புதிர்ச்சோறு | தினகரன் வாரமஞ்சரி

புதிர்ச்சோறு

தாழை செல்வநாயகம்

களுவாஞ்சிக்குடியிலிருந்து வெல்லாவெளியூடாக பா லையடிவெட்டைக்குச் செல்லும் பிரதான பாதையில் வெல்லாவெளிப் பொலிஸ் நிலையத்தையடுத்து வலது புறமாகத் தெரியும் வாழைத்தோட்டமும், வயல்வௌியும், தென்னந்தோப்பும், மாந்தோப்பும் கண்ணுக்ெகட்டிய தூரம் வரையில் மேய்ந்து கொண்டிருக்கும் மாட்டுப்பட்டியும் போடியாருக்குச் சொந்தமானதுதான்.

போரதீவுப்பற்றில் இவரது முக்குவச்சாதிச் சனம்தான் அதிகமாயுள்ளது. இங்குள்ளவர்களின் பெயர்களின் பின்னால் 'போடி' என்ற பதம் இணைந்திருக்கும். அவ்வகையில் இவரது பெயர் 'பாலிப்போடியார்' என்பதாகும். சாதாரண போடிகளைவிட இவர் உண்மையான போடியாரே. "வேலிக்கட்டை என்றாலும் போடிப்பட்டம் போகாது" என்பது இப்பகுதியில் வழக்கிலுளள்ள பழமொழியாகும்.

வயல்வெளிகளில் காட்டுக்கம்புதடிகளைக் கொண்டு, ஓலைக்கிடுகு, இலுக்குப்புல், வைக்ேகால் ஆகியவைகளைக் கொண்டும் அமைக்கப்படும் குடிசைதான் 'வாடி' எனப்படும். ஆனால் போடியாரின் வாடி நாட்டு ஓடுகளையும், கடைசல் மரத்தூண்களையும், கொண்டு கட்டப்பட்ட கல்வீடாகும். இங்குள்ளவர்கள் "போடியார் வாடி" என்றே கூறுவதனையே வழக்கமாகக் கொண்டுவிட்டனர்.

இவருக்கு படுவான்கரை முழுவதும் வயல் நிலங்களுண்டு. 'சேனநாயக்க சமுத்திரத்தின்' வலது கரை வாய்க்கால், போடியாரின் வயல் நிலங்களைத் தாண்டித்தான் மற்றைய பகுதிகளுக்கு நகர்ந்து செல்கின்றது. இதனால் இங்கு நீர்ப்பஞ்சமில்லை. இரண்டு போகங்களும் செய்யும் பூமி. நெல்லிக்காடு, திக்ேகாடை, மாவடிமுன்மாரி, பனிச்சையடி முன்மாரி, 36 ஆம் கொலணி ஆகிய வயற்பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் இவருக்குரியதாகும்.

வயல் வேலைகள் தொடங்கிவிட்டால் போடியாரின் மாட்டுப்பட்டி புழுகுநாவிக் குளத்துப்பக்கம் சென்றுவிடும். கெவுளியாமடுவில்தான் மேய்ச்சல் தரையுள்ளது. தம்பிமுத்தரின் எருமை மாட்டுப்பட்டியும் புழுகுநாவியில்தான் உள்ளது.

