சவூதி அரேபிய அமெரிக்க முறுகல் ஈரானை நோக்கிய தந்திரோபாய நகர்வா? | தினகரன் வாரமஞ்சரி

சவூதி அரேபிய அமெரிக்க முறுகல் ஈரானை நோக்கிய தந்திரோபாய நகர்வா?

சவுதியரேபிய நாட்டுப் பத்திரிகையாளர் ஜமால் கசாக்கி கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவுக்கும் -சவுதி அரேபியாவுக்கும் இடையில் பெரும் முரண்பாடொன்று ஆரம்பித்துள்ளது. ஜமால் கொலை செய்யப்பட்டதற்கு அந்நாட்டு இளவரசர் சல்மானின் உத்தரவே காரணம் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வுத் துறை அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

ஜமால் சவுதி அரேபியாவின் புகழ் மிக்க பத்திரிகையாளர். 1980 கள் முதல் அவரது எழுத்துக்கள் முதன்மை பெற்றதுடன் அமெரிக்கன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி அரச குடும்பம் பற்றிய விமர்சனங்களை ஆங்கிலத்திலும் அரபு மொழியிலும் வெளியிட்டு வந்திருந்தார். அவர் தனது காதலியை திருமணம் செய்வதற்காக துருக்கி சென்ற சமயம் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள சவுதி தூதரகத்தில் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருந்தார். இக்கட்டுரையும் அமெரிக்காவின் சவுதியுடனான முரண்பாட்டுக்கான அரசியலைத் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது பத்திரிகையாளர் ஜமால் கசாக்கியை கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் உத்தரவிட்டார் என்று நாங்கள் நடாத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என அமெரிக்க தேசிய புலனாய்வுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும்' பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் மீது சவுதி நடாத்தும் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இதனை அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது எனவும் எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. 

இரண்டாவது சவுதியரேபியாவின் பத்திரிகையாளர் ஜமால் கொலைக்கு சவுதி அரேபியாவை பொறுப்பேற்க வைப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து இவ்விடயம் பற்றி கூறும் போது நான் சவுதி மன்னனுடன் பேசினேன். இளவரசரிடம் அல்ல. ஆட்சி மாற்றப்பட்டு விட்டது. சில மாறுதல்களை கொண்டுவரப் போகிறோம் என்று நான் அவரிடம் கூறினேன் என்றார் . மனித உரிமை மீறல்களுக்கு சவுதி நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம். ஜமால் கொலை தொடர்பாக வெளியான அறிக்கையை கடந்த அரசு வெளியிடவில்லை. எங்களிடம் அறிக்கை வந்தடைந்ததுடன் வெளியிட்டுள்ளோம் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.  

மூன்றாவது ஜமால் கொல்லப்பட்டத்தற்கு காரணமாக இருந்த சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும். குற்றமற்ற மற்றும் அப்பாவித்தனமான ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்யதமையை மன்னிக்க முடியாது. அவர் தண்டிக்கப்படாது விட்டால் அது என்றென்றும் அனைவருக்கும் ஆபத்தை விளைவிக்கும். நமது மனித குலத்தி-ற்கு கறையாக அமைந்துவிடும். இது நாம் தேடும் நீதியை மட்டுமல்ல இது போன்ற செயல் மீளவும் நடவாது தடுக்க முடியும் என ஜமாலின் காதலியான துருக்கியைச் சேர்ந்த ஹேட்டீஸ் செங்கிஸ் வலியுறுத்தியுள்ளார். 

இங்கு பிரதான கேள்வி ஏன் அமெரிக்காவின் புதிய நிர்வாகம் ஜமால் விடயத்தை முதன்மைப்படுத்துகிறது என்பதாகும். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சவுதியுடன் மிக நெருக்கமாக செயல்பட்டதுடன் ஜமால் மீதான கொலைக்கு கண்டனம் தெரிவித்தது மட்டுமே நிகழ்ந்தது. விரிசலற்ற நட்புறவை பாதுகாத்துக் கொண்டது. ஆனால் புதிய நிர்வாகம் சவுதியோடு அதிக முரண்பாட்டை வெளிப்படையாக காட்டுவதில் சிரத்தையுடன் செயல்படுகிறது. அதற்கான காரணங்களை தேடுவது அவசியமானது. 

ஒன்று மேற்காசியா தொடர்பான கடந்த கால அமெரிக்க நிர்வாகம் பின்பற்றிய கொள்கையிலிருந்து விலகிச் செல்ல புதிய நிர்வாகம் திட்டமிடுகிறது. காரணம் அமெரிக்கா மேற்காசிய பரப்பிலிருந்து முழுமையாக வெளியேற்றப்பட்டுள்ளதாக புதிய நிர்வாகம் மட்டுமல்ல ஆய்வுகளும் அதனையே தெரிவிக்கின்றன. ட்ரம்ப் நிர்வாகத்தின் தவறான கொள்கைகளால் அப்பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கிருந்த நலன்கள் பாதிப்படைந்துள்ளன. சீனாவும் ரஷ்யாவும் அப்பிராந்தியத்தை தமது நலனுக்கு ஏற்ற வகையில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. அதில் வளைகுடா நாடுகளாயினும் சரி எண்ணெய்வள நாடுகளாயினும் சரி அனைத்து நாடுகள் மீதும் சீனாவும் ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்திவருவதனைக் காணமுடிகிறது. எனவே இந்த நிலையிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலை அமெரிக்காவின் புதிய நிர்வாகத்திற்கும் ஏற்பட்டுள்ளது. 

இரண்டு இஸ்ரேல்- அமெரிக்க உறவிற்காக ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ட்ரம்ப் நிர்வாகம் இழந்துள்ளதாகவே தெரிகிறது. ஒபாமா நிர்வாகத்தின் காலத்தில் கட்டுப்பாட்டுடன் செயல்பட்ட இஸ்ரேல் ட்ரம்ப்பின் காலத்தில் மேற்காசியாவின் அமெரிக்க கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருந்தது. அதனால் மேற்காசியா முழுவதும் இஸ்ரேலின் நலனுக்காக அமெரிக்கா செயல்பட்டதே அன்றி அமெரிக்காவின் நலனுக்காக இஸ்ரேலை செயல்பட வைக்க முடியவில்லை. இதனை மாற்றியமைக்கும் உத்திகளை அமெரிக்காவின் புதிய நிர்வாகம் மேற்கொள்ள தொடங்கிவிட்டது. இஸ்ரேலையும் ஏனைய மேற்காசிய நாடுகளையும் ஒரே அளவீட்டுக்குள் வைத்துக் கொள்வதன் மூலம் பிராந்தியம் மீதான செல்வாக்கினையோ அல்லது கட்டுப்பாட்டையோ அல்லது ஆதிக்கத்தினையே வைத்துக் கொள்ள முடியுமென அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது.  

மூன்று ட்ரம்ப் நிர்வாகம் ஈரானை அழிப்பதன் வாயிலாக மேற்காசிய அரசியல் கையாளத் திட்டமிட்டது. அதன் விளைவுகள் பாரதூரமானதாக மட்டுமல்ல அதன் மூலமான அமெரிக்க எதிர்ப்புவாதம் வளர்ந்ததுடன் அதனை பிற வல்லரசுகள் சாதகமாக பயன்படுத்தி இப்பிராந்தியத்தில் எழுச்சியடைந்தன. இதனை தடுத்து நிறுத்த தவறும் நிலையில் அமெரிக்கா முற்றாக அப்பிராந்தியத்தை இழக்கும் நிலை ஏற்படும் என்ற சூழல் வளர்ந்துள்ளது. ஈரானை இராஜீக ரீதியில் கையாள வேண்டிய நிலையையே ஜோ பைடன் நிர்வாகம் விரும்புகிறது. அதுவே சிறந்த உத்தியாக அமையும் எனவும் அமெரிக்க கருதுகிறது.

அதற்கான வலுவான காரணம் ரஷ்ய மற்றும் சீனாவின் அணுகுமுறைகள் ஈரானுடன் மிக நெருக்கமாக அமைவதுடன் இரு நாடுகளும் அணுவாயுத வல்லரசுகள் என்ற அடிப்படையிலும் அமெரிக்கா தந்திரமான அணுகுமுறைகளை நோக்கி நகரவிரும்பகிறது. ஈரான் ஏற்கனவே அணுவாயுதத்தை உருவாக்கும் திறன் உடைய நாடாக விளங்குகிறது என்பதையும் கருத்தில் கொள்ள ஜோ பைடன் தவறவில்லை. அதனால் இப்பிராந்தியத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதனால் சவுதி அரேபியாவின் மனித உரிமை மீறல்களை கையாளுவதன் வாயிலாக ஈரானையும் அணுக விரும்புகிறது.  

நான்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சிப் படைகள் சவுதி அரேபியாவைத் தாக்குவதாகவும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதில் ஜோ பைடன் நிர்வாகம் கரிசனை கொண்டுள்ளது. அதனை ஈரானிலிருந்து ஆரம்பிப்பதை விட சவுதி அரேபியாவிலிருந்து ஆரம்பிப்பது இலகுவானதாக அமெரிக்க நிர்வாகம் கருதுகிறது. யெமன் போரையும் அவ்வாறே கையாள திட்டமிட்டிருந்தது கவனிக்கத் தக்கதாகும். ஹவுத்தி கிளர்ச்சிப் படைகள் மிக அண்மையில் (04.03.2021) நடத்திய ஏவுகணைத் தாக்குதலை சவுதி மறைத்ததுடன் அது தொடர்பில் அமெரிக்க ஹவுத்தி கிளர்ச்சிப் படையின் தளபதிகளுக்கு எதிராக பொருளாதார கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இவை அனைத்தும் ஈரானை நோக்கிய நகர்வுகளாக அமைந்தாலும் அதனை பிராந்திய ரீதியாகவும் சவுதி அரேபியாவை மையப்படுத்தியதாகவும் கையாள முனைகிறது அமெரிக்கா .  

ஐந்து சவுதி அரேபியா -இஸ்ரேல் நெருக்கம் ட்ரம்ப் நிர்வாகத்தால் அமெரிக்க தேர்தலுக்கு பின்பு அவசரஅவசரமாக உருவாக்கப்பட்டது. அவ்வாறே ஐக்கிய அரபு அமீரகத்துடனான இஸ்ரேலிய உறவும் உருவாக்கப்பட்டது. ஏறக்குறைய புதிய நிர்வாகத்தின் அணுகுமுறையை கருத்தில் கொண்டு இஸ்ரேலின் நலன்களுக்கு ஏற்ற வகையில் பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் உறவினை அமெரிக்காவின் பழைய நிர்வாகம் மேற்கொண்டிருந்தது. இதனால் மேற்காசியாவில் இஸ்ரேல் தனக்கான அணியை அமெரிக்காவை புறந்தள்ளி உருவாக்கி வருவதனையே அமெரிக்க புதிய நிர்வாகம் தடுக்க முனைகிறது.            

அதனாலேயே சவுதி அரேபியா மீதான அணுகுமுறைகளை தனித்துவமானதாக ஆக்குவதுடன் சவுதியின் எண்ணெய் வளத்தினை தனது செல்வாக்கிலிருந்து இஸ்ரேல் தகர்த்துவிடும் என்ற அச்சமும் அமெரிக்காவிடம் உண்டு.

ரஷ்யா சீனாவின் ஆபத்தென்பதை கடந்து இஸ்ரேலின் ஆதிக்கம் அமெரிக்காவின் மேற்காசிய நலனை பாதிக்கும் என்ற நோக்கு நிலையிலேயே புதிய நிர்வாகத்தின் அணுகுமுறை அமைந்துள்ளது.

ஆறு அமெரிக்க ஆட்சித்துறையில் எழுந்துள்ள கட்சி ரீதியான அரசியலும் இத்தகைய அணுகுமுறைக்கு ஒரு காரணமாகும். இதன் வாயிலாக சவுதி அரேபியாவை புதிய நிர்வாகம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முனைப்புக்களை உருவாக்க முனைகிறது. குறிப்பாக ட்ரம்பின் சவுதியுடனான எல்லையற்ற நெருக்கம் ஜோ பைடன் அரசியலுக்கு நெருக்கடியாக அமைந்துவிடும் என்ற நோக்கு நிலையிலும் சவுதி மிதான அணுகுமுறையை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

எனவே மேற்காசிய அரசியலில் ட்ரம்ப் நிர்வாகம் விட்டுச் சென்ற வெற்றிடத்தை மீளவும் சரி செய்ய ஜோ பைடன் நிர்வாகம் முனைகிறது. அதன் மைய அரசியல் ஈரானாகவே அமைந்துள்ளது. ஈரானின் படைகளையும் அதன் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளரையும் சிரியாவின் எல்லையிலும் சவுதியின் எல்லையிலும் வைத்து தாக்க அமெரிக்கா விரும்புகிறதே அன்றி அதன் எல்லைக்குள் தந்திரோபாய ரீதியான உறவை உருவாக்க திட்டமிடுகிறது. அதனடிப்படையிலேயே சிரியாவிலுள்ள ஈரான் படைநிலைகளை நோக்கிய அமெரிக்க விமானங்களின் தாக்குதல் அமைந்திருந்தது.

ஈரானை நோக்கிய நகர்வையே அமெரிக்கா இப்பிராந்தியத்தில் தந்திரோபாய ரீதியில் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு நகர்வே சவுதி அரேபியாவின் பத்திரிகையாளர் மீதான புலனாய்வு அறிக்கையும் அமெரிக்காவின் எச்சரிக்கையுமாகும். சீனா ரஷ்யா மட்டுமல்ல இஸ்ரேலையும் புறந்தள்ளி மேற்காசியாவுக்குள் அமெரிக்காவை மீளமைப்பதாகும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

 

Comments