ளது. கூட்டம் நடைபெறும் இடம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் கொண்டு வரப்படும் கூட்டத்தைக் கையாள்வதிலும் கட்டுப்படுத்துவதிலும் உள்ள சிரமம் போன்ற காரணங்களால் கூட்டத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்து முடிவெடுக்க முடியாது.

அதே சமயம், ஊடகங்கள் ஒவ்வொரு கூட்டத்தையும் வெவ்வேறு கோணங்களில் பார்க்கும் போது, ஒரு கூட்டத்தின் அளவு பெரும்பாலும் கேமராமேன்கள் பார்க்கும் விதத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. சில பத்திரிக்கையாளர்கள் மற்றும் வீடியோ எடிட்டர்கள் கூட்டத்தை அதிகரித்து காட்ட எடிட்டிங் வித்தைகளை கையாளுகிறார்கள் என்பது இரகசியமானதல்ல.

ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் கொழும்பு கோட்டை செத்தாம் வீதியில் நடைபெற்றது. போராட்டம் நடந்த இடத்துக்கும், ஜனாதிபதி செயலகம், போராட்டக்காரர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகைக்கும் மிக அருகில் செத்தாம் வீதி அமைந்துள்ளது. 2022ஆம் ஆண்டு போராட்டம் நடைபெற்ற காலத்துடன் ஒப்பிடும் போது, இன்று அப்பகுதி மிகவும் அமைதியாகவும், அனைத்து அரச நிறுவனங்களும் முறையாகவும் இயங்கி வருகின்றன. போராட்டத்துக்கு ஆதரவாக போராட்ட களத்திற்கு சென்ற சஜித் பிரேதமதாச விரட்டியடிக்கப்பட்ட இடத்தில்தான் சஜித்தின் கூட்டம் இடம்பெற்றது.

அநுரவின் கூட்டம் லிப்டன் சுற்றுவட்டத்தில் நடைபெற்றது. அலரி மாளிகை போராட்ட களத்திற்கு அருகில் உள்ளது. அந்த இடத்திற்கு மிக அருகிலேயே கூட்டம் நடந்தது. அப்போது முன்னாள் பிரதமர் மந்த ராஜபக்‌ஷ போராட்டக்காரர்களின் பாரிய தாக்குதலுக்கு ஆளாகாமல் இருக்க படையினர் பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்ததுடன், அவரை விசேட விமானத்தில் கடற்படை மத்திய நிலையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டியுமிருந்தது. அநுர திஸாநாயக்கவுக்கும் போராட்ட களத்தில் சில அசம்பாவிதங்கள் ஏற்பட்டாலும் ஒரு கட்டத்தில் அவர் போராட்டகாரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்பட்டது.

மொட்டுக் கட்சியின் கூட்டம் கெம்பல் மைதானத்தில் நடைபெற்றது. மே மாதம் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மொட்டுக் கட்சியின் பிரதேச தலைவர்களின் வீடுகள் எரிக்கப்பட்டதன் காரணமாக மொட்டுக் கட்சி நீண்டகாலமாக செயலிழந்திருந்தது என்று கூறுவது மிகவும் சரியானது என நினைக்கிறேன். ஆனால் இன்று மொட்டுக்கட்சியினரும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் மே தினத்தை கொண்டாட முடிந்துள்ளது.

மே தினத்தன்று காலை நுவரெலியா கொட்டகலையில் நடைபெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினப் பேரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார். மாலை கொழும்பு மாளிகாவத்தையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்திலும் கலந்து கொண்டார். போராட்டத்தின் போது அதற்கு ஆதரவான சட்டத்தரணிகள் பலரின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மாளிகாவத்தையை தாண்டிய டெக்னிக்கல் சந்தி வளைவில் உள்ள அளுத்கடை நீதிமன்ற மைதானத்திலேயே நடைபெற்றது.