தம்பிமுத்தர் போடியாருக்கு 'கொழுத்த மச்சான்' முறையானவர். தம்பிமுத்தரின் சகோதரி 'மாதம்மை' தான் போடியாரின் மனைவி. அவள் பனங்குத்தி மாதிரியிருப்பாள். நெற்றியில் மூன்று விரல்களால் திருநீறு சாத்தி அழகாயிருப்பாள். தலையைவாரி கொண்டை போடாது நின்றிருந்தால் மதுரையை எரித்த கண்ணகியின் கோலத்திலிருப்பாள். குளத்தினருகில் மாட்டுப்பட்டியும் பால்வாடியும், கன்றுக்காலையும் ஒரே வேலிக்குள்ளாகத்தான் அமைந்துள்ளது. வாடியில் தினமும் பாலுக்கும், தயிருக்கும் பஞ்சமில்லை. முட்டியுடன் வருபவர்களுக்கும், போத்தலுடன் வருபவர்களுக்கும் முத்தனும் மாதம்மையும், முகம் கோணாமல் இலவசமாகவே பாத்திரம் நிறையப் பாலுற்றுக் கொடுப்பார்கள். பால் காய்ச்சும் 'அண்டாச் சட்டியினுள்' எப்போதும் பாலாடை கிடக்கும். மாதம்மை பருவமடையாத வயதில் பண்டாரியா வெளியிலிருந்து தன் தமையனுடன் அடிகெரியல் சைக்கிளில் வாடிக்குச் சென்று வருவாள். வாடிக்குப் போறிபோக்கில் குளத்தங்கரையில் கொழுத்துக் கிடக்கும் பொன்னாங்கணிகளை மடிநிறைய நோண்டிக் கொண்டு வந்து, துப்பரவுச் செய்து சட்டிக்குள் கிடக்கும் பாலாடைகளையும் அள்ளிப்போட்டு அடுப்பில் வைத்து பிரட்டி எடுத்தாள் என்றால் அதன் ருசியை எவராலும் மறக்க முடியாது.

பின்னேரத்தியாலத்தில் பழுகாமத்திலிருந்து குளத்திற்கு வரும் மீன் வீசுபவர்கள் 'முண்டான் மீன்' வீசுபவர்கள். அவள் கேட்காமலேயே அள்ளியள்ளிக் கொடுப்பார்கள். மீனை அளவுக்கு எடுத்து பால் சொதி வைத்துவிட்டு, மிகுதி மீன்களை பறம்புக்கல்லில் காயவைத்துவிட்டு, கருவாடாக்கி விடுவாள். காய்ந்த பின்னர் சாக்கில் கட்டி வாடிக்குள் தூக்கிவிடுவாள். கறிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டால் கருவாட்டுடன் விளாம்புளி போட்டிச் சுண்டல் ஆக்கிவிடுவாள். சுண்டலை நினைத்தாலே வாயில் ஜலம் ஊறும்.

"என்ன மாதம்ம!... சட்டிக்குள் பால் கிடக்கா?... இல்லாட்டி மோர்த்தண்ணி எண்டான ஊற்றிவை... மாட்ட அவிட்டு மேயவிட்டுத்து வாறன்" என்று கூறிவிட்டுச் சென்றான் அலம்பல் ஏத்தும் அழகானந்தம். திவுலானைக் காட்டிலிருந்து இந்த வழியால்தான் அலம்பல் வண்டிகள் கோச்சிப் பெட்டிகள் போல் ஒன்றன்பின் ஒன்றாக வந்து கொண்டிருக்கும். கள்ளமரம் வெட்டி ஏற்றும் வண்டியில் காரர்களின் கள்ள வழியும் இதுதான். வன அதிகாரிகள் சிலருக்கு இலஞ்சப்பணம் கொடுததுவிட்டுச் செல்வார்கள். சிலரிடம் சிக்கிவிடுவார்கள். அழகானந்தத்திற்கு களுதாவளையில் வெற்றிலைத் தோட்டம் உண்டு. மாதம்மை மேல் அவனுக்கு ஒரு கண். அவன் என்னதான் கண்ணையுரூட்டிப் பேசினாலும் அவளுக்கு அவன் மேல் விருப்பமில்லை. அவன் வெத்திலைத் தோட்டக்காரன்தானே...! தான் ஒரு போடியாருக்குதான் வாழ்க்ைகப்பட வேண்டும்...! என்று மனதுக்குள் நினைத்துக் கொள்வாள்.

பாலிப்போடியாரைக் கல்யாணம் செய்யுமுன்னர், குளத்துக்குள் தான் ஆடிய ஆட்டங்களையெல்லாம் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டாள். அவ்வளவுதான்.

படுவான்கரை ஏரியாவில் 'அழகுராணிப் போட்டி வைத்தால் நிச்சயமாக அவள்தான் அழகுராணியாக வந்திருப்பாள். கறுப்பு என்றாலும் கஸ்தூரிதானே. அவளுக்கு இப்போதும் அவ்வளவு வயது போகவில்லை. ஐம்பது வயதைக்கூட அவள் எட்டிப்பார்க்கவில்லை.

