வளங்கொழிக்குந் தாயகம்! | தினகரன் வாரமஞ்சரி

வளங்கொழிக்குந் தாயகம்!

இசைபாடி நடந்தோடும் இனிதான அருவி

எழிலோடு குளம் மேவி விளையாடுந் தழுவி

திசைதோறும் வயலெங்கும் விளைந்தாடும் பயிர்கள்

தாய் நாடு இலங்கையில் ஏராளம் வளங்கள்

நெல்லினோடு தேயிலை நிறைவான பழவகை

நிமிர்ந்து நிற்கும் தென்னையோடு நிகரிலாதபனை மரம்

அல்லும் பகலும் உழைத்திடும் அருமை மக்கள் மகிழவே

அன்னை பூமி எங்குமே அதிகம் விளைவு பொங்குமே

இறப்பரோடு கோப்பியும் ஏலம் மிளகு கராம்புமே

ஏற்றுமதி ஆகுமே இலாபம் நாட்டிற் புரளுமே!

உறவைப் பேணி வாழ்ந்திடும் உயர்ந்த பண்பு மக்களால்

ஒளிரும் முத்து இலங்கையை உலகம் போற்றி வாழ்த்துமே!

சுற்றிவரக் கடல்வளம் தொகை தொகையாய் மீனினம்

தொன்மையான துறைமுகம் தொழில் வளங்கள் பலவிதம்

அற்பு தஞ்சேர் கனிவளம் ஆணிமுத்து வைரங்கள்

அழகு பொலியு மினிய மண் இலங்கையெங்கள் இதயமே!

பூக்கள் மலர்ந்து மணந்தரும் பொலிவு மிக்க மலர்வனம்

பொய்கை தோறுந் தாமரை அல்லி ஆம்பல் இதந்தரும்

பாக்கள் பாடி மகிழுவோம் பசிய இலங்கை நாட்டிலே

ஏக்கமில்லை நெஞ்சிலே எங்கும் வளங்கள் கொஞ்சுமே!

Comments