உக்ரைன்-ரஷ்யப் போர் மேற்குலகின் வெற்றியை நோக்கி நகர்கிறதா? | தினகரன் வாரமஞ்சரி

உக்ரைன்-ரஷ்யப் போர் மேற்குலகின் வெற்றியை நோக்கி நகர்கிறதா?

உக்ரைன் -ரஷ்ய போர் பலதிருப்பங்களை நோக்கிநகர்கிறதை அண்மிய பதிவுகள் காட்டுகின்றன. மேற்குலகத்தின் ஒத்துழைப்புடன் உக்ரைன் ஜனாதிபதி ஜெலஸ்கி ரஷ்யாவினை முற்றாகவே துடைத்தளிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகின்றதைக் காணமுடிகிறது. உக்ரைன் ஜனாதிபதியும் பிரதமரும் யூதர்களாக இருப்பதோடு இஸ்ரேலிய அணுகுமுறைகளை பின்பற்றுவதில் அதிக கவனம் கொண்டிருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது. அதாவது தமது இலக்கை அடைவதற்கு எத்தகைய எல்லையையும் பயன்படுத்துவதிலும் அதனை வெற்றி கொள்வதிலும் யூதர்களது உத்திகள் தனித்துவமானது. இறுதிவரையும் போராடும் திறனும் துணிவும் யூதர்களுக்கே உரியது. அதனையே ஜெலஸ்கி பின்பற்றுவதைக் காணமுடிகிறது.

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்யா மேற்கொள்ளாது விட்டாலும்  போரில் தோற்றுப் போனாலும் ஒரே விளைவையே ஏற்படுத்தும். அதனால் போரை வெற்றி கொள்வதில் அதிக சிரத்தையை ரஷ்யா எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.  இக்கட்டுரையும் மேற்குலகம் மற்றும் உக்ரைனின் உத்திகளையும் ரஷ்யாவின் நகர்வுகளையும் அளவிடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, மேற்கின் ஊடகப் போர் பெரும் வெற்றியை ரஷ்ய-உக்ரைன் போரில் எட்டியுள்ளது. மேற்குலக ஊடகங்களாலும் அதன் உபாயங்களாலும் கட்டமைக்கப்பட்ட ஊடக உலகம் போர் பதிவுகளை உக்ரைனுக்கு ஆதரவாகவும் ரஷ்யாவுக்கு எதிராகவும் வெளிப்படுத்துவதில் வெற்றி கண்டுள்ளது. போர்க் களத்தில் ஏற்பட்டுள்ள இழப்புக்களை உலகம் முழுவதும் பரப்புவதிலும் அதனூடாக அனுதாபத்தை ஏற்படுத்துவதிலும் ஊடக உத்தி வெற்றியளித்துள்ளது. அது மட்டுமன்றி மேற்குலகத்தின் விருப்புக்களையும் தேவைகளையும் உக்ரைன் பின்பற்றும் வரையும் ஊடகப்பரப்பு உக்ரைனுக்கானது. அதில் ரஷ்யாவும் அதன் உத்திகளும் தோல்விகரமானவையாகவே காட்சிப்படுத்தப்படும்.

இரண்டாவது, மேற்குலகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து உலகளாவிய நிறுவனங்களும் நிதி மையங்களும் வர்த்தக கட்டமைப்புகளும் உலகளாவிய நீதி பொறிமுறைகளும் ரஷ்யாவுக்கு எதிரானதாக திருப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு எதிரான போர்க் குற்றங்களை ஆதாரப்படுத்தியுள்ள மேற்குலகம் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வெற்றிகரமாக (13வாக்குகளால்) நிறைவேற்றியுள்ளது. பொருளாதாரத் தடைகளை வெற்றிகரமாக ரஷ்யா எதிர்கொண்டதனால் அடுத்த நகர்வுக்கு மேற்குலகம் ஈடுபட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ரஷ்ய ஜனாதிபதி புடினை ஒரு போர்க் குற்றவாளி என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். அதாவது இப்போர் அமெரிக்க -ரஷ்யப் போராகவே தென்படுகிறது. அதாவது அமெரிக்கா ஆயுதங்களை வழங்குகிறது. ஏனைய நேட்டோ நாடுகளை ஆயுதம் வழங்குமாறு வற்புறுத்துகிறது. பாரிய நிதி உதவிகளை உக்ரைனுக்கு வழங்குகிறது.

