பா.ஜ.க: அமித் ஷாவின் அறிவிப்பு அரசியலமைப்பை முற்றாக மீறும் செயல் | தினகரன் வாரமஞ்சரி

பா.ஜ.க: அமித் ஷாவின் அறிவிப்பு அரசியலமைப்பை முற்றாக மீறும் செயல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலர் ஆளூர் நவாஸ் கொழும்பில் ஆவேசம்

இந்தியாவின் மொழி இந்தியாக மட்டுமே இருக்க வேண்டுமென்ற இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அறிவிப்பு இந்தியாவின் அரசியலமைப்பை மீறும் செயலாகுமென தமிழக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் நேற்று தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஆளூர் ஷா நவாஸ் நேற்று தினகரன் வாரமஞ்சரி அலுவலகத்துக்கு வந்து நேர்காணலொன்றைத் தந்தபோதே மேற்கொண்டவாறு கூறினார்.

இந்திய அரசியலமைப்பு 22  மொழிகளை அங்கீகரித்துள்ளது. தமிழ் மொழியையும் சேர்த்து மொத்தம் 22மொழிகள். ஆனால் மோடி அரசாங்கத்தின் அமைச்சரான அமித் ஷா இன்றையதினம் (சனிக்கிழமை) இந்தியாவின் ஒரே மொழியாக இந்திதான் என்பதைப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு மொழிதான் இருக்க வேண்டுமென அவர் கூறியுள்ளார். அதுதான் உலகத்தின் அடையாளம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மொழிதான் உலகின் அடையாளம் என்ற அவரின் கூற்று அப்பட்டமான மொழி உரிமையை மீறும் செயலாகும். சிங்கப்பூரில் மூன்று மொழிகள் அங்கீகாரிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலும் மூன்று மொழிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதுபோன்று வேறுபல நாடுகளிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மொழிகள் அங்கு வாழும் சமூகங்களை கருத்தில் கொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டில் 7கோடி மக்கள் தமிழ் பேசும் மக்களாக உள்ளனர். இந்த இந்தி திணிப்புச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் உரிமை மறுக்கப்படுகின்றது. இதனை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நேருஜியின் ஆட்சிக்காலத்தில் கூட இந்தித் திணிப்பு முயற்சி எடுக்கப்பட்டது.

அன்றைய தலைவர்கள் காயதே மில்லத் மற்றும் அறிஞர் அண்ணா போன்றோர் அதனை கடுமையாக எதிர்த்தனர். இதற்கு எதிராக போராட்டங்களை மேற்கொண்டனர். இத்தனை போராட்டங்களுக்கு மத்தியிலும் அன்று நேரு அரசாங்கம் இந்தியை திணித்தது. இதனால் இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் கலவரங்கள் ஏற்பட்டன.

அதுமட்டுமல்ல தமிழகத்தில் காங்கிரஸ் சரிவு காணும் நிலை ஏற்பட்டது. திராவிட இயக்கம் தலைதூக்கியதும் நில ஆட்சியில் கூட பெரும் மாற்றம் ஏற்பட்டது.

அன்று இந்தியை தொன்மை மிக்க மொழியென வாதிட்டனர். அதன் போது சாயிதே மில்லத், அறிஞர் அண்ணா இருவரும் தொன்மை மொழிபற்றிப் பேசுவதானால் தமிழுக்கு இருக்கும் தொன்மை வரலாறு வேறு எந்த மொழிக்கும் கிடையாது அப்படி தொன்மை மொழிக்கு அங்கீகாரம் வழங்குவதாக இருந்தால் தமிழுக்குத்தான் தரவேண்டும். ஆனால் நாம் அப்படிக் கேட்கமாட்டோம். 22மொழிகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள். அரசியலமைப்புக்கமைவாக முடிவெடுக்குமாறு குரல் எழுப்பினார்கள்.

இவ்வளவு போராடியும் கூட 1965இல் நேரு இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாயமாக்கி திணித்தார். இதனால் நாடு பூராகவும் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தலைதூக்கியது.

இதனால் நேரு அரசாங்கம் நெருக்கடியை எதிர்கொண்டது. இதிலிருந்து மீளும் பொருட்டு நேரு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார்.

இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்காதவரை அதனை திணிக்கப்போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்து அந்த வாக்குறுதி இன்று வரை தொடர்கின்றது.

இத்தனை காலமும் பாதுகாக்கப்பட்ட அந்த உரிமைக்கு இன்று மோடி ஆட்சி ஆப்பு வைக்க முனைத்துவிட்டது. அமித் ஷா இந்தியை கட்டாயமாக திணிக்க முனைந்துவிட்டார். இது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான செயலாகும். மோடி அரசு சிறுபான்மைக்கு எதிரான, அடக்கு முறையை ஆரம்பித்துவிட்டது.

மோடி அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவின் பன்முக கலாசார பண்பாடுகளை முற்றாக சிதைவுறச் செய்ய வழிவகுத்துவிட்டது மோடி அரசு தொடுவதெல்லாம் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரானவையேயாகும்.

எமது விடுதலை சிறுத்தைகள் கட்சி மோடி அரசின் இந்தி திணிப்பு உட்பட முன்னெடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் கடுமையாக எதிர்க்கும் மோடி அரசிடமிருந்து நாட்டு மக்கள் நல்லது என எதையும் எதிர்பார்க்க முடியாது எனவும் ஷா நவாஸ் தெரிவித்தார்.

எம்.ஏ.எம். நிலாம்

Comments