ரஷ்ய- உக்ரைன் போரில் புச்சா படுகொலையும் மரியப்போ முற்றுகையும் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்ய- உக்ரைன் போரில் புச்சா படுகொலையும் மரியப்போ முற்றுகையும்

உக்ரைன்- ரஷ்யப் போர் மாறுபட்ட உத்திகளுடன் நகர்வதாகவே தெரிகிறது. இரண்டாவது மாதத்தை நோக்கிய ரஷ்யப் படையெடுப்பானது உக்ரையினின் இருப்பை முழுமையாகப் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் ஜனாதிபதியின் கடும் பிரயத்தனத்தையும் கடந்து அழிவுகளை தடுத்து நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உக்ரைனின் பிரதான நகரங்கள் அழிவடைந்த நிலையில் ரஷ்யப் படைகள் பின்வாங்கியுள்ள நிலையானது ஒருபக்கம் அமைந்தாலும் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை மையப்படுத்தி ரஷ்யாவின் தாக்குதல் நிகழப் போவதாக உக்ரையின் ஜனாதிபதி எச்சரித்து வருகிறார். இக்கட்டுரையும் உக்ரையின் புச்சாப் பகுதியில் நிகழ்ந்த மனிதப் படுகொலை தொடர்பில் அதிகம் முதன்மைப்படுத்தப்படும் விடயத்தை தேடுவதாக அமையவுள்ளது.

உக்ரையினின் சிறப்புப் படையணியான அசோ பிரிவினரையும்  அவர்களுக்கு பயிற்சி வழங்குவதற்காக வருகைதந்த வெளிநாட்டுப் படைகளையும் உள்ளடங்கிய மீட்புப் பணி தோல்வியில் முடிந்ததாக தெரியவருகிறது. குறிப்பாக மரியப்போல் நகரை பாதுகாக்கும் இவ்விசேட படையணியானது ரஷ்யப் படைகளால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. அதனை மீட்பதற்காக உக்ரைன் விமானப் படையணியை நகர்த்தியது. அத்தகைய பணிக்கு முயன்ற உலங்குவானூர்திகள் ரஷ்யப் படைகளால் சுட்டுவீழ்த்தப்பட்ட பின்னர் அத்தகைய மீட்புப் பணியை கைவிட்டதுடன் உக்ரைனுக்கு பாரிய நெருக்கடியாக மாறியுள்ளது. அதனை அடுத்தே பாதுகாப்புச் சபையில் காணெளிமூலம் தோன்றிய உக்ரைன் ஜனாதிபதி பாதுகாப்புச் சபையை கலைக்குமாறும் ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து விலக்குமாறும் உக்ரைன் மக்களை தப்பிக் கொள்ளுமாறும் அறைகூவல் விடுத்துள்ளார்.   அதிகம் உணர்ச்சிவசத்தை வெளிப்படுத்தும் உக்ரையின் ஜனாதிபதி ரஷ்யா மீதான குற்றச்சாட்டுக்களை ஐரோப்பிய யூனியனிலும் ஐ.நா. சபையிலும் வெளிப்படுத்தி வருகிறார். தற்போது புச்சாப் படுகொலை தொடர்பில் போர் குற்றத்தை ரஷ்யா மீது பிரகடனப்படுத்தி வருகிறார். அத்தகைய படுகொலை தொடர்பில் முழுமையான அவதானிப்பு அவசியமானது.

முதலாவது  புச்சா நகரைவிட்டு ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னர் நடாத்தப்பட்ட தேடுதலில் 415மேற்பட்ட உடலங்களை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளதாக ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  அறிவித்துள்ளார். அத்தகைய உடலங்கள் கை கால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் தலைமீது துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பலர் உயிருடன் நிலத்தில் புதைக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் தெரியவருகிறது. இதனை ரஷ்ய இராணுவம் மேற்கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். மிக மோசமான படுகொலை எனவும் ரஷ்ய இராணுவம் அப்பாவி பொது மக்களை கொன்றெழித்துள்ளதாகவும் இது இனப்படுகொலை எனவும் அவர் ஐ.நா. சபையில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

