இடி, மின்னல், காற்றுடன் நாளை முதல் மீண்டும் அடைமழை தொடரும் | தினகரன் வாரமஞ்சரி

இடி, மின்னல், காற்றுடன் நாளை முதல் மீண்டும் அடைமழை தொடரும்

லோரன்ஸ் செல்வநாயகம்

நாட்டில் தற்போது மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ள போதும் நாளை முதல் மீண்டும் அடைமழை தொடரும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

நாளை திங்கட்கிழமை தென்மேல் பருவப் பெயர்ச்சி ஆரம்பமாவதால் மழையுடன் கடும் காற்றும் அதிகரிக்கும் என்றும் ஐந்து மாகாணங்களில் இதன் பாதிப்புகள் நிலவும் என்றும் மேற்படி நிலையம் தெரிவித்தது.

அடுத்த 24 மணித்தியாலயங்களுக்குள் நாட்டின் பல பகுதிகளிலும் இடி, மின்னல், காற்றுடன் கூடிய மழைபெய்யும் என்றும் சில பகுதிகளில் 100 மீற்றர் மழைபெய்யுமெனவும் நிலையம் தெரிவித்தது.

கடந்த 24 மணித்தியாலயங்களில் அதிகூடிய 68.2 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி இரத்தினபுரியில் பதிவாகியுள்ளதாகவும் மழைவீச்சி தற்போது குறை வடைந்துள்ளபோதும் இடி, மின்னல் காற்றுடன் கூடிய பருவப் பெயர்ச்சி மழை தொடரும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. மக்கள், இதன் மூலமான இயற்கை அனர்த்தங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் அந்த நிலையம் தெரிவித்தது.

இதேவேளை,மேல், சப்ரகமுவ, தென், வட மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலயங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை நிலைய அதிகாரியொருவர் தெரிவத்தார்.

கடலை அண்டிய பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பதுடன் 60ற்கும் 80ற்கும் இடைபட்ட வேகத்தில் காற்று வீசும் எனவும் இப்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பு காணப்படுமென்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். குறிப்பாக புத்தளம், கங்கேசன்துறை, கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை கடற்பரப்புகளில் 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கடலுக்குத் தொழிலுக்காக செல்வோர், கடலை அண்டிய பிரதேசங்களில் வாழ்வோர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்துமாறும் அவ்வதிகாரி தெரிவித்தார்.  

 

Comments