தாந்தாமலைக் கோவில் திருவிழா தொடங்கிவிட்டால் அவள்பாடு கொண்டாட்டம்தான். தொங்கோேட்டமும், சில்லரைப் பாய்ச்சலுமாயிருப்பாள். உற்சவ காலங்களில் நாற்பது வெட்டைச் சந்தியில் மண்டுக் கொத்துக்களால் பந்தல் அமைத்து அலங்கரித்து மோர்த்தண்ணிப் பந்தல் போட்டு தானம் செய்வாள். வருடாவருடம் அவள் தலைமையில் தாந்தாமலையில் தண்ணீர் பந்தல் நடைபெறும். கதிர்காமக் கந்தனின் தீர்த்தோற்சவத்துடன்தான் தாந்தாமலைத் தீர்த்தமும் நடைபெறும். திருவிழாக் காலங்களில் இரவில் காப்புக்கடைப் பக்கம் சுற்றித்திரிவாள். வலையல் காப்புக்களை நிறம் நிறமாக வாங்கி இரு கைகளிலும் முழங்கை வரையிலும் போட்டு அழகுபார்ப்பாள். அந்த நாட்களில் அவள் பின்னால் சுற்றித்திரியும் கூட்டத்தில் முதன்மையானவன்தான் அழகானந்தம். கோவில் கொடியேற்றம் தொடங்கிவிட்டால். காட்டிற்கு அலம்பல் வெட்டப்போகமாட்டான். தனது மாட்டு வண்டிக்குக் கூடுகட்டி தான் பிறந்த ஊரான வெல்லாவௌிக் கிராமத்திலுள்ள தாய், தந்தையர் சகோதரிகள் போன்றவர்களை நாளாந்தம் தாந்தாவுக்கு ஏற்றி இறக்குவான்.

காப்புக்கடையடியில் அவளை நோட்டம்விட்டு அவள் பின்னால் நின்று "உனக்கு கண்ணாடி வலையல் காப்பு, இல்லாட்டி பாவக்ெகாட்டக் காப்பு வாங்கித் தரட்டா புள்ள?".... "சீ..... போடா... நாயே...! எலும்புச் சுங்கான். அகப்பக்காம்பு போல் ஆள்... இவருக்கு இருக்கிற ஆசையப்பாரு..." அண்ணாச்சக் கூப்பிடட்டா? அண்ணன் என்று சொன்னதும், நின்ற இடத்துக்கும் சொல்லாமல் அவன் ஆள் மாறிவிடுவான். தம்பிமுத்தரைக் கண்டால் அவனுக்குப் பயம். இப்படிக் கடந்தகாலச் சம்பவங்களையெல்லாம் அடிக்கடி நினைத்துப் பார்ப்பாள்.

பாலிப்போடியாரின் வயலில் அறுவடை முடிந்து சூட்டத்த பின்னர் களம் பொலிந்த கையோடு, களத்தில் வைத்து போடியார் தன்கையாலேயே வண்ணான் கூலி, அம்பட்டன் கூலி, அப்பக்காரியின் கூலி, உப்பட்டி சுற்றியவர்களின் கூலி, களத்திற்கு வரும் ஏழைகள் போன்றவர்கள், முல்லைக்காரன், குருவிக்காரன், வட்டவிதானையின் கூலி போன்றவற்றையெல்லாம் கவனித்து நெல்லை அளந்து கொடுத்துவிட்டு மேலதிகமாகவும் தானம் செய்துவிட்டு, மிகுதிநெல் அவரது வாடிக்குப் போய்சேரும் வரையில் களத்தில் நிற்பார். வருடாந்தம் மாசிமகத் தீர்த்தத்திற்கு மறுநாள், புத்தரிசிக்குத்தி பால், தயிர் அறுசுவையான கறிகளோடு போடியார் வாடியில் புதிர்ச்சோறு சாப்பிடும் முறை வழக்கத்திலுள்ளது.