இரண்டாவது அத்தகைய படுகொலையை நிராகரித்துள்ள ரஷ்யா தனது வெளியேற்றத்திற்கு பின்பே அத்தகைய சம்பவம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளது. அதே நேரம் புச்சா பகுதியில் இருந்து இந்திய ரூடே செய்தியாளரது காட்சிகளிலும் செய்திகளிலும் ரஷ்யப் படைகள் வெளியேறும் போது இரு தரப்புக்கும் இடையில் நிகழ்ந்த ஏவுகணைத் தாக்குதல்களால் அதிக சேதம் ஏற்பட்டதாகவும் ரஷ்யப் படைகள் மீது உக்ரைன் இராணுவம் தாக்குதலை அப்பிரதேசத்தில் நிகழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. அது மட்டுமன்றி உடலங்கள் அழுகிய நிலையில் இல்லாதுள்ளன என்பதையும் இந்திய ரூடே செய்தியாளர்களது காட்சிப்படங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் ரஷ்யப் படைகள் வெளியேறும் போது கொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதே நேரம் இவர்கள் பொதுமக்களா அல்லது பயிற்சி பெற்ற உக்ரைனிய படையினரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இருதரப்பும் கூறுகின்ற செய்திகளை பக்கச்சார்பற்ற விதத்தில் உறுதிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனையே இந்தியாவும் ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்துள்ளது. பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்பதை பல நாடுகள் கோரிவருகின்றன.

மூன்றாவது இனப்படுகொலையை அடுத்து பெரும் பிரசாரப் பணியை உக்ரைன் ஆரம்பித்துள்ளது. குறிப்பாக உக்ரைன் ஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையிலும் ஐரோப்பிய யூனியனிலும் இதர மேற்கு ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களிலும் காணெளி மூலம் உரையாற்றி வருகின்றார். அது மட்டுமன்றி அவரது கோரிக்கைகள் அதிதீவிரமாகவும் ஐரோப்பிய நிறுவனக் கட்டமைப்புகளை விமர்சிப்பதாகவும் அமைந்துள்ளது. ரஷ்யா மீதான போர்க் குற்றச்சாட்டை முதன்மைப்படுத்தும் உக்ரைன் அத்தகைய குற்றச்சாட்டை மேற்கு நாடுகளின் சர்வதேச நிறுவனங்களின் உதவியுடன் ரஷ்யாவையும் அதன் ஜனாதிபதியையும் நெருக்கடிக்குள்ளாக்க முனைகின்றது. இதன் மூலம் ரஷ்யாவின் இருப்பை முற்றாகவே தகர்க்கும் நடவடிக்கையில் மேற்குடன் கூட்டுச் சேர்ந்துள்ள ஜெலன்ஸ்கி நடைமுறையில் பிராந்திய அரசியலையோ அதனால் உக்ரைனியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினையோ கருத்தில் கொள்ள தயாரில்லாத தலைவராக உள்ளார். மக்களுடன் களத்தில் நிற்கும் தலைவராக இருந்தாலும் யாதார்த்தத்தை உணரும் தலைவராக இல்லாத நிலையை வெளிப்படுத்துகிறார். அவர் ஒரு சினிமா நடிகர் என்பதை மட்டுமே வெளிப்படுத்தும் தலைவராக உள்ளமை கவனத்திற்குரியதாகும்.

உக்ரைனின் அழிவுக்கு பின்னால் ஜெலன்ஸ்கியின் அணுகுமுறையிலுள்ள தவறே பிரதான காரணமாகக் கொள்ளப்படுகிறது. மேற்கையும் ரஷ்யாவையும் சமதூரத்தில் கையாண்டிருப்பதற்கு ஜெலன்ஸ்கி முனைந்திருந்தால் உக்ரைனை பாதுகாத்திருக்க முடியும். ஏறக்குறைய பின்லாந்து மாதிரியில் உக்ரைன் பயணித்திருக்க வாய்ப்பிருந்தது. 

