பிறிக்ஸ் நாடுகளின் புதிய நகர்வு உலக ஒழுங்கை மாற்றுமா? | தினகரன் வாரமஞ்சரி

பிறிக்ஸ் நாடுகளின் புதிய நகர்வு உலக ஒழுங்கை மாற்றுமா?

உலக அரசியல் ரஷ்யாவை மையப்படுத்தியே சுழல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடங்கியதிலிருந்து உலகத்தின் இருதய நிலமான ரஷ்யா உலக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. 23.08.2023 அன்று ரஷ்யாவின் தனியார் இராணுவமான வோக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜியின் கொலை அதிக குழப்பத்தை தந்துள்ளது.

கடந்த யூன் மாதம் ரஷ்யாவின் தலைநகர் நோக்கிய கிளர்ச்சியின் பின் அதிகம் மேற்கு ஊடகங்களால் முதன்மைப்படுத்தப்பட்ட பிரிகோஜி, விமான விபத்தில் கொல்லப்பட்டமை ரஷ்ய ஜனாதிபதி புடின் மீதான விமர்சனத்தை அதிகப்படுத்தியுள்ளது. அதே நேரம் கருங்கடலில் உக்ரைனின் கப்பல்கள் மீதான தாக்குதல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் என ஒரு பக்கம் அமைய மறுபக்கத்தில் பிறிக்ஸ் அமைப்பினூடாக புதிய பொருளாதார கொள்கையை உலகளாவிய ரீதியில் மேற்கொள்ள ரஷ்யாவும் ஏனைய நாடுகளும் இணைந்து திட்டமிடுகின்றன. அதில் புடினின் பங்கு தனித்துவமானது. இக்கட்டுரையும் தென் ஆபிரிக்காவின் தலைநகரான ​ஜோஹான்னேர்ங்பேர்க்கில் நடைபெற்ற பதினைந்தாவது பிறிக்ஸ் நாடுகளின் மகாநாட்டில் (22,24.08.2023) எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவுகளை தேடுவதாக அமையவுள்ளது.

தென்னாபிரிக்காவில் நடைபெற்ற பிறிக்ஸ் மகாநாட்டில் 64 நாடுகளும் பல அமைப்புக்களும் கலந்து கொண்டன. இதில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மட்டுமே நேரடியாக கலந்து கொள்ளவில்லை. ஏனைய அனைத்து நாடுகளின் தலைவர்களும் இம் மகாநாட்டில் கலந்து கொண்டனர். அண்மையில் அமெரிக்காவுக்கு எதிராக ஆபிரிக்க நாடுகளது நடவடிக்கைகள் பிறிக்ஸ் மகாநாட்டில் எதிரொலித்தன. பிறிக்ஸ் அமைப்பினை பலப்படுத்த வேண்டும் என்ற ஆவல் அனைத்து நாட்டுத் தலைமைகளுக்கும் இருந்ததை காணொளி வாயிலாக கணக்கூடியதாக இருந்தது. உலகளாவிய சனத்தொகையில் 47 சதவீதத்தை தற்போது கொண்டுள்ள பிறிக்ஸ் நாடுகள் உலகளாவிய ஜிடிபி இல் 37.17 சதவீதத்தை கொண்டுள்ளன. தனித்துவமான வளங்களை அங்கத்துவ நாடுகள் கொண்டிருந்தாலும் எரிவாயு, பெற்றோலியம் பிரதான சக்திவளமாக பிறிக்ஸ் நாடுகளிடையே காணப்படுகின்றது. மொத்தத்தில் ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளை உள்ளடக்கிய வலுவான அமைப்பாக உள்ளது. தென்னாபிக்காவில் பிறிக்ஸ் உரையாடிய முக்கிய விடயங்களை நோக்குவது அவசியமானது.

முதலாவது, பிறிக்ஸ் அமைப்பினை விரிவாக்குவது என்பது மிக முக்கியத்துவம் கொண்ட விடயமாக உரையாடப்படுகிறது. அதாவது பிறிக்ஸ் அமைப்பில் புதிய அங்கத்துவ நாடுகளை சேர்த்துக் கொள்வதெனவும் அவற்றுக்கான முழுமையான உறுப்புரிமை 2024 ஜனவரி மாதத்தில் வழங்குவதெனவும் தென்னாபிரிக்க மகாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் புதிதாக ஆறு நாடுகள் இணைக்கப்படவுள்ளன. அதில் ஆர்ஜன்டீனா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவூதி அரேபியா,மற்றும் ஐக்கிய அரபு எமிரேற்ஸ் என்பன உள்ளடங்குகின்றன. இவை பிராந்திய அடிப்படையில் தனித்துவம் மிக்க நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வளம் சார்ந்தும் புவிசார் அரசியல் சார்ந்தும் முக்கியத்துவம் கொண்ட நாடுகளாக காணப்படுகின்றன. இந்நாடுகள் ஏதோவொருவகையில் அமெரிக்க எதிர்ப்புவாதத்தை மட்டுமல்லாது மேற்குல அரசியல் பொருளாதார சுரண்டலால் பாரிய நெருக்கடியையும் அழிவுகளையும் எதிர்கொண்டுள்ள நாடுகளாக உள்ளன.

இரண்டாவது, புவிசார் அரசியல் சார்ந்தும் புவிசார் பொருளாதாரம் சார்ந்தும் இம்மாநாடு உரையாடியுள்ளது. குறிப்பாக புவிசார் பொருளாதாரத்தின் தனித்துவத்தோடு நகரும் உலகத்தில் பிறிக்ஸ்ன் விரிவாக்கம் அதிக மாற்றத்தை பொருளாதார ரீதியில் ஏற்படுத்தக் கூடியது. ஏனெனில் உலகப் பொருளாதாரம் அதிகம் புவிசார் பொருளாதாரமாகவே மாற்றமுறத் தொடங்கியுள்ளது. அது சீனா, இந்தியா, மற்றும் ரஷ்யாவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேற்குலகத்தின் பொருளாதார நிலையை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் கீழைத்தேசப் பொருளாதாரத்தை பிறிக்ஸ் நாடுகள் கட்டமைக்க முயலுகின்றன. இத்தகைய நகர்வு மேற்குலகப் பொருளாதாரத்துக்கு நெருக்கடியாக அமையப் போவதாகவும் பிறிக்ஸ் ஏறக்குறைய பொருளாதார இலக்கினை நோக்கிய அமைப்பு என்றும் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதனால் வர்த்தகம், சந்தை என்பன மட்டுமன்றி நிதி மூலதனத்தின் திரட்சியும் இந்நாடுகளது கைகளில் குவியப் போகிறது என்ற உரையாடலையும் அத்தகைய தரப்புக்கள் விவாதிக்கின்றன. இது கீழைத்தேச அரசியல் பரிமாணத்தை தோற்றுவிக்கும் என பேராசிரியர் அனில் சூக்லால் குறிப்பிடுகின்றார்.

மூன்றாவது, புதிய அபிவிருத்தி வங்கி அல்லது பிறிக்ஸ் வங்கி பற்றிய உரையாடல் நிகழ்ந்துள்ளது. இது உள்ளூர் நாணத்தை திரட்டவும் கடன் வழங்கவும் வடிவமைப்பதோடு தனியான நாணயம் ஒன்றினை ஏற்படுத்துவது தொடர்பிலும் உரையாடியுள்ளது. இது நாணயப் பயன்பாட்டை ஏற்படுத்துவதுடன் நாணயங்களது ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்துவதுடன் அதனால் ஏற்படும் தாக்கங்களை குறைக்கும் என தென்னாபிரிக்க நிதி அமைச்சர் ஏனோக் கோடோங்வானா குறிப்பிட்டுள்ளார். வங்கிக் கட்டமைப்பு சார்ந்து எடுக்கப்படும் முடிவுக்கு ஏற்கனவே பிறிக்ஸ் நாடுகளிடம் ஒப்புதல் கிடைத்துள்ளதாகவே தெரிகிறது. இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா என்பன தமது நாணயத்தில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் செய்முறை ஒன்றினை ஆரம்பித்துள்ளன. அதனால் டொலருக்கு எதிரான அணுகுமுறையை இந்நாடுகள் ஆரம்பித்துள்ளன. அதனால் பிறிக்ஸ் அமைப்பின் புதிய நாணயத்துக்கான நகர்வு விரைவானதாக சாத்தியப்படும் என்ற நிலைப்பாட்டை ஆய்வுகள் முதன்மைப்படுத்தி வருகின்றன. இதனால் டொலர் மற்றும் யூரோவின் நாணயப் பரிமாற்றத்துக்கான வாய்ப்பு கீழைத் தேசங்களில் மட்டுப்படுத்தப்படும் நிலை சாத்தியமாகுமாக இருந்தால் பாரிய நெருக்கடிக்கு மேற்கு நாடுகள் அகப்படும் நிலை ஏற்படும். அதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா நாட்டு நாணயத்தின் பெறுமானம் சார்ந்த பரிமாற்றம் நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக பொது நாணயத்தின் முக்கியத்துவத்தை பிறேசில் அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தது.

நான்காவது, தென்னாபிரிக்க ஜனாதிபதி பிறிக்ஸ் நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பினை அதிகரிப்பதே முக்கிய நோக்கம் என்றும் இம்மகாநாட்டின் அடிப்படையும் அதுதானென்றும் குறிப்பிட்டார். குறிப்பாக சீனாவின் உத்தியும் மரபாகவும் விளங்குவது ஜனநாயக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் மாறான உலகம் ஒன்றை உருவாக்குவதேயாகும். அதாவது அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் வெளியே அபிவிருத்தியையும் மாற்றத்தையும் அடைய முடியுமென்ற உணர்வை இம்மகாநாடு ஏற்படுத்த விளைவதாகவே தெரிகிறது. உலக சமாதானத்தையும் அமைதியையும் பொருளாதார வழிமுறைக்குள்ளால் எட்ட முடியுமென்ற கருத்தை இம்மகாநாடு அதிகம் கொண்டிருந்ததை கண்டு கொள்ள முடிகிறது. மேற்கு நாடுகளின் நிபந்தனைக்குள் இயங்க விரும்பாத சக்திகளின் எழுச்சியாகவே பிறிக்ஸ் மாநாட்டின் எதிரொலிப்பு அமைந்திருந்தது. அதில் புடினது உரையானது நவ-தாராளவாதத்தின் மீதான விமர்சனத்தை அதிகம் கொண்டிருந்தது. குறிப்பாக மேற்கு நாடுகள் கீழைத்தேச நாடுகளின் விழுமியங்களையும் வளர்ச்சியையும் நெருக்கடிக்குள்ளாக்குகிறது எனவும், தனி ஒரு நாடு உலகத்தை ஆளுகை செய்ய முடியாது எனவும் பலதுருவ உலகத்தின் இருப்பை நோக்கி உலகம் விளங்குகிறது எனவும் தெரிவித்தார்.

ஐந்தாவது, பிறிக்ஸ் நாடுகளுக்கிடையில் கடல்வழியாக கேபிள் தொடர்பினை ஏற்படுத்துவதற்கான தொலைத் தொடர்புச் சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன. இது கடல்வழியான தொடர்பையும் அதன் மூலமான பாதுகாப்பினையும் கட்டமைக்க முயலுவதாக தெரியவந்துள்ளது. இதனால் கடல் போக்குவரத்து வெற்றிகரமாக அமைவதுடன் கடல்வழியான வர்த்தக கட்டமைப்பையும் பாதுகாப்பினையும் இத்தகைய தொலைத் தொடர்புச் சேவை மூலம் விருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது நவீன தொழில்நுட்பத்தை மட்டுமல்ல கடல்வழியான பாதுகாப்பினையும் சாத்தியப்படுத்த கூடியதாகவே வடிவமைக்கப்படுகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் கடலின் முக்கியத்துவமே மேலோங்கியுள்ளது. இது நாடுகளின் நீர்மூழ்கிகளையும் கடற்படையின் வளர்ச்சியையும் அதிகரிப்பதுடன் இந்தோ- பசுபிக் கடல் போட்டியையும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்ற நிலை காணப்படுகிறது.

எனவே பிறிக்ஸ் அமைப்பானது புதிய உலக ஒழுங்கினை கட்டமைக்க முனைகிறதாகவே தெரிகிறது. அதன் தீர்மானங்களும் முடிவுகளும் பிறிக்ஸ் அமைப்பினை மையப்படுத்தி பாதுகாப்பான கட்டமைப்பை கீழைத் தேசத்தில் உருவாக்குவதாகவே காணப்படுகிறது. மக்கள் தொகையில் தற்போதே உலக சனத்தொகையில் அரைப்பங்கினைக் கொண்ட புதிய ஆறு நாடுகளுடன் மக்கள் தொகையை அதிகம் கொண்ட அமைப்பாக மாற வாய்ப்புள்ளது. அதுவே உலகப் பொருளாதாரத்தின் சந்தையையும் வர்த்தகத்தையும் கொண்டதாக அமையும். அத்தகைய வாய்ப்பு நிதி மூலதனத்தையும் அதற்கான நிதிச்சந்தையை கொண்டதாக மாற்றமடைய அதிக சந்தர்ப்பத்தை வழங்கும். இதில் அதிக முக்கியத்துவம் வகிக்கப் போவது புதிய நாணயக் கொள்கையாகும். அதனால் பொருளாதார நிலை மட்டுமல்லாது அரசியல் நிலையும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையும். மேற்குலகத்தின் உலகளாவிய ஆளுகைக்கு மாற்றீடான அதிகார வடிவத்தின் தோற்றமாகவே பிறிக்ஸ்ன் எழுச்சி நோக்கப்படுகிறது.

Comments