ஜனாதிபதியின் ஐ.நா. முன்மொழிவு : தமிழ் மக்களின் துயர் துடைக்க வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதியின் ஐ.நா. முன்மொழிவு : தமிழ் மக்களின் துயர் துடைக்க வேண்டும்

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்படவுள்ள புதிய யோசனையானது அரசியல் தீர்வுக்காகவும், நீதிக்காகவும் காத்திருக்கும் தமிழ் மக்களுக்கு நிவாரணமளிக்கும் வகையில் அமையவேண்டும் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதான அமைப்பாளரும், மேல்மாகாணசபை உறுப்பினருமான சி.வை.பி. ராம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு, “இலங்கையில் தீர்க்கப்படாதுள்ள பல   பிரச்சினைகளுக்கு உரிய வகையில் தீர்வுகளை காண்பதற்குரிய யோசனை ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தொடரில் எதிர்வரும் 25 ஆம் திகதி முன்வைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐ.நா.பொதுச் சபையானது சர்வதேச பாராளுமன்றமாகவே கருதப்படுகின்றது. வருடாவருடம் நடைபெறும் கூட்டத்தொடரில் உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று உரையாற்றுவதால் இது மிகவும் முக்கியத்துவமிக்க கூட்டத்தொடராகும். எனவே, அங்கு முன்வைக்கப்படும் கருத்துகளும் அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறும்.

எனவே, இலங்கையில் நெடுநாளாக தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய புதிய யோசனை ஐ.நாவில் முன்வைக்கப்படும் என ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பானது வரவேற்கத்தக்கது. எனினும், சர்வதேச அழுத்தங்களை சமாளிப்பதற்கும், காலஅவகாசம் கோரி இழுத்தடிப்பு செய்வதற்குமானதொரு தந்திரமாக இது இருக்ககூடாது. அவ்வாறு இருக்குமானால் அது நாட்டுக்கு எதிர்காலத்தில் ஆபத்தாக அமைந்துவிடும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுலாக்க ஏற்கனவே இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டது. அக்காலப்பகுதிக்குள் சில நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தாலும் பிரதான விடயங்கள் எதுவும் நடைபெறவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

அதேவேளை, புதிய அரசியலமைப்பு, தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியன தொடர்பிலும் ஜனாதிபதியின் புதிய யோசனையின் கருத்துகள் இடம்பெறவேண்டும் என்பது எனது கோரிக்கையாகும். அதுமட்டுமல்ல, யோசனையை ஐ.நாவில் முன்வைப்பதற்கு முன்னர் அனைத்துகட்சி கூட்டத்தை ஜனாதிபதி கலந்தாலோசித்தால் அது சிறப்பாக இருக்கும்.

தமிழ்க்கட்சி தலைவர்களும் ஜனாதிபதியை சந்தித்து புதிய யோசனையை காத்திரமானதாக மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்கவேண்டும். மாறாக யோசனையை முன்வைத்த பின்னர் விமர்சிப்பதில் பயன் இருக்காது” என்றார்.

Comments