ஆடிப்பூசை | தினகரன் வாரமஞ்சரி

ஆடிப்பூசை

ஆடிமாதத் தேர்த்திருவிழாவினால் அந்தத் தோட்டமே களைகட்டியிருந்தது. லயக் காம்பிராக்களின் முன்னால் வாழைமரம் கட்டப்பட்டு மாவிலைத் தோரணங்கள் போடப்பட்டு மிக அழகாக காட்சி தந்தது. கோயிலிலிருந்து ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன. எங்கு பார்த்தாலும் ஒரே பக்தி மயம். ஆண்கள் வேட்டி சட்டையோடும், பெண்கள் வர்ண வர்ண பட்டுச்சேலைகளோடும், விடலைப் பெண்கள் தாவணியோடும் ஆனந்தமாக அங்குமிங்குமாக அலைந்து கொண்டிருந்தனர். தோட்டப் பகுதியில் என்னதான் வறுமை நிலை திகழ்ந்தாலும் இந்தத் தொழிலாளர்கள் ஆடிப்பூசை எனப்படும் இந்த ஆடிமாதத் திருவிழாவை மிகவும் சிறப்பாக நடத்தி விடுவார்கள். ஒவ்வொரு தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமாவது அல்லது இரண்டு நாள் சம்பளமாவது இதற்காக ஒதுக்கப்படும். அத்தோடு இந்த தோட்டத்தில் பிறந்து, வளர்ந்து வெளிநாடுகளிலும் தொழில் புரிவோரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்வது வழக்கம். அது மட்டுமல்ல தோட்டத்துக்கு பக்கத்தில் உள்ள நகருக்கும் சென்று அங்குள்ள கடைமுதலாளிமார், தனவந்தர்கள், நலன் விரும்பிகள் ஆகியோரிடம் நன்கொடை வசூலும் செய்வார்கள். இந்தத் திருவிழா நான்கு ஐந்து நாட்களாக நடைபெறும். முதல் நாளில் கம்பம் ஊன்றி திருவிழாவை ஆரம்பித்து வைப்பார்கள்.

தோட்டத்துரையைத் தான் பிரதான அமைப்பாளராக நியமிப்பார்கள். அவரை முறைப்படி கௌரவத்துடன் மேளதாளத்தோடு அவருடைய பங்களாவில் இருந்து அழைத்து வரும் காட்சி பெரியதொரு அமைச்சரை அழைத்து வருவது போன்று அற்புதமாக இருக்கும். அதேபோல் அந்தத் தோட்டத்தில் கடமை புரியும் பெரிய கிளாக்கர், பெரிய கணக்கப்பிள்ளை, தலைமைத் தொழிற்சாலை உத்தியோகத்தர் உட்பட அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து திருவிழாவுக்கு அழைத்து வருவார்கள். கொடியேற்றம், தீமிதிப்பு, அன்னதானம், ரதபவனி, நீர்வெட்டு என்ற நிகழ்வுகளையெல்லாம் நிகழ்த்துவார்கள். இறுதியில் முருகப்பெருமானை தேரில் வைத்து தோட்டத்தை சுற்றி வருவார்கள்.

அதே போன்று முருகப்பெருமான் தேரில் இன்று வலம் வரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள இரண்டு உள்ளங்கள் காத்திருந்தன.

முத்தையன் இதே தோட்டத்தில் பிறந்து வளர்ந்து இங்கேயே ஒரு தொழிலாளியாக இருந்து வருபவன். வாட்டசாட்டமான இளைஞன். அவனைக் கண்டால் எந்தப் பெண்ணும் ஒரு கணம் ஏறெடுத்து பார்ப்பாள். அந்தளவுக்கு ஓர் வசீகரத் தோற்றம் அவனிடம் இருந்தது. அதனால் என்னவோ கற்பகம் அவன் மேல் காதல் கொண்டாள். அவளும் அழகானவள் தான். வட்டமுகம், வடிவான நீண்ட கார்கூந்தல், மாநிறம், மாதுளை முத்துக்கள் போன்ற பற்கள், யாரையுமே கவர்ந்து இழுக்கும் வசீகரத் தோற்றம். மாடசாமி - புஸ்பவனம் தம்பதிகளின் ஒரே ஆசைப்புதல்வி.

