ஈழத்து இலக்கியக் களத்தின் போராளி தெளிவத்தை யோசப்! | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இலக்கியக் களத்தின் போராளி தெளிவத்தை யோசப்!

இலங்கையின் தமிழ் இலக்கியக் களத்தில் கடந்த ஆறு தசாப்த காலத்துக்கும் மேலாக மங்காமல் பிரகாசித்த சாதனையாளரான தெளிவத்தை ஜோசப் தனது 88ஆவது வயதில் நேற்றுமுன்தினம் நம்மையெல்லாம் விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.

தெளிவத்தை ஜோசப் இனிமேல் எம்மத்தியில் இல்லையென்று நினைக்கையில் இலக்கியப் படைப்பாளிகள், ஆர்வலர்கள் மற்றும் அன்னாருடன் நெருங்கிப் பழகிய அனைவருக்குமே பெரும் வேதனை தோன்றுகின்றது.

இலங்கையின் இலக்கியக் களத்தில் பெரும் வெற்றிடமொன்றை அவர் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். அன்னாரின் மறைவானது குடும்ப உறுப்பினரொருவரை பறிகொடுத்து விட்ட துயரத்தை தங்களுக்கு ஏற்படுத்தியுள்ளதாக அவருடன் இலக்கியப்பயணம் செய்துள்ள ஆர்வலர்கள் வேதனைப்படுகின்றனர்.

இந்திய இலக்கியத்தின் ஆதிக்கத்தில் ஈழத்து இலக்கிய ஆர்வலர்கள் கட்டுண்டு கிடந்த காலப்பகுதியில், இலங்கையில் தமிழ் படைப்பிலக்கியத்தைக் கட்டியெழுப்புவதில் பங்களிப்புச் செய்தவர்களில் தெளிவத்தை யோசப்பும் ஒருவரென்று தாராளமாகக் கூற முடியும். 1960களில் ஆரம்பித்த அவரது இலக்கியப் பயணம் நேற்றுமுன்தினம் வரை கடந்த 62வருடங்களாக ஓய்வின்றித் தொடர்ந்துள்ளது.

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயரையுடைய அந்த மாபெரும் கலைஞர், தான் வாழ்ந்த ‘தெளிவத்தை’ என்ற ஊரை தனது பெயரின் முன்பாக பெருமையாகச் சூடிக் கொண்டு ஓயாமல் எழுதிக் குவித்தார். அந்த ஓயாத உழைப்பின் பிரதிபலனை எதிர்பாராது தனது வாழ்வையே இலக்கியத்துக்காக அர்ப்பணித்தார்.

அவரது படைப்புகள் ஏராளம். ஆறு நாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுதிகள் உட்பட பல நூல்களை வெளியிட்டுள்ள தெளிவத்தை ஜோசப், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘புதிய காற்று’ திரைப்படத்திற்கும் தொலைக்காட்சி நாடகத்துக்கும் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அவர் பெற்றுள்ள பரிசுகள், விருதுகள் எண்ணிலடங்காதவை.

இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இல்லாத காலப்பகுதியில் மலையக மக்களின் அவலங்களை தனது இலக்கியத்தின் வாயிலாக வெளியுலகுக்குக் கொண்டு வருவதிலும், உள்நாட்டு தமிழிலக்கியத்தை வளர்ப்பதிலும் ஓயாமல் உழைத்த இலக்கியப் போராளி அவர். தமிழினத்தில் தனியொரு சமூகத்தின் மைந்தன் என்றில்லாமல் வடக்கு, கிழக்கு உட்பட அனைத்துப் பிரதேச தமிழர்களாலும் போற்றி மதிக்கப்பட்ட பண்பாளர் தெளிவத்தை யோசப் ஆவார்.

புதிய படைப்பாளிகளை இலக்கியக் களத்தினுள் அறிமுகப்படுத்துவதிலும், இலக்கிய ஆர்வலர்களை நட்புவட்டத்தினுள் ஒன்றுசேர்ப்பதிலும் அவர் போன்று மற்றொருவரைக் காண முடியவில்லை. கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் மாத்திரமன்றி, பல்வேறு மண்டபங்களிலும் நடைபெறுகின்ற இலக்கியச் சந்திப்புகளில் அன்னாரின் பிரசன்னம் தவறாமல் இருக்கும். உடல் தளர்ந்த பருவத்திலும் அவர் சிரமத்துடன் அங்கெல்லாம் வரத்தவறுவதில்லை. அவரைச் சூழ்ந்தபடி அபிமானிகள் கூட்டமொன்றையும் அங்கு காணலாம்.

இவ்வாறெல்லாம் தெளிவத்தை ஜோசப் அவர்களைப் பற்றி கூறுவதற்கு நிறையவே உள்ளன. ஆனால் நாம் தெளிவத்தை யோசப்புடன் பேசுவதற்கு அவர் இனிமேல் இல்லையென்பது வேதனையையே தருகின்றது.

Comments