சமஷ்டியை எதிர்த்தது கூட்டமைப்பே; நிதானமாக வாய் திறக்கவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

சமஷ்டியை எதிர்த்தது கூட்டமைப்பே; நிதானமாக வாய் திறக்கவேண்டும்

கிளிநொச்சி குறூப் நிருபர்

 

தமிழ் மக்களுக்கான சமஷ்டித் தீர்வை எதிர்த்தது தமிழ்த் தேசிய கூட்டமைப்பே என்றும் தாம் எப்போதும் அதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு சமஷ்டித் தீர்வுடன் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாக்கு கேட்டபோது, அவருக்கு வாக்களிக்க விடாமல் தமிழ் மக்களைத் தடுத்ததன் மூலம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே சமஷ்டிக்கு எதிராகச் செயற்பட்டுள்ளார்கள் என்று ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

சமஷ்டியை பெயருக்ேகனும் பேசாத சங்கரியுடன் கூட்டணி அமைப்பது எவ்வாறு என்று கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளமை சிறுபிள்ளைத்தனமானது என்று தெரிவித்துள்ள திரு.ஆனந்தசங்கரி, நாட்டுப்பற்றிருந்தால் புதிய கூட்டணியில் வந்து இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்தகால கூட்டமைப்பு போல் தனிக்கட்சி அதிகாரம் இங்கில்லை எனவே பொய்களையும், குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதனை விடுத்து ஒன்றிணையுமாறு வீ. ஆனந்தசங்கரி கஜேந்திரகுமாருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் தனது அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்தார்.

"கஜேந்திரகுமார் அரசியலில் பால்குடி. நான் பாராளுமன்றம் போகும்போது அவர். பிறக்கவில்லை. ஆகவே, அவர் வாய் திறக்கும் போது யோசித்துவிட்டு திறக்க வேண்டும். நான் கஜேந்திரகுமாரின் தந்தை, பேரன் உள்ளிட்ட மூத்த அரசியல் தலைவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்தவன்.

ஆகவே வரலாறு தெரியாது பேசுவது சிறுபிள்ளைதனமானது.அவர் வரலாற்றினை நன்கு அறிந்துகொண்டு அதன் பின்னர் அறிக்ைககளை விட வேண்டும் என்றும் ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்தார்.

Comments