ரஷ்யாவின் போர் தந்திரமும் மேற்குலக ஊடகப் போர் தோல்வியும் | தினகரன் வாரமஞ்சரி

ரஷ்யாவின் போர் தந்திரமும் மேற்குலக ஊடகப் போர் தோல்வியும்

உக்ரைன்-ரஷ்ய போர், தீவிரத்தின் எல்லையை நோக்கி நகர்கிறது.

ஏறக்குறைய கீவ் நகரை ரஷ்யப் படைகள் நெருங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ரஷ்யாவின் தாக்குதலின் தாமதமும் அதன் போக்கில் காணப்படும் நகர்வுகளையும் தற்போதைய ஊடக உலகம் தேட ஆரம்பித்துள்ளது. அமெரிக்க புலனாய்வுத் தகவல்படி 96மணித்தியாலத்தில் கைப்பற்றக் கூடிய உக்ரைனை ஏன் ரஷ்யா இரண்டு வாரங்களையும் கடந்தும் கைப்பற்றாதுள்ளது என்பதே பிரதான குழப்பமாக மேற்கு ஊடகங்களுக்கும் நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளது. இக்கட்டுரையும் ர‌ஷ்யாவினது நகர்வில் உள்ள உபாயங்களைதேடுவதாகவே அமையவுள்ளது.

முதலாவது, ரஷ்ய -உக்ரைன் போர் ஒப்பீட்டடிப்படையில் நிதானமாகக் கையாளப்படுகிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான போரை தரிசித்த உலகத்திற்கு ரஷ்யாவின் நகர்வு நிதானமாகவே தெரிகிறது. பெரும் ஆக்ரோசமான போராக அமையாமை பற்றிய உரையாடல்கள் பல தளத்தில் அதிக சந்தேகங்களை உருவாக்க ஆரம்பித்துள்ளது. விளாடிமிர் புடின் போரை மேற்கொள்வது பற்றி நீயூயோர்க் ரைம்ஸ் குறிப்பிடுவதை அவதானிப்பது அவசியமானது. ரஷ்யா இப்போரின் மூலம் பலமான கட்டமைப்புக்களை ஈரோசியன் பிராந்தியத்தில் விருத்தி செய்வதில் முனைப்புக் கொள்கிறது. அதன் அடுத்த படி பூகோள அரசியலாகவே தெரிகிறது. அது புவிசார் அரசியலாக மட்டுமல்லாது இராணுவ ரீதியிலும் அதன் இருப்பியல்வாத அணுகுமுறையை விருத்தி செய்வதுடன் அதில் தனது வெளிப்பாட்டை அடையாளப்படுத்த முனைகிறது. அது மட்டுமன்றி அத்தகைய இருப்பியல்வாதம் அல்லது யதார்த்தவாதமானது நடைமுறைசார் நிலையை மட்டும் உள்ளடக்கியதல்ல. அது அடிப்படைவாதத்தையும் புரட்சிகரமான மாற்றத்தின் வரலாற்றையும் பிரதிபலிக்கக் கூடியது  என இவ்விதழ் குறிப்பிடுகிறது.

இரண்டாவது, ரஷ்யா போரையும் சமாதான முயற்சியையும் ஒரே நேரத்தில் பிரயோகப்படுத்திவருகிறது. ஆரம்பத்தில் பெலாரஸ்ல் மூன்று சுற்றுப் பேச்சுக்களை நிகழ்த்திய இரு நாடுகளும் தற்போது முதலாவது கட்டப் பேச்சுவார்த்தையை துருக்கியில் நிகழ்த்தியுள்ளன. அனைத்துப் பேச்சுக்களும் தோல்வியில் முடிந்த போதும் ரஷ்யா அதனை ஒரு இராஜதந்திர நகர்வாக மேற்கொண்டுள்ளது. அதற்கான காரணங்கள் எதுவாக அமைந்தாலும் மேற்குலகத்தின் செய்முறையை கையாளும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது. இதனூடாக இப்போரின் அதீத நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்துவதை தவிர்க்க முடியும் எனக் கருதுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்றாவது, ரஷ்யா மீதும் ரஷ்ய அதிகாரவர்க்கம் மீதும் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் மேற்கொண்டுவரும் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவை பாதிப்பதாகவே உள்ளது. அதேநேரம் மறுபக்கத்தில் ரஷ்யாவினது ஐரோப்பா நோக்கிய பெற்றோலிய எரிவாயு ஏற்றுமதிகள் மற்றும் ஆயுத தளபாடங்களுக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதி என்பன ஐரோப்பாவையும் இதர நாடுகளையும் பாதிக்கும் ஒன்றாக மாறியுள்ளது. உலகளாவிய பெற்றோலிய உற்பத்தியில் மூன்றாவது நிலையை கொண்ட ரஷ்யாவின் ஏற்றுமதி ஐரோப்பாவை பாதிப்பதற்கான உபாயத்தை ரஷ்யா கொண்டிருக்கிறதென்பதை போர் வெளிப்படுத்துகிறது. இப்போரை காலநீடிப்பு செய்வதன் மூலம் ஐரோப்பாவை அமெரிக்காவிடமிருந்து பிரிக்க முடியுமா என்பதை ரஷ்யா பரிசீலிக்க முயலுகிறது. அமெரிக்காவிடம் பெற்றோலியம் காணப்பட்டாலும் ரஷ்யாவுக்கு நிகரானதாக இல்லை என்பதுவும் அரபுலகத்தில் தங்கியிருக்கும் போது மேற்குக்கு அதிக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதையும் புரிந்து கொள்வது அவசியமானது. அரபு உலகத்தின் பெற்றோலிய வளமுள்ள நாடுகளிலும் ரஷ்யாவின் செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பதையும் நிராகரித்துவிட முடியாது.

நான்காவது, போரின் நீடிப்புக்கு மேற்குலகம் குறிப்பிடும் காரணங்களை விட ரஷ்யர்கள் திட்டமிட்டுள்ள காரணம் தனித்துவமானது. உக்ரைன் என்பது ரஷ்யாவின் அயல் நாடு மட்டுமல்ல பண்பாட்டு உறவும் வளமும் உடைய தேசமாகும். அதனை வெற்றி கொள்வதென்பது அமெரிக்கா ஆப்கானிஸ்தானையோ ஈராக்கையோ கைப்பற்றியது போலல்ல. அது எதிரியை அழித்துவிட்டு ஆதிக்கத்தை நிலைப்படுத்திய போர். உக்ரைன் மீதான போர் அப்படியானதல்ல. உக்ரைனியர்கள் ரஷ்யர்களின் மொழிவளத் தொடர்பும் கலாசார நெருக்கமும் கொண்ட மக்கள் கூட்டமாகும். அது மட்டுமன்றி உக்ரைனில் இருக்கும் ரஷ்ய மக்களையும் அவர்களது வாழ்வியலையும் போர் கவனத்தில் கொள்கிறது. உக்ரைனின் புதிய ஆட்சி அல்லது ரஷ்யாவுக்கு எதிரான ஆட்சி அல்லது மேற்குலகத்திற்கு விசுவாசமான ஆட்சி உக்ரைனில் வாழ்ந்த ரஷ்யர்களையும் அவர்களது வாழ்வையும் அழித்தொழிப்பதில் கடந்த காலம் முழுவதையும் பயன்படுத்தியுள்ளது. உக்ரைனிலுள்ள ரஷ்ய மக்கள் அழிக்கப்பட்டதுடன் அவர்களது அடையாளத்தை இல்லாமல் செய்வதற்கான நகர்வுகளை உக்ரைன் ஆட்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர். கனடா உட்பட மேற்கு நாடுகள் உக்ரைனிய இராணுவத்தை ரஷ்யாவுக்கு எதிராக வளர்ப்பதில் கவனம்செலுத்தியுள்ளன. போர் தொடங்கிய போதே கனடிய இராணுவப் பயிற்சியாளர்கள் உக்ரைனை விட்டு வெளியேறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும். எனவே தான் ரஷ்ய படையெடுப்பின் அவசியமும் அதன் நிதானிப்பும் காணப்படுகிறது.

ஐந்தாவது, மேற்கு ஊடகங்களது பிரதான பிரசாரத்தில் ஒன்றாக அமைந்திருப்பது உக்ரைனை அடுத்து முன்னாள் சோவியத் குடியரசுகளை நோக்கியதாக ரஷ்யப் போர் அமையும் என்பதாகும். அதனால் ஏனைய முன்னாள் குடியரசுகளை மேற்குடன் இணைத்துக்கொள்ள முடியுமென மேற்கு திட்டமிடுகிறது. அது மட்டுமன்றி ரஷ்ய ஜனாதிபதி ஒரு சர்வாதிகாரி என்பதை நிறுவுவதில் கவனம் கொண்டிருந்தது. அதனைக் கவனித்த ரஷ்யா போரில் ஏற்படக்கூடிய இழப்புக்களை கட்டுப்படுத்துவது பிரதான உத்தியாக அமைந்துள்ளது. அதனால் கொல்லப்படும் உக்ரேனியரது எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதுடன் மேற்குலகம் குறிப்பிடுவது போல் ரஷ்யா போரை கொடூரமானதாக நிகழ்த்தவில்லை என்பதுவும் முன்னாள் குடியரசுகள் இலக்கல்ல என்பதையும் தெளிவுபடுத்துகிறது. அத்துடன் இப்போர் உலகளாவிய போர் அல்ல என்பதையும் ரஷ்யா நிறுவ முயலுகிறது.

ஆறாவது, போரில் முழுமையாக உக்ரைனை கைப்பற்றுவதை விட ரஷ்யாவுக்கு ஆதரவான சக்திகளிடம் உக்ரைனை ஒப்படைப்பதற்கான கைப்பற்றலையே பிரதான நோக்கமாக ரஷ்யா கொண்டுள்ளது. அதற்கு அமைவாகவே போரை ரஷ்யா மேற்கொள்கிறது. உக்ரைன் மக்களும் ரஷ்ய மக்களும் ரஷ்யாவுக்கு ஆதரவானவர்களாக இருக்கும் ஆட்சியுமே ரஷ்யாவின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்திற்கும்  அவசியமானதாக உள்ளது என்பதை போரின் நகர்வு தெளிவுபடுத்துகிறது. எனவே போரின் இழப்பீடுகளை மட்டுப்படுத்த வேண்டுமாயின் அதன் வேகத்தை மட்டுப்படுத்துவது அவசியமானது என்பதை ரஷ்யா வெளிப்படுத்துகிறது. குறிப்பாக கீவ் நகரத்திற்கு 60கீ.மீ. அப்பால் ரஷ்யாவின் கவச வாகனங்களும் அதன் படையணிகளும் நான்கு நாட்கள் வீதியோரத்தில் காணப்பட்டதாகவும் செய்தியொன்று வெளியாகியிருந்தது. அப்போது எந்த விமானத் தாக்குதலோ அல்லது பீரங்கித் தாக்குதலோ நிகழ்ந்ததாக தகவல் இல்லை என்பதையும் அவ்வாறே ரஷ்ய பீரங்கிகள் எந்த தாக்குதலையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் அச் செய்திச்சேவை வெளிப்படுத்தியுள்ளது.

ஏழாவது, ரஷ்யா போரை தாமதப்படுத்துவதன் மூலம் உக்ரைன் தற்போதைய ஜனாதிபதியை மேற்குலகத்திற்கு தப்பியோட வைக்க திட்டமிடுகிறதைக் காணமுடிகிறது. காரணம் ரஷ்யாவுக்கு ஒரு ஆட்சி மாற்றமே தேவைப்படுகிறது. அதனை ஒரு புரட்சியினூடாக சாத்தியப்படுத்தியிருக்க முடியுமென யாரும் வாதிக்கலாம். ஆனால் அதற்கான சூழலை மேற்கு வழங்காத நிலையை உருவாக்கியிருந்தது. காரணம் உக்ரைன் நேட்டோவுக்குள் சேருமாயின் ரஷ்யாவின் பாதுகாப்பும் இருப்பும் மேற்கினால் அழிக்கப்படுவது இலகுவானதாக அமைந்திருக்கும். ரஷ்யா உலகத்தின் இருதய நிலம் என்பதை ரஷ்யர்கள் மட்டுமல்ல மேற்குலகம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. அதனாலேயே ரஷ்யாவை நோக்கி நகர்வதில் மேற்குலகம் கரிசனை கொண்டுள்ளது.

எனவே ரஷ்யா போரை தனது திட்மிடலுக்குள் வைத்து நகர்த்துகிறது. உலக நாடுகளது பொருளாதாரத் தடைகளையும் விமானப் போக்குவரத்து தடைகளையும் ஏற்றுமதி இறக்குமதி தடைகளையும் கடந்து நிதானமாக நகர்த்துகிறது. எந்த நெருக்கடியும் இன்றி போர் கையாளப்படுகிறது.

தற்போது உக்ரைனுக்கு ரஷ்ய நட்பு நாடான சீனா மனிதாபிமான உதவி செய்ய முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். போரில் மேற்கு ரஷ்யாவிடம் தோற்பது என்பதை விட ரஷ்ய போரியல் தந்திரத்தற்குள் தோற்கிறதாகவே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments