உக்ரைன்-ரஷ்யப் போர் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறுகிறதா? | தினகரன் வாரமஞ்சரி

உக்ரைன்-ரஷ்யப் போர் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக மாறுகிறதா?

உக்ரைன்- ரஷ்யப் போர் தளர்வுக்கான முனைப்புடன் நகர்வதாக தெரியவருகிறது. ரஷ்யா படைகளை விலக்கிக் கொள்வதாக அறிவித்த போது அமெரிக்க வெள்ளை மாளிகையின் தகவலின் பிரகாரம் படைகளை பின்வாங்காது ரஷ்யா செய்தியை மட்டும் வெளிப்படுத்துவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அச்செய்தியையே உக்ரைன் ஜனாதிபதியும் படைகளை பின்வாங்காது இடமாற்றம் செய்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் இரு நாட்டுக்குமான உரையாடல்களும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கான நகர்வுகளும் தொடர்வதனைக் காணமுடிகிறது.

அதேநேரம் உலகம் ரஷ்ய-, உக்ரைன் போரில் கவனம் குவிந்திருக்கின்ற போது வடகொரியா ஏமன் மற்றும் இஸ்ரேலின் நகர்வுகள் பற்றி அதிகம் முதன்மைப்படுத்தப்படுவதில்லை. இக்கட்டுரையும்  உக்ரைன்- ரஷ்யப் போர்  உலகளாவிய மட்டத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்களை தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, வடகொரியாவின்  அண்மைய நடவடிக்கைகள் அதிகம் இராணுவ ரீதியிலும் அமெரிக்காவுக்கு எதிரானதாகவும் காணப்படுகிறது. ரஷ்யா சீனாவின் கூட்டுக்குள் பயணிக்கும் வடகொரியா உக்ரைன் -ரஷ்யப் போரில் அமெரிக்கா சார்ந்த மேற்குலகத்திற்கு எதிராக அணுகுமுறையை வெளிப்படுத்தி வருகிறது. அத்தகைய வெளிப்படுத்தலில் ரஷ்யாவுக்கு ஆதரவான தோற்றப்பாட்டையும் போரில் திசைதிருப்பலுக்கான நகர்வுகளையும் முதன்மைப்படுத்தி வருகிறது. ​அதேநேரம் தனது இராணுவ பலத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பமாகவும் இக்காலப் பகுதியை வடகொரியா பிரயோகப்படுத்தி வருகிறது. குறிப்பாக கண்டம் விட்டு கண்டம் செலுத்தக்கூடிய ஏவுகணையை அண்மையில் (24.03.2022) பரிசோதித்ததன் மூலம் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை செய்துள்ளது. அமெரிக்காவின் எப்பாகத்தையும் தாக்கும் திறனுடைய ஹவாசோங்-17எனும் ஏவுகணை பரிசோதனை வடகொரியாவின் இராணுவ பலத்தை அதிகரிப்பை காட்டுகிறது. ஏற்கனவே அணுவாயுத வலுவுடைய வடகொரியா மீளவும் அத்தகைய அணுவாயுதத்தை காவிச் செல்லும் ஏவுகணைகளை தயாரிக்கும் திறனை உருவாக்கி வருகிறது. வடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சியானது அயல் நாடுகளான ஜப்பான், தென் கொரியா மட்டுமல்ல மேற்குலக நாடுகளுக்கும் ஆபத்தானதாகவே உள்ளது. பாரிய பொருளாதார நெருக்கடியின் மத்தியிலும் இராணுவ ரீதியான வளர்ச்சியே வடகொரியாவினது பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடியது என வடகொரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் இராணுவ ரீதியான பெருக்கமானது, சமகால உலகத்தை எதிர்கொள்வதென்ற அணுகுமுறையைத் தந்துள்ளதுடன் மேற்குலகத்தின் நெருக்கடிகால சூழலைப் பயன்படுத்திக் கொள்வதற்கான நகர்வாகவும் தெரிகி-றது. வெளிப்படையாக இராணுவ வளர்ச்சியே ரஷ்ய உக்ரைன் போர் உலக நாடுகளுக்கும் அதன் தலைவர்களுக்கும்' உணர்த்தி வருகிறது. வடகொரியாவும் அத்தகைய இராணு வலிமையினாலேயே அமெரிக்காவின் படையெடுப்புக்களிலிருந்து தப்பிக் கொள்ள காரணமாக அமைந்தது. அதனை தொடர வேண்டிய நிலையே வடகொரியாவுக்கு தந்துள்ள பாடமாக அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினதும் அமெரிக்காவினதும் பொருளாதாரத் தடைகளால் வடகொரியா தொடர்ச்சியாக இராணுவ வலிமையில் கவனம் கொள்வதை தவிர்க்க முடியாததாக்கியுள்ளது. ரஷ்யாவின் உக்ரைன் மீதான போர் உலகளாவிய சிறிய நாடுகளையும் அணுவாயுதங்களை தயாரிக்கத் தூண்டுவதாகவே உள்ளது.