புதிர்ச்சோறு சாப்பிடும் தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் போடியாரின் வெடிக்காரன் செல்லையன் துவக்ைகயும் தேவையான அளவு தோட்டாக்களும் அள்ளிப்போட்டுக் கொண்டு, சகல சாப்பட்டுச் சாமான்களுடன் துணைக்கு முல்லைக்காரனையும் அழைத்துக் கொண்டு, தங்குவெட்டிக்காட்டிற்குச் செல்வான். சோலைக்காட்டில் ஊத்து மடுக்களையண்டிய பகுதியில் மரத்தின் மேலும் தரையிலும் காற்றுவழம் பார்த்து ஔிப்பரண்களைத் தயார்படுத்தி அதிலிருந்து காட்டு மிருகங்களை வேண்டிய மட்டும் வேட்டையாடுவார்கள்.

தண்ணீர் தேடி தாகத்துடன் மடுக்கு வரும் மிருகங்கள் எல்லாவற்றையும் செல்லயன் சுடமாட்டான். கலைமரை, கலைமான், முள்ளான்பன்றி போன்றவைகளை மாத்திரம்தான் தெரிந்து சுடுவதில் இவன் கெட்டிக்காரன். குட்டிகளையோ! கருவுற்ற மிருகங்களையோ சுடாமல் அதில் கண்ணும் கருத்துமா இருப்பான்.

அந்த இடத்திலேயே சிறாம்பிகட்டி வேட்டையாடி 'மிருகங்களையெல்லாம் உரித்து, வார்த்து எடுத்து, சிறாம்பியில் போட்ட நெருப்பில் வாட்டி சூட்டு இறைச்சியாக்கி சாக்கில் கட்டி போடியாரின் வாடிக்குத்திரும்புவான். செல்லையன் தங்கு வெடிக்காட்டில் இருக்கும் நாட்களில் தனி ஈரல் கறிமட்டும்தான் சமைப்பான்.

அன்று போடியார் வாடியில் ‘புதிர்ச்சோறாம்’ என்று கேள்விப்பட்தும், கனகசபை ஐயாவும், நாகமணி விதானையாரும், சின்னவன் அதிபரும் வந்துவிட்டார்கள். போடியார் வாடிக்கு வருடாவரும் வந்து புதிர் சாப்பிடுபவர்களில் மூவரும் முன்னணியில் உள்ளவர்கள். விவசாயத் திணைக்களத்தில் உயர் அதிகாரியாகவுள்ள கனகசபை ஐயா போடியாருக்கு ஆலோசனை வழங்குவது மாத்திரமின்றி உதவிகள் பலவும் செய்வார். சின்னவன் அக்கிராமத்து பாடசாலையின் அதிபர். ஊர்விதானையார் நாகமணியர். இவருக்கு எவரும் கணக்குவிட முடியாது. மூவருக்கும் போடியார் வாடியில் புதிர் சாப்பிடுவதில் அலாதிப்பிரியம்.

இரண்டு கிழமைக்கு முன்னரேயே முல்லைக்காரன் வயல் வெட்டையிலிருந்து ‘புதிர்காவி’ வந்துவிட்டான். போடியார் வாடியில் புதிராம் என்று கேள்விப்பட்டதும் அந்த ஊர்ச் சனங்களும் படையெடுத்து வந்துவிடும். பிள்ளை குட்டிகள் வந்த கையோடு மாமரத்தின் கீழ் போடப்பட்டு தயாராகவிருக்கும் பனை ஓலைப் பாய்களில் வரிசையாக அமர்ந்துவிட்டார்கள். குசினிப் பக்கமிருந்து கறிவாசனை அங்குள்ளவர்களின் மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது.

“என்ன போடியார்...! புதிருக்கு என்ன கறி சமைக்கிறயள்...? என்று கேட்டார் கனகசபை ஐயா.... அவர் கேட்கும் வழக்கமான கேள்விதான். கறி என்றதும் விதானையாரும், சின்னவன் அதிபரும் வாய்களைச் சப்புக்கொட்டிக் கொண்டார்கள்.

“மணலமீன் குளம்பிருக்கு

மணக்கச்சின பொரிச்சிருக்கு

புளியாணம் வச்சிருக்கு – கொஞ்சம்

பொறுங்க ஐயா சாப்பிடலாம்....”

