Home » சைபர் அடிமை முகாமிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்
மியன்மாரில்

சைபர் அடிமை முகாமிலிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்

ஏனையோரின் விடுதலை விரைவில் சாத்தியமாகுமா?

by Damith Pushpika
April 21, 2024 6:22 am 0 comment

மியன்மாரில் சிக்கியிருக்கும் இலங்கையர்களில் சிலர் அண்மையில் மீட்கப்பட்ட சம்பவம் ஒரு த்ரில்லர் திரைப்படத்தின் கதைபோல பலருக்குத் தோன்றியிருக்கும். தாய்லாந்து- மியான்மார் எல்லையில் செயல்படும் இணைய அடிமை வலையமைப்பொன்று பற்றிய செய்திகள் சமீபகாலமாகவே வெளிவந்த வண்ணமுள்ளன. இவர்களில் எட்டுப் பேர் அந்த அடிமைத் தளைகளிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளனர், ஆனால் அவர்களின் விடுதலைக்கான பயணமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் மனித சுரண்டலின் கடுமையான யதார்த்தத்தை வெளிப்படுத்தியுள்ளது.

பல மாதங்களுக்கு முன்னர், இலங்கையின் தொலைக்காட்சி சேவையொன்று துயரமான சம்பவமொன்றை வெளிக் கொணர்ந்தது. ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்கள் மியான்மார்- தாய்லாந்து எல்லைக்கு அருகில் மியன்மார் ஆயுதக் குழுவினால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் சிக்கியுள்ளனர் என்று விபரித்தது. சைபர் குற்றங்களில் பங்கேற்க நிர்ப்பந்திக்கப்பட்ட இந்த இளைஞர்கள் நம்பிக்கையை தொலைத்தவர்களாக ஒரு பயங்கரமான சூழலில் சிக்குண்டிருந்தனர். அவ்வாறு சிக்குண்டிருந்தவர்களில் எட்டுப்பேரே தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

எட்டுப் பேரின் சமீபத்திய விடுதலை இருளுக்கு மத்தியில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றாக உள்ளது. அவர்கள் இலங்கைக்கு திரும்பியுள்ளமை நீதியை நோக்கிய பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. இருப்பினும், அவர்கள் அனுபவித்த சோதனைகளும், துஷ்பிரயோகங்களும் இணைய அடிமைத்தனத்தை அப்பட்டமாக நினைவூட்டுகின்றது.

மியான்மர் – தாய்லாந்து எல்லைக்கு அருகில் ஆயுதம் தாங்கிய குழுவொன்றினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த எட்டு இலங்கை இளைஞர்கள் விடுவிக்கப்பட்டு தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கடந்த வியாழனன்று காலை 9.30 மணியளவில் கட்டுநாயக்கவில் தரையிறங்கியுள்ளனர்.

அவர்களது அடையாளங்களை வெளிகாட்டாமல் பாதுகாப்பாக அவர்கள் திரும்புவதை விமான சேவை அதிகாரிகள் உறுதிசெய்தனர்.

இரண்டு தனித்தனி இடங்களில் சிக்கியுள்ள எஞ்சிய ஐம்பதுக்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்களை பத்திரமாக மீட்டெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட இலங்கை இளைஞர்கள் திரும்புவதற்கு வசதியாக வெளிவிவகார அமைச்சும் புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளன,

இதற்கு முன்னரும் இவ்வாறான முகாமொன்றிலிருந்து வெற்றிகரமாகத் தப்பித்த இலங்கை இளைஞர் ஒருவர் தான் அங்கு அனுபவித்த துஷ்பிரயோகங்களை விபரித்துள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக அநாமதேயமாக இருக்க விரும்பிய அந்த இலங்கை இளைஞன், முகாமில் தனது கட்டாய உழைப்பைப் பற்றி பேசியுள்ளார், அங்கு தானும் மற்றவர்களும் இணையவழியான மோசடிகளுக்கு எவ்வாறு தள்ளப்பட்டனர் என்பதையும் விபரித்தார்.

மியான்மரில் தாய்லாந்து எல்லைக்கு அருகில் பயங்கரவாதக் குழுவினால் நடத்தப்பட்ட இணைய அடிமை முகாமில் இருந்து தைரியமாகவும் திகிலூட்டும் விதமாகவும் சில காலங்களுக்கு முன்னர் தப்பி வந்த ஐந்து இலங்கையர்களில் இவரும் ஒருவர்.

தாய்லாந்து- மியான்மார் எல்லையில் உள்ள “சைபர் கிரிமினல் ஏரியா” என அழைக்கப்படும் முகாமில் 50க்கும் மேற்பட்ட இலங்கை இளைஞர்களை சிறைபிடித்து வைத்திருக்கும் பயங்கரமான இணைய அடிமை செயற்பாடுகளை கூகுள் மேப்ஸிலும் கண்டறிந்து கொள்ளலாம்.

மியான்மரில் உள்ள மியாவெட்டி நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தொலைதூர காடுகள் ஒரு பயங்கரவாத குழுவின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தாய்லாந்தில் IT வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதிகளால் ஈர்க்கப்பட்ட இலங்கை இளைஞர்கள், சுற்றுலா விசாக்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு, இணைய அடிமைகளாக ஆவதற்கு தலா 5,000 டொலர்களுக்கு விற்கப்படுகின்றனர்.

முதன்முதலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமளவில் முகாமில் இருந்து ஐந்து இலங்கையர்கள் தப்பியோடியது, உள்ளே இருக்கும் கொடூரமான யதார்த்தத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியது.

சமூக ஊடகங்களில் பெண்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ய இவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். மற்றும் இணையவழி மோசடிகளில் ஆட்களை சிக்க வைக்க, சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் உளவியல் துஷ்பிரயோகங்களை அனுபவித்தனர்,

“நாங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்ட்இன், டிக் டொக் போன்ற சமூக ஊடகங்களி்ல் பெண்களைப் போல செயற்படுகிறோம்,” என்று அவர் அதிர்ச்சியுடன் கூறினார். “பணக்கார நாடுகளான அமெரிக்கா, நெதர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை நாங்கள் குறிவைக்கிறோம். பிறகு, வீடியோ அழைப்புகள் வரும்போது, வாடகைக்கு அமர்த்தப்பட்ட பெண்களின் முகத்தைக் காண்பிக்கிறோம்.”

அவரைப் பொறுத்தவரை, ஒன்பது மணி நேரத்திற்குள் ஒரு “வாடிக்கையாளரை” பாதுகாக்கத் தவறினால் அவர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகள் மறுக்கப்படும்.

அடிப்படைத் தேவைகளை இழப்பது மாத்திரமல்ல தமக்கு கொடுக்கப்பட்ட செயற்பாட்டை பூர்த்தி செய்யத் தவறியதற்காக உடல் ரீதியாக அவர்கள் துன்புறுத்தப்பட்டுமுள்ளனர். தாய்லாந்தின் பல்பொருள் அங்காடியில் தகவல் தொழில்நுட்ப வேலைகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதியால் ஈர்க்கப்பட்டு சென்ற பாதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவர், வாக்குறுதியளிக்கப்பட்ட இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தொலைதூர முகாமுக்கு தான் கொண்டு செல்லப்பட்டதை உணர்ந்தும் ஏதும் செய்யமுடியாத நிலையில் இருந்தார்.

சிறைபிடிக்கப்பட்டவர்கள் இணையவழியான மோசடியான திட்டங்களில் பணக்காரர்களை சிக்க வைக்க சமூக ஊடகங்களில் பெண்களைப் போல ஆள்மாறாட்டம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வாறு இவர்களை பெண்களாக எண்ணி ஏமாறும் வாடிக்கையாளர்களை கிரிப்டோ நாணய ட்ரேடிங்கில் முதலிடச் செய்வது இவர்களது பணி.

மிகுந்த விரக்தியின் மத்தியில், நான்கு இளைஞர்கள் மற்றும் ஒரு இளம் பெண், உட்பட ஐவர் மிருகத்தனமான இந்த சைபர் அடிமை முகாமில் இருந்து கடந்த வருடம் தப்பினர்.

இத்தகைய இணைய அடிமை வலையமைப்புகளின் செயற்பாடு, டிஜிட்டல் உலகில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதில் அதிகாரிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சவால்களை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. நிதி ஆதாயத்திற்காக பாதிக்கப்படக்கூடிய நபர்களை சுரண்டும், இந்த குற்றவியல் நிறுவனங்களின் நயவஞ்சகத் தன்மையையும் மனித உரிமைகளை அவர்கள் புறக்கணிப்பதையும் முழு உலகுமே அறிந்தும் வாளாதிருக்கிறது.

இந்த நடவடிக்கைகளைத் திட்டமிடுவதில் சீனாவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களின் ஈடுபாடு அச்சுறுத்தலின் நாடுகடந்த தன்மையைக் காட்டுகிறது. தென்கிழக்கு ஆசியா முழுவதும் இயங்கும் இந்தக் குழுக்கள், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வருவோரைச் சுரண்டி, அவர்களை கற்பனை செய்து பார்க்க முடியாத பயங்கரங்களுக்கு உள்ளாக்குவதற்கு முன், வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாக பொய்யான வாக்குறுதிகளை அளித்து அவர்களை கவர்ந்திழுக்கின்றன.

United States Institute Of Peace மற்றும் ஐநா மனித உரிமைகள் அலுவலகம் ஆகியவற்றின் சமீபத்திய அறிக்கைகள், இந்தக் குற்றவியல் வலைப்பின்னல்களை அகற்றுவதற்கும், அவற்றில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் சர்வதேச ஒத்துழைப்புக்கான அவசரத் தேவையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஆனால் இணைய அடிமைத்தனத்திற்கு எதிரான போர் இன்னும் வெகு தொலைவில் உள்ளது. ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் அசைக்க முடியாத உறுதிப்பாடு ஆகியவற்றின் மூலம், டிஜிட்டல் உலகின் இருண்ட பகுதிகளில் நாம் ஒளியைப் பாய்ச்ச முடியும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபர்கள் மீதான சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் முடியும்.

அபி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division