எதிர்கால விளைவுகளுக்கு எதிர்ப்போரே பொறுப்பாவர் | தினகரன் வாரமஞ்சரி

எதிர்கால விளைவுகளுக்கு எதிர்ப்போரே பொறுப்பாவர்

 எதிர்ப்பதை விடுத்து யோசனைகளை கூறுங்கள் 

வவுனியாவில் ஜனாதிபதி

வவுனியாவிலிருந்து லோரன்ஸ் செல்வநாயகம்

 

அதிகாரப்பகிர்வு என்பது அரசியல் சார்ந்தது அல்ல.அது மக்கள் சார்ந்தது என்றும் அதனை எதிர்ப்போர் யதார்த்தத்தை புரிந்துகொள்வது அவசியமென்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வவுனியாவில் தெரிவித்தார். தேசியப் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு வழங்கப்படாவிட்டால் எதிர்கால விளைவுகளுக்கு அதனை எதிர்ப்போரே பொறுப்புக்கூற வேண்டு​ெமனவும் தெரிவித்த ஜனாதிபதி, எதிர்ப்பதைவிடுத்து தமது யோசனையை அவர்கள் முன் வைக்கட்டும் என்றும் தெரிவித்தார்.

வவுனியா சைவப் பிரகாசர் மகளிர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதி நடமாடும் மக்கள் சேவையை ஆரம்பித்து வைத்து வடக்கு மக்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி,

வடக்கில் தொடர்ச்சியான வரட்சியினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இப்பகுதி மக்கள் யுத்தத்தின் பாதிப்புக்களுக்கும் நீண்ட காலம் முகங் கொடுக்க நேர்ந்துள்ளது. இந்த ரீதியில் மிகவும் கஷ்டப்பிரதேசமாகவே இப் பிரதேசத்தைக் குறிப்பிட முடியும்.

அரச அதிகாரிகளுக்கோ, ஆசிரியர்கள் மற்றும் படையினருக்கோ வடமாகாணத்துக்கு இடமாற்றம் வழங்கினால் அது நாம் அவர்களுக்கு வழங்கும் தண்டனையாகவே அவர்கள் கருதுவர். அந்தளவு கஷ்டமான பிரதேசம் இது. யுத்தத்துக்கு முன்னரும் இப்பகுதி இதே நிலைதான். இந்த நிலையிலேயே தற்போது இங்கு பணிபுரியும் அரச அதிகாரிகளும் ஆசிரியர்களும் இங்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். கிழக்கிலும் இதே நிலைதான். இதற்குக் காரணம் அரசியலல்ல. நாட்டில் ஏனைய பகுதிகளில் காணப்படும் வசதி, அபிவிருத்தி இங்கு இல்லைதான்.

கடந்த 50-,60 வருடங்களை நோக்கும் போது நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட குறைந்த அபிவிருத்தியே இங்கு இடம் பெற்றுள்ளது. இது தான் யுத்தம் ஏற்படவும் ஒரு காரணமாகியது.

நாட்டில் 1947 இலிருந்து பாராளுமன்றம் இயங்குகின்றது. எனினும் வடக்கிலிருந்து எத்தனை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. அபிவிருத்தி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் சமமாக பகிரப்படவில்லை.

இந்த பகுதிகளில் அரச அதிகாரிகள், ஆசிரியர்கள், சுகாதாரப் பிரிவு அதிகாரிகளுக்குப் பெரும் வெற்றிடம் காணப்படுகிறது. அதனால்தான் மேல் மாகாணத்தைப் போன்றே வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய எமது அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் 75 வீதமான வடக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் அபிவிருத்தியின்போது வடக்குக்கு முன்னுரிமையளித்து வருகின்றோம். மாகாண சபைக்கும் நாம் பாரிய நிதியினை வழங்கியுள்ளோம். எனினும் அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொடுப்பதில் இங்கு குறைபாடுகள் காணப்படுகின்றன. பின்னடைவுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விவசாயிகளை முன்னேற்ற பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாம் அபிவிருத்தி போன்றே அரசியல் மாற்ற மொன்றிற்கான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். நாடு பிளவுபடாத வகையில் அதிகாரப் பகிர்வு மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என்பதையே நாம் மக்களுக்கு கூறிவருகின்றோம். இது விடயத்தில் சில சக்திகள் உண்மைபேசுவது போன்று பொய்களை கூறிவருகின்றனர்.

இக்காலங்களில் தேசிய பத்திரிகைகள் பல தவறான பொய் தகவல்களையே வெளியிட்டுவருகின்றன. தெற்கு மக்களை தவறாக திசைதிருப்பும் வகையிலேயே அவை அமைந்துள்ளன.

அரசியலமைப்புக்கு எதிராக செயற்படுபவர்கள் அவர்கள் கூறும் தீர்வை முன்வைக்குமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். இதிலுள்ள சிக்கல்களை அவர்கள் புரிந்து செயற்படுவது முக்கியமாகும். யுத்தத்தினால் துண்டாட முடியாது போன நாட்டை நாம் தற்போது துண்டாட நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக நிராகரிக்கின்றேன்.

அதிகாரப் பகிர்வை எதிர்ப்போர் வடக்கு கிழக்கு வந்து நிலைமைகளை நேரில் பார்க்குமாறு அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். மேல், சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அபிவிருத்தி இந்த மாகாணங்களில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.

நாட்டில் எப்பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரே விதமான மக்களே அவர்கள் தமிழர்களா சிங்களவர்களா முஸ்லிம்களா என்பது பிரச்சினையில்லை. அவர்களுக்கு சமத்துவம் கிடைக்க வேண்டும். ஒரே விதமான அபிவிருத்தி அவசியமாகும். வளங்கள் சமமாகப் பகிரப்பட வேண்டும் உணவு கல்வி, சுகாதாரம் என சமமான பகிர்தல் முக்கியமாகும்.

இந்த சமமான பகிர்தலை உறுதிப்படுத்தவே நாம் அதிகாரிப்பகிர்வை கொண்டு வரவுள்ளோம். அதிகாரப் பகிர்வு என்பது அரசியல் சார்ந்ததல்ல அது மக்கள் சார்ந்த ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும். இது தொடர்பில் எதிர்ப்பு தெரிவிப்போர் இதன் யதார்த்தத்தை புரிந்து கொள்வது முக்கியம்.

போராட்டங்கள், எதிர்ப்பு விமர்சனங்களை மேற்கொள்வது எளிது. எனினும் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்களிடம் எந்த யோசனைகளும் கிடையாது. அரசியல் தீர்வுக்கு நியாயமான யோசனைகள் அவர்களிடம் இருக்குமானால் அதனைத் தருமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இதுவரை எந்த முடிவுகளும் எட்டப்படவில்லை.

முதற்கட்ட சட்டமூலத்தைக் கூட தயாரிக்கவில்லை. இப்போதுதான் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட கருத்துக்களை திரட்டி பாராளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளோம். அது தொடர்பில் பேச்சு நடத்த போதியளவு சந்தர்ப்பம் உள்ளது. பொருத்தமில்லாதவை இருப்பின் அவற்றை நீக்கவும் திருத்தம் செய்யவும் முடியும் மக்களின் அனைத்து பிரச்சினைகள் தொடர்பிலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் அதிலுள்ளவைகளுக்கு மேலாக பொய்ப் பிரசாரங்கள் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

நான் இம்முறை ஞாயிறு பத்திரிகைகளை வாசித்தேன். அவற்றில் எந்தளவு பொய் தகவல்கள் உள்ளன என்பதை அறியமுடிந்தது.

20 பக்க பத்திரிகையில் 10 பக்கம் அரசுக்கு எதிராக எழுதினாலும் மேலும் 10 பக்கங்கள் அரசாங்கத்தின் தரப்பையும் கூற வேண்டும். தற்போது அப்படியல்ல அனைத்து பக்கங்களும் அரசாங்கத்தை தாக்கியே பிரசுரமாகின்றன. இவை முற்று முழுதாக தவறான செய்தியே. இதன் மூலம் மக்களை அரச அதிகாரிகளையும், மகாநாயக்கர்களையும் தவறாக திசை திருப்ப பார்க்கின்றார்கள். இவர்களுக்கு நாட்டுப் பற்றுக்கிடையாது. தமது அரசியல் நிகழ்ச்சி நிரலையே நிறைவேற்றுகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ) 

 

 

Comments