யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலக பிராந்திய அலுவலகம் | தினகரன் வாரமஞ்சரி

யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் அலுவலக பிராந்திய அலுவலகம்

காணாமல் போனோர் அலுவலகத்தின் பிராந்திய அலுவலகமொன்று அடுத்தமாதம் யாழ்ப்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது முதல் காணாமல்போனோர் தொடர்பிலான பணியகத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்த போதிலும், மஹிந்த தரப்பினரின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.  

என்றாலும், வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒன்றறை வருடங்களுக்குப் பின்னரே பணியகத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கான உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். 

கடந்தாண்டு நாட்டின் நடுப்பாதிக்குப் பின்னரும் இவ்வாண்டு ஆரம்பத்திலும் வடக்கு,கிழக்கு உட்பட நாட்டின் ஒன்பது மாகாணங்களிலும் காணாமல் போனோர் தொடர்பிலான முறைப்பாடுகளை இந்தப் பணியம் பெற்றிருந்தது. சுமார் 15,000முறைப்பாட்டு கோவைகள் வரை பணியகத்திற்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.  

இந்நிலையில், கொழும்பில் மாத்திரம் அலுவலகத்தைக் கொண்டியங்காது வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கின் சில பிரதேசங்களில் பிராந்திய அலுவலகங்களை அமைக்க காணாமல்போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் நடவடிக்கையெடுத்ததுடன், காணாமல் போனோரது குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000ரூபாவை இழப்பீடாக வழங்கவும் அரசாங்கத்திற்குப் பணிப்புரை விடுத்தார்.  

அதற்கான முயற்சிகள் ஒருபுறம் முன்னெடுக்கப்பட்டுவரும் சூழலில், பிராந்திய அலுவலகங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.  

கடந்த ஏப்ரல் மாதம் மன்னாரில் காணாமல்போனோர் பணியகத்தின் பிராந்திய அலுவலகமொன்று அமைக்கப்பட்டிருந்தது. அடுத்த மாதம் யாழ்ப்பாணத்தில் பிராந்திய அலுவலகமொன்றை அமைப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் “தினகரன் வாரமஞ்சரி”யிடம் உறுதிப்படுத்தினார். 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, வவுனியா உள்ளிட்ட வட மாகாண மக்கள் இலகுவாக தகவல்களையும்,முறைப்பாடுகளையும் அளிப்பதற்கே இப்பிராந்திய அலுவலகம் அமைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தை தொடர்ந்து பண்டாரவளையிலும் பிராந்திய பணியகமொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Comments