நான்காவது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தொடர்ந்தும் ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக நேட்டோவிடம் ஆயுதங்களை கோரிவருகிறதைக் காணமுடிகிறது. குறிப்பாக அண்மையில் பெல்ஜியம் தலைநகர் பிரேசில்ஸில் நடைபெற்ற நேட்டோ அமைப்புக்களின் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்ட உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலிபா கலந்து கொண்டிருந்தார். அவர் நேட்டோ நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தினார். அவர் உரையாடும் போது, 'எனது நோக்கம் மிக எளிமையானது. அது என்னவென்றால், ஆயுதங்கள்' மூன்று தடவை குறிப்பிட்டார். 'எவ்வாறு சண்டையிடுவது எவ்வாறு வெற்றி பெறுவதென்று எங்களுக்கு தெரியும். ஆனால் உக்ரைன் கேட்டுக்கொண்ட நிலையான மற்றும் போதுமான ஆயுதங்கள் வழங்கப்படவில்லையென்றால் அந்தவெற்றியை மிகப்பெரிய தியாகத்துடனேயே எட்ட முடியும். அதிக ஆயுதங்கள் கிடைத்தால் புச்சா நகரில் நடந்த அநீதி போன்று நிகழாமல் தடுக்கவும் மனித உயிர்களை பாதுகாக்கவும் முடியும்' என்றார். இதிலிருந்து உக்ரைன் நேட்டோவில் சேராத நிலையில் நேட்டோ அங்கத்துவ நாடாகவே நேட்டோ விவகாரங்களில் பங்கெடுத்து கொள்கிறது.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேட்டோவில் இணையவில்லை எனக்குறிப்பிட்டாலும் நடைமுறையில் நேட்டோவின் ஆயுதங்களும், படைகளும், ஆலோசனைகளும் உக்ரைனின் போருக்கான அடிப்படை என்பதை மறுக்க முடியாது.

ஐந்தாவது, உக்ரைனின் மரியப்போ நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷ்யப்படைகள் நேட்டோவின் படைகள் மீதான தாக்குதலை மேற்கொள்வதாகவும், அவ்வாறு மரியப்போ முற்றுகைக்குள் அகப்பட்டுள்ள அந்நியப்படைக​ளை மீட்டெடுக்க உக்ரைன்  போராடுவதாகவும் தெரிய வருகின்றது. அத்தகைய படைகளின் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை முதன்மைப்படுத்திக் கொள்ளும் உக்ரைன் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினூடாக அங்கிருக்கும் உக்ைரனியர்களுக்கும் அந்நிய படைகளுக்கும் உணவு மற்றும் அடிப்படை தேவைகளை விநியோகிக்க முயற்சிக்கிறது.

ஏறக்குறைய மரியப்போ சுற்றி வளைப்பு என்பது உக்ரேனில் உள்ள நேட்டோ இராணுவத்தின் மீதான தாக்குதலுக்கான நடைமுறையாகவே காணப்படுகின்றது. இதுவே மரியப்போ நகரம் மீதான முக்கியத்துவம் அதிகரிக்க காரணமாகிறது.

எனவே, உக்ரைன் ரஷ்யப்போர் நீடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கின்ற அதேவேளை நேட்டோ நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடையை தீவிரப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவை தோற்கடிக்க முயலுகிறது. புச்சா படுகொலை பற்றிய பிரசாரம் ரஷ்யா மீதான பாரிய பொருளாதார தடைக்கு வழிவகுத்துள்ளது. இதன்மூலம் உலக நாடுகள் மத்தியில் ரஷ்யா தலைமையிலான அணியொன்றின் உருவாக்கமும் அவற்றுக்கான பொருளாதார ஒத்துழைப்பும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

உக்ரைன் -ரஷ்ய போருக்கு பின்னர் ரஷ்யாவின் உற்பத்திகள் இந்தியாவையும் ஆசிய, ஆபிரிக்க நாடுகளை நோக்கியும் அதிகரிக்க வழிவகுத்துள்ளது. எனவே புச்சா நகரில் ஏற்பட்ட படுகொலை சார்ந்த அரசியல் ரஷ்யாவிற்கு நெருக்கடியாக அமைந்தாலும் அதுசார்ந்து பக்கசார்பற்ற விசாரணைக்கான அழைப்பை இந்தியா முன்வைத்ததன் மூலம் நேட்டோ நாடுகளின் உபாயம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி அமெரிக்காவின் இராஜதந்திரிகள் குழு இந்தியாவுக்கு வருகை தந்த போதும் அதற்கு பின்பான அணுகுமுறைகளும் இந்திய, ரஷ்ய பெற்றோலிய இறக்குமதிகளை டொலர் நாணயத்தில் மேற்கொள்வதற்கான வழிமுறைகளை தெரிவித்ததோடு ருஷ்ய ரூபிள் நாணயத்தில் பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது என்ற வற்புறுத்தலை அமெரிக்கா இந்தியாவிற்கு விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவோ தனது பெற்றோலிய ஏற்றுமதி ரூபிள் நாணயத்திலேயே மேற்கொள்ளப்படுமெனவும், ஜேர்மனி ரஷ்யாவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளுமென்ற செய்திகளும் ரஷ்ய- உக்ரைன் போரின் மாற்றங்களாக கொள்ளப்படுகிறது.

பேராசிரியர்
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments