மேற்காசிய அரசியலை மீள கைப்பற்ற முயலும் அமெரிக்கா | தினகரன் வாரமஞ்சரி

மேற்காசிய அரசியலை மீள கைப்பற்ற முயலும் அமெரிக்கா

மேற்காசியாவில் ஈரான் முக்கிய நாடாகவும் புராதன மரபுகளைக் கொண்ட நாடாகவும் தற்போது காணப்படுகிறது. கடந்த காலத்தில் ஈராக் அத்தகைய முக்கியத்துவத்தை கொண்டிருந்தது. வளைகுடா மீதான அமெரிக்க கூட்டுப்படைகளின் போர்
அத்தகைய முக்கியத்துவத்தினை அழித்ததுடன் மிக நீண்ட காலமாக அழிக்க முடியாது அமெரிக்கா எதிர்கொள்ளும் ஒரு நாடாக ஈரான் விளங்குகிறது.

குறிப்பாக 1979 ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின்பு அமெரிக்காவின் ஆதிக்கம் சாத்தியப்பட முடியாத நிலைக்குள் காணப்படுகிறத. அதனை எதிர்கொள்ள பல்வேறு உத்திகளை அமெரிக்கா வகுத்துவருகிறது. கடந்த ட்ரம்ப் ஆட்சிக்காலம் ஒருவகையான அணுகுமுறையை கொண்டிருந்தாலும் நடைமுறையில் அது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. புதிய ஜனாதிபதியின் நிர்வாகம் மென் அதிகாரத்தை பிரயோகித்தாலும் வன் அதிகாரத்திற்கான உத்திகளையும் வகுத்துவருகிறது. அதாவது அதிகாரத்தை பிரயோகிக்கும் நிலைக்குள்ளேயே ஈரானைப்  பொறுத்த கொள்கையில் அமெரிக்காவின் ஜோ பைடன் நிர்வாகம் விளங்குகிறது. இக்கட்டுரையும் பூகோள அரசியலில் ஈரான் மையப்புள்ளியாக மாறுவதனால் அமெரிக்கா முன்னெடுத்துவரும் நகர்வுகளை தேடுவதாக அமையவுள்ளது.

ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பின்பு ஈரானுடனான கொள்கை மிருதுவானதாக அ​ைமந்திருந்தது. பின்னர் படிப்படியாக தீவிரத் தன்மை பெற ஆரம்பித்துள்ளது. காரணம் மேற்காசியாவில் ஈரானே மைய நாடாகவும் நாகரீகத்தின் மையமாகவும் இருப்பதுடன், மேற்குலகத்திற்கு அதிக சவால் மிக்க நாடாகவும் உள்ளதனால் அமெரிக்கா தொடர்ச்சியாக ஈரானை கையாளுவது தவிர்க்க முடியாததாகவே அமையும். முடிந்த வாரத்தில் நிகழ்ந்த ஒரு இராணுவ ரீதியான விடயம் அதிக பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அதன் முக்கியத்துவம் நீண்ட பரிமாணமுடையதாகவே தெரிகிறது.

அதாவது அமெரிக்காவின் பி-12  விமானப்படையின் தாக்குதல் விமானம் மேற்காசியவின் ஆகாயப்பரப்பில் நூற்றுக்கணக்கான தடவை பறந்துள்ளது. ஆனால் நடந்து முடிந்த வாரம் நிகழ்ந்த பறப்பானது அதிக முக்கியத்துவம் உடையதாக அமைந்திருந்தது. குறிப்பாக அமெரிக்க விமானங்கள் பறக்க ஆரம்பித்ததும் ஆரம்பத்தில் இஸ்ரேல் விமானங்களும் பின்பு சவுதி அரேபிய விமானங்களும் பின்பு எமிரேட் விமானங்களும் அமெரிக்க விமானங்களுக்கு பாதுகாப்பாக தமது எல்லைக்குட்பட்ட வான் பரப்பில் பறந்துள்ளன. இத்தனைகய பறப்பின் முக்கியத்துவத்தை முழுமைப்படுத்தும் விதத்தில் அமெரிக்க விமானங்கள் ஈரான் வான் பரப்பையும் சிரியாவின் வான்பரப்பையும் நோக்கிப் பயணித்ததே பிரதானமானதாகும். இவ்வாறான முக்கியத்துவம் ஏன் அமெரிக்க விமானப்படை மூலம் ஜோ பைடன் நிர்வாகம் வழங்கியது என்பதே பிரதான கேள்வியாகும்.

முதலாவது ஈரானின் அணுவாயுத தளத்தை தாக்கி அழிக்க அண்மையில் இஸ்ரேல் திட்டமிடுவதாக ஈரானிய புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்தியதன் காரணமாக ஈரான் பாதுகாப்பு அமைச்சு பெரும் எச்சரிக்கை ஒன்றினை வெளிப்படுத்தியிருந்தது. அதாவது இஸ்ரேல் அவ்வாறு ஏதும் தாக்குதலை மேற்கொள்ளுமாயின் இஸ்ரேலிய நகரங்கள் தாக்கி தரைமட்டமாக அழிக்கப்படும் என எச்சரித்தது. இதனை அடுத்து இஸ்ரேல், -ஈரானிய எச்சரிக்கைகள் மாறிமாறி அரங்கேறின.

அதற்கு இஸ்ரேல் முன்வைத்த காரணம் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்க ஆரம்பித்துள்ளதாகவும் அதனைத் தடுப்பதே தமது நோக்கம் எனவும் தெரிவித்தது. அத்தகைய புலனாய்வுத் தகவலை அமெரிக்காவுக்கும் இஸ்ரேல் வழங்கியதாகவும் அது சார்ந்தே அமெரிக்கா ஈரான் மீதான வன் அதிகார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது எனக்கூறலாம். இதற்கு ஆதாரமாக சிரியாவில் நிலைகொண்டுள்ள ஈரான் இராணுவ நிலைகள் மீது அமெரிக்க விமானங்கள் கடந்த ஒருவாரத்திற்கு முன்பு தாக்குதல் நிகழ்த்தியதை கடந்த வாரம் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இரண்டாவது அமெரிக்கா ஈரானை முடக்கி வைக்கவேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளது. அதாவது ஈரான் அணுவாயுத நாடாக மாறிவிடக் கூடாது என்பதில் இஸ்ரேலுடன் அமெரிக்காவும் சேர்ந்து கவனம் கொள்கிறது. அதற்காக ட்ரம்ப் நிர்வாகம் போன்று வன்அதிகார உத்திகளை பிரயோகிப்பதில் பயனேதும் இல்லை என்றே ஜோ பைடன் நிர்வாகம் கருதுகிறது. அதாவது சிமாட் அதிகாரத்தை  பிரயோகித்தே ஈரானை கட்டுப்படுத்த முடியுமென அமெரிக்க புதிய நிர்வாகம் முனைகிறது. காரணம் வன்முறை அதிகாரத்தால் ஈரான் செல்வாக்கு அதிகரிப்பதுடன் ரஷ்யா  சீனாவின் ஒத்துழைப்புக்குள் வேகமாகச் சென்றுவிடும் என்பதனால் நிதானித்து செயல்பட அமெரிக்கா விரும்புகிறது.

மூன்றாவது ஈரானை எச்சரிக்கை செய்வதற்கான உத்தியை காட்டுவதாக அமெரிக்க விமான படையெடுப்பு அமைகின்றது. அதாவது இஸ்ரேல் அண்மையில் ஈரான் மீது மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அணுவாயுத நிலையத்தை முழுமையாக தாக்கி அழிக்க எடுத்த முயற்சியை அமெரிக்கா அங்கீகரிப்பதை வெளிப்படுத்துவதாக தெரிகிறது.  ஈரான் அணுவாயுத பரிசோதனையை நிறுத்தாது விட்டால் அமெரிக்காவும் அதன் மேற்காசிய நட்பு நாடுகளும் இணைந்து தாக்குதலை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக மறைமுகமாக ஈரானுக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா பலதடவை ஈரானுக்கு வலியுறுத்தியிருந்தது. அணுவாயுத உடன்பாட்டை பின்பற்ற தயாரானால் பொருளாதாரத் தடை நீக்கப்படும் எனக்குறிப்பிட்டிருந்தது. மாறாக ஈரான் அணுவாயுதத்திற்கான யூரேனிய செறிவூட்டலை அதிகரிக்கப் போவதாக தெரிவித்ததுடன் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளரை வெளியேற்ற முயன்றது. இவை அனைத்தும் ஈரான் அணுவாயுதத்தை தயாரிக்க தயாராகிவிட்டது என்பதைக் காட்டுவதாகவே அமெரிக்காவும் இஸ்ரேலும் கருதுகின்றன. 

நான்காவது அமெரிக்கா தனது மேற்காசிய நட்பின் பலத்தைக் காட்டுவதாக தெரிகிறது. குறிப்பாக ஈரான் சீனா ரஷ்யாவுடன் இணைந்து கொண்டு அண்மையில் மேற்கொண்ட கடற்படை பயிற்சி மற்றும் இந்தியாவுடனான கடல்வழி எண்ணெய்குழாய் திட்டம் என்பன அமெரிக்காவுக்கு அதிக அதிர்ச்சியை தந்துள்ளது. ஜோ பைடன் நிர்வாகம் ஆரம்பத்தில் இஸ்ரேலை புறந்தள்ளிவிட்டு ஈரானை அணைக்கத் திட்டமிட்டிருந்தது. அதனை ஈரான் பயன்படுத்த தவறியிருந்தது. அது மட்டுமன்றி ஈரான் அமெரிக்க எதிரிகளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தும் நகர்வையும் கொள்ளத் தொடங்கியது. இதனால் அமெரிக்கா தனது நட்புக்களைப் பலப்படுத்துவதுடன் அதனை வெளிப்படுத்த வேண்டிய நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தமை கவனத்திற்குரியதாகும். அதனை ஆதாரப்படுத்தும் விதத்திலேயே சவுதி அரேபியாவுடனான உறவிலும் ஐக்கிய அரபு எமிரேட்டுடனான உறவிலும் சற்று நெருக்கடியை ஜோ பைடன் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அதனை எல்லாம் பி-12 விமானம் பயணத்தின் மூலம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அமெரிக்கா.

ஐந்தாவது அமெரிக்கா தனது நட்புகளை அரணாக கொண்டு செயல்பட்டதற்கு இன்னோரு  காரணம்ரஷ்யாவையும் சீனாவையும் எதிர் கொள்வதற்கான நடவடிக்கையாகவே உள்ளது. மேற்காசிய அரசியலை மாற்றியதில் ரஷ்யாவுக்கு அதிக பங்குண்டு. அதில் சீனா ஈரான் சிரியா எனும் அணியானது பலமானதாகவும் உறுதியான அமெரிக்க எதிர்ப்பு அணியாகவும் உள்ளது. இஸ்ரேல் பலதடவை ரஷ்யாவையும் சீனாவையும் அணுகிய போதும் அதில் பெரிய நெருக்கம் ஏற்படவில்லை. அதனால் இஸ்ரேல் மீளவும் தனது அணியை பலப்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளது.

ஆனால் ஜோடானுடன் ஏற்பட்டுள்ள முறுகல் பிராந்திய ரீதியில் இஸ்ரேலின் இலக்குகளை அடைய முடியாத நிலைக்குள் தள்ளியுள்ளது. இதில் துருக்கி ரஷ்ய அணியுடன் இணைந்த போதும் தற்போது துருக்கி ஆதரவு போராளிகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதல்  இரு நாட்டுக்குமான மோதலாக மாறியுள்ளது. இருந்த போதும் துருக்கியின் நிலை நெருக்கடி மிக்கதாகவே தெரிகிறது. ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் ஈரானை துருக்கிக்காக விட்டுக் கொடுக்க தயாரில்லை என்பதையே நகர்வு காட்டுகிறது.

ஆறாவது ஈரானுடனான தரைத் தொடர்பினைக் கொண்ட ஆப்கானிஸ்தான் தலிபான் போராளிகளுடன் மீளவும் பேச்சுக்களை அமெரிக்க நிர்வாகம் தொடக்கவுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தோனி பிளிங்டன் ஆப்கான் ஜனாதிபதி அஸ்ரப் ஹானிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் பின்பற்றிய பொறிமுறைகள் அனைத்தையும் மாற்றும் உத்தியை புதிய நிர்வாகம் ஆரம்பித்துள்ளது. இத்தகை பேச்சுக்களை துருக்கியை மையப்படுத்தி ஆரம்பிக்க அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்தகைய பேச்சுவார்த்தையை ஐ.நா. சபைக்கூடாக மேற்கொள்ள திட்டமிடுகிறது அமெரிக்கா.

எனவே ஈரானின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் ஈரானை சுற்றிவளைக்க ஆரம்பித்துள்ளது. இத்தகைய சுற்றிவளைப்பின் ஒரு கட்டமே பி-12 போர் விமானத்தின் நகர்வாகும். அதனூடாக மேற்காசியக் கொள்கையையும் ஈரான் தொடர்பான கொள்கையையும் ஜோ பைடன் மீளமைக்க ஆரம்பித்துள்ளார். இதில் ஈரானின் அணுகுமுறையையும் சாதாரணமானதாக எடைபோட முடியாது. சமகாலத்தில் ஈரானின் எண்ணெய்க் கப்பலை இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும் ஏற்கனவே இஸ்ரேலின் சரக்குக் கப்பலை ஈரான் தாக்கியதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. அதனடிப்படையில் ஈரானின் அணுகுமுறையும் அளவீடு செய்யப்படவேண்டியதாகும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments