தமிழ் மொழியை அமுலாக்க ஏன் இந்த அலட்சியம்? | தினகரன் வாரமஞ்சரி

தமிழ் மொழியை அமுலாக்க ஏன் இந்த அலட்சியம்?

எமது நாட்டில் இனங்களுக்கிடையேயான விரிசல் உருவெடுப்பதற்கு தமிழ் மொழிப்புறக்கணிப்பும் ஒரு காரணியாக அமைந்திருந்தது. நாட்டில் பெரும்பான்மை மக்கள் பேசுகின்ற சிங்கள மொழிக்கு முன்னுரிமையும், சிறுபான்மை மக்கள் பேசுகின்ற தமிழ்மொழிக்கு புறக்கணிப்பும் அளிக்கப்பட்டமை பெரும் பாரபட்சமும் அநீதியும் ஆகும்.

இலங்கையில் தமிழ்மொழிப் புறக்கணிப்புக்கு விதை ஊன்றப்பட்டு ஆறு தசாப்த காலத்துக்கும் மேலாகி விட்டது. ஆனால் நாட்டில் தமிழ்ப் மொழி மீதான புறக்கணிப்பு இன்னும் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

இலங்கையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுகின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு வேறெங்கும் செல்ல வேண்டியதில்லை. கொழும்பு, பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவுத் திணைக்களத்துக்குச் சென்றால் தமிழ்மொழி மீதான திட்டமிட்ட புறக்கணிப்பை தாராளமாகவே நேரில் கண்டு கொள்ள முடியும்.

தேசிய அடையாள அட்டையை வழங்குகின்ற ஆட்பதிவுத் திணைக்களமானது பத்தரமுல்லையில் வானுயர்ந்த பெரும் கட்டடமொன்றில் இயங்கி வருகின்றது. பல வருடங்களுக்கு முன்னர் கொழும்பு-07, ஜாவத்தையில் இயங்கிய ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம் இடப்பற்றாக்குறை காரணமாக பின்னர் பத்தரமுல்லைக்கு இடமாற்றப்பட்டது.

பத்தரமுல்லையில் நவீன வசதிகளுடன் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடமொன்றில் ஆட்பதிவுத் திணைக்கள அலுவலகம் பல வருடங்களாக இயங்கி வருகின்றது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் கட்டடம் மாத்திரம் நவீனமயமானதாக மாறி விடவில்லை. அத்திணைக்களத்தின் அத்தனை பிரிவுகளுமே கணனிமயப்படுத்தப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ளன.

தேசிய அடையாள அட்டையை ஒருநாள் சேவை மூலம் அதே தினத்தில் பெற்றுக் கொள்வதற்கான கருமங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன.

அடையாள அட்டை விண்ணப்பங்களை சரிபார்த்து உறுதிப்படுத்துவதற்கென கீழ்த்தளத்தில் பிரமாண்டமான ஒரு மண்டபம்...

அவ்விடத்தில் கருமத்தை முடித்து வெளியேறியதும் ‘லிஃப்ற்’ மூலம் ஒன்பதாம் மாடிக்குச் சென்றால், ஒருநாள் சேவைக் கட்டணமான ஆயிரம் ரூபாவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெறுவதற்காக தனியாக ஒரு அறை.... அதன் பின்னர் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக காத்திருப்பதற்கென ஆசனங்கள் இடப்பட்ட தனியானதொரு மண்டபம்...