மாடசாமியும் புஸ்பவனமும் இதே தேயிலைத் தோட்டத்தில் தொழில் புரியும் கூலித் தொழிலாளர்கள். கூலி ஆட்களாக வேலை செய்தாலும் தமது மகள் கற்பகத்தை படிக்க வைத்தார்கள். "எங்க புள்ள... எங்கள போல மழையிலையும், பனியிலையும், அட்டைக்கடியிலும் கஸ்டப்படாம நல்லா படிச்சி ஒரு நல்ல உத்தியோகத்துக்காவது போகணும்" என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்த ஆசை நிராசையாகப் போய் விடும் என்று அவர்கள் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை. விதி யாரைத்தான் விட்டது! கற்பகம் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் முத்தையனின் பின்னால் சுற்றிச் சுற்றித் திரிந்து அவனைக் காதலித்தாள். முதலில் விருப்பமில்லாமல் இருந்தவன் பின்பு அவனும் அவள் காதலை ஏற்றுக் கொண்டான்.

கற்பகத்தின் குடும்பம் பன்னிரெண்டு காம்பரா லயத்தில் வாழ்ந்தாலும் முத்தையனின் குடும்பம் "குவாட்டர்ஸ்” எனப்படும் தனி வீட்டில் குடியிருந்தது. மாடசாமி கூலித் தொழிலாளியாக இருந்தாலும் முத்தையனின் தந்தை முனியாண்டி காவல்காரராக தொழில் புரிந்தார். அதைவிட மாடசாமியின் குலத்தை விட முனியாண்டி சற்று உயர் குலத்தைச் சேர்ந்தவர். மற்றும் இன்னோரன்ன விடயங்களில் முத்தையனின் குடும்பம் சற்று உயர்வாகவே காணப்பட்டது. முத்தையன் தான் சம்பாதிக்கின்ற பணத்தில் பாதியை கற்பகத்துக்காக செலவிட்டான். பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகள் வந்தால் கற்பகம் கேட்கின்ற டிசைன்களில் உடைகள் வாங்கிக் கொடுப்பான். அவளின் சில்லறை செலவுகளுக்காக பணமும் கொடுப்பான். காதல் எப்போதுமே குடத்து விளக்காய் இருப்பதில்லையே. காற்றுத் தீயாய்த் தானே பரவும். முத்தையன் - கற்பகம் இருவரின் காதல் விவகாரம் தோட்டம் முழுவதும் பரவி இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இருபக்கமும் கடுமையான எதிர்ப்பு. காரணம் சாதிப் பிரச்சினை. எப்படியுமே ஒத்துப்போகாத ஒரு நிலைமை. இருந்தாலும் இவர்கள் இருவரும் சளைக்கவில்லை. யார் தடுத்தாலும் எது தடுத்தாலும் எங்களுக்கு அது ஆட்சேபணை இல்லை. எங்கள் காதலை எப்படியும் ஜெயித்துக் காட்டுவோம் என்று கங்கணம் கட்டினார்கள். இரு வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்காததால் திருட்டுத்தனமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்கள். அதற்கு இந்த ஆடிப்பூசை திருவிழாவை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார்கள்.

திருமுருகன் வள்ளி தெய்வானையோடு திருத்தேரிலே பவனி வந்து கொண்டிருந்தார். பக்த அடியார்கள் கூட்டம் கூட்டமாய் அரோகரா போட்ட வண்ணம் குழுமி நின்றார்கள். தேர் மேட்டு லயத்தை நோக்கி வரும் போது இரவு ஒன்பது மணியையும் தாண்டி விட்டிருந்தது. ஒலிபெருக்கியில் "அழகென்ற சொல்லுக்கு முருகா" என்ற பக்திப் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அதே போல் மேளதாள இசையுடன் நாதஸ்வர ஓசையும் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தேருக்கு மாவிளக்கு. பூசை கொடுப்பதற்காக சில பெண்கள் அர்ச்சனை தட்டோடு காத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு கற்பகமும் நின்று கொண்டிருந்தாள். அவள் கண்கள் முத்தையனைத் தேடின. முத்தையனும் அவளைப் பார்த்து ஏதோ சைகை செய்தான். உடனே அந்தக் கூட்டத்திலிருந்து விலகிய கற்பகம், மெதுவாக முத்தையனின் பக்கம் வந்தாள். எல்லோர் கண்களும் தேரில் பவனி வரும் திருமுருகனைப் பார்த்த வண்ணம் இருந்தன. . யாரும் இவர்களை கண்டு கொள்ளவில்லை.

இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எல்லோர் கண்களிலும் மண்ணைத்தூவி விட்டது போல் இந்த காதல் ஜோடி ஓட்டமும் நடையுமாக வேறு பக்கமாக நடையைக் கட்ட ஆரம்பித்தது. தேர்பவனி ஊர்வலம் மீண்டும் கோயிலுக்குத் திரும்பும் போது மறுநாள் பொழுதும் புலர்ந்திருந்தது. எல்லோருக்கும் ஒரே அலுப்பு. அத்தோடு விடிய விடிய தூக்கம் இல்லாமல் கண் விழித்திருந்தால் எல்லோருக்கும் கஷ்டமாக இருந்தது. ஆகவே எல்லோரும் விரைவாக தத்தமது வீடுகளுக்குத் திரும்பினார்கள்.

மாடசாமியும் வீடு திரும்பினான். ஒரு ஓரமாக புஸ்பவனம் உறங்கிக் கொண்டு இருந்தாள். கற்பகத்தைக் காணவில்லையே. சிலவேளை தோழிகளோடு கோவிலில் இருப்பாளாக்கும் என்று எண்ணிக்கொண்டே ஒரு பாயை விரித்துப் போட்டு அவனும் உறங்க முற்பட்டான். ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே அவன் உறங்கி இருப்பான். அவன் உறக்கத்தை புஸ்பவனம் கலைத்தாள். "என்னங்க... என்னங்க... நம்ம மக இன்னும் வீட்டுக்கு வரலிங்க..." என்றாள். பதற்றத்தோடு, "சும்மா கெடபுள்ள... கூட்டாளிகளோட கோயிலுல இருப்பாளா இருக்கும்... கொஞ்சம் பேசாம தூங்க விடு புள்ள" என்று மறுபக்கம் சுருண்டு படுத்துக் கொண்டான். ஆனால் புஸ்பவனத்துக்கு கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. கதவைத் திறந்துக் கொண்டு கோடிப்பக்கம் ஓடினாள் . அதே போல் முத்தையன் வீட்டிலும் அவன் வீடு திரும்பாததால் அங்கும் ஒரே குழப்பமாக இருந்தது. அதற்கிடையில் முத்தையன் கற்பகத்தைக் கூட்டிக் கொண்டு களவாக ஓடியதை அந்த நடுநிசி நேரத்திலும் யாரோ ஒரு சிலர் கண்டதாகவும் கதை அடிபட்டது. சற்று நேரத்தில் இந்தக் கதை முழு தோட்டத்திலும் அப்பட்டமாக பரவிக் கிடந்தது.

கோடிப்பக்கம் போன புஸ்பவனமும் விடயத்தைத் தெரிந்து கொண்டு தலையிலும் நெஞ்சிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தவளாக ஓடி வந்தாள். அவள் போட்ட சத்தத்தில் மாடசாமி கண்விழித்து தட்டுத் தடுமாறியவாறு எழுந்தான்.

