Home » துபாய் வெள்ளம்: காரணம் என்ன?

துபாய் வெள்ளம்: காரணம் என்ன?

மேக விதைப்பால் ஏற்பட்ட அனர்த்தமா?

by Damith Pushpika
April 21, 2024 6:26 am 0 comment

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் (UAE) நகரங்களில் ஒன்றான துபாய் வரலாறு காணாத வெள்ளத்தை எதிர்கொண்டது, புயல் காற்று மற்றும் பேய் மழையால் பிராந்தியம் முழுவதும் அழிவை எதிர்கொண்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கும் முன் ஓமானைத் தாக்கிய புயல், தொடர்ச்சியாக அழிவை விட்டுச்சென்றது, ஒமானில் அது 20 உயிர்களைப் பலியெடுத்திருக்கிறது, மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒருவர் இறந்ததாகக் கூறப்படுகிறது, நெடுஞ்சாலைகள் வெள்ளக்காடாகின. வீடுகள் வெள்ளத்தில் மூழ்கிப் போயின. மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைத்தது.

புயல் ஓமானை ஞாயிற்றுக்கிழமையன்று தாக்கியது, செவ்வாயன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கியது, மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் விமான ஓடுபாதைகள் ஆறுகளாக மாறியதால் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டன.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், ஓமான் எல்லையில் உள்ள அல் ஐனில் 254 மில்லிமீற்றர் (10 அங்குலம்) மழை பதிவாகியுள்ளது. 1949ஆம் ஆண்டின் மழைப்பதிவுகளை அளவிட ஆரம்பித்தது முதல் 24 மணி நேரத்தில் பதிவாகிய மிகப்பெரிய மழைவீழ்ச்சி இது. இந்தப் பேரழிவின் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய கேள்விகள் அனேகருக்கு எழக்கூடும்.

மேக விதைப்பு புயலுக்கு காரணமா?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அரேபிய தீபகற்பத்தின் பிற இடங்களில் மழை மிகவும் அரிதாகவே பெய்கின்றது, இது பொதுவாக வறண்ட பாலைவன காலநிலைக்கு பெயர் பெற்றது. கோடைக் காலத்தில் வெப்பநிலை 50 பாகை செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கும்.

ஆனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமானில் அதிக மழையை சமாளிக்க வடிகால் அமைப்புகள் இல்லை. மற்றும் மழையின் போது நீரில் மூழ்கும் வீதிகள் ஒன்றும் அசாதாரணக் காட்சிகள் அல்ல.

மேக விதைப்பு என்பது நீர்ப் பற்றாக்குறையைப் போக்க, மழையை அதிகரிக்க, மேகங்களில் இரசாயனங்கள் விசிறப்படும் ஒரு செயல்முறையாகும்.

பூமியின் வெப்பமான மற்றும் வறண்ட பகுதிகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மேகங்களை விதைப்பதற்கும் மழைப்பொழிவை அதிகரிப்பதற்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மழைப்பொழிவை அதிகரிக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அடிக்கடி பயன்படுத்தப்படும் மேக விதைப்பே புயலுக்கும் வெள்ளத்துக்கும் காரணம் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள் முன்னதாக குற்றம் சாட்டினர். கடுமையான மழையின் சாத்தியமான காரணியாக ஆரம்பத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது அதுதான். இருப்பினும், வல்லுநர்கள் இந்த கருத்தை விரைந்து நிராகரித்தனர், புயலின் தீவிரத்துக்கு முதன்மையான காரணியாக தட்பவெப்பமும், குறிப்பாக காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் அமைந்திருக்கலாமென தற்போது வல்லுநர்கள் கூறுகின்றனர்.

வறண்ட பாலைவன காலநிலைக்குப் பெயர் பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மழைப்பொழிவை அதிகரிப்பதன் மூலம் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு மேக விதைப்பு முயற்சிகளில் ஈடுபடும் நாடுகளில் முன்னணியில் உள்ளது. ஆயினும்கூட, நாட்டின் வானிலை ஆய்வு மையம் சமீபத்திய புயலுக்கு முன் மேக விதைப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது,

மாறாக, வானிலை வல்லுநர்கள் காலநிலை மாற்றத்தால் தீவிரமடைந்த வளிமண்டல செயற்பாடுகளே தீவிர மழைக்கு அடிப்படைக் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் சிரேஷ்ட முன்னறிவிப்பாளரான எஸ்ரா அல்நாக்பி, குறைந்த அழுத்த அமைப்புகள் மற்றும் வெப்பநிலை வேறுபாடுகளுக்கு இடையே உள்ள தொடர்பை விளக்கினார்.

காலநிலையில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியரான டிம் கௌமோ, வெப்பமயமாதல் போக்குகள் இடியுடன் கூடிய மழையின் செயற்பாட்டை எவ்வாறு தீவிரப்படுத்துகின்றன, மேலும் அதிகரிக்கும் மழைப்பொழிவுக்கு எவ்வாறு வழிவகுக்கும் என்பதை தெளிவுபடுத்தினார்.

அத்துடன் வெப்பமயமாதல் உலகில் அதிக மழைப்பொழிவால் ஏற்படும் அபாயங்களை அதிகரிக்கும் என்றும் காலநிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். புகழ்பெற்ற காலநிலை நிபுணரான காபி ஹெகர்ல், வெப்பமான காற்றில் ஈரப்பதன் அதிகரிக்கும் போதேற்படும் விளைவுகளை சுட்டிக் காட்டினார், இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கிறது. உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இத்தகைய தட்பவெப்ப நிலைகளுக்கு அதிக பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும்.

துபாய் வெள்ளம், காலநிலை மாற்றத்தின் எதிர்காலத் தாக்கங்களின் எச்சரிக்கையாக அமைகின்றது. உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால், இந்த நிகழ்வுகளின் அடிப்படைக் காரணிகளை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர், தேசிய மற்றும் உலக அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவைப்படுகிறது.

துபாயில் ஏற்பட்ட சமீபத்திய வெள்ளத்திற்கு மேக விதைப்பு மட்டுமே காரணம் என்று கூறுவது, காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை வேண்டுமென்றே கவனிக்காமல் விடுவதைப் போன்றது.

இவ்வாறான பேரழிவின் பின்விளைவுகளை சமூகங்களே எதிர்கொள்வதால், எதிர்கால அபாயங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தணிப்பு உத்திகளுக்கு முன்னுரிமை அளிப்பது இன்றியமையாதது. கூட்டு நடவடிக்கை மற்றும் நிலையான அர்ப்பணிப்பு மூலம் மட்டுமே, வேகமாக மாறிவரும் காலநிலையால் ஏற்படும் சவால்களை நாம் சமாளிக்க முடியும் மற்றும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் முடியும்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division