குவாட் அமைப்பின் டோக்கியோ மாநாடு: ஆசியாவில் போர் ஒன்று நடப்பதை விரும்புகிறாரா ஜோபைடன்? | தினகரன் வாரமஞ்சரி

குவாட் அமைப்பின் டோக்கியோ மாநாடு: ஆசியாவில் போர் ஒன்று நடப்பதை விரும்புகிறாரா ஜோபைடன்?

இந்தோ-பசுபிக் பிராந்தியம் மூலோபாய மற்றும் தந்திரோபாய ரீதியில் முக்கிய பிராந்தியமாக விளங்குகிறது. கடந்த பல தசாப்தங்களாக அதன் தனித்துவம் மேற்கு - சீன முரண்பாடாக வடிவமைக்கப்பட்டு தற்போது கீழைத்தேச நாடுகளையும் உள்ளடக்கி வருகிறது.

குறிப்பாக சீனாவின் எழுச்சிக்கு பின்னர் அமெரிக்காவின் பிரதான உத்தியாக இந்தோ-பசுபிக் பிராந்தியக் கூட்டுக்களை பலப்படுத்துவதன் மூலம் சீனாவை தோற்கடிக்க முயலுகிறது. இந்தோ - பசுபிக் கட்டமைப்பானது, சீனாவின் எழுச்சியை முடிவுக்குக் கொண்டுவரவும் பதிலுக்கு சீனாவின் நகர்வானது அமெரிக்கா உட்பட்ட மேற்கின் எழுச்சியை இப்பிராந்தியத்திலிருந்து அகற்றுவதற்கானதாகவும் அமைந்துள்ளது. இத்தகைய போட்டி கடந்த இரு தசாப்தங்களாக இரு தரப்புக்கும் இடையில் நிகழ்ந்து வருகிறது. இக்கட்டுரையும் குவாட் நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுவரும் நகர்வுகளையும் குவாட் அமைப்பின் ஜப்பானிய மகாநாட்டின் விளைவுகளைத் தேடுவதாக உள்ளது. 

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெற்ற குவாட் நாடுகளின் உச்சிமகாநாட்டுக்கு (25-26) தலைமை தாங்கிய அனைத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் முதல் அனைத்துத் தலைவர்களும் உரையாற்றும்போது அதிகம் உக்ரைன் போர் தொடர்பில் ரஷ்யாவுக்கு எதிரான கண்டனங்களை வெளிப்படுத்தினர். இந்தியப் பிரதமர் தவிர ஏனைய மூன்று நாட்டுத் தலைவர்களும் ரஷ்யாவின் நடவடிக்கையை கண்டித்ததுடன் ஆக்கிரமிப்பு நகர்வெனவும் குற்றம் சாட்டினர். அது மட்டுமன்றி சீனாவின் பிராந்தியம் நாடுகள் மீதான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட்டதுடன் தைவான் விவகாரம் முதன்மையானதாகவும் அவர்களது உரையில் காணப்பட்டது. அதனைக் கடந்து இந்தியப் பிரதமர் உட்பட ஏனைய தலைவர்கள் உலகளாவிய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் அதனை வெற்றிகொள்வதற்கான உத்திகள் தொடர்பிலும் உரையாடப்பட்டது.  

குறிப்பாக, பொருளாதா இணைவையும் வர்த்தக வாய்ப்புக்களை விரிவாக்குவதையும் குறிப்பிட்டதுடன் சைபர் பாதுகாப்பு, கொரனோ தடுப்பூசி விநியோகம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் முதன்மைப்படுத்தி உரையாடினார். அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை மின்சக்தி பற்றிய உரையாடலை வெளிப்படுத்தியிருந்தார்.  

இவ்வுச்சி மகாநாடு நிறைவுபெற்றதுடன் சீனாவின் வெளிவிவகார அமைச்சு ஜோபைடனால் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்ட வளர்ச்சிக்கான இந்தோ - பசுபிக் பொருளாதாரக் கட்டமைப்பினை பொருளாதார நோட்டோ என விமர்சனம் செய்தது. அவுஸ்திரேலிய புதிய பிரதமரது அணுகுமுறைகளும் தொழில் கட்சியின் பாரம்பரியமும் அவரது அணுகுமுறையை தனித்துவமானதாக கருதினாலும் டோக்கியோவில் அவரது வெளிப்பாடுகளும் தேர்தல் காலத்தில் சீனாவுடனான உறவு பற்றிய உரையாடல்களும் தேர்தலுக்கு பின் வேறு தளம்மாறுமா என்ற குழப்பம் நீடித்தாலும் சீனாவின் உயிரியல் பொருளாதாரத்தில் இணைந்து பயணிப்பது பற்றி புதிய பிரதமர் உரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பாக தென் பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் நகர்வு கடந்த சில மாதங்களில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் கருதுகின்றன. அதற்கமைவாகவே தென் பசுபிக் தீவான சாலமனுடனான சீனாவின் உடன்படிக்கை முக்கியம் பெறுகிறது.  

