முஸ்லிம் அமைச்சர்கள் நாளை மீண்டும் பதவியேற்க ஏற்பாடு | தினகரன் வாரமஞ்சரி

முஸ்லிம் அமைச்சர்கள் நாளை மீண்டும் பதவியேற்க ஏற்பாடு

அமைச்சுப் பதவிகளைத் துறந்தவர்களுள் மீதமாகவுள்ள ஏழு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை திங்கட்கிழமை (15) தமது பதவிகளை மீளப்பொறுப்பேற்கத் தீர்மானித்துள்ளனர். 

அதேநேரம், முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் மீண்டும் அமைச்சரானால், அவருக்கெதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படுமென்று பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் எச்சரித்திருக்கிறார்.

எனவே, இந்தச் சூழ்நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்பதில் ஒரு சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக முஸ்லிம் அரசியல் வட்டாரங்களிலிருந்து நம்பகரமாகத் தெரிய வருகிறது. 

இதேவேளை, முன்னாள் பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், சில முக்கிய காரணங்களுக்காகத் தாம் பதவியை ஏற்பதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் அறியவருகிறது. கல்முனை, வாழைச்சேனை, தோப்பூர் ஆகிய பிரதேசங்களில் நிலவும் அரசியல் நெருக்குவாரங்கள், முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனைப் பதவி ஏற்கக் கூடாது என்று எச்சரிப்பது, குருநாகல் மருத்துவர் ஷாபி சஹாப்தீன் தொடர்பான விசாரணை இழுபறிபட்டுச்செல்வது போன்ற காரணங்களால், தாம் தற்போதைக்குப் பதவியேற்பதில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்தப் பின்னணியில், எஞ்சியிருக்கும் ஏழு பேரும் அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதா, இல்லையா? என்பதில் இறுதியான முடிவை எடுக்க முடியாமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது. 

இருந்தபோதிலும், முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியின் தலைமையில் நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில், அமைச்சுப் பதவிகளைப் பொறுப்பேற்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதவிகளைப் பொறுப்பேற்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கான எழுத்து மூல அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறார். பதவியேற்கவுள்ளோரைச் சிபாரிசு செய்து ஜனாதிபதிக்கும் பிரதமர் அறிவித்திருக்கிறார் என்றும் முஸ்லிம் அரசியல் வட்டாரங்களிலிருந்து வாரமஞ்சரிக்கு நம்பகரமாகத் தெரிய வருகிறது. 

இந்நிலையில்,  நாளை திங்கட்கிழமை பதவியேற்பு நடைபெறலாம் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் அமைச்சுப் பதவியேற்பதில் சிக்கல் எழும் பட்சத்தில், அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடனடியாக ஒன்றுகூடிக் கலந்துரையாடவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பௌசி வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். 

எம்.ஏ.எம்.நிலாம் 

Comments