சிறகொடிந்த பறவை | தினகரன் வாரமஞ்சரி

சிறகொடிந்த பறவை

கொழும்பு செல்லும் பேரூந்தில் ஜன்னலோரத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த பாஷிரா, தனது ஊரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்கான பயணம் சுமார் இரண்டு மணித்தியாலயங்களாகும், ஆனபோதிலும் பேரூந்தின் இரைச்சல் சத்தத்துடன் ஜன்னலோர குளிர் காற்றும் பயணிகளின் நடமாட்டத்திற்கும் மத்தியில்  பாஷிரா அவளது கடந்த கால நினைவகங்களுக்குள் புதைந்தாள். எந்தொரு பெண்ணிற்கும் வரவே கூடாத துயரங்கள் அவளை சூழ்ந்து கொண்டன. 

பாஷிரா கல்வி கற்றுக் கொண்டிருக்கும் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டவள். காலம் செய்த விதியா, காதல் செய்த சதியா அறியா பருவமதில் அன்பெனும் காந்தவலையை போர்த்திக்கொண்டாள் ரிகாஷ் எனும் இளைஞருடன். குடும்பத்தின் மூத்த மகளான பாஷிரா கல்வி கற்பதிலும் சிறந்த திறமைமிக்கவள். பத்தாம் வகுப்பினை நிறைவு செய்து தொடர்ந்தும் கற்க வேண்டும் என்ற ஆசையில் தன் கிராமத்தினை விட்டு நகரத்திற்கு படிப்பதற்காக சென்றாள். அங்கிருக்கும் பாடசாலைக்கோ பேருந்து வழியாகவே செல்ல வேண்டிய தேவை அவ்வளவு தூரம். இவ்வாறு தொடர்ந்தும் மாதங்கள் பயணித்துக் கொண்டிருக்கையில் ஒருநாள் பேரூந்தில் செல்லும் போது திடீரென பின்புறமாக இருந்து குரல் ஒன்று ஒலித்தது.  "நான் தொடர்ந்து நாலு மாதமா உங்கள தொடர்ந்திட்டு இருக்கன் எனக்கு உங்களோட பேச அனுமதி தருவீங்களா?" கேட்டுக்கொள்கிறான் பாஷிராவிடம் ரிகாஷ். பாஷிராவும் "சரி" என்று கூறிவிட்டு பாடசாலை செல்லும் இடைத்தெருவில் இறங்குகிறாள். ரிகாஷும் இறங்கிக் கொள்கிறான். 

தன்னை முதலில் அறிமுகப்படுத்திக் கொள்கிறான் ரிகாஷ். "என்ட பெயர் ரிகாஷ், நான் படித்து முடித்துட்டு இங்க ஒரு டீ பெக்ரியில மெனஜெரா வெர்க் பண்ரன். உங்கள நாலு மாதமா ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன். எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு. உங்கட பணிவு அழகு குணமெல்லாம் ரொம்பவே பிடிச்சிருக்கு. உங்களைப் போல ஒரு அழகான பெண் மனைவியா கிடைக்கிறதும் நான் செய்த தவம்" என்றவாறு கூறிக்கொண்டு "உங்களுக்கு விருப்பமா?" திடீரென இவ்வாறு கேட்க என்ன சொல்வது என்று அறியாது பதில் எதுவும் கூறாமல் நகர்கிறாள் பாஷிரா. 

மறுநாள் காலை பேரூந்தில் ஏறிக்கொண்டவள் பாடசாலை செல்லும் வழியெங்கும்  மனம் ஏங்கித் தவிக்க, அவளது கண்கள் எதையோ தேடிக் கொண்டிருந்தன. ஆனால் அன்றோ அவனைக் காணவில்லை வேதனையோடு பாடசாலைக்குள் செல்கிறாள். நாட்கள் நான்கைந்து கழித்து மீண்டும் பாடசாலை செல்லும் வழியில் ரிகாஷை காணக்கிடைத்தது. ஏதேதோ சொல்ல முடியாத ஆனந்தம் பூரித்து மலர்ந்தது. பக்கத்தில் வந்து ரிகாஷ் கேட்கிறான் "ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ்" இவளோ காதலெனும் மாய வலையில் சிக்கிக் கொண்டாள் அல்லவா "சரி" என்பதாக  தலையசைத்து கண்களால் சம்மதத்தினையும் தெரிவித்தாள்.  ஒரு வருடம் ஆகிற்று இவளுக்கோ அவன் மீது கொள்ளை பிரியம். இந்நிலையில் பாஷிரா கூறுகிறாள் வீட்டுக்கு வந்து பேசும்படி. ரிகாஷும் பாஷிராவின் வீட்டிற்கு சென்று இது சம்பந்தமாக பேசுகிறான். 