அது மட்டுமன்றி சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் ஜீ சாலமன் தீவுக்கு விஜயம் செய்துள்ளார். அடுத்தவாரம் (30-05) பிஜித் தீவில் நடைபெறவுள்ள பசுபிக் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் வாங் ஜீ பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அந்த மகாநாட்டைத் திட்டமிட்டுள்ள சீனா அடுத்துள்ள ஐந்தாண்டு காலப்பகுதியில் உயிரியல் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டம் தொடர்பில் முன்வைத்துள்ள விடயம்; பற்றிய உடன்பாடொன்றை பசுபிக் நாடுகளோடு மேற்கொள்ள முனைகிறது. அத்தகைய உயிரியல் பொருளாதார வளர்ச்சியானது மருத்துவம், சுகாதாரம், விவசாயம், வனவியல், ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் முன்னேறிய உயிரியல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதன் மூலம் பொருளாதாரத்தின் ஆதாரங்களாக அவற்றை விரிவுபடுத்துவதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளது. அதற்கான முயற்சிகளை முன்கூட்டியே தொடக்கியுள்ள சீனா, பசுபிக் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடனான சந்திப்பில் உடன்பாடொன்றை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது. அதே நேரம் அத்தகைய உடன்பாட்டில் அவுஸ்திரேலியா பின்னிற்காது முன்னேற வேண்டும் என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அவுஸ்திரேலிய பிரதமர் கடல்சார் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், மற்றும் பசுபிக் நாடுகளுக்கான உதவிகளை அதிகரிப்பது, குடிமக்களை அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர அனுமதிப்பது ஆகிய நடவடிக்கைகளை தனது தொழில் கட்சி அரசாங்கம் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார். முன்னய அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை கைவிடப் போவதில்லை எனவும் அதிலிருந்து முன்னேற வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். எனவே அவுஸ்திரேலியாவின் புதிய தொழில் கட்சி அரசாங்கம் அதிக மாற்றங்களை செய்ய முனைகிற போது அமெரிக்க அணியில் பயணிக்கப் போகிறதா அல்லது சீனாவுடன் ஒத்துழைக்கப் போகிறதா என்ற குழப்பம் நிலவுகிறது. பதவியேற்றதும் குவாட் நாடுகள் மகாநாட்டில் கலந்து கொள்ள பயணமான அந்தோனி அல்பானீசின் சீனாவின் உயிரியல் பொருளாதாரத்திலும் பங்கெடுப்பதென்ற முடிவானது அந்நாடு நடுநிலையை நோக்கி நகர முயலுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் குவாட் அமைப்பின் உள்ளார்ந்த நோக்கங்களை அவதானித்தால் அவுஸ்திரேலியா அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடாகவே தெரிகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது. .  

முதலாவது, இந்தோ - பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார இணைவை உருவாக்குவதன் மூலம் சீனாவின் பொருளாதார நகர்வுகளை நெருக்கடிக்குள் தள்ளுவது அமெரிக்கா தலைமையிலான மேற்குலக கூட்டாளிகளின் நோக்கமாக உள்ளது. 2020, நவம்பரில் சீனா தலைமையில் உருவான Regional Comprehensive Economic partnership க்கு பதிலானதாக கட்டமைக்கப்பட்டதே IPEF என்ற அமைப்பாகும். ஊடகங்கள் மத்தியிலும் மகாநாட்டிலும் ஜோபைடன் உரையாற்றும் போது சீனா இப்பிராந்திய நாடுகளுக்கு ஏற்படுத்திவரும் நெருக்கடிகளை சுட்டிக்காட்டினார். சீனாவின் பொருளாதார ரீதியான ஆக்கிரமிப்புகளையும் இராணுவ ரீதியான நடவடிக்கைகளையும் குற்றச்சாட்டாக முன்வைத்ததை அவதானிக்க முடிந்தது.  

ஏற்கனவே பராக் ஒபாவின் ஆட்சிக்காலத்தில் கட்டமைக்கப்பட்ட TPP எனும் Trans Pacific Partnership அமைப்பை அப்போது ஆட்சிக்கு வந்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனாட் ட்ரம்ப் கைவிட்டுவிட்டு குவாட் கட்டமைப்பிற்கான இந்தோ-பசுபிக் தந்திரோபாயத்தை உருவாக்கினார்.

இவ்வாறு மாறி மாறி புதிய அமைப்புக்கள் உருவாகிறதே அன்றி பிராந்திய பாதுகாப்போ பொருளததார செழிப்போ நிகழ்வதாக தெரியவில்லை. இலங்கை போன்று ஆசிய -பசுபிக் பிராந்தியத்தில் 25நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர் நோக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இவை அனைத்தும் கடன் சுமையால் நெருக்கடியை எதிர்கொள்ளும் நாடுகள் என்பதே முக்கியமானது. 

இரண்டாவது, குவாட் நாடுகளது உரையாடலின் மூலம் ஜோபைடன் சீனாவின் தைவான் நகர்வுகளை தீவிர எதிர்ப்புவாதத்தின் மூலம் கண்டித்துள்ளதைக் காணமுடிகிறது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி தைவான் விடயத்தில் சீனாவின் தலையீடு ஆபத்துடன் விளையாடுவதற்கு சமமானதாகும் எனத் தெரிவித்துள்ளார். அவ்வாறே ஊடகங்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது தைவான் மீது சீனா இராணு நடவடிக்கையை மேற்கொண்டால் அமெரிக்கா இராணுவ ரீதியிலான தலையீட்டை ஏற்படுத்துமெனவும் தைவானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியாக செயல்படும் என்றும் களத்தில் இறங்கும் எனவும் பதிலளித்தார். சீனாவையும் ஒரு போருக்குள் நுழைத்துவிடுதல் என்ற இலக்குடைய குவாட் அமைப்பிலுள்ள அவுஸ்ரேலியா எவ்வாறு சீனாவுடன் கூட்டிணையும் என்ற கேள்வி இயல்பானது. ஆனால் சீனாவின் உள்நாட்டு நிலையும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பும் சீனா சார்ந்ததாகவே அமைய வேண்டிய நிலை தவிர்க்க முடியாதது. அதனை தொழில் கட்சி உணர்ந்துள்ளமையே பிரதமரது நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன. நாடுகள் அணிகளில் இணைவதென்பதை விட பொருளாதாரமாகவே அணியமைக்க முயலுகின்றன. 

மூன்றாவது, இந்தியா குவாட் அமைப்பில் காணப்பட்டாலும் அதன் அணுகுமுறை தனித்துவமானதாகவே உள்ளது. தொழில்நுட்ப அறிவை அதிகரிக்கும் நோக்குடன் இந்திய மாணவர்களது கல்விக்கான வாய்ப்புக்களை குவாட் நாடுகள் வழங்க வேண்டும் என நரேந்திர மோடி கோரிக்கை முன்வைத்துள்ளார். அது மட்டுமன்றி சீனாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளை இந்தியாவுக்கு கொண்டுவரும் நோக்கத்தையும் அவர் அதிகம் பிரஸ்தாபித்துள்ளார். ஒட்டுமொத்தத்தில் குவாட் கட்டமைப்பை இந்தியா நோக்கியதாக பயன்படுத்தத் திட்டமிடும் பிரதமர் மோடி, தொழில்நுட்ப ரீதியில் இந்தியாவை எழுச்சிகரமான தேசமாக்க முனைகிறார். அதேநேரம் அமெரிக்காவோ ஜப்பான் அவுஸ்திரேலியா மற்றும் தென் கொரியாவை தனது நெருக்கமான நாடுகளாகக்கொள்ள முனைகின்ற போக்கினையும் அவதானிக்க முடிகிறது. சீன - இந்திய முரண்பாட்டை அதிகம் விரும்பும் அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அணியில் நம்பிக்கைக்குரிய நாடாக அவுஸ்திரேலியாவை பலப்படுத்த முனைகிறது. 

எனவே ஜப்பானிய போர் எதிர்ப்புவாதிகள் கூறுவதுபோல் குவாட் உச்சிமகாநாட்டின் மூலம் ஆசியாவில் ஜோபைடன் போர் மூள்வதற்கு திட்டமிடுவதாக குற்றம்சாட்டு நியாயமானதாகவே தெரிகிறது. டோக்கியோவில் கூடிய போர் எதிர்ப்புவாதிகள் பைடனுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். முன்னாள் அவுஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட், சீனாவுடன் இன்னும் நிலையான உறவை அவுஸ்திரேலியா எப்போதும் வரவேற்கும் என்றார். ஆனால் சீனாவால் நிறுவப்பட்ட இந்த முன்நிபந்தனைகள் தொடர்ந்து இருக்கும் நிலையில் உறவு சுமூகமானதாக இருக்காது. எனத்தெரிவித்துள்ளார். ஆகவே அவுஸ்திரேலியாவின் நகர்வுகள் குவாட் அமைப்பின் இலக்குகளை தகர்ப்பதாக அமைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments