2015 இல் சாத்தியமான அந்தக் கனவு | தினகரன் வாரமஞ்சரி

2015 இல் சாத்தியமான அந்தக் கனவு

அ.இராமநாதன்

வெள்ளவத்தை

அன்புள்ள ஆசிரியருக்கு,

உள்ளூராட்சி தேர்தல் முடிவடைந்து விட்டது. தென்னிலங்கையில் மிகப் பரவலாக மஹிந்தவின் மீள் எழுச்சி நடந்திருக்கிறது. இது நாட்டுக்கு நல்லதல்ல. சிங்கள மக்கள் மிக அதிகளவில் இனவாதமாகச் சிந்திப்பவர்களாக மாற்றப்பட்டிருக்கிறார்கள். சிங்களவர்கள் இனவாதமாக யோசிக்கவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் ஒரு பத்திரிகையில் சொல்லியிருக்கிறார். வடக்கு மக்கள் ‘மாற்றத்துக்கு’ வாக்களித்துள்ளதாகவும் கூறுகிறார். இதையே தான் வரும் வாரங்களில் கருணாகரனும் கூறுவார் என்று நினைக்கிறேன். கருணாகரன், விக்கினேஸ்வரன் போன்றவர்களுக்கு அவல் போடுவதாக தேர்தல் முடிவுகள் அமைந்தமை பெரிய துரதிர்ஷ்டமே.

தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். ஆனால் 35 -_-40% ஆன வாக்காளர்களே இம்முறை பரவலாக கூட்டமைப்புக்கு வாக்களித்திருக்கிறார்கள். 2016 இன் பிற்பகுதியிலிருந்து அரசாங்கம் தமிழர் விடயங்களில் அசமந்தமாக இருந்ததும் கூட்டமைப்பு அரச சார்பு அமைப்பாக பிரசாரப்படுத்தப்பட்டதும் இதற்கு காரணங்கள்.

புதிய தேர்தல் முறை காரணமாக 10- _15% வீதமான வாக்குகள் பெற்ற கட்சிகள் கூட ஒரு உறுப்பினரை பெற்றிருக்கின்றன. வடக்கிலும் கிழக்கிலும் பெரும் தொகையான சுயேச்சைக்குழுக்கள் இவ்வாறு பெற்றிருக்கின்றன. இச் சுயேச்சைகள் யார்? உண்மையான மக்கள் சேவகர்களா? குழப்பமான அரசியல் பின்புலம் கொண்டவர்களா? என்ற கேள்விகள் இருக்கின்றன. புதிய தேர்தல் முறையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல் செய்திருக்கிறது. மக்கள் மத்தியில் மாற்றத்துக்கான பாரிய எதிர்ப்பு அலை உள்ளது என்பது முற்றிலும் விஷமமான ஒரு கூற்றாகும்.

இளைஞர்கள் மத்தியில் ‘அபிவிருத்தி’ என்ற சொல்லாடல் அண்மைக்காலத்தில் பிரபலமாகி இருக்கிறது. சுத்தமான அகன்ற வீதிகள், உயர்ந்த கட்டிடங்கள், சொகுசான உணவு விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்றன பற்றிய கவர்ச்சி பல இளையவர்களை ஈர்த்து வருகிறது. Youtube காணொளிகளில் வெளிநாடுகளில் இப்படியானவற்றை பார்ப்பதும் வெளிநாட்டு செல்வாக்கும் இதற்கு காரணமாகும். அதனால் ‘அபிவிருத்திக்கு’ வேண்டிய வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் சந்திரகுமாரின் எழுச்சி, மற்றும் யாழ்ப்பாணத்தில் அங்கயனுக்கு கிடைத்த வாக்குகள் இப்படியானவையே. மஹிந்தவை தமிழர்கள் மத்தியில் வெள்ளையடிப்போர் (விக்னேஸ்வரன் போன்று) அதற்குக் கூறும் காரணம் மஹிந்த ‘டெவலப்’ செய்தார் என்பது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் இந்த உணர்வு போக்குகளை கவனத்தில் கொள்ள வேண்டும். தந்தை செல்வா காலத்து உரிமை அரசியல் சில இளைஞர்களுக்கு இப்பொழுது புதிராகவே உள்ளது. ‘தமிழர்களுக்கு என்ன பிரச்சினை?’ சிங்களம் கதைக்கத் தெரிந்தால் ஒரு சிக்கலுமில்லை’ என்று கூறும் ‘தமிழர்களை’ நான் சந்தித்து இருக்கிறேன்.

தென்னிலங்கையில் இனவாதம் மிகவலுவாக தனது குரலை பதிவு செய்துள்ளது. பல கொலை, கொள்ளைச் சம்பவங்களில் சம்பந்தப்பட்ட மகிந்தவை அவர்கள் தலைவனாக்கியுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சி சின்னாபின்னமாகியுள்ளது. ஐக்கிய தேசிய கட்சி பல சிங்கள பெரும்பான்மை தொகுதிகளில் 20_-25% வாக்குகளை பெற்று மிகவும் மோசமாகப் பின்னடைந்துள்ளது. மஹிந்தவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக தமது அரசியல் நலன்களுக்காக இக்கட்சிகள் மோதிக் கொள்வது பெரும் பரிதாபமாகும். 2009/10 க்கு பின் இலங்கையில் இரு கட்சி ஜனநாயகம் காலாவதியாகி விட்டது. பிரதமர் இதை அறிந்து வைத்திருந்தார். மஹிந்தவுக்கு ஆதரவு (Pro Mahinda), மஹிந்தவுக்கு எதிர் (Anti Mahinda) என்று இலங்கை ஜனநாயகம் கூறு போடப்பட்டு விட்டது. 2015 ஜனவரியிலும் ஆகஸ்டிலும் நாடு முழுவதும் Anti Mahinda சக்திகள் வெற்றி வெற்றன. ஆனாலும் அது பெருவெற்றி இல்லை. அதை பலப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. மஹிந்த ஆதரவு சக்திகளின் விஷமப் பிரசாரத்தை முறியடிக்க வேண்டிய முழு நேரப் பணி காணப்பட்டது. துரதிஷ்டவசமாக அது சரியாக முன்னெடுக்கப்படவில்லை. ராஜபக்ச குடும்பத்தை நேரடியாக சிக்க வைக்கும் ஊழல் அல்லது கொலை வழக்கு ஒன்றை இனங்கண்டு அதற்கு பெரிய அளவில் பிரசாரம் செய்ய வேண்டிய தேவை காணப்பட்டது. உதாரணமாக டுபாய் சொத்துக்குவிப்பு வழக்கை குறிப்பிடலாம். ஆனாலும் அரசாங்கம் அதை பிழையாக கையாண்டது. பெரிய அளவில் பிரசாரப்படுத்தவும் இல்லை. சட்ட விரோத வங்கி கணக்குகளிலிருந்து பணத்தை மீளப்பெற்று ராஜபக்சக்கள் தப்பிக் கொண்டார்கள்.

தான் கொல்லப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லசந்த விக்ரமதுங்க மஹிந்தவருடன் தொடர்பு கொண்டிருந்தார். அதனாலேயே அவரது கைபேசி களவாடப்பட்டது. பின்னர் அந்த ‘திருடனை’ பல காலம் பொலிஸார் சிறையில் வைத்திருந்தனர். இந்த வழக்கை ராஜபக்சகளுக்கெதிராக மிகச் சிறப்பாக கையாண்டிருக்க முடியும். அரசாங்கம் அங்கும் தவறிழைத்தது.