இருவருக்கும் என்ன செய்வதென்றே புரியவில்லை. அதற்கிடையில் சிலர் மாடசாமியைத் தேடி வந்தார்கள். "கற்பகத்தை கூட்டிக் கொண்டு முத்தையன் மாரியம்மா கோவில் பக்கம் போனதாகவும்... விடயத்தை தெரிந்து கொண்ட முனியாண்டியும் அவன் மூத்த மகன் சுப்புவும் கவ்வாத்துக் கத்தியை எடுத்துக் கொண்டு இருவரையும் கண்டதுண்டமாக வெட்டாமல் விடமாட்டோம் என்று ஆத்திரத்தோடு ஓடோடிப் போவதாகவும்” கூறினார்கள்.

"ஐயோ... மாரியம்மா... என் மகளைக் காப்பாத்து" என்று புஸ்பவனம் புலம்பிக் கொண்டே மாடசாமியுடன் மாரியம்மன் கோவில் பக்கம் ஓடினார்கள். பக்கத்து வீட்டார், இனபந்துக்கள் எல்லோருமே ஓடினார்கள்.

அதற்கிடையில் முத்தையன் ஒரு மஞ்சக் கயிற்றில் மஞ்சள் துண்டொன்றை முடிச்சிட்டு அதை கற்பகத்தின் கழுத்தில் கட்டிவிட்டான். மாரியம்மன் சிலையிலிருந்த பூமாலையையும் எடுத்து அதையும் அவள் கழுத்தில் போட்டு குங்குமத் திலகமும் இட்டிருந்தான். வந்தவர்கள் எல்லோரும் ஆச்சரியத்தோடு குழுமி நின்றார்கள். "ஏம் புள்ளைய வெட்டடாதீங்கப்பா... அதுக்கு பதிலா என்னை வெட்டடுங்க" என்று மாடசாமியும் "இல்லைப்பா அவர விட்டுட்டு என்ன வெட்டிடுங்க... பொம்பளப்புள்ளைய சரியா வளர்க்கத் தெரியாத பொட்டச்சி என்னைய கூரு போட்டுடுங்க" என்று புஸ்பவனமும் முன்னே வந்து நின்றார்கள்.

அதற்கிடையில் குழுமி நின்றவர்கள் முனியாண்டியையும் சுப்புவையும் வளைத்துப் பிடித்தார்கள் "கவ்வாத்து கத்தியை ஒரு பக்கம் வீசிட்டு புள்ளைங்கள ஆசீர்வதிங்கப்பா... அதை விட்டுட்டு வெட்டுறேன் கொத்துறேன்னு நிக்கிறீங்க" என்றார்கள் சிலர். அதற்கிடையில் தோட்டத் தலைவரும் வந்தார். "சரி நடந்தது நடந்து போச்சி... ரெண்டு வீட்டாரும் சேர்ந்து புள்ளைங்கள கூட்டிக்கிட்டு வாங்க... இந்த நல்ல நாளுல முருகன் சந்நிதானத்துல இவங்க கலியாணத்தை நடத்துவோம்...” என்றார் தலைவர். அதற்கு மேல் யாரும் அங்கு எதையும் பேசவில்லை. ஆடிப் பூசையோடு முத்தையன் - கற்பகம் இருவரின் திருமணமும் நடந்தது. "எல்லாம் முருகன் செயல்" என்று மாடசாமி முருகப் பெருமானை கைகூப்பி வணங்கிக் கொண்டான். அந்த நேரம் பார்த்து "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ... ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே...” என்ற பக்திப்பாடல் கோவிலிருந்து அட்சதையாக ஒலிபெருக்கியில் ஒலித்தது.

இருவரின் திருமணமும் முடிந்திருத்தாலும் இன்னுமொரு பிரச்சினை பூகம்பமாக வெடித்தது. மணமக்களை யார் வீட்டுக்கு அழைத்துச் செல்வது என்பது தான் அடுத்த பிரச்சினையாக இருந்தது.

“மாடசாமி.. ஓம்மகள் என்மகனை கலியாணம் செஞ்சதால நீ எனக்கு சொந்தக்காரனா ஆகிடாது... என்னைப் பொறுத்தவரையில் ஏம்மகன் செத்துட்டான். என் வீட்டுப் பக்கம் இனி அவன் வரப்படாது. உன் வீட்டுக்கே கூட்டிக்கிட்டு போயிடு" என்று முனியாண்டி சொல்ல, சுப்புவும் அதை ஆமோதித்தான். மாடசாமி ஒரு கணம் அதிர்ந்து போனான். “என்னப்பா இது நியாயம்! அதுதான் கலியாணமே முடிஞ்சிட்டதே. நீயும் பொண்ணு மாப்புளைய ஆசீர்வாதமும் பண்ணிட்டியே... இன்னும் என்ன என்று ஒரு பெரியவர் கூற "இங்க யாரும் எதையும் பேசக் கூடாது... நான் சொன்னா சொன்னது தான்.... அவுங்க அவுங்க வேலைய பார்த்துக்கிட்டு போங்க...” என்றவாறு முனியாண்டியும், சுப்புவும் விர்ரென்று அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டார்கள். மாடசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. மரம் போல் நின்றான். "அவுங்க போனா போகட்டும் மாடசாமி.. அப்படி என்ன வீராப்பு வேண்டி கெடக்கு... நீ இவங்கள உன் வீட்டுக்கு சந்தோசமாக கூட்டிக்கிட்டுப் போ... யாரப்பா அங்க... அந்த மேளக்காரர வரச்சொல்லு” என்று தலைவர் ஆணையிட, மேள தாளத்தோடு மணமக்கள் மாடசாமியின் வீட்டுக்கு கூட்டிச் செல்லப்பட்டார்கள்.

காலம் தன்பாட்டில் ஓடி வருடம் ஒன்றையும் தாண்டியது. கற்பகம் தாய்மைப் பேற்றையும் அடைந்திருந்தாள். மாடசாமியின் வீட்டில் வசதிகள் குறைவாக இருப்பதாலும், கற்பகம் புள்ளத்தாச்சி என்பதாலும் தலைவரிடம் கூறி அவர்களுக்கென்றொரு வீட்டையும் வாங்கிக் கொடுத்தான் மாடசாமி. முத்தையனின் குடும்பத்தார் அவனைக் காணும் போதெல்லாம் கண்டும் காணாதது போல் ஒதுங்கிப் போய் விடுவார்கள்.

"சாதி..... அப்படி என்ன மேல்சாதி கீழ்சாதி! எல்லாம் மனுசங்க தானே... வெட்டிப் பார்த்தா எல்லா ரெத்தமும் சிவப்பாத்தானே இருக்கும்" என்று முத்தையன் தனக்குத் தானே சொல்லிக் கொள்வான். மாடசாமியும் புஸ்பவனமும் மகள் மீதும் மருமகன் மீதும் அளவற்ற அன்பு வைத்திருந்தார்கள்.

குழந்தை நல்ல முறையில் பிரசவமாக வேண்டும் என்று தோட்டத்து முருகன் கோயிலில் புஸ்பவனம் நேர்த்திக்கடனும் வைத்தாள்.

தனது மருமகள் புள்ளத்தாச்சியாக இருக்கும் செய்தி முத்தையனின் வீட்டாருக்கும் தெரிய வந்தது. முனியாண்டி இன்னும் கூட அதே கர்வத்தோடு இருந்தாலும் அவனுடைய மனைவி கனகவள்ளிக்கு மருமகளைப் பார்க்க ஆவலாகஇருந்தது.

இப்படித்தான் தோட்டப் பகுதிகளில் எல்லோரும் இறை நம்பிக்கையும் பக்தியும் அதிகமாக வைத்திருப்பார்கள். ஏதாவது தமக்கு நல்லது நடக்க வேண்டுமென்றால் ஆண்டவன் மீது பாரத்தைப் போட்டு காணிக்கை கட்டி நேர்த்திக்கடன் போடுவார்கள்.

மாதங்கள் பல உருண்டோடி கற்பகம் பிரசவிக்கும் நாளும் வந்தது. அவள் ஒரு அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள். மாடசாமியும் புஸ்பவனமும் நெகிழ்ந்து போனார்கள். முருகப் பெருமானை நினைந்து வேண்டிக் கொண்டார்கள். "முருகா...” இந்த முறை ஆடிப் பூசைக்கு உன் சந்நிதானத்துக்கு வந்து என் பேரனுக்கு மொட்டை அடிக்கிறேன்" என்று இருவரும் வேண்டிக் கொண்டார்கள். அதேபோல் விடயத்தை தெரிந்து கொண்ட முத்தையனின் அன்னை கனகவள்ளியும் கணவனுக்குத் தெரியாமல் முருகன் கோயிலுக்குப் போய் கற்பூரம் ஏந்தி வணங்கினாள்.

இந்த வருட ஆடித்திருவிழாவும் வழமைபோல மிகவும் சிறப்பாக தொடங்கியது. அனைத்து அம்சங்களும் களைகட்டியது. மாடசாமி நேர்ந்து கொண்டது போல முருகன் சந்நிதானத்துக்குப் போய் தனது பேரப்பிள்ளையின் முடியை வெட்டி நேர்த்திக்கடனை நிறைவு செய்தான். ஆடிப் பூசையில் கலந்து கொள்வதற்காக கோவிலுக்கு வந்திருந்த முத்தையனின் குடும்பத்தினரும் இந்தக் காட்சியைக் கண்டார்கள்.

கனகவள்ளி ஓடிவந்து பேரனைத் தூக்கி உச்சி மோந்தாள். முனியாண்டியும் கூடவே வந்திருந்தான். அவனுக்கும் பேரப் பிள்ளையை காண ஆசையாக இருந்தது. இருந்தாலும் யாராவது ஏதாவது சொல்லி விடுவார்களோ என்ற அச்சமும் அவனுள் குடிகொண்டிருந்தது. "மாடசாமி மன்னிச்சிடுப்பா" என்று முனியாண்டி மாடசாமியின் கைகளைப் பற்றினான்.

“சரி சரி... அதெல்லாம் விடுப்பா.. "எல்லாம் முருகன் செயல்" என்றான் மாடசாமி. இரு குடும்பத்தினரும் ஒன்றிணைந்தார்கள். "இந்த வருட ஆடிப்பூசையை நாம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்தே கொண்டாடுவோம்... வாங்க எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து அன்னதானம் சாப்பிடுவோம் " என்று முத்தையனின் அண்ணன் சுப்பு எல்லோரையும் அழைத்தான். முத்தையனும் கற்பகமும் பெரியோர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்கள். கனகவள்ளி பேரனைத் தூக்கிக் கொண்டு கோவிலைச் சுற்றி சுற்றி வந்தாள். "முருகா.. எங்க எல்லோரையும் காப்பாத்து" என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். முருகன் கோவிலின் முன்றலில் வாழை இலை பரிமாற்றப்பட்டு எல்லோருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கற்பகத்துக்கு பழைய நினைவு வந்தது. அவள் முத்தையனை ஒரு இடி இடித்தாள். அவனும் அதை புரிந்துக் கொண்டு கூச்சப் பட்டான். அப்போது கோவிலில் உள்ள ஒலிபெருக்கியில் "உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே" என்ற அதே பக்திப் பாடல் ஒலிக்கத் தொடங்கியது.

பசறையூர்
ஏ.எஸ். பாலச்சந்திரன்

Comments