Home » மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம்?

மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம்?

by Damith Pushpika
March 3, 2024 6:00 am 0 comment

நாட்டு நலன் கருதி வருகின்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டியது அவசியம் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் பிரகாஷகாரத். இவரது கருத்தே தற்போது இந்தியாவின் குரலாகவும் இருக்கிறது.

கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இந்தியக் குடியரசின் தன்மையை மாற்றுவதற்கான முயற்சிகள் பகிரங்கமாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. மத சார்பற்ற ஜனநாயகக் குடியரசுக்கு நேர் எதிராக இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்தும் இலக்குடன் மக்களவைத் தேர்தலை பா.ஜ,க, சந்திக்க இருக்கிறது. நாட்டின் எதிர்காலம் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசின் எதிர்காலம், இந்திய அரசியல் சாசனத்தின் எதிர்காலம், ஆகியவற்றுக்கான சவாலாக கருதி பா.ஜ.க.வை வீழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும் இந்திய அரசு சாதகமாக இருக்கக் கூடாது என்ற அரசியல் சாசனத்தையும் மீறி கடந்த சில ஆண்டுகளாக மத்திய பா.ஜ.க. அரசு செயல்படுகிறது. இது இந்தியாவுக்கு ஆபத்தானது என்றும் பிரகாஷ் காரத் தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க செய்த நன்மை என்று சொல்லிக் கொள்ள இங்கே எதுவும் இல்லை அரசு நடத்திவந்த முக்கியமான பல நிறுவனங்களை தனியாருக்கு விற்றது. கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டு வந்து பொருளாதாரத்தை சீர்குலைத்தது. வரி என்ற பெயரில் விலைவாசியை உயர்த்தி எளிய மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்தது இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

பா.ஜ.க தங்கள் தவறுகளை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகளை குறை கூறுவதிலேயே கவனமாக இருக்கிறது. குடும்ப அரசியல், ஊழல், திருப்த்திப்படுத்தம் அரசியலைக் கடந்து காங்கிரஸால் சிந்திக்க முடியாது. நாட்டின் வளர்ச்சி என்பது அவர்களின் தீர்மானத்தில் ஒரு போதும் இருந்ததில்லை.

விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் நாட்டை நீண்ட காலம் ஆண்டது. நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதைத் தவிர்த்து, அரசை அமைப்பதிலும் அரசியல், நலனிலுமே அவர்களின் கவனம் இருந்தது. நாட்டை ஆள மீண்டும், மீண்டும் காங்கிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால் நாட்டின் எதிர்காலத்தைக் கட்டமைப்பதை அவர்கள் மறந்து விட்டனர் என்று பிரதமார் நரேந்திர மோடி மேலும் குற்றம் சுமத்துகிறார்.

இந்த விமர்சனம் சிறு பிள்ளைத்தனமானது என்று நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

இவர்களது பத்தாண்டு கால ஆட்சியில் நாடு முன்னேறியிருக்கிறது என்றால்,மக்கள் ஏன் இன்னும் ஏழைகளாவே இருக்கிறார்கள்? வேலைவாய்ப்புத்தேடி இளைஞர்கள் ஏன் இந்தியாவுக்குள்ளும், இந்தியாவுக்கு வெளியேயும், புலம்பெயர்ந்து செல்கிறார்கள். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்துவது ஏன்?.

தேர்தல் பத்திரத்தின் மூலம் மிகப்பெரிய ஊழல் நடத்திருப்பதாக நீதி மன்றமே குற்றம்சாட்டுகிறது. தேர்தல் பத்திர முறையை பாஜக அரசுதான் கொண்டு வந்தது கட்சிகளுக்கு நன்கொடைகள் வழங்க விரும்புபவர்கள். தேர்தல் பத்திரத்தின் மூலம் வழங்கலாம். இதன் மூலம் யார் எவ்வளவு நன்கொடைகள் வழங்கினார்கள் என்பது தெரியாது என்பதால் இதனால் அதிகமாக பயனடைந்தது பா.ஜ.க தான். இது நன்கொடை என்ற பெயரில் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஊழல் என்பதைத்தவிர வேறு என்ன சொல்ல முடியும்?

தனியார் நிறுவனங்களை மிரட்டி நன் கொடைகளைப் பறிக்க மத்திய புலாய்வு அமைப்புகளை பா.ஜ.க தவறாக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சுட்டிக்காட்டியதற்கு தெளிவான பதில் தராமல் பிரதமர் நீருக்கடியில் தியானம் செய்கிறார்.

இது போன்ற வேலைகளை அவ்வப்போது பிரதமர் நரேந்திர மோடி நிறைய செய்து வருகிறார்.

இவரது இது போன்ற நகைச்சுவையான செயல்களால் தங்கள் தவறுகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே பா,ஜ,க.வினர் தங்களை கோமாளிகளாகக் காட்டிக் கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது

ஷிட்லர் தன்னுடைய தவறுகளை மறைக்க சார்லி சாப்பிளினை வைத்து நகைச்சுவையால் மக்களை சிந்திக்க விடாமல் மகிழ்ச்சிப்படுத்தி தன்னுடைய ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது போல இந்தியப் பிரதமரின் நடவடிக்கைகளை மீம்ஸ்களாக உருவாக்கி இணைய வெளியில் உலவ விடுகிறார்களோ? என்றும் எண்ணத் தோன்றுகிறது.

இது உண்மையாகவும் இருக்கலாம். ஏனென்றால் மக்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டால் தோற்று விடுவோம் என்ற பயமும் அவர்களுக்கு இருக்கிறது.

மக்கள் சிந்திக்கத்தொடங்கியுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது. இந்தியாவில் மாற்றம் வர வேண்டும் என்ற இந்தியா கூட்டணியின் முன்னெடுப்புக்கு மக்கள் ஆதரவு தரத் தயாராகி வருகிறார்கள். மத அரசியலால் மக்களைப் பிளவுபடுத்த நினைக்கும் பா.ஜ.கவின் போக்குக்கு முடிவு கட்டவேண்டும் என்ற தீர்மானமும் மக்களிடையே எழுந்துள்ளது. “எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ” என்றபாடல் வரியை மக்கள் முணுமுணுக்கத் தொடங்கி விட்டார்கள்.

பா.ஜ.க.வை ஏன் வீழ்த்த வேண்டும் என்று யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, மக்கள் பா.ஜ.க.வின் தவறுகளை நன்றாக உணர்ந்துள்ளனர். ஆகையால் தான் மாற்றம் வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். மாற்றம் என்பது மட்டுமே மாறாதது மற்ற எல்லாமே மாறக்கூடியது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division