Home » தமிழரசுக் கட்சியின் ஜனநாயகத் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே பிரதான விடயம்!
எனக்கு ஏற்பட்ட தோல்வி முக்கியமற்றது!

தமிழரசுக் கட்சியின் ஜனநாயகத் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே பிரதான விடயம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கிய பேட்டி

by Damith Pushpika
March 24, 2024 6:00 am 0 comment

தலைவர் பதவிக்கான போட்டி உட்கட்சி ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதாகவே அமையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஒரு சில சிரேஷ்ட உறுப்பினர்கள் மாத்திரம் தலைவர் பதவி குறித்த முடிவுகளை எடுப்பதைவிட, அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்தவர்களும் இதில் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்ற விடயத்தில் வெற்றிகாணப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எமது நிறுவனத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கே: இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டியில் நீங்கள் தோல்வி பெற்றிருந்தீர்கள். இதனை உங்களுக்கான ஒரு அரசியல் ரீதியான பின்னடைவாகப் பார்க்கின்றீர்களா? இதனை எவ்வாறு வெற்றிகொள்ள எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: 75 வருடம் பழைமை வாய்ந்த எமது கட்சிக்கு வரலாற்றில் முதல் தடவையாகத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு சில மூத்த தலைவர்கள் மாத்திரமே பொதுவாக முடிவுகளை எடுத்துவந்த நிலையில், எங்கள் எல்லா மாவட்டங்களிலிருந்தும் கட்சிப் பிரதிநிதிகள் கருத்துச் சொல்ல வேண்டும் என்று நினைத்த காரணத்தினாலேயே இவ்வாறானதொரு போட்டிக்கு நான் ஆதரவு தெரிவித்தேன். இதற்கமைய தேர்தலை நடத்தி நாம் அதில் வெற்றியும் கண்டோம். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தேர்தலில் வெற்றி பெறுவதில் எனது தோல்வி உண்மையில் முக்கியமற்றது. உட்கட்சி ஜனநாயகம் தொடர்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். கட்சிக்குள் எனது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. கட்சி விவகாரங்களில் நான் முக்கிய பங்கு வகித்துள்ளேன், அது தொடரும் என நினைக்கிறேன். எனது அரசியல் ஈடுபாட்டின் அடிப்படையில் இதனை ஒரு பின்னடைவாக நான் கருதவில்லை.

கே: இந்த வருடம் தேர்தல் வருடம். உங்களுடைய கட்சியின் திட்டங்கள் எவை? பிரதான வேட்பாளர்களில் ஒருவருடன் இணைந்து செயற்படுவீர்களா அல்லது உங்கள் தரப்பிலிருந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்துவீர்களா?

பதில்: அவ்வாறு நிறுத்தப்படும் வேட்பாளர் ஒருவரால் வெற்றிபெற முடியாது என்ற காரணத்திற்காக வேட்பாளர் ஒருவரை நாம் ஒருபோதும் தனியாக நிறுத்தவில்லை. எனவே வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது வீணான விடயம். இருந்தபோதும், தீர்மானம் மிக்க பாத்திரத்தை எம்மால் வகிக்க முடியும். குறிப்பாக இம்முறை நடைபெறக்கூடிய தேர்தலில் வேட்பாளர்களில் யாரேனும் ஒருவர் 50 சதவீத வாக்குகளைப் பெற முடியுமா என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இல்லாத நிலையில், அதைத்தான் கட்சி எதிர்பார்க்கும். எங்கள் கட்சியின் ஆதரவே இதில் முடிவெடுக்கும். எனவே, நாங்கள் எங்கள் எல்லா விருப்பங்களையும் திறந்து வைத்திருக்கிறோம். போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் அவர்களது கட்சிகளுடனும் பேசி வருகிறோம். இவற்றை அடிப்படையாகக் கொண்டு சரியான நேரத்தில் முடிவெடுப்போம்.

கே: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் ஆதரவளிக்கிறீர்களா? இதனைச் செய்வதற்கு தற்பொழுது சரியான நேரமா?