பாஷிராவின் பெற்றோர்களுக்கோ இவனின் உடைநடை எதுவுமே பிடிக்கவில்லை. அவர்கள்  திருமணத்திற்கு தடைபோட  பாஷிராவிற்கோ காதல் பைத்தியம் முற்றி தனக்கு அவன் தான் வேண்டுமென ஒற்றைக் காலில் நின்று திருமணம் முடித்துக் கொள்கிறாள் பெற்றோர்களின் சம்மதமின்றி. அத்துடன் பெற்றோர்களுக்கும் இவளுக்குமான உறவு முறிந்தது. ரிகாஷின் அன்பும் பணிவும் இவளை அடிமையாக்கியது. தன் உலகமே ரிகாஷென உணர்ந்தவள் உயிராகவும் நேசித்தாள். சண்டை சச்சரவுகளுடன் நேசமும் நிறைந்திட விட்டுக்கொடுப்புடனும் பல வருடங்கள் கழிகின்றன. இரண்டு பிள்ளைகளுக்கும் தாயாகிறாள் பாஷிரா. தனது இரண்டாவது மகன் பிறந்த மூன்று மாத காலம் கடந்ததும் ரிகாஷின் ஆப்பிசில் இருந்து அழைப்பொன்று வருகிறது. "ஹலோ" என்றதும் பாஷிரா, மறுபுறமிருந்து ஓர் பெண்ணின் குரல் ஒலித்தது "உங்களுடைய கணவர் ரிகாஷுக்கும் இங்க வேல பார்க்கிற சுமையாவுக்கும் தொடர்பிருக்கு, பாத்து கவனமா இருந்துக்கோங்க" என்று கூறி அழைப்பு துண்டிக்கப்பட்டது.  

கேட்டவள் அதிர்ச்சியில் திகைத்து மயங்கினாள். முழித்துப் பார்க்கையில் பக்கத்தில் ரிகாஷ் குழந்தையுடன் நிற்கிறான். "என்னாச்சிமா? ஏன் இப்படி திடீர்னு? நான் வரப்ப இப்படி விழுந்து கிடந்த சரி வா ஹாஸ்பிடலுக்கு போலாம்" என்று கூற பாஷிரா மறுத்து விட்டாள். " இல்ல அது சும்மா தான், சரியாயிட்டு இப்போ ஒண்ணும் இல்ல" தன்னுள் பல குழப்பங்களையும் சுமந்தவளாய் கணவனையும் சந்தேகிக்க முடியாதவளாய் கூறுவதறியாது தடுமாறினாள். காரணம் அவளால் தனக்கென இறைவன் கொடுத்த வரமென இன்றுவரை வாழ்ந்த ரிகாஷை  சந்தேக கண்கொண்டு பார்க்க  அவளால் முடியவில்லை. நாட்களும் நகர்ந்தன கேட்பதா இல்லையா தடுமாறிக் கொண்டிருந்த மனதிற்கு பதிலும் கிட்டியது.

"இப்போ எல்லாம் அவர் என்னை சரியா கவனிக்கிறதும் இல்ல, ஆபீஸ் போயிட்டு வந்தா அந்த போனையே நோண்டிக்கிட்டு இருக்காரு" இவ்வாறு சந்தேகமும் குழப்பமும் ஒருமித்து தன்னுள் புதைத்துக் கொண்டவள் இரவு பத்து மணி கடிகாரம் அசைந்தாட ரிகாஷை எதிர்பார்த்தபடி வாசலில் நின்றாள். காலையாகியும் அதே இடத்தில் நிற்கிறாள் அவன் வரவில்லை. 

உலகமறியா பாஷிராவிற்கு அவ்வூரில் சொந்தமெனவும் யாருமில்லை. இரண்டு நாட்களாகியும் வராத காரணத்தால் காவல் நிலையத்துக்கு சென்று புகாரளித்து விட்டு வீடு திரும்பினாள். அவளின் முதலாவது மகனுக்கு எட்டு வயதும் இரண்டாவது மகனுக்கு ஐந்து மாதமும். இரு பிள்ளைகளுடன் தனித்து நிற்கும் பாஷிராவிற்கு தன்னுடைய சொந்த ஊருக்கும் செல்ல முடியாத காரணம், பெற்றோர்களை மீறி செய்து கொண்ட திருமணம்.  

அது மட்டுமல்ல பாஷிராவிற்கு திருமண வயதில் ஒரு சகோதரி இருக்கிறாள். இவளோ நாதியற்று நிற்கையில் கணவன் இல்லாதவள் என்றொரு சுமையையும் தாங்கிக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாயிற்று. இந்த நிலையில் தன் குடும்பத்தினரிடம் அடைக்கலமானால் தனது சகோதரியின் வாழ்க்கையும் தன்னால் பாழாகிவிடும் என்ற அச்சத்தாலும்  கணவன் இல்லாமல் வீட்டிலிருந்தால் ஊர்மக்கள் ஆயிரம் வசைகள் கட்டி ஏளனம் செய்து விடுவார்கள் என்ற பயத்தினாலும் தனது சொந்த ஊரிற்கு செல்ல அவளது மனம் மறுத்து விடுகிறது. தனது கணவனிடமிருந்தும் எந்தவொரு தகவலும் இல்லை. 

ஒரு வாரத்தின் பின் பொலிஸாரிடம் இருந்து அழைப்பொன்று வருகிறது. ஓடி வருகிறாள் தனது இரு பிள்ளைகளையும் சுமந்து கொண்டு. அங்கோ அதிர்ச்சியில் ஒரு நிமிடம் சிலையானாள். (அவளது கணவனும் ஒரு பெண்ணும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்). மெதுவாக உள்ளே வருகிறாள் பாஷிரா. ரிகாஷை கண்டதும் ஓடி வந்து "வாப்பா....வாப்பா... எங்க போனீங்க நீங்க?" முதலாவது மகன் அயான் கேட்க. தன் மகனின் கைகளை தட்டி விட்டு ரிகாஷ் ஒதுங்கிக் கொள்கிறான் தன் அருகில் நிற்கும் பெண்ணிடம். அவளின் கையை பற்றிக் கொள்கிறான். அதைக் கண்டதும் இடி விழுந்தது பாஷிராவின் இதயத்தில். அன்று புரிந்தது பெற்றோர்கள் கூறியதை கேட்காமல் வந்ததன் விளைவு. 

பொலிஸார் ரிகாஷிடம் கூறுகிறார்கள் பாஷிராவிற்கு பதிலளிக்குமாறு. ரிகாஷ் கூற முனைகையில் "பாஷி......" ஆரம்பிக்க முன்னமே நிறுத்துமாறு பாஷிரா கைகாட்ட வாயை மூடிக்கொண்டான் ரிகாஷ். பாஷிரா பொலிஸாரிடம் கூறுகிறாள் "சார் இவரை காணல என்னாச்சோ ஏதாச்சோ என்று பயத்துல தான் புகார் கொடுத்தன்.

இப்ப இவர் கிடைத்த சந்தோஷம் போக எதிர்பார்த்த என்ட சந்தேகமும் தீர்ந்துட்டு நன்றி சார்" கூறி வெளியே செல்கிறாள். வெடித்தோடும் குளத்தைப்போல் கண்ணீர் அவளின் கன்னங்களில் வடிகிறது. ஆனால் ரிகாஷோ எந்த ஒரு பதட்டமும்  இன்றி வந்த பெண்ணுடன் வண்டியில் செல்கிறான். 

வீடு திரும்பியவள் "கையில பணமும் இல்ல வீட்டு வாடகையும் இன்னும் கொடுக்கல சின்ன பிள்ளைங்களையும் வைச்சுட்டு என்ன செய்ற நான்" அழுது கொண்டே மனசாட்சியுடன் கேட்டுக்கொள்கிறான். தன்னிடம் இருக்கும் ஓரிரு தங்க ஆபரணங்களை விற்றாவது தன்னுடைய பிள்ளைகளுக்கு நாளைக்கு சாப்பாடு கொடுக்கணும் நினைத்துக் கொண்டு கண்ணீர் பெருக பசியும் மறுபக்கம் வாட்டி வதைக்க வீட்டிலிருந்த ஒரு சில பிஸ்கட்களை தன்னுடைய மூத்த மகனுக்கு கொடுத்து பட்டினியுடன் இருக்கும் இரண்டாவது மகனுக்கு தாய்ப்பாலும் கொடுத்தாள்.

மறுநாள் காலை தங்காபரணங்களை விற்று ஒரு லட்சம் ரூபா பணத்தை பெற்றுக் கொண்டாள். பிள்ளைகளுக்கும் தேவையான உணவுப் பண்டங்கள் அனைத்தும் வாங்கிக் கொண்டு சமைப்பதற்கான பொருட்களையும் வாங்கிக் கொண்டு வரும் வழியில் வீட்டுக்காரரிடம் வீட்டுக்கான வாடகையும் கொடுத்து விட்டு வருகிறாள். 

வீட்டிற்குள் வந்தவள் சோகம் ஒரு பக்கம் இருக்க மகனது பசியை போக்க அந்த நொடி சமைக்க தயாராகிறாள் இரண்டாவது மகனை தூங்க வைத்துவிட்டு. ஒருவாறு இன்றைய நாளை கழித்து விட்டதை எண்ணி மனம் மகிழ்வுற்றாலும் நாளைய நாளை எண்ணியும் கணவன் இழைத்த  துரோகம் எண்ணியும் நொந்தாள். இவ்வாறு ஒரு மாதம் கடக்க வாசலில் ஓர் குரல் ஒலிக்கிறது. 

"பாஷிரா...பாஷிரா...இங்க வா...மா" ஆம் அது அந்த வீட்டுக்காரர் மனைவியின் குரல். வெளியே வந்த பாஷிரா "வாங்கம்மா உள்ள" என்றழைத்தாள். வீட்டிற்குள் வந்தவர்  தீயில் எண்ணெய் ஊற்றுவது போல ஈரமில்லா வார்த்தைகளை தெளித்தாள் "இதோ பார் பாஷிரா ஒனக்கு வீடு தந்தது உன்ட புருஷன் வந்து கேட்டதுனால இப்ப அவன் தான் உன் கூட இல்ல ஒன்ன விட்டு ஓடிட்டான் இனியும் இந்த வீட்ல இருந்தா நீ எப்படி வாடகை கட்டுவ? உனக்கு தான் வேலையும் இல்ல ஒன்னும் இல்ல நீ எங்க பெயிட்டு வாடகை கட்டுற அதனால இன்னும் ஒரு வாரத்துக்குள்ள வீட்ட காலி பண்ணிடுமா" என்றாள்.

பாஷிராவிற்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி "என்ன செய்வன் இரண்டு பிள்ளைகளோட எங்க நான் போவன்? யார்ட்ட உதவி கேக்குற? குமுறிக் கொண்டாள் மனதிற்குள். கல்லெறிந்தாற் போல சொல்லிவிட்டு வெளியேறினாள் வீட்டுக்காரி. உதவிடக் கூட யாருமில்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கையில் தான் பக்கத்து வீட்டு ஜெஷிரா வந்து நிற்கிறாள். 

"வா ஜெஷிரா" சோகக் குரலில் அழைத்தாள். ஜெஷிரா உள்ளே வந்து "நடந்த எல்லாம் நான் கேள்விப்பட்டேன் டி. இப்ப வீட்டம்மா சொல்லிட்டு போனதையும் கேட்டேன் டி" என்றாள். "ஜெஷிரா இந்தப் பிள்ளைகளோட நான் எங்கடி போவேன்? வெளியில கொஞ்சம் போயிட்டு வந்தா கூட என்னை ஒருமாதிரி  பாக்குராங்கடீ நாலு பேர். நைட்டு துணைக்கு நான் வரவா? என்று ஆளாளுக்கு கேக்குறாங்க . நான் செய்த பிழ அவனுக்கு அன்பு காட்டினதா இல்ல அவன நம்பினதாடீ" என்றாள் நெற்றியில் கைகளால் அடித்துக் கொண்டே. "இங்க பாரு பாஷிரா நடந்தது நடந்து போயிட்டு இனி அதை நினைச்சு ஒரு பிரயோசனமும் இல்ல உனக்கு தெரியும் தானே என்ட புருஷனும் வீட்ல இல்ல வெளிநாடு போயிருக்காருண்டு. எனக்கும் பிள்ளைகளும் இல்ல நான் தனியா தான் வீட்ல இருக்கேன். நீயும் உன்ட பிள்ளைகளும் இனி என்ட வீட்டில இருங்க. உங்களுக்கு நான் இருக்கேன்" என்றாள்  பாஷிராவை அணைத்துக்கொண்டு. 