அரசாங்கத்தின் அசமந்தமான அணுகுமுறைகள் வேறு பல இடங்களிலும் வெளிப்பட்டன. 2016இலும் 17இலும் வடக்கில் (குறிப்பாக யாழில்) மாவீரர் தினம் ‘சிறப்பாக’ அனுஷ்டிக்கப்பட்டது. அரசாங்கம் பாராமுகமாக இருக்க சிங்கள தீவிரவாதிகள் முகநூல் ஊடாக இனவாத பிரசாரம் செய்தார்கள். ஜனாதிபதியோ பிரதமரோ வாயே திறக்கவில்லை. மஹிந்த காலத்தில் நடக்காதது இப்பொழுது நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது என்ற செய்தி சிங்களவர்களுக்கு சொல்லப்பட்டது. வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது நிர்வாக திறன் குறைபாடுகளை மறைக்க ஆரம்பம் முதல் இனவாதம் பேசி வந்தார். 2015 க்கு பிறகு தமிழ் ஊடகங்களில் ஜனாதிபதியையும் பிரதமரையும் தாங்கி பேட்டிகள் அளித்தார். அரசாங்கத்தின் யாப்பு முயற்சிகளை விமர்சித்தார். அவரது கருத்துக்கள் முகநூலிலும் சிங்கள ஊடகங்களிலும் முக்கியத்துவமளிக்கப்பட்டு பிரசுரிக்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவரை ‘ரணிலின் கையாள்’ என்று விபரித்த இந்த ஊடகங்கள் அவரின் முன்னேற்றகரமான கருத்துக்களை இருட்டடிப்பு செய்து விக்னேஸ்வரனை ‘தமிழர் தலைவராக’ காட்டின. அரசாங்கத்தில் ஜனாதிபதியோ பிரதமரோ விக்னேஸ்வரனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

அது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. ஆனால் சாதாரண சிங்கள மக்கள் நிர்வாகத்திறன் அற்ற வயதான முன்னாள் நீதிபதியை ஒரு ஆபத்தாக கருதினார்கள். மஹிந்த தான் ஜனாதிபதியாக இருந்த போதும் விக்னேஸ்வரனை நேரடியாக தாக்கி பேசி வந்தார். அது மட்டுமன்றி மஹிந்த ஹத்துருசிங்க, G.A சந்திரசிறி போன்ற கடும் போக்கு இராணுவ அதிகாரிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கில் எவ்விதமான ‘எதிர்ப்பு அரசியல்’ நடைபெறும் சூழ்நிலையையும் இல்லாமல் செய்திருந்தார். 2015 க்கு பின்னர் அந்நிலை தலைகீழாக அரசாங்கத்தையும் தாக்கியுள்ளது என்று சொல்லலாம்.

தமிழ் தேசிய அரசியல் சக்திகள் சிங்கள இனவாதத்திற்கெதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். தமக்குள் பிளவுபட்டு நிற்பது நல்லதல்ல. அது ஜனநாயகப் பண்பாக இருந்தாலும் தென்னிலங்கை சிங்கள பௌத்த மதவாத இனவாதம் என்றும் ஒரு குடையின் கீழ் பலமாக உள்ளது. புதிய தேர்தல் முறை தென்னிலங்கையில் ஜனநாயகப் பண்பு வெளிப்பட இடம்தராமல் எதேச்சதிகார சிங்கள தீவிரவாதிகளை வலுவாக்கியிருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் சக்திகள் இந்நிலையை புரிந்து கொண்டு தமக்குள் ஒரு Working relationship ஐ ஏற்படுத்தி கொள்ளவேண்டும். மிகவும் நலிந்து போயுள்ள சிங்கள மிதவாத சக்திகளுடனும் எப்பொழுதும் உறவை பேணி சந்தர்ப்பம் வரும்போது அவர்களை பலப்படுத்தி சிங்கள தீவிரவாதத்தை முறியடிக்க முயல வேண்டும். 2015 இல் சாத்தியமான அந்த கனவு மீண்டும் சாத்தியமாக வேண்டும். 

 

 

Comments