முதல் போட்டி இன்று தர்மசாலாவில் | தினகரன் வாரமஞ்சரி

முதல் போட்டி இன்று தர்மசாலாவில்

 ஹில்மி சுஹைல்     

மூவகைப் போட்டிகள் கொண்ட தொடர்களில் மோத இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாடி வருகிறது. கடந்த வாரம் முடிவுற்ற இரு அணிகளுக்கிடையிலான 3 போடடிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அதைத் தெடர்ந்து இரு அணிகளும் மோதும் ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தர்மசலா கிரிக்கெட் மைதானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகிறது. கடைசியாக இரு அணிகளும் கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையில் 5 போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது. இத்தொடரில் இலங்கை அணி 5 – 0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. மேலும் ஒக்டோபர் மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியிலும் இலங்கை அணி 5-0 என்ற கணக்கில் படுதோல்வியடைந்தது. இவ்வருடத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட மூன்று தொடர்களில் இலங்கை அணி மூன்று முறை தோல்வியுற்ற படுமோசமான சாதனையை புரிந்த ஒரே அணியாக பதிவாகியுள்ளது. மேலும் இலங்கை தொடர்ந்து 12 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியைச் சந்தித்துள்ளது. இவ்வருடத்தில் 26 போட்டிகளில் விளையாடியுளள இலங்கை அணி சிம்பாப்வேவுடன் இரண்டு போட்டிகளிலும், பங்களாதேஷ், இந்தியா ஆகிய அணிகளுடன் ஒவ்வொரு போட்டியிலும் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 21 போட்டிகளில் தோல்வியுற்று சர்வதேச தரவரிசையிலும் பின் நிலையிலேயே உள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் இத்தொடர் தோல்விகளின் காரணமாகவும் 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கிண்ணப் போட்டிகளுக்குத் இலங்கை அணியைத் தயார்படுத்தும் வகையிலும் புதிய தலைவரைத் தேர்வு செய்துள்ளது. கடந்த காலங்களில் மோசமான களத்தடுப்பின் காரணமாக பல விமர்சனங்களுக்குள்ளான சகலதுறை வீரர் திஸர பெரேரா புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வருடத்துக்குள் இலங்கை அணி சந்திக்கும் மூன்றாவது ஒருநாள் தலைவராக திஸர பெரேரா தெரிவாகியுள்ளார். இவர் ஏற்கனவே பாகிஸ்தானுடன் நடைபெற்ற டி/டுவெண்டி போட்டிகளில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கியவர். அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையின் பின் இலங்கை அணிக்கு தலைவரான உபுல் தரங்க 22 போட்டிகளுக்கு தலைமை தாங்கி நான்கு போட்டிகளில் மட்டுமே இலங்கை அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றுள்ளார். இந்தியத் தொடருக்கு இளம் வீரர்களான அசேல குணரத்னவும், குசல் ஜனித் பெரேராவும் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானுடனான தொடரில் விளையாடிய சந்திமால், கபுகெதர, சீகுகே பிரசன்ன, சிறிவர்த்தன போன்ற சிரேஸ்ட வீரர்களும், லசித் மலிங்கவும் இவ்வணியில் சேர்த்த்துக் கொள்ளப்படவில்லை. கடந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது உபாதை காரணமாக விலகிய அஞ்சலோ மெத்தியூஸ் இத்தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளதால் பலமான நிலையிலேயே ஒருநாள் தொடரில் களமிறங்குகிறது இலங்கை அணி.

இந்திய அணியைப் பொறுத்த வரையில் கடைசியாக அவ்வணி தன் சொந்த மண்ணில் நியூசிலாந்துடனான 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-−1 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. மேலும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளதால் அவ்வணி மிகுந்த உற்சாகத்துடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும்.

ஒரு நாள் துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை இந்திய அணி ஆரம்ப ஜோடி முதல் இறுதியில் வரும் பந்துவீச்சாளர்கள் கூட அடித்தாடக் கூடியவர்களே. இந்த ஒருநாள் தொடரில் தலைவர் விராட்கோஹ்லி விளையாடாவிட்டாலும், நீண்ட துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இந்திய அணிக்கு பாதகமாக அமையப்போவதில்லை என்றே கூற வெண்டும். இத்தொடருக்கு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ரோஹித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய அனுபவமுள்ளதால் இத்தொடரிலும் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இதுவரை இந்திய-−இலங்கை அணிகளுக்கிடையில் மொத்தமாக 148 சர்வதேச ஒருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்திய அணி 83 வெற்றிகளையும் இலங்கை அணி 53 வெற்றிகளையும் பெற்றுள்ளதுடன் 11 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளதுடன் ஒரே ஒரு போட்டி சமநிலையில் முடிவுற்றுள்ளது. இதேவேளை இந்திய மண்ணில் இரு அணிகளும் 43 போட்டிகளில் விளையாடியதுடன் இந்திய அணி 29 போட்டிகளிலும் இலங்கை அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இதுவரை இலங்கை மண்ணில் இரு அணிகளும் 61 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் இலங்கை அணி 27 போட்டிகளிலும் இந்திய அணி 28 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளதுடன் 6 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இதேவேளை இந்திய மண்ணில் இரு அணிகளும் 43 போட்டிகளில் விளையாடியதுடன் இந்திய அணி 29 போட்டிகளிலும் இலங்கை அணி 11 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன் 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இவ்விரு அணிகளும் பொதுவான மைதானங்களில் 44 போட்டிகளில் மோதியுள்ளன. இவற்றில் இந்திய அணி 26 போட்டிகளிலும், இலங்கை அணி 15 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன.

இலங்கை- இந்திய போட்டி வரலாற்றில் துடுப்பாட்டத்தில் இந்தியா சார்பாக அதிக ஓட்டங்களை சச்சின் டெண்டுல்கர் 1990 முதல் 2012ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் 84 போட்டிகளில் விளையாடி 8 சதம், 17 அரைச்சதம் அடங்கலாக 3113 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். இதே வேளையில் இலங்கை சார்பாகக் கூடிய ஓட்டங்களை சனத் ஜயசூரிய 1990-2009ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 89 போட்டிகளில் விளையாடி 7 சதம், 14 அரைச்சதம் அடங்கலாக 2899 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்து வீச்சில் இலங்கை சுழற் பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரனே முதன்மை பெற்றுள்ளார். இவர் 1993-−2011ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் 63 போட்டிகளில் விளையாடி 74 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். 2001 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 30 ஓட்டங்களுக்கு 7 விக்கெட் கைப்பற்றியதே இந்தியாவுக்கு எதிரான இலங்கை பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்து வீச்சாகும். இந்தியா சார்பாக சஹிர்கான் 2000-2012ஆம் ஆண்டு காலப் பகுதியில் 48 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். தனி நபர் சிறந்த பந்து வீச்சாக 2005ம் ஆண்டு ஆர் பிரேமதாச மைதானத்தில் அஷிஸ் நெஹ்ரா 59 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் கைப்பற்றியதே இந்திய அணி சார்பாக சிறந்த பந்து வீச்சாகப் பதிவாகியுள்ளது.

தனி நபர் கூடிய ஓட்டமாக இந்திய அணியின் ரோஹித் சர்மா 2015ம் ஆண்டு கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியொன்றில் பெற்ற உலக சாதனை ஓட்டமான 264 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இலங்கை சார்பாக சனத் ஜெயசூரிய 2000ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 189 ஓட்டங்களைப் பெற்றதே இலங்கை சார்பாக கூடிய தனி நபர் ஓட்டங்களாகப் பதிவாகியுள்ளது.

இதுவரை நடைபெற்ற போட்டிகளில் ஒரு அணிபெற்ற குறைந்த ஓட்டமாக 2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் இந்திய அணி பெற்ற 54 ஓட்டங்களே பதிவாகியுள்ளது. இலங்கை அணி 1984ஆம் ஆண்டு சார்ஜாவில் நடைபெற்ற போட்டியொன்றில் 96 ஓட்டத்துக்கு ஆட்டமிழந்ததே இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி பெற்ற குறைந்த ஓட்டங்களாகும். 

 

Comments