Home » நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்

நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள்

by Damith Pushpika
April 21, 2024 6:00 am 0 comment

ஒரு மனிதனுக்கு தினமும் ஆறிலிருந்து எட்டு மத்தியாலங்கள் நித்திரை செய்தால் போதும் என்று வைத்தியர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அதிகாலை என்று அழைக்கப்படுகின்ற பிரம்ம முகூர்த்த நேரம் அதாவது 3 மணியிலிருந்த 6 மணி

வரை, இந்த நேரத்திலே நீங்கள் செய்கின்ற சகல காரியங்களும் தொழில்களும் நன்மையானவையாகவே முடியும். குறிப்பாக இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய வைகறை தொழுகைக்கு முன்பாக மூன்று மணிக்கு அதிகாலையில் கண்விழித்தெழுந்து அந்த நேரத்திலே தங்களுடைய இறைவனைத் துதித்து அவரைப் போற்றுகின்றனர். ஏனெனில் அந்த நேரத்தில் தான், அந்த ஏக இறைவன் பூமிக்கு அண்மையில் வாசம் செய்வதாக புனித நூலாகிய குர்ஆனில் குறிப்பிடப்படுகிறது.

அதேபோன்று பிரம்ம மூகூர்த்தத்திலே நித்திரை விட்டு எழுந்து, உங்களைப் பலப்படுத்தக்கூடிய பிரார்த்தனைகள், உங்களை மேம்படுத்தக்கூடிய திட்டமிடல்கள், புத்தக வாசிப்புகள், அன்றைய நாளுக்குரிய பணிகளை திட்டமிடல், மிதமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பன மனித உடலை மட்டுமல்ல மனித உள்ளத்தையும் மிகவும் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதாக அண்மைக்கால வைத்திய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தினமும் காலையிலே அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து 40 நிமிடம் நீங்கள் செய்யக்கூடிய நடைப் பயிற்சியானது, உடல் ஆரோக்கியத்தையும் மனநலத்தையும் மேம்படுத்த மிகவும் உதவி செய்கின்றது.

உடல் நிறை கூடியவர்கள் எவ்வளவுதான் உணவுக் கட்டுப்பாட்டுப் பழக்கத்தில் இருந்தாலும் உடற்பயிற்சியும் தினமும் 40 நிமிட நடைப்பயிற்சியும் செய்யாவிட்டால் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியாது. அதனால் தான் உடல் எடை குறைப்பு சம்பந்தமாக கருத்து கூறுகின்ற வல்லுநர்கள், உடல் எடையை பேணுகின்ற பயிற்சியாளர்கள், தினமும் நீங்கள் ஒரு 40 நிமிட நேரமாவது காலையிலே நடக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக கூறுகின்றார்கள்.

ஒருவர் தினமும் 30 நிமிடத்தில் இருந்து 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்கின்ற பொழுது அல்லது நடைப் பயிற்சி செய்கின்ற பொழுது மனித உடலிலே இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த பூமியிலே இருக்கின்ற சாதாரணமாக எங்களுக்கு தொற்றுகின்ற வைரஸ், பாக்டீரியா, போன்றவற்றின் தாக்கத்தை எமது மனித உடலிலே இருக்கின்ற நோய் எதிர்ப்பு சக்தியானது, இமியுனோ குளோபியூலின் எனப்படுகின்ற ஒருவகை இரசாயன பதார்த்தத்தை ஈரலில் இருந்தும் சுரப்பதன் மூலமும், இரத்தக்கலங்கள் மூலம் சுரப்பதன் மூலமும் அதிகரித்து, இந்த நோய்க் கிருமிகளை, அமைப்பழிவடையச் செய்து நோயின் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், மனித உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

நீரிழிவு அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கு காலப்போக்கில் அவர்கள் பாவிக்கின்ற மருந்துகளின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிக்குமே தவிர அவர்கள் பாவிக்கின்ற மருந்துகளின் அளவு குறைக்கப்பட்டது கிடையாது. மருந்தின் வலிமை குறைக்கப்படுவது மிகவும் அரிதாகவே நடக்கின்றது. ஏனெனில் மனித இரத்தத்தில் குளுக்கோஸின் அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்காக பாவிக்க வேண்டிய மருந்துகளின் எண்ணிக்கையும் வலிமையும் அதிகரிக்கப்பட்டு ஒருகட்டத்தின் பின்னர் அவர்கள் இன்சுலின் பாவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறான நோயாளிகள் தினமும் காலையிலே 40 நிமிடங்கள் வரை தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்களுடைய உடலிலே இருக்கின்ற தசைகளில் காணப்படுகின்ற இன்சுலின் ரிசப்டர் இதனை இன்சுலின் எனப்படும் ஹோர்மோனை கலங்களுக்கு கடத்துவதற்காக உள்ள ஒரு திறவுகோல் என்று கூட கூறலாம், இந்த ரிசப்டரின் அளவானது ஒழுங்காக நடைப்பயிற்சி செய்கின்ற பொழுது அதிகரித்துச் செல்கின்றது. இவ்வாறு அதிகரித்துச் செல்கின்ற பொழுது இன்சுலின் கலங்களுக்குள்ளே செல்லும் பொழுது மனித இரத்தத்தில் காணப்படுகின்ற குளுக்கோஸையும் கூடவே எடுத்துச் செல்லும்.