பதில்: நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் எப்போதும் வலியுறுத்தி வருகிறோம். அதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. தனிப்பட்ட முறையில், நல்ல காரியங்களைச் செய்வதற்கு நேர காலம் தேவை என நான் நினைக்கவில்லை. எந்த நேரமும் நல்லதுதான். எனவே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு இது பொருத்தமற்ற காலம் அல்லது நேரம் என்ற வாதத்தை முன்வைக்க விரும்பவில்லை. எப்பொழுது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியுமோ, அது நல்லதொரு தருணமாக அமையும்.

கே: ஜனாதிபதித் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா?

பதில்: அரசியலமைப்புக்கு அமைய ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. அது நடத்தப்பட வேண்டும், ஆனால் கடந்த ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படாது இடைநிறுத்தப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமா என்பதை உறுதியாகக் கூறமுடியாதுள்ளது. ஆனால் அது நடைபெற்றாலும், இல்லாவிட்டாலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிவடையும். எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 19 மற்றும் ஒக்டோபர் 19 இற்கு இடையில் தேர்தல் நடத்தப்படாவிட்டால் தற்போதைய ஜனாதிபதி அப்பதவியில் இருக்க முடியாது.

கே: பொலிஸ் அதிகாரங்களைத் தவிர அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் அண்மையில் கூறியது. இதில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா அல்லது தமிழர்களின் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வை எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகின்றது. அதைச் செய்ய தாங்கள் தயாராக இல்லை என்று எந்த அரசாங்கமும் கூறினால், அவர்கள் அரசியலமைப்பின் விதிகளை மீறுகிறார்கள் என்றே அர்த்தமாகும். ஃபெடரல் மாதிரியின் அடிப்படையில் ஒரு தீர்வை நாங்கள் விரும்புகிறோம். கடந்த பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு பேரவை அமைக்கப்பட்ட போது, நாங்கள் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினோம். முடிவில் நாங்கள் முழுமையாக திருப்தி அடையவில்லை என்றாலும், அந்த செயல்முறையின் முடிவில் செய்யப்பட்ட வரைவோடு முன்னோக்கிச் செல்ல நாங்கள் தயாராக இருந்தோம்.

அது இலங்கையை ஒரு கூட்டாட்சி நாடு என்று வெளிப்படையாக விபரிக்கவில்லை. ஆனால் அதில் நாம் ஓரளவுக்குத் திருப்தியடையக் கூடிய அம்சங்கள் இருந்தன. முக்கியமாக பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக திரும்பப் பெறக் கூடாது மற்றும் மாகாணங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட விஷயங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

கே: இனநல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்க அரசாங்கம் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகத்தை நியமித்துள்ளது. இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: குதிரைக்கு முன்னால் காணப்படும் வண்டி என நாம் இதனைக் கருதுகின்றோம். அரசாங்கம் எதிர்பார்க்கும் விதத்தில் நல்லிணக்கம் சாத்தியமில்லை. பல்வேறு காரணங்களுக்காகப் பிரிந்திருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சமூகங்கள் தங்களைத் தாங்களே தூரப்படுத்திக் கொண்ட பிரச்சினைகளைக் கையாளும் போது நல்லிணக்கம் ஏற்படுகிறது. அப்போதுதான் அந்த நல்லிணக்கம் அர்த்தமுள்ளதாக மாறும். ஆனால் இங்கே அந்தப் பிரச்சினைகள் அனைத்தும் இன்னும் அப்படியே இருக்கின்றன. குறிப்பாக பொறுப்புக்கூறல் தொடர்பான பிரச்சினைகள்.

மோதலுக்கான அடிப்படை அல்லது மூலகாரணங்களை நிவர்த்தி செய்வது தொடர்பாக எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

அதுதான் அரசியல் அதிகாரப் பகிர்வு. அது இன்னும் செய்யப்பட உள்ளது. அந்த விடயங்கள் அனைத்தும் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. எந்த அலுவலகத்தாலும் அந்தச் செயல்பாட்டைச் செய்ய முடியாது.

வெளிப்படையாகக் கூறுவதாயின், நாட்டில் உள்ள அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு சரியான அரசியல் தீர்வு இருக்க வேண்டும். அதுவே முதன்மையானது. மோதலின் போது, குறிப்பாக ஆயுத மோதலின் போது, கடுமையான மீறல்கள் இருந்தன. அவை கவனிக்கப்பட வேண்டும். அதில்தான் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அவை தீர்க்கப்பட்டால் நல்லிணக்கம் தானாகவே ஏற்படும்.

கே: வடக்கில் பெருமளவிலான காணிகள் கண்ணிவெடி அகற்றப்பட்டு பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த செயல்முறையின் முன்னேற்றம் மற்றும் வடக்கில் இராணுவக் குறைப்புப் பற்றி நீங்கள் திருப்தியடைகிறீர்களா?

பதில்: இராணுவக் குறைப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அங்கு இராணுவத்தினர் இன்னும் அதிக அளவில் உள்ளனர். காணிகளைத் திரும்பப் பெறுவது குறித்துக் கூறுவதாயின், தனியாருக்குச் சொந்தமான காணிகளில் கணிசமான பகுதி அசல் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றுக்கான ஆவணங்கள் இன்னும் அரசாங்கத்திடம் உள்ளன. இந்தக் காணிகள் அனைத்தும் கையகப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், சரி செய்யப்பட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

பழைய உரிமையாளர்கள் அங்கு சென்று தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாலும், கையகப்படுத்துதல் திரும்பப் பெறப்படவில்லை. அந்த கையகப்படுத்துதல்களை திரும்பப் பெறுவது இன்னும் நடக்கவில்லை. எனவே காணிகளின் உரிமையாளர்களுக்கு இன்னும் அதற்கான உரிமை இல்லை. எனவே அவர்கள் அதை தங்கள் பிள்ளைகளுக்கு அன்பளிப்பாக வழங்கவோ அவற்றை விற்பனை செய்யவோ முடியாத நிலை காணப்படுகிறது.

இரண்டாவதாக, சில தனியார் காணிகளில், பெரிய அளவிலான காணிகள் இன்னமும் திருப்பித் தரப்படாமல் உள்ளன. அவற்றை ஏன் இன்னும் வைத்திருக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை. பலாலி விமான நிலையத்தின் கிழக்குப் பகுதியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வரும் பாரிய காணி ஒன்று உள்ளது. அது முக்கியமாக விவசாய நிலம் ஆகும். அவற்றின் உரிமையாளர்கள் தற்காலிக தங்குமிடங்களில் உள்ளனர். இராணுவமும் விமானப்படையும் அந்த நிலத்தில் விவசாயம் செய்து, அதிலிருந்து விளைச்சலைப் பெற்று, அந்த நிலத்தின் உரிமையாளர்களுக்கே அந்த விளைபொருளை விற்பனை செய்கின்றனர். எனவே அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். அந்தக் காணிகள் திரும்ப வழங்கப்பட வேண்டும்.

மூன்றாவதாக, இவை அனைத்தும் தனியார் காணிகள், நூலகங்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள் ஆகும். இராணுவம் ஆக்கிரமித்துள்ள பல்வேறு இடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கான இடங்களாகும். அரச காணிகளில் பெரும் பகுதியானது பிரதேச சபை போன்ற பொது நிறுவனங்களுக்கோ அல்லது அந்த சொத்துக்களுக்கு சொந்தமான வேறு நிறுவனத்திற்கோ திருப்பிக் கொடுக்கப்படவில்லை. தனியாருக்குச் சொந்தமான காணிகளை ஒப்படைத்தால் மட்டும் போதாது. பொதுப் பாவனைக்காக இருந்த காணிகளையும் பொதுமக்களிடம் மீள வழங்க வேண்டும்.

அந்த இரண்டு அம்சங்களும் சரியாக வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டால், அது எந்த ஃபெடரல் ஏற்பாட்டையும் போலவே சிறந்தது.

எனவே அதுவே எங்களின் நிலைப்பாடு. இந்த காரணத்திற்காகவே எங்கள் கட்சி நீண்ட காலமாக பெடரல் கட்சி என்று அழைக்கப்பட்டது. அதுதான் எங்களின் அடிப்படைக் கொள்கை.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division