இவ்வாறு ஏற்பாடுகளெல்லாம் கனகச்சிதமாகவே இருக்கின்றன. ஒரேநாளில் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஆனாலும் இந்த ஏற்பாடுகளெல்லாம் சிங்கள மொழி தெரிந்தவர்களுக்காக மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. சிங்கள மொழி புரியாத சிறுபான்மையினர் எவராவது தமது அடையாள அட்டை கருமத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு தனியாகச் செல்வது உசிதமல்ல. சிங்கள மொழி தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றாலேயே கருமத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்றபடியாக ஆட்பதிவுத் திணைக்களத்தில் அனைத்துமே சிங்கள மயமாக இருக்கின்றன. தமிழில் விபரங்களைக் கேட்டறிவதற்கு அங்கே மருந்துக்குக் கூட ஒருவர் கிடையாது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கீழ் மண்டபம் அதிகாலை வேளையிலேயே பரபரப்பாகி விடுவதுண்டு. ‘டோக்கன்’ இலக்கத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அதிகாலை வேளையிலேயே ஆயிரக்கணக்கானோர் அங்கே வந்து விடுகின்றனர்.

‘டோக்கன்’ இலக்கங்களை வழங்குவது, ஆட்பதிவுத் திணைக்கள ஊழியர்களின் கருமங்களுக்காக மக்களை நெறிப்படுத்துவது, தகவல்களை வழங்குவது போன்ற பிரதானமான கடமைகளையெல்லாம் சீருடை அணிந்த படையினரே மேற்கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் தமிழ் பேசுவதில்லை. அத்தனை அறிவிப்புகளையும் சிங்களத்திலேயே கூறுகின்றனர். சிங்கள மொழி புரியாதவர்கள் ஏராளமானோர் அங்கு வந்துள்ளனரென்பதையிட்டு அவர்களுக்குக் கவலையில்லை.

வடக்கு, கிழக்கு போன்ற பிரதேசங்களிலிருந்து ஆட்பதிவுத் திணைக்களத்துக்கு வருகின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் அங்கே அனுபவிக்கின்ற அவஸ்தைகளை விபரிக்க முடியாது. சிங்களத்தில் மாத்திரம் கூறப்படுகின்ற அறிவிப்புகளை யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்வதற்காக அவர்கள் அங்குமிங்கும் தடுமாறியபடி அலைவது உண்மையிலேயே அவலக் காட்சியாகும்.

அனைத்துக் கருமங்களையும் நிறைவேற்றி இறுதியில் அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காகக் காத்திருக்கின்ற மண்டபத்தில் ஒலிபெருக்கி மூலம் ஏதேதோவெல்லாம் அறிவிப்புகளைக் கூறுகின்றனர். ஆனால் சிங்களம் தெரிந்தவர்களுக்கு மாத்திரமே அனைத்தும் வெளிச்சம்!

தமிழ், சிங்களம் ஆகிய இரு பிரதான மொழிகளைப் பேசுகின்ற இனங்கள் வாழ்கின்ற எமது நாட்டைப் பொறுத்த வரை ஆட்பதிவுத் திணைக்களத்தில் நடப்பது பெரும் அநீதி. இவ்வாறான புறக்கணிப்புகளுக்கெல்லாம் பொறுப்புக் கூற வேண்டியவர் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளரேயன்றி வேறெவரும் இல்லை. ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அதிகாரி அவரேயாவார்.

இக்குறைபாடு விரைவில் சரிசெய்யப்படாது போனால் தமிழ்மொழியைப் புறக்கணிப்பதில் அவரும் உடந்தை என்று சிறுபான்மை மக்கள் நினைப்பதில் தவறெதுவும் இல்லை!

அதேசமயம் அரச கருமமொழிகள் அமுலாக்கல் விடயத்தில் இடம்பெறுகின்ற இதுபோன்ற பாரிய அநீதிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டிய கடப்பாடு அமைச்சர் மனோகணேசனுக்கு உண்டு. ஆட்பதிவுத் திணைக்களத்தில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதை அமைச்சர் மனோகணேசன் இதுவரை அறிந்து கொண்டிருப்பாரோ தெரியவில்லை. அமைச்சர் இக்குறைப்பாட்டை நிவர்த்திக்க துரித நடவடிக்கை மேற்கொள்வது அவசியம். இல்லையேல் தமிழ்மொழி அமுலாக்கலென்பது நகைப்புக்குரியதாகி விடும்.

Comments