Home » இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப்பதக்க வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப்பதக்க வீரர் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம்

வியாழக்கிழமை காலமானார்

by Damith Pushpika
April 21, 2024 6:00 am 0 comment

யாழ். மாவட்டத்திலிருந்து உருவாகிய இலங்கையின் தலைசிறந்த மெய்வல்லுநர் கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் தனது 89ஆவது வயதில் ஐக்கிய அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் செரிட்டோசில் வியாழக்கிழமை (18) காலமானார்.

ஆசிய விளையாட்டு விழா வரலாற்றில் இலங்கைக்கு முதலாவது தங்கப் பதக்கதை வென்றுகொடுத்த பெருமை கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை சார்கிறது. ஆசிய விளையாட்டு விழாவின் 3ஆவது அத்தியாயம் டோக்கியோவில் 1958ஆம் ஆண்டு நடைபெற்றபோது கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் உயரம் பாய்தலில் 2.03 மீற்றர் உயரத்தை தாவி ஆசிய விளையாட்டு விழா சாதனையுட ன்இலங்கைக்கு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொடுத்து வரலாற்று நாயகனானார். 1962 ஆசிய விளையாட்டு விழாவிலும் இதே பிரிவில் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

1954 ஆசிய விளையாட்டு விழாவிலும் அவர் பங்குபற்றியிருந்தார். இதனைவிட யாழ். மத்திய கல்லூரியில் 17 வயது மாணவனாக இருந்தபோது ஹெல்சின்கி 1952 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்றியதுடன் 4 வருடங்களின் பின்னர் மெல்பர்ன் 1956 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் கலாநிதி எதிர்வீரசிங்கம் பங்குபற்றியிருந்தார். யாழ். மத்திய கல்லூரியிலும், கொழும்பு புனித சூசையப்பர் கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர், பிற்காலத்தில் இலங்கையின் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார். மெய்வல்லுநர்களின் மேம்பாட்டை முன்னிட்டு, குறிப்பாக வடக்கு, கிழக்கு மெய்லுநர்களின் மேம்பாட்டை முன்னிட்டு பல்வேறு பயிற்சி நெறிகளை நடத்தினார். இலங்கையின் மற்றொரு உயரம் பாய்தல் வீரரான மஞ்சுல குமாரவுக்கு பயிற்சி அளித்து அவரை சர்வதேச அரங்கில் பதக்கங்கள் வெல்லும் மெய்வல்லுநராக உருவாக்கிய பெருமை கலாநிதி நாகலிங்கம் எதிர்வீரசிங்கத்தை சாருகிறது.அமெரிக்காவிலிருந்து தாயகத்திற்கு (இலங்கை) வருகை தந்தபோதெல்லாம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பு சுகததாச அரங்கிலும் இளம் மெய்வல்லுநர்களுக்கு அவர் ஆலோசனைகள் வழங்கத் தவறியதில்லை.யாழ்ப்பாணம் பெரியவிளானில் 1933ஆகஸ்ட் 24ஆம் திகதி பிறந்த இவர் யாழ். மத்திய கல்லூரியின் பழைய மாணவராவார். பாடசாலை பருவத்திலேயே உயரம் பாய்தலில் அகில இலங்கை சாதனையை முறியடித்த பெருமையும் அவருக்கு உள்ளது. இலங்கை, சியேரா லியோன், பப்புவா நியூ கினி, நைஜீரியா ஆகிய நாடுகளில் பல்கலைக்கழக விரிவுரையாளராக பணியாற்றியுள்ள நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் யுனெஸ்கோவிலும் 5 ஆண்டுகள் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

[email protected]
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
Nuwan   +94 77 727 1960
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division