பங்களாதேஷின் நியாயம் | தினகரன் வாரமஞ்சரி

பங்களாதேஷின் நியாயம்

“நியாயம் அல்லது நியாயமற்ற தன்மை பற்றி யாரும் உடைமாற்றும் அறையில் பேசவில்லை” என்று ஷகீப் அல் ஹசன் சற்று பதற்றத்துடன் செய்தியாளர்களிடம் கூறுவது தெரிந்தது.


பங்களாதேஷ் அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்படுபவர், அவர் மாத்திரம் அல்ல ஒட்டுமொத்த பங்களாதேஷ் அணியுமே அப்படித்தான். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அது சற்று சிறுபிள்ளைத்தனமாகவும் தெரியும். ஆனால் பங்களாதேஷ் அணியின் பலமும், பலவீனமும் அதுதான்.
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்று போட்டி என்பது அப்படி ஒரு பரபரப்பான சூழலை கொண்டது. வெற்றிபெறும் அணி கிட்டத்தட்ட அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும்் என்ற சூழலில் இந்த பரபரப்பு எதிர்பார்த்தது தான்.


ஆனால் பங்களாதேஷ் அணிக்கு வெற்றி கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருக்கும்போது அதன் நடத்தை சற்று தூக்கலாகத் தெரியும். ஏற்கனவே இந்திய அணி சர்வதேச கிரிக்கெட்டை தனது கைக்குள் வைத்து ஆட்டிப்படைப்பதாக பேச்சு இருக்கும்போதும் பங்களாதேஷின் செயலில் ஓரளவு நியாயம் இருப்பதாகவும் தெரியலாம்.
185 ஓட்டங்களை துரத்தியடித்த பங்களாதேஷ் அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ஓட்டங்களை பெற்றிருந்தபோதே மழை குறுக்கிட்டது. அப்போது டக்வர்த் லுவிஸ் முறைப்படி பார்த்தால் 17 ஓட்டங்களால் பங்களாதேஷ் முன்னால் இருந்தது.


மழை பெய்யும் ஒவ்வொரு விநாடியும் பங்களாதேஷின் வெற்றி உறுதியாகும் நிலை. பத்து ஓவர்களை இழந்தால் பங்களாதேஷ் அணி மூன்று ஓவர்களுக்கு 23 ஓட்டங்களை பெற வேண்டும். ஐந்து ஓவர்களை இழந்தால் எட்டு ஓவர்களுக்கு 76 ஓட்டங்களை பெற வேண்டும். எப்படிப் பார்த்தாலும் பங்களாதேஷுக்கு சாதகமான சூழல்.


40 நிமிடங்களில் மழை நின்றது. அதாவது இரண்டு ஓவர்கள் இழக்கும் நிலை. மைதானத்தில் இருக்கும் நீரை அகற்றி விளையாடுவதற்கு தகுதியான சூழலை உருவாக்க இன்னும் 20 நிமிடங்கள் தேவைப்படும் என்று பார்த்தால் மொத்தம் ஏழு ஓவர்கள் இழக்க நேரிடும். ஆனால் போட்டியை 13 நிமிடங்களில் ஆரம்பிப்பதாக நடுவர்கள் அறிவித்தார்கள். பங்களாதேஷின் இலக்கு மேலும் ஒன்பது ஓவர்களில் 85 என நிர்ணயிக்கப்பட்டது. அதாவது நான்கு ஓவர்களே குறைக்கப்பட்டது.


இந்திய வீரர்கள் அமைதியாக தமது அடுத்த கட்ட திட்டத்தை வகுக்க ஆரம்பித்தார்கள். ஆனால் ஷகீப் அல் ஹசன் நடுவருடன் தீவிரமாக எதையோ பேசுவது தெரிந்தது. அருகில் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். ஷகீப் மைதானத்தை காட்டி தண்ணீர் இன்னும் இருப்பதாக முறையிடுவது நன்றாகத் தெரிந்தது. போட்டி அவசர அவசரமாக முன்கூட்டியே ஆரம்பிக்கப்பட்டது என்பது பங்களாதேஷ் தரப்பின் குற்றச்சாட்டு.


துடுப்பெடுத்தாட வந்த லிட்டோன் தாசும் நடுவரிடம் மைதானத்தில் தண்ணீர் இருப்பதை சுட்டிக்காட்டுவது தெரிந்தது. இதற்கு தோதாக போட்டி ஆரம்பித்து முதல் பந்திலேயே லிட்டோன் தாஸ் ஓட்டம் பெரும்போது வழுக்கி விழுந்து கையில் காயம் ஏற்பட்டது. அடுத்த பந்திலேயே கவனமாக ஓடப்போய் ரன் அவுட் ஆகிவிட்டார். 27 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்ற லிட்டோன் தாசின் ஆட்டமிழப்பு பங்களாதேஷ் அணிக்கு பாதகமாக போட்டியை திசை திருப்பியது.
கடைசியில் பங்களாதேஷ் அணி 5 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது. அந்த ஐந்து ஓட்டங்களுக்கு மற்றொரு கதை இருக்கிறது. போட்டியின்போது களத்தடுப்பில் ஈடுபட்ட விராட் கொஹ்லி போலியான செயல் ஒன்றை செய்ததாகவும் அதனை நடுவர் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் பங்களாதேஷ் தரப்பு கூறியது.


அதற்கு அபராதமாக ஐந்து ஓட்டங்கள் வழங்கப்பட்டிருந்தால் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றிருக்கும் என்பதுதான் அந்தத் தர்க்கம். ஆனால் இந்தத் தர்க்கங்களில் நியாயம் இருந்தாலும் நியாயம் கூற முடியாது என்பதுவே உண்மை. அதனால்தான் ஷகீப் அல் ஹசன் ஊடக சந்திப்பில் அதனை வெளிப்படையாகப் பேசாமல் மறைத்துவிட்டார்.


செய்தியாளர்: உண்மையில் நீங்கள் விளையாடாமல் இருக்க முயன்றீர்களா? சிரித்தபடி ஷகீப்: எங்களுக்கு ஏதாவது விருப்பு இருந்ததாக நினைக்கிறீர்களா?
செய்தியாளர்: அப்படி இல்லை, நீங்கள் அவர்களை நம்ப வைக்க முயன்றீர்களா? ஷகீப், தொடர்ந்தும் சிரித்தபடி: யாரை நம்பவைக்க?
செய்தியாளர்: நடுவர்களை? ஷகீபின் சிரிப்பு அதிகமானது: நடுவர்களை என்னால் நம்ப வைக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?
செய்தியாளர்: அப்படி என்றால் பங்களாதேஷின் ஆறுகளைப் பற்றியா நீங்கள் விவாதித்துக்கொண்டிருந்தீர்கள்? ஷகீபுக்கு என்ன கூறுவது என்று புரியவில்லை.
செய்தியாளர்: அப்படி என்றால் எதனை பற்றி நீங்கள் பேசினீர்கள்? ஷகீப்: ஆம், நீங்கள் சரியான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள். நடுவர் இரு தலைவர்களையும் அழைத்து, எம்மிடம் வெற்றி இலக்கு, பந்துகளின் எண்ணிக்கை போன்றவற்றை கூறினார்.
செய்தியாளர்: நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்? ஷகீப்: ஆம்.
 

Comments