நாட்டின் எதிர்காலம் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த மாதிரியான அறிவித்தலை முன்வைப்பார்கள் என்பதிலேயே இந்த மே தினத்தில் நாட்டு மக்கள் விசேட ஆர்வம் காட்டினர். ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள் குறித்து சஜித் பிரேமதாச மே பேரணியில் தெரிவித்தார். அநுரகுமார திஸாநாயக்க தாம் கொண்டு வரும் மாற்றங்கள் குறித்து விளக்கமளித்ததுடன், “ஒழுங்குமுறையான மக்கள் சக்தியையே நாங்கள் எதிர்பார்க்கிறோம்” எனவும் குறிப்பிட்டார். அந்த அறிவிப்புகளைக் கேட்கும் போது, லால்காந்த மற்றும் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோரால் பாராளுமன்றத்தை முற்றுகையிட பொதுமக்கள் எவ்வாறு தூண்டப்பட்டனர் என்பது பலருக்கு நினைவுக்கு வரும். அவர்கள் இருவரும் மே தினப் பேரணிகளில் உரையாற்றினர், மேலும் அவர்கள் ஏற்கனவே ஜனாதிபதி பதவி தமது கட்சிக்குக் கிடைத்துவிட்டது போன்று பேசியதாக பொதுமக்கள் உணர்ந்தனர். சிலர் அதனை தேசத்துக்கான உரையாகப் பார்த்தார்கள். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கூட இன்னும் கோரப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலில், தமது கட்சி ஆதரிக்கும் வேட்பாளரைத் தவிர வேறு எவரும் வெற்றிபெற முடியாது என மந்த ராஜபக்‌ஷ அறிவித்தார். அவர்கள் தமது சொந்த வேட்பாளரை முன்னிறுத்துவதாக அறிவிக்காதது பொதுமக்களின் விசேட கவனத்தை ஈர்த்தது என நினைக்கிறேன். பல்வேறு சம்பவங்களுக்கு முகங்கொடுத்த போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே நாட்டின் பெரும்பான்மையான மக்களின் அரசியல் கட்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அண்மையில் நடைபெற்ற மே தின பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போது மிகத் தெளிவான கருத்தை நாட்டு மக்களுக்கு முன்வைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லோரும் கஷ்டத்தில் இருந்தார்கள், ஆனால் இன்று எல்லாம் மாறிவிட்டது. கொழும்பு நகரில் மிக நெருக்கமான இடங்களில் மே தின பேரணிகளை நடத்தக்கூடிய இந்த நிலைமை நாட்டில் உண்மையான ஜனநாயகம் நிலவுவதற்கான உதாரணமா இல்லையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எல்லா கஷ்டங்களும் தீரவில்லை. ஆனால், இக்கட்டான நிலைமைகளை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான தெளிவான பாதை இப்போது திறக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளின் ஆதரவையும் பெறவும். அதற்கான உடன்படிக்கைகளை மேற்கொள்ள தயாராகவும் இருப்பதாகக் கூறிய அவர், அதற்காக அனைத்து கட்சி தலைவர்களும் ஒன்றிணைய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

சமூகவலைத் தளங்களில் வைரலான பதிவு ஒன்றில், இந்த ஆண்டு மே தினக் கூட்டங்களில் இரண்டு வெற்றியாளர்கள் இருப்பதாகவும், அது மொட்டுகட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்றும் அறிவிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி காணாமல் போனதாகத் தோன்றிய போதிலும் இன்று ஐக்கிய தேசியக் கட்சி அனைத்தையும் ஒன்று திரட்டும் மக்கள் சக்தியாக மாறியுள்ளதாகவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரை ஏரியில் குளித்து கிராமத்திற்கு சென்று காணாமல் போன மொட்டுக் கட்சி தற்போது மீண்டும் மக்கள் சக்தியாக மாறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த ஆண்டு மே தின வெற்றியாளர் யார் என்பதை தீர்மானிப்பது கடினம் எனத் தெரிகிறது. ஐக்கிய மக்கள் சக்தி பெருந்திரளான மக்கள் கூட்டத்தை கூட்டிச் சென்றிருந்தாலும் சிறிது நேரத்திலேயே சரத் பொன்சேகா கூட்டத்திலிருந்து வெளியேறினார். பிரபல தலைவர்களான ராஜித சேனாரத்ன மற்றும் திருமதி தலதா அத்துகோரள, ரிஷாத் பதியுதீன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இவை அந்த முன்னணியின் வளர்ச்சியை விட சரிவை பிரதிபலிக்கிறது, என சிலர் கூறினால், அதை நீங்கள் தவறாகச் சொல்ல முடியுமா? ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதற்குக் காரணம் என்ன? தொடர்ந்தும் ஐ.ம.சயில் இனியும் தங்கியிருக்க விரும்பாத ஐக்கிய தேசியக் கட்சியினரால் அல்லவா?

பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களில் இருந்து நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியை தேசிய மக்கள் சக்தி தெரிவு செய்வதாக கூட்டத்தில் தெளிவாக லால்காந்த குறிப்பிட்டார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு ஜனதா விமுக்தி பெரமுனவும் வழங்கிய அங்கீகாரம் இது என அதனை செவிமடுத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு, மாத்தறை, அனுராதபுரம் ஆகிய மூன்று கூட்டங்களும் வெற்றியடைந்தாலும், யாழ்ப்பாணப் பேரணி வெற்றியடைந்ததாக மக்கள் விடுதலை முன்னணியினர் கூறவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற முடியாது என்பதற்கான காரணத்தை மே தினக் கூட்டம் மூலம் அப்பட்டமாக வெளிப்படுத்தியது. கோட்டாபய ராஜபக்‌ஷ மட்டுமே சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியானார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மே தினக் கூட்டத்தை தனது முழு பலத்தையும் காட்டி நடத்தவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியில் இணையலாம் என எதிர்பார்த்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. இன்னும் சிறிது காலம் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொண்டார். ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதில் பெரும் பங்கு வகிக்கும் நிமல் லான்சா எம்.பி.க்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

வடக்கிலும் கிழக்கிலும் அவருக்கு ஆதரவாக பல கட்சிகள் இருந்தும் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஏனைய கட்சிகள் மட்டுமன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்கள் உட்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் தற்போது தம்மைச் சூழ்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மே தினப் பேரணியின் வெற்றியாளரை நீங்களே தேர்ந்தெடுங்கள்

சுனந்த மத்துமபண்டார களனிப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைகள் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் தமிழில். வீ.ஆர்.வயலட்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division