விசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி | தினகரன் வாரமஞ்சரி

விசுவமடு மக்கள் வழங்கிய வரலாற்றுச் செய்தி

“வையத்து வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" ஒரு அரசன் தன் சபை அறிஞர்களிடம் ஒரு கேள்வி கேட்டான். மனித வாழ்க்கைபற்றி எனக்கு எழுதித் தாருங்கள் என்று. அவர்களும் பலமாதங்கள் முயன்று அதை எழுதி மூன்று வண்டிகளில் ஏற்றிக் கொண்டு வந்தனர். அரசனோ திகைத்துப் போனான். இவ்வளவையும் படிக்க எனக்கு பொழுதில்லை இதை சுருக்கமாக எழுதித் தாருங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டான்.

அவர்களும் திரும்பவும் பலமாதங்கள் முயன்று அந்த மூன்று வண்டிகள் நிறைந்திருந்தவற்றை சுருக்கி மூன்று புத்தகங்களாக எழுதி கொண்டு வந்தபோது அரசன் தளர்ந்து போனான். என்னால் இவற்றை இப்போது படிக்க முடியாது நான் மரணப் படுக்கையிலிருக்கிறேன். இப்போது நான் படிக்கக்கூடியதாக எழுதுங்கள் விரைவாக என்றார். ஒரு அறிஞன் அவற்றை சுருக்கி, மூன்று சொற்களாக எழுதித் தந்தான். அதாவது மனிதன், பிறந்தான், வாழ்ந்தான், இறந்தான். அரசனும் அதைப்படித்து திருப்தி கொண்டவனாக இறந்து போனான். இது போலத் தான் இன்றுள்ள மனிதர்களின் வாழ்வு இருக்கிறது வாழ்க்கையில் சிலர் மட்டுமே தம் பெயர் நிலைக்க வாழ்ந்து மடிந்த பின்னும் பெயர் நிலைக்க வாழ்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைய பரபரப்பான செய்தியாக மாறியது விசுவமடு சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரான டபிள்யூ. டபிள்யூ ரத்னப்பிரிய பண்டுவின் பணி இட மாற்ற நிகழ்வு. உண்மையில் அந்த கிராம மக்களின் அமோகமான அன்பான கண்ணீரை அவர் பெற்றிருப்பதானது பெரிய செய்தியாகும், முப்பதாண்டு காலமாக கொலை பாதககர்களாகவும், எதிரியாகவும், இரக்கமற்றவர்களாகவும் இருந்த இராணுவத்தினர் சுமார் ஆறு ஆண்டுகளுக்குள் காருண்யமும், மிக்க அன்பும் அறமும் காக்கும் காவலர்களாகி எந்த மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு குந்தகமாக நின்றார்களோ அந்த மக்களின் மனதை வென்றிருக்கிறார். ஊர்வலமாக தமிழ் இளைஞர்கள் அவரை சுமந்து செல்லும் காட;சி உலகுக்கே பெரும் வரலாற்றுச் செய்தியாகும். மாற்றமொன்றே மாறாதது பாராட்டுக்கள், விசுவமடு மக்களுக்கும் உரித்தாகிறது.

நல்லாட்சி, நல்லிணக்கம், சுற்றுப்பயணங்கள், உளவியல் வகுப்புகள், திட்டவரைபுகள் செயற்றிட்டங்கள் எல்லாம் செய்ய முடியாத ஒன்றை இங்கே தனிமனிதனாக ஒரு ராணுவ அதிகாரி செய்துள்ளார். பொதுவாகவே இதே கருத்தைத்தான் நாமும் பேச முனைகிறோம்.. ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளிலிருந்து நாம் பார்த்த ராணுவத்திற்கும் இப்போது நாம் பார்க்கும் ராணுவத்திற்குமான பாரிய வேறுபாட்டை அதிசயமாகத்தான் பார்க்கிறோம். இராணுவ பிரசன்னம் என்பது சாதாரணமாக மக்கள் வாழுமிடங்களில் இருப்பதில்லை. மாறாக எமது பிரதேசங்களில் அவை சர்வ சாதாரணம்.

அதிலும் குறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அவர்கள் சரளமாக மக்களிடையே உலவுகின்றனர். சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள உத்தியோகத்தர்கள் திறமையாகவே தமது கடமையை செய்கிறார்கள் அவர்களுக்கு அதிகாரத்துடன் அரசாங்க உதவியும் கிடைக்கிறது.

எனது நிலத்தில் இராணுவத்தினர் குடியிருந்தனர். நான் அவர்களை வெளியேற்றித் தரும்படி கோரினேன். என்னுடன் சேர்த்து அயலவர்களுமாக பதினைந்து பேர் இராணுவம் வெளியேறும்போது வெவ்வேறு இடங்களில் வசித்த எமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு எம்மை அழைத்து அந்த நிலங்களை தந்து விட்டே சென்றனர். ஆனால் அவை அரசுக்கு சொந்தமான காணி என அரச அதிபரும் பிரதேச செயலரும் தர மறுத்தனர். பல இலட்ச ரூபாக்கள் பெறுமதியான வீடு கிணறு என கட்டி, பல வான்பயிர்களையும் உருவாக்கி வைத்திருந்த நிலங்கள் அவை. போலிஸாரை கொண்டுவந்து எம்மைக் கலைத்தனர் தமிழ் அதிகாரிகள்.

நாம் ஆளுநரிடம் போனோம். வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே எமது பிரச்சினையை மிக தெளிவாகவும் அனுதாபத்துடனும் நோக்கியதுடன் நிலத்தை எமக்கு வழங்குமாறு குறித்த அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார். ஆனால் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. ஈற்றில் அவர் எமக்காக கிளிநொச்சிக்கு நேரே வருகை தந்து, எம்மையும் அரச அதிகாரிகளையும் அழைத்து பிரச்சனைகளை விவாதித்து நாங்கள் வாழ்ந்த இடங்களை எமக்கு வழங்க ஆவன செய்தார். அவர் ஒரு சிங்களவர் என்பதும் காணியை கோரிய நாம் பதினைந்து பேரும் பழைய போராளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்த பெரும் சபையில் ஆளுநரிடம் பிரதேச உயர் அதிகாரியான தமிழர் என்ன கூறினார் தெரியுமா? சார் இவர்கள் அனைவரும் விடுதலைப்புலி உறுப்பினர்கள். அவர்களது குடியிருப்புகள்தான இவை என்று.

அதற்கு ஆளுநர் கடுப்பாக, போராளிகள் என்ற கதை முடிந்து போனது.

அதை பேசக்கூடாது. அவர்கள் புனர்வாழ்வு முடித்து வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னுரிமையளிக்கவேண்டும் என்றார். ஏன் தமிழா்களிடம் இந்த நற்பண்பு இல்லாமற்போனது. வெட்கப்படவேண்டிய விடயம்.

முன்னொரு காலம் ஆயிரத்து தொளாயிரத்து பதினாறாம் ஆண்டு சேர் பொன் இராமநாதனை பிக்குமார் அவரை அழைத்து வரச்சென்ற குதிரைவண்டியிலிருந்து இறக்கி தாமே தோளில் சுமந்து வந்தார்கள் என்பது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அடுத்து வந்த காலத்தில் ஒட்டுமொத்த இலங்கையர்களின் பிரதி நிதியாக சேர் பொன் ராமநாதன் என்ற தமிழர் தெரிவு செய்யப்பட்டார். இதுதான் தமிழர் ஒருவர் இலங்கை மக்கள் எல்லோருக்குமான தலைவனாக இருந்த பொற்காலம் இது இனி வாராது.

Comments