Home » ‘சொரி’ எனும் ஒற்றை வார்த்தை கறைகளைக் கழுவுமா?

‘சொரி’ எனும் ஒற்றை வார்த்தை கறைகளைக் கழுவுமா?

by Damith Pushpika
May 5, 2024 6:00 am 0 comment

1971ஆம் ஆண்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறும், புரட்சி செய்யுமாறும் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுரை வழங்கியது ரோஹண விஜேவீரவாகும். அப்போது அவர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவராக இருந்தார். அவர் இளைஞர்களை கிளர்ச்சிக்காகத் தூண்டியதோடு, கிளர்ச்சிக்கு தான் பொறுப்பல்ல என்றும் கிளர்ச்சி தோல்வியடைந்த பின்னர் கூறினார்.

ஏப்ரல் கிளர்ச்சிக்கு முன்னர் 1971 பெப்ரவரி 21ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் மக்கள் விடுதலை முன்னணியின், இறுதிப் பிரசாரக் கூட்டம் இடம்பெற்றதோடு, அதில் உரையாற்றிய ரோஹண விஜேவீர, “பொலிஸ் அடக்குமுறை என்று ஆரம்பிக்கின்றதோ, இலங்கைப் புரட்சியும் அன்று ஆரம்பமாகும்” என வலியுறுத்தியுள்ளார். பேச்சின் ஒரு கட்டத்தில், “கஜபா கப்பலும் அவ்ரோரா ஆக மாறட்டும்” என அவர் கூறியதோடு, அதன் மூலம் ஆயுதப்படைகளின் ஆதரவு தனக்கு இருப்பதை மறைமுகமாக அவர் தனது உரையின் மூலம் உணர்த்தினார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கஜபா என்பது இலங்கை கடற்படையின் யுத்தக் கப்பல் என்பதோடு, 1917 ஒக்டோபர் புரட்சியின் போது சார் மன்னரின் ஆட்சிக்கு எதிரான முதலாவது துப்பாக்கி வேட்டு மேற்கொள்ளப்பட்டது “அவ்ரோரா” கப்பலிலிருந்தேயாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் ஆயுதப் போராட்டத்திற்கு சம்மதம் தெரிவித்த விஜேவீர, கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தான் அதற்குப் பொறுப்பல்ல என்றார்.

இந்தக் கதை இன்றும் செல்லுபடியாகும்.

அன்று ரோஹன விஜேவீர 71ஆம் ஆண்டு கிளர்ச்சிலிருந்து தனது பொறுப்பை விலக்கிக் கொண்டதோடு, லொகு அத்துலவிடம் பழியைப் போட்டதைப் போன்றே இன்று உமா ஓயாவிலிருந்து அநுர திசாநாயக்க கையைக் கழுவிக் கொண்டு அதன் பொறுப்பை சமந்த வித்யாரத்னவிடம் ஒப்படைத்துள்ளார். உமா ஓயா தொடர்பில் முதலில் அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பித்தது அநுரகுமாரவாகும். 2005 ஜனவரி 26ஆம் திகதி, அப்போதைய விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராக இருந்த அநுரகுமார திசாநாயக்க அந்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்தார். இந்த அமைச்சு முற்றுமுழுதாக ஜே.வி.பியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்ததோடு, அதன் பிரதி அமைச்சராக இருந்தது ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்காவாகும்.

