Home » போருக்கான அறைகூவலா சமாதானத்துக்கான சமிக்ைஞயா?
காஸாவில் அமையவுள்ள துறைமுகம்

போருக்கான அறைகூவலா சமாதானத்துக்கான சமிக்ைஞயா?

by Damith Pushpika
March 10, 2024 6:00 am 0 comment

ஹமாஸ், -இஸ்ரேல் போர் எதிர்பார்க்கப்பட்டது போல் நீட்சியானதாக மாறிவருகிறது. இஸ்ரேல் எதிர்பார்த்தது போல் போரை இலகுவில் நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதுடன் இஸ்ரேலின் இருப்புக்கே அதிக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இது இஸ்ரேலின் நட்பு சக்திகளான மேற்கு உலகத்தையும் அதன் வர்த்தக மற்றும் ஆயுத விநியோகத்தையும் அதற்கான கடல்மார்க்கத்தையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. செங்கடல் மீதான ஆதிக்கத்தை ஹவுத்தி கிளர்ச்சிக் குழுவின் பெயரால் ஈரான் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது. ஆனாலும் இப்போர் வரலாற்றில் அதிமுக்கியத்துவத்தை பெறும் போராகவே விளங்குகிறது. இப்போர் உலக ஒழுங்கை மாற்றும் திறனைக் கொண்டுள்ளது என்பது எதிர்பார்க்கப்பட்டதொன்றாகும். இக்கட்டுரையும் அமெரிக்கா, பிரித்தானியா, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும், அமைப்புக்களும் காஸாவில் அமைக்கவுள்ள புதிய துறைமுகத்தின் அரசியல் முக்கியத்துவத்தை விளங்கிக் கொள்ள முயலுவதாகவே உள்ளது.

கடல்வழியாக காஸாவுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் நோக்குடன் காஸாவில் துறைமுகம் ஒன்றை அமெரிக்க இராணுவம் நிர்மாணிக்குமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் காங்கிரஸில் உரையாற்றும் போது 08.03.2024 அன்று தெரிவித்துள்ளார். தற்காலிக துறைமுகம் பலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளின் அளவை அதிகரிக்குமெனவும், எனினும் காஸாவில் அமெரிக்கப் படைகள் இணையாது எனவும் குறிப்பிட்டிருந்தார். காஸாவில் 25 சதவீதமான மக்கள் உணவின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் எச்சரித்துள்ள நிலையில் சிறுவர்கள் குழந்தைகள் போதிய உணவின்றி இறப்பதாகவும் ஐ.நா. தெரிவித்துள்ளது. ஏற்கனவே கட்டார், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகள் மனிதாபிமான உதவிகளை விமானம் மூலமாக வழங்குவதற்கு எடுத்த முயற்சி அதிகளவில் சாதகமானதாக அமையாமையும் இத்தகைய முயற்சிக்கு காரணம் எனத் தெரியவருகிறது.

காஸாவில் ஆழமான கடற்பகுதி இல்லாமையும் அதனால் பலமான துறைமுகமொன்று அமைக்க முடியாமை பற்றியும் மேற்கு நாடுகள் கவனத்தில் கொள்கின்றன. இத்தகைய துறைமுகம் அமைக்கப்பட்டதன் பின்னர் சைபிரஸ் வழித்தடத்தில் கப்பல்கள் காஸாவை நோக்கி பயணிக்குமெனவும் அவற்றை இஸ்ரேலிய இராணுவம் துருக்கியின் தலைநகரில் வைத்து பரிசோதனை செய்யும் எனவும் ஆரம்பகட்ட நடவடிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நோக்கும் போது அமெரிக்கா காஸாவில் துறைமுகம் அமைப்பதற்கான அனைத்து பூர்வாங்க நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது என்பது தெளிவாகிறது. இங்கு பொதுவான ஒரு கேள்வி எல்லாத்தளத்திலும் எழுகிறது. அதாவது அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுத தளபாடங்களை வழங்கி போரை வழிநடத்தும் போது ஏன் பலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்க வேண்டும் என முனைகின்றன. மேற்குலகத்தின் ஆயுதங்களும் போர்த் திட்டமிடல்களுமே 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட பலஸ்தீன மக்களை கொன்றொழித்தது. அதே நாடுகள் மனிதாபிமான உதவி என ஏன் முயலுகின்றன. இதற்கான புரிதலை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, மனிதாபிமான உதவிக்கான திட்டத்துடன் அமெரிக்கா காஸாவில் நிரந்தரமான துறைமுகம் ஒன்றினை உருக்குவதன் மூலம் நிரந்தரமான கடற்படையைக் கட்டமைத்துக் கொள்ள திட்டமிடுவதாகவே தெரிகிறது. அது மேற்காசிய அரசியலில் அதீதமான முக்கியத்துவத்தை தரக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக இஸ்ரேலின் இருப்புக்கு பாதுகாப்பளிப்பதுடன் இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் இருப்பும் நிரந்தரமானதாக அமையக் கூடியதாக உள்ளதாகவே தெரிகிறது. ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியாக எழுச்சிபெற்றுவரும் ஈரானுக்கு சவாலாக அமெரிக்காவின் இருப்பு மட்டுமன்றி ஹவுத்தி, ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புக்களின் எதிர்காலத்தை கையாளவும், கண்காணிக்கவும் காஸாவில் அமையவுள்ள துறைமுகம் அமெரிக்காவுக்கு உதவக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. தற்போது செங்கடல் மீதான நெருக்கடி, சுயஸ்கால்வாயின் போக்குவரத்தை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. அதனால் நிரந்தரமான கண்காணிப்பும் தாக்குதல் முறியடிப்பு உத்தியும் அவசியமானதாக உள்ளது. மனிதாபிமானத்தின் பெயரால் அமைக்கப்படவுள்ள கடற்படை துறைமுகமே காஸா துறைமுகமாகும்.

இரண்டாவது, தற்போது இஸ்ரேலுக்கு ஆயுததளபாடங்கள் போதியளவு கிடைக்காமையால் சரிவர போரை நிகழ்த்த முடியாதுள்ளதுடன் அதிக தோல்விகளுக்கு முகங்கொடுத்துவருகிறது. அதிலும் காஸாவுக்குள் இஸ்ரேல் தரைவழியாக நுழைந்த பிற்பாடு அதிக இராணுவ இழப்புக்களை இஸ்ரேலியப் படைகள் எதிர்கொண்டு வருகின்றன. மேற்கு நாடுகள் கடல்வழியாகவும் ஆயுத தளபாடங்களை இஸ்ரேலுக்கு சேர்ப்பிப்பதில் அதிக நெருக்கடி நிலவுகிறது. அதனால் மனிதாபிமான உதவியின் பெயரால் இஸ்ரேலிய இராணுவத்தின் போருக்கான ஆயுத தளபாடங்களை கைமாற்றுவதற்கு காஸா துறைமுகம் தேவையானதாக உள்ளது. இஸ்ரேலியப் போருக்கு ஆயுதங்களும் திட்டங்களும் வழங்கி பலஸ்தீனர்களை அழிக்க முன்னின்று செயல்படும் அமெரிக்கா மனிதாபிமான உதவியில் எத்தகைய புனிதத்தையும் பின்பற்றாது என்பது தெளிவான விடயம்.

மூன்றாவது, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க இராணுவத்தை நேரடியாக ஈடுபடுத்தும் நோக்கமும் அமெரிக்காவுக்கு உண்டு. தற்போது விமானப்படையையும் கடற்படையையும் மறைமுகமாக பயன்படுத்துகிறது. எதிர்காலத்தில் தரைப்படையை காஸா பகுதியில் தரையிறக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. காரணம் துறைமுகத்தை பாதுகாப்பது என்ற பெயரில் தரைப் படையையும் பயன்படுத்த முடியும். அதனை அப்போது எந்தத் தரப்பும் ஆட்சேபிக்க முடியாத நிலை ஏற்படும். அது இஸ்ரேலிய இராணுவத்தின் உளத்திறனை அதிகரிப்பதுடன் போரில் ஏற்படும் நெருக்கடிகளை சரி செய்து கொள்ள முடியுமென அமெரிக்கா கணிப்பிட்டுள்ளதாகவே தெரிகிறது. இதில் அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்தது போல், காஸா தரைவழித் தாக்குதல்களுக்கு பல வருடங்களாகலாம். அவ்வாறே அப்போரில் இஸ்ரேல் தோற்கடிக்கப்படலாம் என்பது போன்ற நிலைமை தற்போதுள்ளது. அதனால் இஸ்ரேலை தோற்கவிடாது பாதுகாப்பதில் அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கு பங்குள்ளது என்ற வகையிலேயே காஸா துறைமுகம் சார்ந்த அரசியலை புரிந்து கொள்வது பொருத்தமானது. இஸ்ரேலின் தோல்வி ஒட்டுமொத்த மேற்குலகத்தின் மேற்காசியா பொறுத்த தோல்வியாகிவிடும் என்பதுவும் கவனத்தில் கொள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் போரில் இஸ்ரேல் முழுமையான தோல்வியை எதிர்கொள்ளக் கூடாது என்ற தூரநோக்குடனேயே, அமெரிக்காவினதும் மேற்குலகத்தினதும் கொள்கை வகுப்புக்கள் வடிவமைக்கப்படுகின்றன.