அமெரிக்க காங்கிரஸ் அமைப்பை கூட்டி உக்ரைன் ஜனாதிபதியை உரையாற்ற ஏற்பாடு செய்துள்ளது. அவ்வுரையில் ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்ததுடன் எந்த விட்டுக் கொடுப்புக்கும் தயாரில்லை என்பதை தெரிவித்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜெலன்ஸ்கியை பாராட்டியதுடன் அவரது துணிச்சலை மெச்சினார்கள். ஒரு சந்தர்ப்பத்திலேனும் அமெரிக்கா விடும் தவறுகளை ஜெலன்ஸ்கி குறிப்பிடவில்லை. மக்களுடன் இணைந்து போராடும் தலைவன் தான் உக்ரைன் ஜனாதிபதி ஆனால் தனது மக்களை பாதுகாக்கும் உத்திகளையோ புவிசார் அரசியல் தனித்துவத்தையோ ரஷ்யாவின் பலத்தையோ எடைபோடாத தலைவராகவே உள்ளார். அதேநேரம் மேற்குலகத்தின் அடிமைத்தனத்தை மீள மீள உறுதிப்படுத்துகிறார். நேட்டோ நேரடியாக போருக்கு வராத போதே மேற்கை உக்ரைனியர்கள் உணர்ந்திருக்க வேண்டும். பலமான போரியல் ஆயுதங்களைக் கூட அமெரிக்கா நேரடியாக வழங்க மறுக்கிறது. ஏறக்குறைய போரில் களத்தை உக்ரைன் இழக்கும் நிலைக்குள் போர் களம் நகர்வதாக போரியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிரச்சாரப் போரில் மட்டும் உக்ரைன் வெற்றியை உறுதிப்படுத்துகின்றன மேற்குலக ஊடகங்கள். மேற்குலகம் உலகளாவிய ரீதியில் ரஷ்யாவுக்கும் புடினுக்கும் எதிரான பெரும் பிரசாரப் போரை நிகழ்த்திவருகிறது. ஏறக்குறைய அமெரிக்கா போரை நடாத்தும் நாடாகவே உள்ளது. உக்ரைன் பலியிடப்படும் தேசமாக மாறுகிறதை அமெரிக்கா கச்சிதமாக நிறைவேற்றிவருகிறதை அவதானிக்க முடிகிறது. ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமான போரை உக்ரைன் தற்போது நிகழ்த்தி வருகிறது. உக்ரைன் மக்கள் சிந்தும் ஒவ்வொரு குருதித்துளியும் அமெரிக்காவின் அதிகார இலக்குக்கானதாகவே உள்ளது.

மூன்றாவது, தற்போது அமெரிக்கா ரஷ்யாவின் நட்புக்களை உடைப்பதில் முனைப்பாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே ரஷ்யாவுடனான இந்திய உறவை  முறியடிக்க முடிந்தவரை முயன்று தோற்றுப்போன அமெரிக்கா தற்போது சீனாவுடனான தனது பேரம் பேசலைத் தொடக்கியுள்ளது. இரு நாட்டுத் தலைவர்களுக்குமான உரையாடல் அதிக முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் என மேற்கு ஊடகங்கள் செய்தி வெளியிட ஆரம்பித்துள்ளன. ரஷ்யா சீனாவிடம் ஆயுத தளபாடங்களை கோரியிருப்பதாகவும் ஏற்கனவே இந்தியாவிடம் ரஷ்யா ஆயுத தளபாடங்களையும் கோரியதாகவும் மேற்கு ஊடகப் பிரசாரம் நிகழ்த்தி வருகின்றது. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகள் கிழக்கைரோப்பிய நாடுகள் மௌனம் சாதிக்கும் சூழலில் அமெரிக்கா நேட்டோவுக்கு வெளியே அமெரிக்கா ரஷ்யாவுக்கான வாய்ப்புகளை தகர்கிற முயற்சியில் ஈடுபடுகின்றதைக் காணமுடிகிறது. அதாவது நேட்டோவிலுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளால் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்க முயன்ற அமெரிக்கா தோற்ற நிலையில் அந்நாடுகள் நேரடியாக ஆயுதம் வழங்க மறுத்த போதே சீனாவுடனான உரையாடலை தொடக்கியுள்ளது. சீனாவுடனான வர்த்தக மற்றும் சந்தையில் அமெரிக்காவுக்கு இழுபறி கடந்த பல ஆண்டுகளாக நீடிக்கும் நிலையில் இந்த உரையாடல் நிகழ்ந்துள்ளது. ரஷ்யாவுக்கான ஆதரவை வெளிப்படையாக சீனா கையாண்டாலும் மறைமுகமாக சீனாவின் ஆதரவு ரஷ்யாவுக்கே உண்டு என்பதை முன்கூட்டியே மேற்கு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.