2005 ஜனவரி 04ஆம் திகதி 05/0036/039/002ம் இலக்க ஜே.வி.பி அமைச்சரின் இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையின் வறண்ட தென்கிழக்கு பிராந்தியத்தை (குறிப்பாக ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்கள்) அபிவிருத்தி செய்வதற்கு உமா ஓயாவிலிருந்து நீரை எடுப்பதைத் தவிர வேறு மாற்று வழியில்லை”

“ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களை பொருளாதார ரீதியில் அபிவிருத்தி செய்யும் மூலோபாயங்கள் அண்மைய காலங்களில் மாறியுள்ளது. உமா ஓயாவை, கிரிந்தி ஓயாவை நோக்கித் திருப்பும் திட்டம் தொடர்பில், தற்போது கவனம் செலுத்தப்படுவது அண்மைக்காலமாக பிரபல்யப்படுத்தப்பட்டுள்ள ருஹூணுபுர அபிவிருத்தி தொடர்பான எண்ணக்கருவின் அடிப்படையிலாகும். ருஹூணுபுர அபிவிருத்தி என்பது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இந்தப் பிராந்தியத்தில் நவீன துறைமுகமாக மாற்றுவது, மொனராகலை மாவட்டத்தில் சர்வதேச விமான நிலையம் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு திட்டமாகும். இந்தியப் பெருங்கடலில் பயணிக்கும் பெருமளவிலான கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என்றும், அதனை அண்மித்த சுற்றுலா உள்ளிட்ட தொழிற்துறை நடவடிக்கைகள் பெருமளவில் இடம்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புதிய அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக 2030ஆம் ஆண்டுக்குள் நீர்த் தேவை 100 மெட்ரிக் கனமீட்டராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் நிலையான நீர் விநியோகம் இல்லாததால், உமா ஓயாவில் இருந்து தண்ணீரைப் பெறுவதே இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான ஒரே வழி என்று கருதப்படுகிறது. எனவே இந்தத் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்”

இது அனுரகுமாரவின் அமைச்சரவைப் பத்திரமாகும். எனினும் அனுரகுமார குழுவினர், அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் உமா ஓயா திட்டத்திற்கு ஜே.வி.பி எதிரானது. எதிரானது மாத்திரமின்றி, அதற்கு எதிராகப் போராட்டம் நடத்தும் பொறுப்பும் சமந்த வித்யாரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிரகாரமே சமந்த வித்யாரத்ன உமா ஓயாவுக்கு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை கையில் எடுத்தார். உண்ணாவிரதம், போராட்டம், ஹர்த்தால் போன்றவற்றை முன்னெடுத்து அவர் முழு ஊவாவையும் உமா ஓயா திட்டத்திற்கு எதிராகத் தூண்டினார்.

சமந்த வித்யாரத்ன சில வருடங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் பிரபலமான பாத்திரமாக முன்னேறி வந்ததோடு, அவரது உயர்ச்சி அனுர போன்றோருக்குச் சவாலாக இருந்தது. குறிப்பாக அவர் கிராமப்புற மக்கள் மற்றும் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் வேகமாகப் பிரபலமடைந்தார். அவரது தொனி ரோஹண விஜேவீரவின் தொனிக்கு நெருக்கமாக இருந்தது. அதனை பொருட்படுத்தாதவர்கள் சமந்தவை உமா ஓயாவை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கி வைத்தனர்.

லால் காந்தவுக்கு நடந்ததும் இதுதான்.

வீடுகள் மூழ்கும் முறைகள், வீடுகள் இடிக்கப்படும் முறைகள், பதுளையே மூழ்கும் முறை போன்றவற்றைக்கூறி சமந்த அச்சத்தை அன்றே விதைத்தார்.

பிதுருதலாகலவிலிருந்து ஆரம்பமாகும் உமாஓயா, நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்காகவும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பயிர்ச்செய்கை நிலத்தை வளமாக்குவதற்காகவும் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமாகும். இரண்டு கட்டங்களில் 120 மெகா வோட் மின்சாரத்தை தேசிய மின்சாரக் கட்டமைப்புடன் இணைப்பதும், ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களுக்குத் தேவையான நீரை விநியோகிப்பதும், பண்டாரவளை உள்ளிட்ட நகர மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்வதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

உமா ஓயா பல்நோக்கு திட்டத்தின் தனிச்சிறப்பு என்னவெனில், நிலத்தடி சுரங்கங்கள் வழியாக நீரை பாய்ச்சுவது மட்டுமின்றி, மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையமும் கூட சுரங்கம் எனப்படும் நிலத்தடியில் உருவாக்கப்பட்டிருப்பதாகும்.

காலி முகத்திடலில் ஓரத்தில் “போர்ட் சிட்டி”க்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், நெடுஞ்சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், எதிர்க்காத திட்டங்களில்லை.

பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மற்றும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன ஆகியோர் விஜேவீரவுக்கு மார்க்சியம் பற்றிய ஆழமான அறிவு இல்லை என்று கூறுகிறார்கள். அதேபோன்று பகுத்தறிவுடனான கேள்விகளைக் கேட்பவர்கள் விஜேவீரவினால் அமைப்பிலிருந்து நீக்கப்பட்டதாக விராஜ் பெர்னாண்டோ மற்றும் அனகாரிக தர்மசேகர ஆகியோர் சுட்டிக்காட்டுகின்றனர். அவர் பகுத்தறிவு குறைந்த ஆவேசமானவர்களை இலக்கு வைத்திருந்ததாக விக்டர் ஐவன் குறிப்பிடுகின்றார். இந்த பகுத்தறிவு குறைவான ஆவேசம் மிக்கவர்கள் சில புத்தகங்களை வாசிப்பதும் தடை செய்யப்பட்டிருந்ததோடு, ஒரு புறத்தில் அவர் இந்த தரப்பினரிடையே அறியாமை தொடர்ந்தும் இருக்க வேண்டும் என விரும்பினார். அது அன்றிலிருந்தே ஜே.வி.பியின் தன்மையாகும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரங்கள் வேண்டாம் எனக் கூறிக் கொண்டு ஜே.வி.பி தமக்குக் கிடைத்த வாகன அனுமதிப்பத்திரங்களை இரகசியமாக விற்றுள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியம் வேண்டாம் எனக் கூறும் ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தைப் பெறுகின்றார்கள். சமந்த வித்யாரத்ன, வசந்த சமரசிங்க போன்றோர் மாத்தரமின்றி, மக்கள் மனதை வென்ற லால் காந்த போன்றோரும் ஒய்வூதியத்தைப் பெறுகின்றனர்.

முறைகேடுகள் பற்றி கூச்சலிடும் ஜே.வி.பி லால் காந்த அவருக்குச் சொந்தமில்லாத பாராளுமன்ற உறுப்பினருக்கான வீட்டில் வசித்து வருகின்றார்.

அவர்களின் ஒழுக்கமும் அப்படித்தான்.

எண்பதாம் ஆண்டின் பிற்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் உள்ளிட்ட மோசமான செயற்பாடுகள் தொடர்பில் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கா முதலில் கூறியது 2014ஆம் ஆண்டிலாகும்.

அண்மையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணத்தில் ஒரு தரப்பினரைச் சந்தித்த சந்தர்ப்பத்தில், ​​இந்தக்கொலைகள் தொடர்பில் மீண்டும் கேட்டபோது அவர், ​​“சொரி” (மன்னிக்கவும்) என்றார். கோழைத்தனமாக ஆயிரக்கணக்கான உயிர்களைக் அநியாயமாகக் கொன்ற கொடுரமான குற்றத்திலிருந்து அவரால் “சொரி” எனக் கூறித் தப்பிக்க முடியும். அது அவர்களுக்கு மிகவும் எளிமையானது. இலகுவானது. இன்று உமா ஓயா திட்டத்தினால் நாட்டு மக்கள் நன்மையடைந்துள்ளனர்.

அன்று சமந்த வித்யாரத்னவை இதற்கு எதிராகத் தூண்டிவிட்ட அநுர அல்லது ஜே.வி.பியிடமிருந்து இன்று எந்த பதிலுமில்லை.

அனுராத சேனாரத்ன தமிழில் - எம். எஸ். முஸப்பிர்

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division