ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிபில் இலங்கைக்கு ஏன் பின்னடைவு? | தினகரன் வாரமஞ்சரி

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிபில் இலங்கைக்கு ஏன் பின்னடைவு?

23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் அண்மையில் நிறைவுக்கு வந்தது. இம்முறை போட்டிகளில் ஆசியாவின் முன்னணி நாடுகளையெல்லாம் பின்னுக்குத் தள்ளிய பஹ்ரைன் அணி, 11தங்கம் 7வெள்ளி மற்றும் 4வெண்கலப் பதக்கம் உள்ளடங்கலாக 22பதக்கங்களுடன் முதலிடத்தைப் பெற்று ஒட்டுமொத்த சம்பியனாகத் தெரிவாகியது.  

43ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 700வீரர்களின் பங்குபற்றலுடன் நான்கு நாட்களாக கட்டாரில் நடைபெற்ற 23ஆவது ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 15வீரர்களுடன் களமிறங்கிய இலங்கை அணி ஒரேயொரு வெண்கலப் பதக்கத்தை மாத்திரம் வெற்றிகொண்டு பதக்கப் பட்டியலில் 17ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டது.  

பெண்களுக்கான முப்பாய்ச்சலில் பங்குகொண்ட 23வயதுடைய விதூஷா லக்ஷானி வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கான ஒரேயொரு பதக்கதை பெற்றுக்கொடுத்தார்.  

ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளை இலக்காகக் கொண்டு கொழும்பில் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெற்ற இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் பங்குபற்றியிருந்த விதூஷா லக்ஷானி, ஆசிய மெய்வல்லுனர் போட்டிக்கான அடைவுமட்டத்தினை பூர்த்தி செய்யாவிட்டாலும், கடந்த கால திறமைகளை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு இம்முறை ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டியது.  

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கை சார்பாக பதக்கங்களை வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒருசில முக்கியமான வீரர்கள் தமது தனிப்பட்ட அடைவுமட்டத்தினைக் கூட எட்ட முடியாமல் தோல்வியை சந்தித்தனர். எனினும், இம்முறை பங்குபற்றியிருந்த 15வீரர்களில் 6பேரைத் தவிர ஏனைய அனைவரும் இறுதிப் போட்டி வரை முன்னேறியிருந்தமை சிறப்பம்சமாகும்.  

இலங்கை அணியின் பதக்க எதிர்பார்ப்பாக இருந்த பெண்களுக்கான 800மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குகொண்ட இலங்கை அணியின் தலைவியும், 2017இல் இந்தியாவில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றவருமான நிமாலி லியனாராச்சி ஏழாவது இடத்தையும், கயன்திகா அபேரத்ன நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.  

ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடர் ஆரம்பமாவதற்கு 3நாட்களுக்கு முன் கட்டார் சென்றிருந்த ஹிமாஷ ஏஷான், ஆண்களுக்கான 100மீற்றரில் அரையிறுதிப் போட்டிவரை முன்னேறி இருந்தார். எனினும், அவருக்கு ஒட்டுமொத்த வீரர்களில் 16ஆவது இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது. அதேபோல, இறுதி நேரத்தில் பங்குபற்றுவதாக அறிவித்த ஆண்களுக்கான 200மீற்றர் ஓட்டப் போட்டியில் இருந்தும் அவர் விலகிக் கொண்டார்.  

பெண்களுக்கான 400மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்காக பதக்கமொன்றை பெற்றுக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நதீஷா ராமநாயக்க, ஆறாவது இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார். அதேபோல, ஆண்களுக்கான 400மீற்றர் அரையிறுதிப் போட்டியில் பங்குபற்றிய அஜித் பிரேமகுமார, நான்காவது இடத்தைப் பெற்று இறுதிப் போட்டியில் பங்குபற்றும் வாய்ப்பை தவறவிட்டார்.  

ஆண்களுக்கான 800மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட ருசிறு சத்துரங்க ஐந்தாவது இடத்தைப் பெற்றுக்கொள்ள, ஆண்களுக்கான 1500மீற்றர் இறுதிப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் மத்திய தூர ஓட்ட வீரரான ஹேமன்த குமார 11ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.  

பரீத் ஏ றகுமான்

Comments