நான்காவது, மேற்குலகத்தினது மனிதாபிமான முகம் பலஸ்தீன மண்ணில் மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திலும் சிதைந்துவருகிறது. அதனைத்தூக்கி நிறுத்த வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுவிட்டது. ஏனெனில் கொல்லப்பட்டவர்களில் பெண்களும் சிறுவர்களுமே அதிகமாக உள்ளனர். அவர்களுக்காகவும் மனித உரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்களையும் பிரகடனங்களையும் மேற்கு வகுத்துவைத்துள்ள போதும் அதனை பலஸ்தீனத்தில் அந்த அரசுகளே மீறிவருகின்றன. மேற்குலகம் மீதான விமர்சனம் அத்தகைய கோணத்திலேயே நிகழ்கிறது. இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரது மனித உரிமை பற்றிய விவாதங்கள் போலித்தனமானவை என்ற பகிரங்க விமர்சனங்கள் உண்டு. ரஷ்யாவை இலக்குவைத்துச் செயற்படும் குற்றவியல் நீதிமன்றம் காஸாவில் இஸ்ரேல் நிகழ்த்தும் படுகொலைகளை வீட்டோவைப் பாவித்து அமெரிக்கா தடுக்கிறது என்ற விமர்சனம் அவற்றின் மீதான போலித்தன்மைகளை உலகளாவிய தளத்தில் வெளிப்படுத்திவருகிறது. இவற்றை எல்லாம் சரிசெய்வதற்கே அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா அண்மையில் மனிதாபிமான நோக்கில் உணவுப் பொதிகளை காஸா பரப்பில் வீசின. அதற்கு கூறப்பட்ட காரணம் இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு தரைவழியாக உதவிகளை வழங்க மறுப்பதனால் விமானம் மூலம் உதவுவதாக கூறியது. இது வேடிக்கையான உரையாடல் அல்லவா? அமெரிக்காவினதும் ஏனைய மேற்கு நாடுகளதும் ஆயுத தளபாடங்களையும் இராணுவத் திட்டமிடலையும் ஏற்கும் இஸ்ரேல், உதவிகளை வழங்க அந்த நாடுகள் வழங்க முன்வந்தால் நிராகரித்துவிடுமா? இது கூட்டுத்திட்டமிடல் போர். இதில் மேற்கு -இஸ்ரேல் கூட்டே, போரை நிகழ்த்துகிறது. அதில் ஓரங்கமே மனிதாபிமானம். இராணுவத் தோல்விகளை மறைக்கவும் எதிர்கால போரை திட்டமிடவும் பயன்படுத்தப்படும் உரையாடல் மனிதாபிமானம். அதற்கானதே சர்வதேச விதிகளும் நியதிகளும்.

ஐந்தாவது, மனிதாபிமானத்தின் இன்னோர் தேவைப்பாடாக ஹமாஸ் அமைப்பினரால் கைது செய்யப்பட்ட இஸ்ரேலிய, அமெரிக்க பணயக்கைதிகளை தேடுவதற்கான நகர்வாகவும் இது நோக்கப்பட வேண்டும். கடந்த போர்நிறுத்த காலத்தில் ஹமாஸ் அமைப்பினால் விடுவிக்கப்பட்டவர்களில் அமெரிக்கர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது கவனத்திற்குரியது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் தற்போதுவரை தோல்வியையே அடைந்துள்ளன. அதனால் இத்தகைய நடவடிக்கைகளால் கைதிகளை மீட்பதற்கு வாய்ப்புக் கிடைக்கும் அல்லது இத்தகைய முயற்சிகளால் ஹமாஸ் அமைப்பிடமிருந்து பேரம் பேசலின் மூலம் கைதிகளை மீட்க முடியுமென அமெரிக்க-, இஸ்ரேல் கூட்டுத் திட்டமிடுவதாகவே தெரிகிறது.

ஆறாவது, ஜோ பைடன் அடுத்த ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில் இத்தகைய அறிவிப்புகள் காஸா மீதான போரை நிராகரிப்பவர்களுக்கு தேவையாக உள்ளது. டிசம்பா 2024 நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் மட்டுமல்ல அமெரிக்க உயர்வர்க்கமே டொனால்ட ரம்ப்ட் என்ற எதிரியை எதிர்கொண்டுள்ளனர். அதனால் ஏற்பட்டுள்ள சவாலை முறியடிக்க இத்தகைய மனிதாபிமானம் பற்றிய உரையாடல் தேவைப்படுகிறது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division