இதன் மூலம் இரத்தத்தில் காணப்படுகின்ற சக்கரையினுடைய அளவு அல்லது குளுக்கோஸின் அளவு படிப்படியாக குறைகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. அதேநேரம் இந்த இன்சுலின் ரிசப்டர் எனப்படுகின்ற அந்த திறவுகோலினுடைய எண்ணிக்கையும் தொழிற்பாடும் அதிகரித்துக் காணப்படும். இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் இவர்கள் பாவிக்கின்ற மருந்துகளின் அளவை ஓரளவுக்கு படிப்படியாக குறைத்துக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

இன்று ஒவ்வொருவரும் காலையில் நித்திரை விட்டு எழுந்தவுடன் இன்றைய பிரச்சினைகளை இவ்வாறு தீர்ப்பது, இன்றைய பணப் பிரச்சினைகளை எவ்வாறு நான் கையாள்வது, எவ்வாறு எதிர்கொள்வது போன்ற பல்வேறு கவலைகள் எழுகின்றன. அன்றைய நாளானது அவனுக்கு விடியாத நாளாகவே அமைந்து விடுகின்றது.

எனவே அதிகாலையில் மேற்கொள்கின்ற இந்த 40 நிமிடம் நடைப்பயிற்சியானது மனித மூளையிலே காணப்படுகின்ற எண்டோபீன்ஸ் எனப்படுகின்ற ஒரு இரசாயன பதார்த்தத்தின் அளவை படிப்படியாக கூட்டுகின்றது. இவ்வாறு இந்த 40 நிமிட நடைப்பயிற்சி மூலம் மனித மூளையிலே காணப்படுகின்ற ஹோர்மோனுடைய அளவு அதிகரிக்கின்ற பொழுது மனித மனதில் மகிழ்ச்சியையும் அது அதிகரிக்கிறது அதேநேரம் மனித மனத்தின் திறனை அதிகரிக்கிறது. இதன்மூலம் அன்றைய நாளை, அவர்கள் எந்தக் கவலையும் இல்லாமல் திட்டமிட்டுப் பணி புரிவதற்கு வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இலங்கையில் அரிதாக காணப்பட்டாலும் இந்தியாவில் அதிகம் காணலாம். காலையிலே மெரீனா பீச்சுக்கு சென்று பார்த்தால், நடைப்பயிற்சிக் குழுக்கள், சிரிப்புக் குழுக்கள், என ஏராளம் குழுக்கள் காணப்படுகின்றன. ஏனெனில் என்டோபினுடைய அளவை அதிகரிப்பதால் ஏற்படும் பயனை அறிந்தவர்கள் அவர்கள்.

இன்று பெண்களிடையே மார்பக புற்றுநோயானது மிக அதிக அளவில் காணப்படுகின்றது. அதாவது இலங்கையில் கூட 26% முதல் 30% பெண்கள் மார்பக புற்று நோயினால் பாதிக்கப்படுவதாக 2012ஆம் ஆண்டு, இலங்கை தேசிய புற்றுநோய் நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மார்பக புற்றுநோயை குறைப்பதற்காக பெண்கள் மேற்கொள்ளக்கூடிய மிதமான உடற்பயிற்சி நடைப்பயிற்சிதான். மார்பகத்தில் காணப்படுகின்ற ப்ரொஜெஸ்ரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ரிசப்டர்களின் அளவுகளை மாற்றியமைப்பதன் மூலம் மார்பகப் புற்று நோயின் தாக்கத்தை குறைக்கின்றது. அதேநேரம் பெண்களுக்கு போதிய அளவு மனோதிடத்தையும், மன வைராக்கியத்தையும், மார்பக புற்று நோயுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளலாம் என்கின்ற உறுதியான மனநிலையையும் கொடுக்கின்றது.

இன்று மனிதனைக் கொல்லுகின்ற மிகப் பிரதான காரணிகளில் உயர் குருதி அழுத்தமும் மாரடைப்பும் காணப்படுகின்றன. உயர் குருதி அழுத்தத்தை குறைப்பதில் காலையிலே செய்கின்ற நடைப்பயிற்சியானது, மிக உயரிய பங்கு வகிக்கின்றது. இதன் மூலம் நாளடைவில் உயர் குருதி அழுத்தத்தின் அளவானது கட்டுப்பாட்டுக்குள் வந்து, நீங்கள் பாவிக்கின்ற மருந்துகளின் அளவைக் கூட உங்களைப் பார்வையிடுகின்ற வைத்தியர்கள் குறைக்கக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுகின்றன. எனவே நடைப்பயிற்சி என்பது, சாதாரணமான நடைப்பயிற்சியாக அல்லாமல் உடலுக்கு பல நன்மைகளையும் தரும் வரப் பிரசாதமாக இருக்கின்றது.

எனவே வளர்ந்தவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், வயதானவர்கள், ஆண், பெண் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே தினமும் செய்கின்ற அந்த 40 நிமிட நடைப்பயிற்சி குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்கின்ற நடைப் பயிற்சியானது உங்களுடைய உடலையும் மனத்தையும் மிகவும் இளமையாகவும் நோய்கள் அற்ற நிலையிலும் பேணுவதாக அல்லது பேணி வருவதாக நிறைய வைத்திய சான்றுகள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன.

எனவே நாங்களும் இந்த நன்மைகளை அடைவதற்கு தினமும் 40 நிமிட நடைப்பயிற்சியை மேற்கொள்வது பொருத்தமானதும் சால சிறந்ததும் ஆகும்.

வைத்திய கலாநிதி. சிவப்பிரகாசம் அனுஷ்யந்தன். கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை. களுபோவில.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division