நான்காவது, உக்ரைன்  ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜேர்மன் பாராளுமன்றங்களில் காணெளி மூலம் நிகழ்த்திய உரையில் போரை நிறுத்த உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அது மட்டுமல்ல விமானங்களையும் ஆயுத தளபாடங்களையும் வழங்குமாறும் போரில் நேட்டோவின் ஈடுபாட்டை வழங்குமாறும் கோரியுள்ளார். உக்ரைன் வான்பரப்பை பாதுகாக்க விமானம் பறப்பதற்க்கு தடைவிதிக்குமாறு அவர் கோரியுள்ளார். ஏறக்குறைய நேட்டோவை போரில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையே அவரிடமுண்டு. அவை அனைத்தையும் அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஐந்தாவது, ரஷ்யாவின் உத்திகள் உலகளாவிய ரீதியில் பலவீனமானவையாகவே உள்ளன. ஊடகப் போரில் ரஷ்யாவின் தோல்வி யதார்த்தமாகவே தெரிகிறது. ஆனால் களத்தில் உக்ரைனின் விமானப் படையை தகர்த்துள்ளது. உக்ரைனின் விமானப்படைப் பலத்தை விமானத் தளங்களில் வைத்தும் ஏவுகணைத் தாக்குதல் மூலமும் உடைத்துள்ளது. தற்போது அயல் நாடுகளிடமிருந்து விமானங்களை வழங்குமாறு உக்ரைன் கோரி வருகிறது. அதற்கான வாய்ப்பினை அயல் நாடுகள் மறுத்து வருகின்றன. அவ்வாறே கடற்படையின் பலமும் ரஷ்யாவால் தகர்க்கப்பட்டுள்ளது. கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கம் நிரந்தரமானதாக உள்ளது. உக்ரைனின் துறைமுகங்களையும் அதன் நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது. ஏறக்குறைய ஒரு கொரில்லா போர் முறைக்கு உக்ரைன் போக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மேற்குலக போரியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். ரஷ்யா உலகளாவிய ரீதியில் பலவீனமாகவும் போர்க்களத்தில் பலமாகவும் காணப்படுவதாக அத்தகைய போரியல் ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

எனவே உக்ரைன்- ரஷ்யப் போர் நீடிப்பதற்கான களத்தை மேற்குலகம் தயார் செய்கிறது. எந்தவித உத்தியுமற்ற உக்ரைன் மேற்குலகத்தின் நலனுக்கு பலியிடப்படும் நிலைக்குள்ளேயே அகப்பட்டுள்ளது. ரஷ்யாவையும் அதன் பலத்தையும் உக்ரைனை வைத்து தகர்க்க முடியுமென மேற்குலகம் கணக்குப் போட்டுள்ளது. இந்தியாவும் சீனாவுமே ரஷ்யாவின் உலகளாவிய பலமாக உள்ளது. அதன் முடிவுகளே அதிக மாற்றத்தை தரக்கூடியவை. ஆனால் அவற்றின் புவிசார் அரசியல் தீர்மானமே மேற்கை பாதிக்கும் விடயமாக மாறியுள்ளது. உக்ரைனைப் போன்ற நாடுகள் அல்ல சீனாவும் இந்தியாவும். அதனால் ரஷ்யாவுக்கான விளிம்பு நிலம் தனித்துவமானதாகவே அமையும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments