ஆசிரியர் தலையங்கம்

அடுத்து வருகின்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் தெரிவு எதுவாக இருக்கப் போகின்றது என்பதே தமிழர் அரசியலில் தற்போது நிலவுகின்ற பெரும் எதிர்பார்ப்பு.

வடக்குக் கிழக்குத் தேர்தல் களத்தில் எத்தனை தமிழ்க் கட்சிகள் போட்டியில் இறங்குகின்ற போதிலும், தமிழ் மக்களின் ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைக்குமென்ற சித்தாந்தம் கடந்த இரண்டு வருட காலத்தில் வேகமாக நீங்கியிருப்பதை இங்கே நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

தமிழ் மக்களின் இப்போதைய அதிருப்தியையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திண்டாட்டத்தையும் வைத்துப் பார்க்கின்ற போது தமிழ் அரசியலின் இன்றைய குழப்ப நிலைமை தெளிவாகவே தெரிகின்றது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், அதன் பின்னர் ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு மக்கள் எத்தனை மன உறுதியுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலின் பின்னால் ஒன்றுதிரண்டனரோ, அத்தனை துரிதகதியுடன் கடந்த இரு வருட காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பு மீதான வெறுப்பும் அதிருப்தியும் வளர்ந்திருக்கின்றன.

இதனை இங்கு குறிப்பாகச் சொல்வதனால், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மீதும் அதன் பேச்சாளரான எம். ஏ. சுமந்திரன் மீதும் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் வெறுப்பே அதிகமானது.

வட மாகாணத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் நடத்தி வருகின்ற போராட்டங்களின் போதும், படையினர் வசமுள்ள காணிகளை மீட்கும் போராட்டத்தின் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக பொதுமக்கள் வெளியிட்ட கண்டனக் கோஷங்களில் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் பெயர்களே பிரதானமாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

ஆகவே வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் அதிருப்தியானது தமிழ்க் கூட்டமைப்பு மீது உருவாகியுள்ளதெனக் கூறுவதை விட, கூட்டமைப்பின் தலைமைத்துவத்துக்கு எதிராக, அதாவது தமிழரசுக் கட்சிக்கு எதிரானதாக உருவாகியுள்ளதெனக் கூறுவதே மிகவும்பொருத்தமாகும். வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது வெளிக்காட்டாத வெறுப்பையும் அதிருப்தியையும் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் எதிராக அம்மக்கள் காண்பிப்பதற்குப் பிரதானமாகக் கூறக் கூடிய சில காரணங்கள் இல்லாமலில்லை.

வடக்கு, கிழக்குத் தமிழர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வருகின்ற தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் கடந்த இரு வருட காலத்துக்கும் மேலாக தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை அலட்சியப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றதென்பதே தமிழ் மக்களின் பிரதான குற்றச் சாட்டாக இருக்கின்றது. தமிழ்க் கூட்டமைப்பின் தலைமையினால் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போனாலும், கூட்டமைப்பின் ஏனைய எம்.பிக்கள் மத்தியில் மக்களின் ஆதங்கத்தை அனுதாபத்துடன் செவிமடுக்கின்ற போக்கைக் காண முடிகின்றது. எனவேதான் தமிழ்க் கூட்டமைப்பு மீதான அத்தனை வெறுப்புகளும் அதன் தலைமைத்துவத்தை நோக்கிக் குவிந்திருக்கின்றன.

வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து கடந்த 18 ஆம் திகதியன்று முள்ளிவாய்க்காலில் நடத்தப்பட்ட நினைவேந்தலின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்ட வெறுப்பை இதற்கான உதாரணமாகக் கொள்ள முடியும்.

தமிழ்க் கூட்டமைப்பு மீதான ஜனரஞ்சக செல்வாக்கு இரு வருட காலப் பகுதிக்குள் இத்தனை வேகமாகச் சரிந்துள்ளமைக்கு ஆதாரமாக முள்ளிவாய்க்கால் சம்பவமொன்றே போதுமானது.

கூட்டமைப்பு தனது சரிவை உடனடியாக சரிசெய்து கொள்ள வேண்டுமானால் குறுகிய காலத்துக்குள் மிகப் பெரும் சாதனைகளை நிறைவேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழி கிடையாது. காணாமல் போனோர் விவகாரத்தில் அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதிலொன்றைப் பெற்றுக் கொடுத்தல், படையினரால் சுவீகரிக்கப்பட்ட அத்தனை காணிகளையும் விடுவித்து மக்களிடம் கையளித்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் என்றெல்லாம் காரியங்களை நிறைவேற்றக் கூடிய அமானுஷ்ய சக்தி தமிழ்க் கூட்டமைப்பிடம் கிடையாது.

அதேசமயம் வடக்கு, கிழக்கு சிறுபான்மைத் தமிழர்களின் அத்தனை கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதற்கான அரசியல் பலத்தை இன்றைய அரசாங்கம் கொண்டிருக்கவில்லையென்பது தெளிவு. தமிழ் மக்கள் முன்வைக்கின்ற அத்தனை கோரிக்கைகளும், அரசின் பிரதான எதிராளிகளான ராஜபக்ஷ தரப்பினருக்கு அரசியல் துரும்பாகக் காணப்படுவதனால் இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அரசியல் சூழ்நிலை இன்று கிடையாது. எனவே அரசின் பலவீனமான தன்மையானது, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் செல்வாக்கில் மேலும் வீழ்ச்சியை ஏற்படுத்தத்தான் போகின்றது.

தமிழ் மக்களின் அதிருப்தி படிப்படியாக வளர்வதற்கும், வடக்கில் தமிழ் மக்கள் பேரவை தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும் தமிழ்க் கூட்டமைப்பின் கடந்த கால உதாசீனங்கள் காரணமாக அமைந்திருக்கின்றன. அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் மாத்திரமன்றி கட்சியின் உள்விவகாரங்கள் தொடர்பிலும் மக்களுக்கு தகவல்களை வெளிப்படுத்தாமல் மௌனப்போக்கைக் கடைப்பிடித்து வருவதையிட்டு தமிழ்க்கூட்டமைப்பு கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றது. இவ்வாறான அசமந்தப் போக்குக்கு கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனின் முதுமையைக் காரணமாகக் கூறுவோரும் உள்ளனர்.

இவ்வாறான விமர்சனங்களுக்கு மத்தியிலேயே முள்ளிவாய்க்காலில் மக்களின் எதிர்ப்பை நேரடியாக சந்திக்க வேண்டிய நிலைமை கூட்டமைப்புக்கு ஏற்பட்டது.

வடக்கில் தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியானது தமிழ்க் கூட்டமைப்புக்கு மாத்திரமன்றி தமிழ் மக்களுக்கும் ஆரோக்கியமானதல்ல. கூட்டமைப்பு பலவீனப்படுவது ஒருபுறமிருக்க, வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் அரசியல் பலம் குன்றுவதுதான் இங்கு பிரதானமான பாதிப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரு வருட கால நெருக்கடி நிலைமை குறித்தும், அதன் எதிர்கால அரசியல் நிலைமை தொடர்பாகவும் தமிழ் தேசிய ஆர்வலர்கள் ஏற்கனவே கவலைப்படத் தொடங்கிவிட்டார்கள். எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இவையெல்லாம் பற்றி எதுவுமே கவலைப்படாத நிலையில் எழுந்தமானமாக அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றது. தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை தன்னை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்வதே இன்றைய தேவை!