"நான் பிள்ளைகளை பார்த்துக்கொள்றன் நீ ஏதாவது வேலைக்கு போ" என்றாள் ஜெஷிரா. இப்படி கூறினாலும் மனம் ஏற்கவில்லை பாஷிராவுக்கு. "என்னதான் மனிதாபிமானத்தோட ஜெஷிரா கூப்பிட்டாலும் எவ்வளவு காலம் இது சாத்தியம்?" தனக்குள்ளே கேள்விகளை எழுப்பிக் கொண்டாள். மறுபுறம் தனக்கு இந்த ஊரில் துணையென்றும் யாருமில்லை எண்ணிக்கொண்டு சிறுகாலம் அங்கிருக்க முடிவெடுத்தாள். ஜெஷிராவும் புன்னகையுடன் பாஷிராவின் வீட்டுப் பொருட்கள் எல்லாவற்றையும் தன்னுடைய வீட்டிற்குள் எடுத்துச் செல்கிறாள் பாஷிராவுடன் சேர்ந்து. 

தினமும் காலை வேலை தேடி வெளியேறுவாள் பாஷிரா தனது இரண்டாவது மகனை ஜெஷிராவிடம் கொடுத்து விட்டு மூத்த மகனை அரச பாடசாலையில் சேர்த்திருப்பதால் அவனையும் பாடசாலையில் விட்டுச் செல்வாள். இவ்வாறு இரண்டு வாரங்கள் வேலை தேடி தேடி அலைந்தாள். கிடைக்கவில்லை காரணம் இவள் படிப்பதில் திறமைமிக்கவள் ஆயினும் உயர்தரத்தை அவள் பூர்த்தி செய்திருக்கவில்லை.

அவள் அனுபவித்த வலி, அவமானம், கேலி, இவை அனைத்தும் சேர்ந்து தான் இந்த உலகில் நன்றாக வாழ்ந்தே ஆக வேண்டும் என்றொரு துணிச்சலை அவளுள் கொண்டு வந்தது.  கோபத்தினை படிப்பில் செலுத்தினாள் "தன்னை வேண்டாம் என்று விட்டுச் சென்றவன் தன்னை பார்த்து ச்சே....அவளையில்லயா இழந்துவிட்டோம் என்டு மனம் உருகி தலை குனிய வாழ்ந்து காட்டணும்" என்று அவளுக்குள்ளே வைராக்கியம் எழுந்தது

ஒருபடியாக துணிக்கடையில் அவளுக்கு வேலையும் கிடைத்தது. வேலையும் பார்த்துக் கொண்டு இரவிலும் விழித்திருந்து படித்தாள். படித்ததன் பலன் உயர்தரப் பரீட்சையும் எழுதி கலைத்துறையில் சட்டப்  பிரிவில் கற்பதற்கான வாய்ப்பினையும் பெற்றுக் கொண்டாள் பாஷிரா.

பல இடர்களையும் தாண்டி வேலை செய்து கொண்டே  மூன்று வருட கால படிப்பினை முடித்துவிட்டு வழக்கறிஞர் பட்டம் பெறுவதற்காக ஆவலுடன் கொழும்பிற்கு பேரூந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் பாஷிராவும் அவளது மகன்மார்களும். 

"ஏம்மா... நீ இறங்குமிடம் வந்துட்டு" என்றொரு குரல் கேட்க திடுக்கிட்டவளாய் நினைவுக்கு திரும்பினாள். கண்ணோரம் வழிந்திருந்த நீரும் காற்றிலே காய்ந்து போயிருந்தது. இறங்கிக் கொள்கிறாள் அத்தருணம் சாதித்து விட்ட பெருமிதமும் அவளுடன் சேர்ந்தே நடை போடுகிறது. அவளின் கால்களும் விரைவாய் நகர்ந்தன. 

கேலி செய்தவருக்கும் கேவலமாய் பார்த்தவருக்கும் அவளின் சாதனை பதிலடியானது. இன்றிலிருந்து அரச வழக்கறிஞரான அவளின் அடையாளத்தையும்  கௌரவத்தையும் யாராலும் பறிக்க முடியாது.   தனது பிள்ளைகளின் எதிர்காலத்தினை ஒளிமயமாக்கிய மகிழ்ச்சி அருவியாய் பொழிந்தோடியது பாஷிராவின் இதயத்தில்... 

அன்ஷியா

Comments