போடியார் நாட்டார் பாடல் பாடுவதில் கெட்டிக்காரர். வயலில் அருவி வெட்டும்போதும், சூடடிக்கும் போதும், பொலிதூற்றும் போதெல்லாம் அங்கு நின்றவாறு கவிபாடிக் கொண்டிருப்பார். இவையெல்லாம் அந்தக் கிராமத்தவரும் அறிந்த விடயம்.

“என்ன போடியார் இந்த முற சூட்டிறைச்சி கிடைக்கல்லயா? என்றார் மீண்டும். ஏன் இல்ல.... வெடிக்கார செல்லையன் தங்குவெடி காட்டிற்கு போய் தொகையாக இறைச்சி கொண்டுவந்திருக்கான் ஐயா...! போகக்குள்ள எல்லாருக்கும் தாறன் கொண்டு போங்களன். “போடியார் இன்னொரு விசயம் சொல்ல மறந்திட்டன், நான் அடிக்கடி கொழும்புக்கு போய் வாறவன் தானே உங்களுக்கும் அது தெரியும். அந்தச் சமயத்தில தமிழ்ச் சங்கத்திற்கும் போக மறக்கமாட்டன். அது என்ட வழக்கம்.

அப்பவெல்லாம் சேகரன்ஐயா என்னச் சந்திருபாரு. “கனகசபையரே உங்கட ஊர்ப் பக்கம் இறைச்சி, பால், தேனுக்கு பஞ்சம் இல்லைதானே. மற்றப்பயணம் வரக்குள்ள சூட்டிறச்சி அம்பிட்டா ஒரு கிலோ எண்டாலும் கொண்டு வாவன்” மிச்சம் கவனமாக கொண்டுவரணும்.....” என்று சொல்லுவாரு.... “ஓமோம் நானும் கேள்விப்பட்டிருக்கன்.”

எண்ட பொடியனுக்கும் கொழும்பில் இருந்து தபால்ல ஒரு புத்தகம் வரும். புத்தகத்திர பேருதான் ஞாபகமில்லை... ஓம் போடியார்! அந்த ஐயாதான்...

போடியாரின் பொஞ்சாதி மாதம்மை அதற்கிடையில் புதிர்பிசைந்துவிட்டு, அங்கு பசியுடன் அமர்ந்திருக்கும் பிள்ளைகள், ஆட்களுக்கெல்லாம் கொழுக்கட்டை போல் பிடித்து, கோவில் பிரசாதம் கொடுப்பது போல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

புதிர்ச்சோரு கொடுக்கு முன்னர், “புதிர்பிசைந்து ஊட்டுதல்” இப்பகுதி மக்களின் மரபுவழி வழக்காறு. ஆக்கியெடுத்த புது அரிசிச் சோற்றுடன், சமைத்த பல்விதக் கறிகளையும் தயிர், பால், முக்கனிகள், அனைத்தையும் ஒன்று சேர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு பிசைந்தெடுக்கும் செயல்முறைதான். “புதிர்பிசைதல்” எனப்படுவது. இது தேவாமிர்தத்திற்குச் சமமானது. புதிர்ச்சோறு உண்பதும், புதிர் பிசைதலும் தற்போது மக்களிடையே அருகிப்போய் விட்டன. பிள்ளைகள் பெரியவர்கள் அனைவருக்கும் தலைவாழையிலையில் புதிர்ச்சோறு வழங்கப்பட்டன. சாப்பிட்ட பின்னர் வீட்டிலுள்ளவர்களுக்கும் எடுத்துச் சென்றார்கள்.

கனகசபை ஐயா, விதானையார், அதிபர், கடைசியில் வந்த பள்ளி அண்ணர் ஆகியோர் பலதும் பத்தும் கதைத்துவிட்டு புதிர்ச்சோறு சாப்பிட்டுப் பசியாறி, போடியார் கொடுத்த புது அரிசி, சூட்டிறைச்சி, எருமைத் தயிர், போன்றவைகளைச் சுமக்க முடியாது போடியாரிடம் விடைபெற்றனர். மாதம்மையும் “வாய் வாய்” சொல்ல மறக்கவில்லை. 

Comments