இரண்டாவது,  ஏமனில் கடந்த எட்டு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் உள்ளாட்டு போர் சமாதானத்தை நோக்கி நகர்ந்துள்ளது. குறிப்பாக இஸ்லாமிய மக்களின் புனித மாதமான ரம்ழான் காலப்பகுதியில் போர் நிறுத்தத்தை சவுதி அரோபிய கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன. இத்தகைய தற்காலிக போர் நிறுத்தமானது ஏமனில் ஓர் அமைதியை ஏற்படுத்தும் என்ற செய்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் சவுதிக் கூட்டுப்படைகளின் இத்தகைய போர் நிறுத்த அறிவிப்பை ஹவுத்தி கிளர்ச்சிக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் ஐக்கிய நாடுகள் சபை போர் நிறுத்த அறிவிப்பை வரவேற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2015ஆம் ஆண்டு தென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் சுன்னி முஸ்லிம் பிரிவுக்கும் ஷியா முஸ்லிம் பிரிவுக்கும் இடையில் தொடங்கிய போர் எட்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. குறிப்பாக ஏமனின் சுன்னி பிரிவைச் சேர்ந்த ஜனாதிபதி மன்சூர் ஹைதிக்கும் ஹியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையில் போர் நிகழ்துவருகிறது. மன்சூர் பதவி விலகிய பின்னர்  ஜனாதிபதியாக அலி அப்துல்லா சாலே பதவியேற்றார். உள்நாட்டுப் போரில் ஏமன் அரசுக்கு ஆதரவாக சவுதி அரேபியாவும் கிளர்ச்சிக் குழுவுக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுவதனால் போர் நீண்ட நெருக்கடியை தந்துள்ளது. ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட பொது மக்கள் கொல்லப்பட்டதாவும்' பல இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் உண்டு. ஏறக்குறைய ஒரு ஈரான் -ஈராக் போர் போன்று இப்போர் நகர்கிறது. சவுதியின் ஏமனுக்கு ஆதரவான நடவடிக்கைக்கு எதிராக ஹவுத்திக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அதிகம் பொருளாதார நெருக்கடியையும் மனித அவலத்தையும் தருவதாக சவுதி குற்றம் சாட்டிவருகிறது. அதேநேரம் சவுதி மட்டுமன்றி மேற்கு நாடுகளும் அக்கிளர்சிக் குழுக்களுக்கு எதிராக ஏமன் ஆட்சிக்கு உதவுவதாக ஈரான் குற்றம் சாட்டுகிறது. உலகில் இராணுவத்திற்காக அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் பட்டியலில் சவூதி அரேபியா இரண்டாவது இடத்தில் இருப்பதென்பது கவனத்திற்குரியதாகும்.

மூன்றாவது, இஸ்ரேலின் நகர்வுகள் பாரிய தாக்குதல் உத்தியைக் கொண்டுள்ளது என ஈரான் மற்றும் சிரியா போன்ற நாடுகள் குற்றம் சாட்டிவருகின்றன. குறிப்பாக ஈரானின் அணுவாயுத உற்பத்திக்கான நடவடிக்கைகளை தடுக்கும் விதத்தில்' பெரும் தாக்குதலை நிகழ்த்த இஸ்ரேல் திட்டமிடுவதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே ரஷ்யாவின் போர்ச் சூழலிலும் அந்த நாட்டின் ஜனாதிபதியுடன் இஸ்ரேலிய பிரதமர் ரஷ்யாவுக்கு விஜயம் செயதமையும் ரஷ்யாவுக்கு எதிரான ஆதரவை வெளிப்படுத்தியமையும் கவனத்திற்குரியதாகும். அந்த வரிசையில் பாரிய போருக்கு இஸ்ரேல் திட்டமிடுவதாக குற்றச்சாட்டுக்கள் வெளியாகியுள்ளன. அது மட்டுமன்றி பாலஸ்தீனம் மீதான அடக்குமுறைகளை முதன்மைப்படுத்தும் இஸ்ரேல் உக்ரையினிலிருந்து வெளியேறும் யூதர்களை இஸ்ரேலில் குடியமர்த்துவதை அதிக சிரத்தையுடன் கையாண்டுவருகிறது. ஏறக்குறைய யூதர்களின் சனத் தொகையை அதிகரிக்கச் செய்வதன் மூலம் பாலஸ்தீனர் மீதான வெளியேற்றத்தை திட்டமிட்டு இஸ்ரேல் நகர்த்துகிறது. ரஷ்ய- உக்ரையின் போர் இஸ்ரேலுக்கு இராணுவ நகர்வையும் போருக்கான நடவடிக்கையையும் இலகுபடுத்தியுள்ளனது.

நான்காவது பாகிஸ்தானின் தற்போதைய ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் விதத்தில் எதிர்க்கட்சிகளது கூட்டு நகர்வு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் இம்ரான்கான் பெரும்பான்மையை இழக்கும் நிலை ஏற்படும் என எதிர்வு கூறப்படுகிறது. ஏறக்குறைய வாக்கெடுப்புக்கான திகதி குறிப்பிடப்பட்டுள்ளதுடன் சட்டத்துறையில் விவாதம் நிகழ்ந்து வருகிறது. ஏப்ரல் மூன்றாம் திகதி ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் நிலையில் தெஹ்ரிக்- ஈ-இன்சாப் கட்சியின் முத்த உறுப்பினர் பைசல் வக்டா இம்ரான்கானுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்டிருகிறது என எச்சரித்துள்ளார். இது ஏறக்குறைய பாகிஸ்தானின் அரசியலில் நிகழும் வழமையான நிகழ்வாகவே தெரிகிறது. அதாவது ஜனநாயக ஆட்சியாளர்கள் தமக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் இவ்வாறு கூறிக்கொண்டு ஒன்று இரண்டு குண்டுகளை வெடிக்க வைத்துவிட்டு இராணுவ ஆட்சியை கட்டமைக்கும் தன்மை ஏற்படுவதை கடந்த காலத்தில் அவதானிக்க முடிகிறது. அல்லது இராணுவ எச்சரிக்கைகளை மேற்கொண்டு பெரும்பான்மை ஆதரவைத் திரட்டுவதை காணமுடிகிறது. அதற்கான நகர்வுகளுடனேயே இம்ரான் கான் செயல்படுகின்றார்.

எனவே மரியப் போலில் பாரிய போர் நிகழ்ந்த போதும் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் அறிவிப்புடன் இரு நாட்டுக்குமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தும் உலக நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையை அதிகரித்துவருகின்றன. அதே நேரம் அமெரிக்கா ரஷ்யா மீதும் ரஷ்ய  ஜனாதிபதி மீதும் அதிக குற்றச்சாட்டை போலந்து விஜயத்தின் போது பைடன் முன்வைத்தாலும் பின்னர் அதனை பின்வாங்கியுள்ளமை அதிகமான செய்தியை வெளிப்படுத்துகிறது. மேற்கின் நெருக்கடியும் ரஷ்யாவின் நகர்வுகளும் அதிக மாற்றத்தை உலகம் அடையும் என்பதை மீளவும் பைடனின் போலந்து விஜயம் உணர்த்துகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments