Home » சுதந்திரக் கட்சிக்குள் உருவான தீர்க்க முடியாத குழப்பம்!

சுதந்திரக் கட்சிக்குள் உருவான தீர்க்க முடியாத குழப்பம்!

by Damith Pushpika
April 21, 2024 6:27 am 0 comment

இலங்கையின் பழைமை வாய்ந்த அரசியல் கட்சிகளில் ஒன்றான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் மற்றும் புதிய நியமனங்கள் அரசியல் அரங்கத்தில் பேசுபொருளாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தலொன்றுக்கு நாடு தயாராகி வரும் இன்றைய நிலையில், பழைமையான கட்சியான சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள குழப்பம் எவ்வாறான அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வியும் வலுத்துள்ளது.

1951ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1956ஆம் ஆண்டில் முதன் முதலில் ஆட்சிக்கு வந்தது. அன்று முதல் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வரை மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களில் சுதந்திரக் கட்சியின் பங்களிப்புக் கணிசமாக இருந்தது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.

ராஜபக்‌ஷ குடும்பத்தினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை ஆரம்பித்து ஆட்சிக்கு வரும் வரையில், ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுமே மாறி மாறி ஆட்சிக்கு வந்தன.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்ற பின்னர் சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டார். அவர் தனது ஜனாதிபதிப் பதவிக்காலத்தைப் பூர்த்தி செய்த பின்னரும் சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தும் செயற்பட்டு வந்தார்.

இவ்வாறான நிலையில், 2020ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைத்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைமை மோசமானது. பொதுஜன பெரமுனவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருந்தாலும், சுதந்திரக் கட்சியிடம் பேரம்பேசும் சக்தி இருக்கவில்லை. இதனால் அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல விடயங்களில் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் ஒற்றுமையின்மை ஏற்பட்டது.

இதனால் சு.க தலைமைத்துவத்தின் முடிவுக்கு மாறாக சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றனர். இதனால் அதிருப்தியடைந்த சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன உட்பட ஏனையவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து சுயாதீனமாகச் செயற்படுவதாக அறிவித்தனர்.

அது மாத்திரமன்றி, தலைமைத்துவத்தின் முடிவுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது பற்றியும் அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் மைத்திரிபால சிறிசேனவின் முயற்சிகளுக்கு அப்போது சு.க பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர பலமாக ஆதரவளித்தார்.

சிரேஷ்ட உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய உள்ளிட்ட எட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளைத் தொடங்கவும் கட்சி முடிவு செய்தது.

எவ்வாறாயினும், அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா 2023 மார்ச் மாதம் நீதிமன்றத்துக்குச் சென்று தன்னை நீக்கும் செயற்பாட்டுக்கு எதிராக தடையுத்தரவைப் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் திடீர் திருப்பமாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு 2023ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் நஷ்டஈடு வழங்குமாறு நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைகளே இந்தத் தலைகீழ் மாற்றத்துக்குக் காரணம் என ஊகங்கள் அப்போது வெளியாகியிருந்தன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் பங்குகொள்ள அனுமதிப்பதன் மூலம், தனக்கென ஒரு பாதுகாப்பு வலையை உருவாக்கிக்கொள்ள மைத்திரிபால சிறிசேன முயற்சிப்பதாகக் கூறப்பட்டது. எவ்வாறாயினும், ஒழுக்காற்று நடவடிக்கையை நிறுத்தும் தலைமைத்துவத்தின் தீர்மானம், இதற்காக தொடர்ந்து போராடிய தயாசிறி ஜயசேகரவுக்குப் பிடிக்கவில்லை. இது மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஜயசேகராவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்திருந்தது.

ஜயசேகர பொதுச்செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அவருடைய கட்சி உறுப்பினர் பதவியும் பறிக்கப்பட்டது. இவருக்குப் பதிலாக மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவாளரான சரத் ஏக்கநாயக்க பொதுச்செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இவ்வாறான பின்னணியில், மைத்திரிபால சிறிசேனவின் சமீபத்திய அரசியல் நகர்வுகள் பலரையும் ஆச்சரியத்திலும், குழப்பத்திலும் ஆழ்த்தியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் யார் என்பது தனக்குத் தெரியும் என்று அண்மையில் அவர் பகிரங்கமாகக் கூறியிருந்தார். இந்தக் கருத்துத் தொடர்பில் அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்ததுடன், இதனை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக வழங்க அவர் மறுத்து விட்டார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் குறித்த மைத்திரிபால சிறிசேனவின் புதிய ‘வெளிப்படுத்தலுக்கு’ பின்னால் ஒரு அரசியல் நோக்கம் இருப்பதாக பல அரசியல் அவதானிகள் கருதினர். அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் முறையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய பதவிகளில் இருந்து நீக்கப்பட்டமை இந்தக் காய்நகர்த்தலின் வெளிப்பாடு என்றும் கருதப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக சரத் ஏக்கநாயக்கவும், பொருளாளராக ஹெக்டர் பெத்மகேவும் மற்றும் கே.பி. குணவர்தன தேசிய அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருப்பதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். வெளியேற்றப்பட்ட மூவரும் சில நாட்களுக்குப் பிறகு உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று, அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றனர். இந்த தடை உத்தரவு ஏப்ரல் 24ஆம் திகதி வரை நீடிக்கின்றது.

நீதிமன்றத்தின் தடை உத்தரவைப் பெற்றுக் கொண்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் கொழும்பு டார்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்திற்குச் சென்றனர். கட்சியில் தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து நீக்கப்பட்டது முறையற்றது என்றும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அவர்கள் கூறினர்.

மறுபக்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் போசகராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்து, மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு எதிராக தடையாணையைக் கோரினார். இதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனால் சு.கவிற்குள் ஏற்பட்ட குழப்பம் மேலும் தீவிரமடைந்தது.

இந்த நீதிமன்ற உத்தரவையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தீர்மானம் எடுக்கும் அமைப்பான அரசியல் பீடத்தின் கூட்டத்தை கூட்டுமாறு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தக் கோரிக்கையை மித்ரபால நிராகரித்தார். எவ்வாறாயினும், அரசியல் பீடம் டார்லி வீதியில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் அன்றி, இலங்கை மன்றக் கல்லூரியில் கூடியது. அக்கட்சியின் போசகர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இதில் கலந்து கொண்டார். அங்கு முக்கிய முடிவுகள் சிலவற்றை அவர்கள் எடுத்தனர். இதில் முக்கியமானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நியமிப்பதாகும். அது மாத்திரமன்றி கட்சியின் யாப்பை மறுசீரமைப்பதற்காக குழுவொன்றை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானமும் எடுக்கப்பட்டது.

இருந்தபோதும், அரசியல் குழு கூடியமை கட்சியின் யாப்புக்கு முரணானது என முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தலைவர் மற்றும் செயலாளர் இன்றி அரசியல் குழுவைக் கூட்டமுடியாது என அவர் சுட்டிக்காட்டியிருந்தார். அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலிருந்து முக்கியமான கோப்புக்கள் காணாமல் போயிருப்பதாக பதில் செயலாளர் மத்திரிபால பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து தலைமையகம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி, புதிய நியமனங்கள் ஏற்புடையதல்ல என்றும் சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இவ்வாறு சுதந்திரக் கட்சியின் முரண்பாடு அதிகரித்திருக்கும் நிலையில், பிரதான பழைமை வாய்ந்த கட்சியாக மீட்சி பெறுவதற்கான வாய்ப்பை இக்கட்சி சரியாகப் பயன்படுத்தவில்லையென்ற விமர்சனம் காணப்படுகின்றது.

அதாவது, பொதுஜன பெரமுன தனது பிரபல்யத்தை இழந்திருக்கும் நிலையில், அதற்கான வெற்றிடத்தை ஈடுசெய்ய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிடுக்குடன் செயலாற்றவில்லையென அதன் தலைமைத்துவம் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான பின்னணியிலேயே பிரதான அரசியல் கட்சிக்கான வெற்றிடத்தை ஈடுசெய்ய தேசிய மக்கள் சக்தி தனது பிரபல்யத்தைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது என்பதும் அரசியல் அவதானிகளின் கண்ணோட்டமாக உள்ளது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division